Chapter 19 of 21

தெண்திரை தேடலே – 19

November 4, 2026 · 12 min read · ⭐ 5.0 (11)

அத்தியாயம் – 19

ஓர் அணைப்பில், ஒருவரின் அண்மையில் மனஉளைச்சல் எல்லாம் விலகுமா? அவளுக்கு விலகியதே. ஆழ்ந்த அமைதி கிட்டுமா? ஆழினிக்கு கிட்டியதே. அது அவனால் நிகழ்ந்தது. பிரித்விராஜனால். கணவனின் கையைத் தலையணையாக்கி, அவன் மார்பில் கரம் பதித்துக் கண் மூடியவள், ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்துப் போனாள்.

தன் மார்பில் பதிந்திருந்த மென்கரத்தை மென்மையாக வருடியபடி விழித்தே கிடந்தான் பிரித்விராஜன். அவனுக்கு ஐந்து மாத அசதி உடலில் இருந்தது. மூன்று நாள்கள் பயணம் செய்து தன் ஆழியை அடைந்திருக்கிறான். அசதி அழுத்தினாலும் அவனால் இமை மூட முடியவில்லை. கடந்த ஏழு நாள்களாக மனைவி மட்டுமே அவன் மனத்தில் மையம் கொண்டிருந்தாள். அவளைச் சேர்ந்த பின்பும் விலகவில்லை அவனது மனப்பதற்றம்.

“பி..ரித்..வி” என்று அவள் பரிதவித்துக் கண்ணீருடன் அவனைக் காணொளி அழைப்பில் அழைத்ததே அவனது நினைவில் வந்து வந்து அலைமோதிக் கொண்டிருந்தது.

என்றும் இல்லாத அதிசயமாக அவன் மார்பில் கைப் போட்டு நெருங்கி படுத்திருந்த மனைவியின் கன்னத்தில் ஈரமாய் இதழ் பதித்தான்.

“ம்ம்” உறக்கத்தில் சிணுங்கி விலகப் போனவளை விடாமல் பிடித்துக் கொண்டான். சற்று முன்பும் இப்படித்தான், “பிரித்வி” என்று சிணுங்கினாள்.

“பிராடு பிரித்வி இல்லடி. ஆழியின் பிரித்வி” என்று கண் சிமிட்டினான். ஒரு கணம் மயங்கி மறுகணம் அவனை அடித்து, அதே வேகத்தில் அணைப்பின் இறுக்கத்தைக் கூட்டினாள். ஆழினி ஆழி போன்றவள். அவளைக் கணிக்கவே முடியாது. நொடிக்கு நொடி மாறிக் கொண்டேயிருந்தாலும், பெரும்பாலும் அவள் தெளிந்த நீரலைகள் கொண்ட ஆழி போன்றவளே. ஆழியை நேசித்த அவனாலே அவளை அறிந்து கொள்ள முடியாமல் போனதுதான் அனைத்திற்கும் காரணம்.

அதை இப்போதுதான் உணர்ந்து கொள்கிறான். காலம் கடந்து விடவில்லை என்பதில் நிம்மதியடைந்தான். அவன் மனம் அனிச்சையாக டிசம்பர் 24 ஆம் தேதிக்கு சென்று நின்றது. அன்றுதான் ஆழினி அவனை அழைத்தது. இப்போது நினைத்து பார்க்கையிலும் அவனுக்கு அதிசயம் போலதான் இருக்கிறது. இன்னமும் அவனுக்கு ஆச்சர்யம் தீரவில்லை.

ஆழிக்கு‌ நடுவே இருந்தவனை அவனது ஆழினி கண்டுபிடித்துப் பேசியதெல்லாம் கனவு போலிருந்தது. அதிலும் அவனது கப்பல் கேப்டன்களில் ஒருவரே வந்து, “உங்க வைஃப் பேசுறாங்க பிரித்வி. ஏதோ எமர்ஜென்சியாம்” என்று அலைபேசியை நீட்டவும் வெலவெலத்துப் போனான்.

அரை நிமிடத்தில் ஆயிரம் பிரார்த்தனை செய்திருப்பான். அவள் முகம் காணும் வரை அலை கடலில் சிக்கிய படகாகத் தத்தளித்தான்.

அவளிடம் பேசிய பிறகுதான் தெளிந்தான். அவனுக்கு உடல் நலமில்லை என்பதெல்லாம் பின்னே சென்றிருக்க, அவன் மனம் முழுக்க மனைவியைத் தேடியது. உடனே ஊர் திரும்பச் சொல்லியது உள்ளம். இந்த ஆழியைத் தாண்டி தன் ஆழியிடம் செல்லத் துடித்தான் அவன்.

“நான் வைஃப்கிட்ட பேசிட்டேன். ரொம்பத் தேங்க்ஸ் கேப்டன்.” என்று அலைபேசியைக் கேப்டன் பிரபஞ்சனிடம் நீட்டினான்.

“இட்ஸ் ஓகே. யூ டேக் ரெஸ்ட். எதுவும் ஹெல்ப் வேணும்னா மறக்காம என்னைக் கேளுங்க பிரித்வி” என்று அவன் தோளில் தோழமையுடன் தட்டிச் சொன்ன பிரபஞ்சன் பத்து நிமிடங்கள் அவனிடம் பொதுவாகப் பேசி விட்டே சென்றான்.

அவன் மனைவி மருத்துவர் கார்த்திக்கிடம் பணி புரிகிறாள் என்பது அவனுக்குத் தெரியாமல் இருக்குமா? ஆனால், பிரபஞ்சன் கார்த்திக்கின் உறவினன் என்பது அவனுக்குத் தெரியாது. இருவரும் அதைப் பற்றிப் பேசுகையில், “எவ்ளோ சின்ன உலகம் இல்ல பிரித்வி?” என்று சொல்லி ஆச்சரியப்பட்டான் பிரபஞ்சன். உண்மைதான். இல்லையேல் அவன் மனைவியால் அவனைக் கண்டுபிடித்திருக்க முடியாது. அவனது புது அலைபேசி வரும் வரையில் அவனைத் தேடி தவித்திருப்பாள்.

அதை நினைக்கையிலேயே அவனுக்குக் குற்ற உணர்ச்சியால் காய்ச்சலின் தீவிரம் கூடும் உணர்வு.

மறுநாள் கிறிஸ்துமஸ் என்பதால் அவர்களின் கப்பலே கொண்டாட்ட மனநிலையில் இருந்தது. அந்த முக்கியப் பண்டிகைக்கு மும்முரமாக ஆயத்தங்களை மேற்கொண்டிருந்தது. அப்படிப் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருக்கையில் மேற்பார்வையிட சென்றவனுக்குதான் விபத்து நிகழ்ந்திருந்தது. இப்போது ஓரளவு உடல் தேறி விட்டான்தான்.

மனைவி பேசிய பிறகு அவனால் அமைதியாக அமர்ந்திருக்கவே முடியவில்லை.

இந்தியாவின் பொழுது புலர காத்திருந்து வீட்டிற்கு அழைத்தான். அவன் அம்மா அழுதே விட்டார். அப்பா கோபித்துக் கொண்டார். அம்மாவின் அழுகையும், அப்பாவின் கோபமும் அவர்களின் உணர்வை அவனால் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடிந்தது. அவர்களைச் சமாதானப்படுத்தினான்.

ஆனால் ஆழினியை எப்படிச் சமாதானப்படுத்துவதென அவனுக்குத் தெரியவில்லை. அவர்களுக்குத் திருமணமான நாளில் இருந்து ஆழினி பலமுறை பகிர்ந்துக் கொள்ளாத அவளின் பயஉணர்வை திரும்பத் திரும்ப அவனை உணர வைத்துக் கொண்டேயிருக்கிறாள். இதற்கு மேலும் அவளைப் பிரிந்திருப்பது அவனால் முடியவே முடியாது.

அம்மா அப்பாவிடம் தனக்கு நேர்ந்ததை லேசாகக் கோடிட்டுக் கட்டினான். அதற்கே, “போதும் நீ அங்க வேலை பார்த்தது. உடனே கிளம்பி வாப்பா” என்று விட்டார்கள் ஒரே மனதாக.

அம்மா அழுது புலம்ப, அப்பாதான் நடந்ததை அவனுக்கு விளக்கிச் சொன்னார்.

“சாரிப்பா. என் தப்புதான். நான் உங்களுக்குப் போன் பண்ணியிருக்கணும். உங்ககிட்ட போன் உடஞ்சதை சொல்லியிருக்கணும்.” என்று திரும்பத் திரும்ப மன்னிப்புக் கேட்டான்.

“பரவாயில்லப்பா பிரித்வி. விடு.” என்று சொன்னவர், அவனைத் தேட, அவனிடம் பேச அவன் மனைவி செய்த அனைத்தையும் சொன்னார். அவனுக்கு உள்ளம் உருகி போனது.

அதன் பிறகும் அப்பா அம்மாவிடம் பேசினான். ஆனால், ஆழினிக்கு அழைக்கவில்லை. குறுஞ்செய்தி வழியாக மட்டுமே பேசிக் கொண்டார்கள் இருவரும்.

அன்றிரவே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கி விட்டது அவர்களின் கப்பலில். பயணத்தின் பாதி வழியில் இருந்தார்கள் அவர்கள்.

கப்பல் கரைச் சேர இன்னும் நான்கு நாள் பயணம் மீதம் இருக்கிறது. அவசரம் என்றாலும் அவனுக்காகக் கப்பலை திருப்ப மாட்டார்கள். அவன் காத்திருக்கத்தான் வேண்டும்.

அவனது அலைபேசி உருத் தெரியாமல் உடைந்திருக்க உடன் பணிபுரிபவனின் மடிக்கணினியில் இருந்து புதிய அலைபேசியை இணையத்தில் வாங்கியிருந்தான்‌. அந்த அலைபேசியும் கப்பல் கரைக்குச் சென்றால் மட்டுமே அவன் கையில் கிடைக்கும். எல்லாவற்றுக்கும் நேரம் எடுக்கும்.

ஆழினியின் காத்திருப்பை அந்நாட்களில் அவன் உணர்ந்தான்.

தன்னை வேண்டாமென்று அவள் பிரிந்து சென்றதும் மனத்தளவில் மிகப்பெரிய அடி வாங்கியிருந்தான் அவன்.

“அதான் என்னை வேணாம்னு போய்ட்டா இல்ல. அப்புறம் எதுக்கு அவகிட்ட நான் சொல்லிட்டு போகணும்? அதுவும் அவளுக்குப் பிடிக்காத ஷிப் ஜாப்க்கு. இதைச் சொன்னா, இன்னும்தான் கோபப்படுவா” என்று தனக்குள் சொல்லிக் கொண்டு மனப் போராட்டத்துடன்தான் இம்முறை கப்பல் செல்ல விமானம் ஏறினான். அந்த முடிவெடுப்பதும் அவனுக்கு எளிதாக இருக்கவில்லை. முதலில் மனைவியைச் சமாதானம் செய்வதற்கு முன் அவள் விரும்பிய வண்ணம் வேலையை மாற்ற முடிவெடுத்தான். முடிவு மட்டும்தான். அதைச் செயல்படுத்துவது முடியாத காரியமாகப் போனது.

முதலில் சென்னையில் வேலைத் தேடினான். அவன் அமெரிக்காவில் வாங்கும் சம்பளத்தில் பாதியை கூடத் தரத் தயாரில்லை அவர்கள். முன்னர் அவன் சென்னையில் இருக்கும் போது வாங்கிய சம்பளத்தை விட அதிகமாகத் தரத் தயாராக இருந்தார்கள்தான். பதவியும் கூடுதல்தான். ஆனாலும் பணத்தின் முன் பதவி இருந்த தட்டு தாழ்ந்து போனது. சரியென்று மனத்தைத் தேற்றி துபாயில் வேலைத் தேடினான். எங்கே, முதல் கட்ட நேர்முகத் தேர்வு, இரண்டாம் சுற்று என்று அவனைச் சுற்றலில் விட்டார்கள். இதற்குள் ராயல் கரீபியன் வேலையை ராஜினாமா செய்திருந்தான்.

ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்கும் முடிவுடன் கோவா நிறுவனத்தை அணுகினான். அவர்களின் வழியே நார்வேஜியன் கப்பலில் சேர்ந்தான்.

அப்போது ஒரு வார்த்தை மனைவியிடம் சொல்லி இருக்கலாம் அவன்.

“வேணும்னு என்னைக் கோபப்படுத்தணும்னே இதை என்கிட்ட சொல்றீங்களா?” என்று கேட்டு விடுவாளோ என்று பயந்தான். அப்படிக் கேட்டால் கூடத் தாங்கிக் கொள்வான். அவள் பேசாமலே மெளனமாய் ஒரு பார்வையுடன் அவனைக் கடப்பதுதான் அவனைக் கடுப்பேற்றும். காயப்படுத்தும்.

ஆனாலும், அவளிடம் சொல்லியிருக்க வேண்டும் நான். அவளில்லாத இந்தப் பொழுதில் அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.

அவளை, அவன்தான் விரும்பி மணந்தான். அது மேலோட்டமாக அவளுக்கும் தெரியும். பின்னாட்களில் நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனாலும் வேறொரு பெண்ணோடு நிச்சயம் வரைக்கும் சென்ற பிறகுதான் தன்னை மணந்தான் என்பதில் அவளுக்கு நிறைய மனத்தாங்கல். ஆரம்பத்தில் இருந்தே அது அவளை உறுத்திக் கொண்டேயிருந்தது அவனுக்கு நன்றாகவே தெரியும்.

அதனால்தான் அவளுக்கான நேரத்தை கொடுத்தான். தன்னை ஏற்றுக் கொள்ள அவளுக்குச் சமயம் கொடுத்தான். அதற்கு மேல் அவனும்தான் என்ன செய்ய முடியும்?

எல்லா நேரமும் அவள் எதிர்பார்ப்புக்கு மட்டுமே அவனால் வளைந்து கொடுக்க முடியாதே? அவனுக்கென்று ஒரு மனமும் முடிவும் இருக்கத்தானே செய்யும்? என்றுதான் இத்தனை நாள்கள் நினைத்திருக்கிறான்.

திருமணமாகும் வரைதான் அவள், அவன் என்பதெல்லாம். திருமணமாகி விட்டால் அவர்கள்தான். தம்பதிகள். தனித்தனி கிடையாது. எப்போதும் துணை இருக்கும். அவனால் நல்ல துணையாக முடியவில்லைதான். அதை அவனே மனதார ஒத்துக் கொள்வான். அதற்காக? அவனைப் பிரிந்து சென்று விடுவாளா?

முதலில் அவனிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்று வாய் விட்டு அவள் சொல்ல வேண்டும். அவள் மனத்தைப் படிக்கும் கலையெல்லாம் இன்னும் அவனுக்குக் கை வரவில்லை.

ஒரு முடிவெடுக்கும் முன் அவனிடம் தெரிவிக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச எதிர்பார்ப்பு அவனுக்கும் இருக்கும் தானே? அதெல்லாம் அவள் செய்யாத போதுதான் அவனும் ஒதுங்கிக் கொண்டான். இப்போது அப்படிச் செய்திருக்கக் கூடாது என்று குற்ற உணர்ச்சியில் ஆழ்ந்தான்.

அவன் மனம் முன்னும் பின்னுமாக அலைபாய்ந்து கொண்டிருந்தது.

அவர்களுக்கு ஒரு இழப்பு நேரும் போது ஆழினிக்குத் துணையாக அங்கு அவனில்லைதான். ஆனால், அது அவனுக்கும் இழப்புதானே? அவள் ஏன் அதை உணரவில்லை?

அவர்கள் குழந்தையை அவன் உணரவேயில்லையே‌.

அது எத்தனை பெரிய இழப்பு? இப்போது அதை நினைக்கையிலும் அவனுக்குக் கண்கள் கசிந்தன.

அந்த இழப்புதான் அவர்களின் வாழ்வை புரட்டி போட்டது. பிரிவு என்ற முடிவை ஆழி எடுக்கவும் அதுதான் காரணம் என்று அவன் பலமாக நம்பினான்.

அவன் தராத, அவனிடம் கிடைக்காத எதையோ ஒன்றைத் தேடித்தான் அம்மா வீடு சென்றிருக்கிறாள். அது மகிழ்ச்சியாக இருக்கலாம், மன நிம்மதியாக இருக்கலாம். எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும். அவளின் முடிவை மதித்தான் அவன். பிரிவு என்றதும் சாதாரண மிரட்டல் என்றே நினைத்தான். ஆனால், ஒரேடியாகப் பிரிந்து போவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. பெட்டி படுக்கையைக் கட்டுவது என்னவென்பதை அன்றுதான் கண்டு கொண்டான்.

அவள் முடிவு அவனுக்கு எப்போதோ தெரியும். அந்தக் கண்களில் அவன் விலகலை கண்டு பல மாதங்கள் ஆகின்றன. அவர்கள் தவற விட்ட வரமான அவர்களின் ஐந்து மாத குழந்தை, அவர்களின் நெருக்கத்தையும் சேர்த்தே கொண்டு போனது.

ஆழி அவனது நெருக்கத்தையும், அவனையும் மறுத்து மறுத்து, ஒரு கட்டத்திற்கு மேல் அவனும் வெறுத்து அவளை நெருங்காமலே போனான்.

அவனுக்கு ஆழி மேல் அன்பிருந்தால் எப்படி அவளைப் போக விட்டிருப்பான். போகாதே என்று தடுத்திருப்பான். அவளைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும் என்று பலமுறை நினைத்திருக்கிறான். எல்லாம் காலம் கடந்த ஞானோதயம்.

அவன் அப்பா துபாயில் வேலைப் பார்க்கும் போது தனியாக அவனை வளர்க்க அம்மா பட்ட கஷ்டங்களைக் கண் கூடாகப் பார்த்திருக்கிறான் அவன். கற்பகம் எங்கும் வெளியில் செல்ல மாட்டார். சொந்த பந்தம், விசேஷ வீடுகள் என எல்லாவற்றிலும் விலகல்தான்.

“உங்கப்பா இருந்தாதான் என்னை மதிப்பாங்க. நான் மட்டும் தனியா போனா ஆளாளுக்கு அவர் வரலையான்னு பேசுவாங்க. அதுக்கே நான் எங்கேயும் போறது இல்ல” என்று அம்மா பலமுறை வருத்தமாகச் சொல்லி கேட்டிருக்கிறான் அவன்.

அப்பாவிடம் பேசுகையில் அம்மா அழுவதைப் பார்த்திருக்கிறான். அப்போதெல்லாம் அவனுக்கு வருத்தமும் கோபமும் வந்திருக்கிறது. ஆனால், அதையே தன் மனைவிக்கும் எப்படிச் செய்தான் அவன்? எப்படி மனம் வந்தது?

“உங்களுக்கு நான் முக்கியமே இல்லையில்ல?” ஆழி கேட்டது சரிதான். அவனுக்கு அவனது கனவும், கப்பல் வேலையும் மட்டுமே முக்கியமாக இருந்திருக்கிறது.

கப்பலுக்கு வந்த பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவளை அழைப்பான்? மீண்டும் அவளுக்குப் பிடிக்காத வேலை இது என்பதே அவனுக்கு முட்டுக்கட்டையாக வந்து நின்றது.

இத்தனை மாதங்களில் அவனை மறந்திருப்பாளாக இருக்கும் என்றே நினைத்தான். அவனால் அப்படி எளிதில் அவளை மறக்க முடியுமா என்ன? அவனை ஆழி சூழ்ந்திருக்கும் போது ஓர் நொடி கூட அவளை மறக்க முடியாமல் போராடினான்.

ஆழினி அவனைப் பிரிந்து போனது அவன் வீட்டினருக்கு மிகுந்த மனவருத்தம்.

“மருமகளுக்குப் பிடிக்கலைன்னா வேலையை விட்டுடேன்பா பிரித்வி” என்று அப்பா கூட அவனுக்கு அறிவுரை சொன்னார். ஆனால், அம்மாவிற்குக் கோபம்.

“என் பிள்ளைக்குப் பிடிச்ச வேலை. அவன் ஆசைப்பட்டுப் போற வேலை. இவளுக்காக அதை விடச் சொல்றீங்களா நீங்க? நம்ம பிள்ளைக்காக உங்க மருமகளை வேலையை விடச் சொல்லுங்களேன். பார்ப்போம். அவ மட்டும் வேலையை விட மாட்டா. ஆனா என் பையன் மட்டும் அவளுக்காக வேலையை விட்டுட்டு வந்து வீட்ல உக்காரணும்? அப்படித்தானே? நல்லா இருக்கே உங்க நியாயம்” என்று அவனுக்குச் சாதகமாகப் பேசுவதாக நினைத்து மருமகளின் மேல் கோபப்பட்டார்.

அந்தச் சூழலில் அவனால் தனியாக இருக்கவே முடியவில்லை. என்னவோ காதல் தோல்வி போல மாடியின் ஒற்றை அறையில் தனித்துக் கிடந்தான். தனிமை வெறுத்து போகவும் புது வேலை தேடினான். சென்னை, துபாய் என்று தேடி இறுதியில் வேறு வழியில்லாமல் அமெரிக்காவையே தஞ்சமடைந்தான்.‌‍

அவனது செய்கையைச் சத்தியமாக நியாயப்படுத்த முடியாது. அவனைப் பொறுத்தவரை மன்னிப்பை, மாற்றத்தை செயலில் காண்பிக்க வேண்டும். ஆழி அதைத்தான் விரும்புவாள் என அவனுக்குத் தெரியும். அதற்காகக் காத்திருந்தான். ஆனால், விதி வேறொரு வகையில் அவர்களை ஒன்று சேர்த்திருக்கிறது.

இந்த வாய்ப்பை அவன் நழுவ விடப் போவதில்லை.

அவசரமாகக் கப்பல் அலுவலகம் சென்று அவசர விடுமுறைக்கு விண்ணப்பித்து, ஊர் திரும்பப் பயண ஏற்பாடுகளைக் கவனித்தான்.

கப்பல் கரையை அடைந்ததும் அவனது புது அலைபேசியை வாங்கிக் கொண்டு புறப்பட்டு விட்டான்.

சியாட்டல், தோஹா, சென்னை என்று பயணித்து அந்த ஆண்டு முடிவடையும் நொடியில் சென்னையை அடைந்து புத்தாண்டு பிறந்த சில மணி நேரங்களில் வீடு வந்தடைந்தான்.

அப்பா அவனுக்காகக் கதவை திறந்து விட்டவர் அவனோடு அதிகம் பேசாமல், “நாளைக்குக் காலையில பேசலாம். நீ போய் ரெஸ்ட் எடுப்பா” என்று சொல்லி அவரும் படுக்கச் சென்றார்.

அவன் அறைக்குள் நுழைய ஆழி அங்கிருந்தாள். அனிச்சையாக அவன் முகத்தில் புன்னகை உதயமாகியது.

இந்தப் புத்தாண்டு நிச்சயமாக நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் மனைவியையும், உறக்கத்தையும் சேர்த்தே தழுவினான்.

How did this episode feel?
Rate this episode⭐ 5.0 (11)

2 thoughts

Stay Connected A simple, spam-free email update whenever a fresh chapter goes live.
About Us FAQ Contact Us Privacy Policy Terms & Conditions Disclaimer Copyrights
© 2026 Devi Manogaran Novels. All rights reserved.  ·  Created by Vel Studios
error: Content is protected !!