நற்காதல் நெய்திடவா – 1
அவளுக்கு, அவனைப் பிடிக்கவில்லை!
“முதல் பார்வையிலேயே ஒருவரை பிடிக்காமல் போகுமா?” என்று யாரேனும் கேட்டால், நூறு சதம் சாத்தியங்கள் இருக்கிறது என்று இப்பொழுது அடித்து சொல்வாள் அவள்.
அன்று நிறைந்த பௌர்ணமி. நல்ல நாள் பார்த்து அவளை வேலைக்கு அனுப்பியிருந்தார்கள் அவளது குடும்பத்தினர். முதல் முறையாக வேலைக்கு செல்கிறாள். அது கூடுதல் மகிழ்ச்சியையும் பரபரப்பையும் அவளுக்கு அளித்திருந்தது.
அவளுக்கு சொந்த ஊர் விருதுநகர். தற்போது வேலை நிமித்தமாக சென்னை வந்திருக்கிறாள்.
அதிகாலையில் எழுந்து, குளித்து, கிளம்பி, தெய்வங்களை வணங்கி, வீட்டுப் பெரியவர்களிடம் ஆசி பெற்று, அப்பா, அண்ணன், அப்புச்சி என ஒவ்வொருவரிடமும் தனித் தனியாக ஆசீர்வாதத்தோடு பணமும் பெற்று அண்ணனின் வண்டியில் ஏறினாள் அவள்.
அவர்கள் பயணம் தொடங்கி ஐந்து நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. மழைப் பிடித்துக் கொண்டது. அவளுக்கும் மழை பிடிக்கும். ஆனால், அதில் நனையப் பிடிக்காது.
பெரு மழையாக இல்லாமல், பூந்துறலாய் மழைப் பொழிய, துப்பட்டா கொண்டு தலையை மூடிக் கொண்டாள். ஒன்றரை மணி நேர பயணத்தின் முடிவில் அவள் உடலெங்கும் நீர்த் துளிகள் பூத்து நின்றது.
“ஆல் த பெஸ்ட் குட்டிச் சாத்தான். வெட்டியா உட்கார்ந்துட்டு இல்லாம கொஞ்சம் வேலையும் பாரு. என்ன?” அண்ணன் சொல்லவும் கண்ணை சுருக்கினாள். மெலிதான சிரிப்புடன் அவளின் தலை கலைத்து விட்டு, “நல்லா நனையும் முன்னாடி உள்ள ஓடு” என்று விரட்டினான் அவளின் அண்ணன் விஜயகுமார்.
“ஓகே. நீ வீட்டுக்கு பார்த்துப் போ” என்று விட்டு அவள் உள்ளே செல்ல, “ஈவ்னிங் வர்றேன். வெயிட் பண்ணு” கத்தினான்.
“ஓகே ண்ணா” என்றபடி ஓடியவள், ஐந்தாம் நிமிடம் அந்த வங்கிக்குள் நுழைந்திருந்தாள்.
அந்த நொடியே அவளை வார்த்தையால் அடித்து விரட்டினான் அவன்.
“ஹலோ, ஹலோ. பிளீஸ் வெளில வெயிட் பண்ணுங்க” முகத்தில் அடித்தது போல சொன்னது மட்டுமில்லாமல், கையை வீசி வாயிலை காட்டியவனை பதற்றமாக பார்த்தாள் அவள்.
“செக்யூரிட்டி…” என்று கத்தியவனை பார்த்ததும் மிரண்டு விழித்தாள்.
சட்டென சுதாரித்து தான் யாரென்று அவனிடம் சொல்லி விட யத்தனித்து, “சார்..” என்று ஆரம்பித்தாள். பரிதாபமாக, குரலுக்கு பதில் காற்று தான் வந்தது.
அவனோ, ஏற்கனவே சிடுசிடுவென்று இருந்தவன், இப்போது மேலும் சினந்து, “உங்களை தான்மா சொல்றேன். வெளில இருங்க. பேங்க் டைமிங் தெரியாதா உங்களுக்கு?” அவளை நோக்கி நடந்து வந்தபடி அவன் சொல்ல, “இல்ல, சார்..” என்றாள்.
இப்போது அவள் பேச்சு அவன் காதில் லேசாக விழ, “பிளீஸ், வெளில இருங்க. பேங்க் வேலை நேரம் ஆரம்பிச்சதும் நாங்களே கூப்பிடுவோம்” அவன் சொல்ல சொல்ல அவள் முகம் மேலும் பதற்றமாகியது.
“செக்யூரிட்டி, ரவி” என்று சத்தமாக அவன் அழைக்க, அவள் முகத்தில் நீர்த் துளிகள் வடிந்தது. கைக்குட்டையால் அதை துடைத்தபடி அவனைப் பார்த்தாள்.
அவனும் என்ன நினைத்தானோ, சற்றே பார்வையை மாற்றி, “எஜுகேஷன் லோன் வாங்க வந்தீங்களா?” என்று கேள்வியை அக்கறையாக அவனே கேட்டு, “ஒரு மணி நேரம் வெயிட் பண்ணுங்க. நானே உங்களுக்கு கைட் பண்றேன். அதுவரை வெளில வெயிட் பண்ணுங்க. பேங்க் கஸ்டமருக்கு ஓபன் பண்ணதும், உள்ள வந்து உட்காருங்க” என்று அக்கறையாக அவனே பதிலும் சொல்ல, அவளுக்கு கோபமும், சிரிப்பும் சேர்ந்தே வந்தது.
சிரிப்பை மறைக்க கைக்குட்டையால் முகம் துடைப்பது போல வாயை மூடி விட்டு அவனைப் பார்த்தாள்.
“நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். உங்களுக்கு சிரிப்பா இருக்கா மா? பேங்க் ஓபனாகும் முன்னாடி உள்ள வந்துட்டு.. போய் வெளில இருங்க.” இம்முறை அவளுக்கு முன்பாக வந்து நின்று கோபமும், எரிச்சலுமாக சொன்னான் அவன்.
அங்கே காசாளர் அறையின் கண்ணாடி தடுப்பின் வழியே பார்க்க, பணப் பெட்டிகள் சரிப் பார்ப்பது தெரிந்தது. அவளின் பார்வையை பார்த்து விட்டு அவன் முன்னே வந்து நிற்க, “சார்.. சார்..” என்று அந்நேரம் காவலாளி அவர்களுக்கு நடுவில் ஓடி வந்து நின்றார்.
“என்ன ரவி வேலை பார்க்கறீங்க? இப்பவே கஸ்டமரை உள்ள விட்டிருக்கீங்க. முக்கியமான வேலை நடந்திட்டு இருக்கறது உங்களுக்குத் தெரியாதா? கவனிக்க மாட்டீங்களா?” இப்போது அவர் மேல் பாய்ந்தான் அவன்.
“இவரை மட்டும் எப்படி உள்ள விட்டீங்க?” காவலாளியிடம் அப்பாவியாக அவள் சந்தேகம் கேட்க, முறைத்தான் அவன்.
“நான் பேங்க் மேனேஜர் மா” பல்லைக் கடித்துக்கொண்டு அவன் சொல்ல, அவனை அதிர்ச்சியும், ஆச்சரியமும் கலந்து பார்த்தாள் அவள்.
அவன் அறிமுகப்படுத்தி கொண்ட விதத்தில் மனதிற்குள் விழுந்து, புரண்டு சிரித்தாள். அதற்கு காரணமும் இருந்தது. பின்னே அவளை விட மூன்று அல்லது நான்கு வயது தான் அதிகம் இருக்கும் அவனுக்கு. “பேங்க் மேனேஜர்” என்றால், அவளுக்கும் சந்தேகம் வரும் தானே?
“குட் மார்னிங் சார்” ஆச்சரிய பார்வை மாறாமலேயே அவள் சொல்ல, சிறு தலையசைப்புடன் அதை ஏற்றுக் கொண்டான் அவன்.
அவனுக்கு இந்தப் பார்வைகள் புதிதல்ல. மிகப் பழகியவை. அதனால், அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்,
“பிளீஸ், வெளில இருங்க” ஐந்தாவது முறையாக அவன் சொல்ல, “சார், சார்..” என்று பதறிய ரவி, “மேடம் தான் புது அசிஸ்டன்ட் மேனேஜர். இன்னைக்கு தான் ஜாயின் பண்றாங்க. என்கிட்ட சொல்லிட்டு தான் உள்ள வந்தாங்க சார்” படபடவென ரவி விளக்கம் கொடுக்க, இருவரையும் மாறி மாறிப் பார்த்தான் அவன்.
“சரி. நீங்க போய் வேலையை பாருங்க ரவி” என்று அவன் அமைதியாக சொல்ல, ரவி வாயிலை நோக்கி நடந்தார்.
அவன் பார்வை, அவள் மேல் அழுத்தமாக பதிந்தது. மிக அவசரமாக, “சாரி” என்றான்.
அவனது அவசரத்திற்கு ஏற்ப அவன் உதடுகளும், அலுவல் ரீதியான புன்னகை ஒன்றை அவளுக்குத் தந்தது.
“நீங்க இன்னைக்கு ஜாயின் பண்றீங்கன்னு தெரியும். ஆனா, உங்க முகம் தெரியாது இல்லையா? அதனால் நடந்த குளறுபடி. பிளீஸ், தப்பா நினைக்க வேணாம். சாரி.” அதிவேகத்துடன் சொன்னவன், அதை விட வேகமாக, “வெல்கம் டு அவர் பேங்க். புது வேலைக்கு வாழ்த்துகள்” என்றும் சேர்த்துச் சொன்னான்.
“தாங்க்ஸ்” அகம் மலரவில்லை என்றாலும், முகம் மலர சொன்னாள்.
“வெற்றி வேந்தன்” என்றான். ஒரு நொடி புரியாமல் முழித்து, பின்னர் அவன் பெயர் அது எனப் புரிந்து, “வேதவர்ஷினி” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
“ஓகே. தேவதர்ஷினி..” என்று அவன் ஆரம்பிக்க, அவனை முறைக்க முடியாமல் பார்வையை சட்டென தாழ்த்தி, பின் நிமிர்ந்து நேராக அவன் கண்களைப் பார்த்து, “வேத வர்ஷினி சார்” நிறுத்தி நிதானமாக சொன்னாள்.
“ஓ, தேவ? சாரி. வேத? வர்ஷினி.” என்றவன் முகத்தில் அழகான புன்னகை தவழ, அதைக் கண்டு இளகாமல் அப்படியே இறுக்கமாக நின்றாள் அவள்.
பள்ளி, கல்லூரி என எல்லா இடத்திலும், “வேதவர்ஷினி” என்ற அவளின் பெயர், பலமுறை, கொலை செய்யப்பட்டிருக்க, அந்த கோபம் இப்பொழுதும் அவளுக்கு வந்தது.
“வேதவர்ஷினி, வாங்க. இது உங்க சீட்” அவன் சொல்லும் போதே மற்ற வங்கி அலுவலர்களும் உள்ளே வரத் தொடங்க, அங்கு வைத்தே அறிமுகப் படலத்தை நடத்தினான் வெற்றி வேந்தன்.
அவள் அனைவரிடமும் பேசிக் கொண்டிருக்க, கேஷியர் இருந்த பகுதிக்கு சென்றான் வெற்றி. அங்கிருந்தே அவன் பார்வை அவளை துல்லியமாக ஆராய்ந்தது.
அவன் முதல் பார்வையில் கணித்தது போல, கல்விக் கடன் வாங்க வந்த கல்லூரி மாணவியை போலத் தான் இருந்தாள் அவள்.
அடர் ஊதா நிற சுடிதார் அணிந்திருந்தாள். தோளின் இருபுறமும் துப்பட்டா நேர்த்தியாக போடப்பட்டிருந்தது. முதுகில் அசைந்தாடிய கூந்தலை அடர்த்தியான பின்னலில் அடக்கியிருந்தாள். பின்னலின் தொடக்கத்தில் நெருக்கமாக தொடுக்கப்பட்ட குட்டி மல்லிகை சரம் வீற்றிருந்தது. காதில், சின்னதாய் ஜிமிக்கி அசைந்தாடி கொண்டிருக்க, நெற்றியில் வரிசையாக பொட்டுகள் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருந்தன.
சிவப்பு பொட்டு, அதன் மேலே குங்குமம், அதற்கும் மேலே திருநீறு பூசி மங்கலகரமாக வந்திருந்தாள் வேதா.
காலையில் பெய்த மழையில் நனைந்திருப்பாள் போலும், முகத்தில், தலையில், அவள் சூடியிருந்த பூவில் எங்கும் தூறலின் தடயம் பதிந்திருந்தது.
அடிக்கடி ஈரத்தை கையால் துடைத்து மெல்ல சிலிர்த்துக் கொண்டு அவள் நிற்க, அவனுக்கு ஏனோ சிரிப்பு வந்தது.
அந்நேரம் பார்த்தா அவள் திரும்ப வேண்டும்? அவள் பார்வையில் அவனின் அந்த நமுட்டு நக்கல் சிரிப்பு பட, காரணம் புரியாமலேயே அவளுக்கு ஒருவித கோபமும், பிடித்தமின்மையும் அவன் மேல் வந்தது.
“தேவ.. சாரி. வேதவர்ஷினி. இன்ட்ரோ முடிஞ்சதும், என் கேபின் வாங்க. ஜாயினிங் ஃபார்மலிடிஸ் முடிச்சுடலாம்” மார்பின் குறுக்கே கைகளை கட்டியபடி, சுவரில் சாய்ந்து அவன் சொல்ல, தலையசைத்தாள் வேதவர்ஷினி.
“இதான் உங்க சீட் மேம். உட்காருங்க” அவளின் இருக்கையை கைக்காட்டி, கிளர்க் நாயகி சொல்ல, “தேங்க்ஸ். ஆனா, வேதான்னு கூப்பிடுங்க. மேம், மேடம் எல்லாம் வேண்டாம்” தன்மையாக சொன்னாள்.
“ஓகே வேதா. நல்லவேளை நீங்களே சொன்னீங்க. நீங்க ரொம்ப சின்ன பொண்ணா இருக்கீங்களா, 22 வயசு பொண்ணை போய் எப்படி மேடம் சொல்லன்னு ரொம்ப யோசிச்சேன். எங்களுக்கும் வேதானு கூப்பிடுறது தான் ஈஸி” சிரித்தபடி சொல்லிக் கொண்டே, தன் இருக்கையில் சென்று அவரும் அமர, பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு தன்னை நிதானப்படுத்தினாள் வேதா.
அவளின் வயதும், தோற்றமும், அனுபவமின்மையும், அங்கிருந்த மூத்த பணியாளர்களுக்கு ஆச்சரியத்தையும், அதிருப்தியையும், இந்த சிறு பெண்ணிற்கு கீழ் தாங்கள் பணிபுரிவதா என்ற எரிச்சலையும் தரும் என்பதை அவள் உணர்ந்தே இருந்தாள்.
அவளுக்கு இந்த வேலை கிடைத்த மறுகணமே மனது இதையெல்லாம் அலசத் தொடங்கி இருந்தது தான். ஆனாலும், நிதர்சனம் எப்போதும் முகத்தில் அறையும் தானே?
“22 வயசு தானா? எப்படி அசிஸ்டன்ட் மேனேஜர் பதவி? இவ்வளவு சீக்கிரம் எப்படி?” வங்கியின் ஓரத்தில் நகைக்கடனில் அமர்ந்திருந்தவர் கேட்டது, அவள் காதிலும் விழ, பார்வையை சட்டென திருப்பினாள்.
அவளின் இருக்கைக்கு நேரேதிரே இருந்த மேலாளர் அறையில் அமர்ந்திருந்த வெற்றி வேந்தன் பார்வையில் பட்டான்.
அவன் தலை அவளது கோப்பில் தான் மூழ்கியிருந்தது.
வங்கித் தேர்வு எழுதி பணிக்கு வந்திருக்கிறாள் என்பதை படித்ததும் மெச்சுதலான ஒரு புன்னகை அவன் உதடுகளில் தோன்றி மறைந்தது. அவள் பேரை சரியாகச் சொல்லிப் பார்த்துக் கொண்டான்.
அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.
அவனை, அவளுக்குப் பிடிக்கவில்லை.
முதல் முறையே அவன் பார்த்த பார்வையும், நின்ற தோரணையும், அவளை அசட்டையாக நடத்திய விதமும், அதற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் அவன் பேசிய பேச்சும், அவள் மனதில் மீண்டும் மீண்டும் பழைய தேய்ந்த ஒலி நாடாவை போல ஓடிக் கொண்டேயிருந்தது.
கல்லூரி மாணவி என்றா தன்னை நினைத்தான்?
வங்கித் தேர்வுக்காக இரவு, பகல் பார்க்காமல் படித்திருக்கிறாள். தூக்கம் கிடக்கிறது, எத்தனை நாட்கள் சோறு மறந்திருப்பாள்? எத்தனைப் பெரிய தியாகம் அது!
அதை மதியாமல் போனானே, கோபமாக வந்தது அவளுக்கு.
அவள் 22 வயதில் அரசு வங்கியின் உதவி மேலாளர் வேதவர்ஷினி. அதைச் சொல்லி சொல்லியே வீட்டில் எத்தனை அலப்பறை செய்திருப்பாள்.
அவள் பெருமை பேச வீட்டில் ஆட்களை வேறு சேர்த்து வைத்திருந்தாளே. அவளின் அப்பத்தா, அப்புச்சி இருவரும் தான் அது.
“இந்தாங்க டா. பார்த்தீங்களா? எங்க ஆத்தா கவர்மெண்ட் பேங்க் பரீட்சை பாஸ் பண்ணிடுச்சாம். மொத்த பேரும் என் புள்ளை கிட்ட கைக் காட்டி தான் இனி காசு வாங்கணும். கேட்டுக்கோங்க” பீற்றினார் அய்யனார்.
“நான் பெத்தது, பேர் வச்சதுன்னு ஒருத்தருக்கும் படிப்பு ஏறல. எங்க ஆத்தா மீனாட்சி. என் வேத நாயகி, பேங்க் உத்தியோகம் பார்க்க போறா. நீங்க போற பேங்க் இல்லடா, கவர்மெண்ட் பேங்க். என்னா நினைச்சீங்க எங்க ஆத்தாவை..” பேசிக் கொண்டே போன அப்பத்தா முத்துமாரியை, “ஏ, அப்பத்தா. பேசாம இரு அப்பத்தா. அப்புறம் என்னை இவனுங்க வேலைக்கு அனுப்ப மாட்டாய்ங்க” என்று கிசுகிசுத்து மலையிறக்கினாள் வேதா.
“யாரு, இவனுங்களா?. உங்க அப்புச்சி பேச்சை மீறி என்ன பண்ணிடுவாய்ங்க” என்று அவர் குரலை மீண்டும் உயர்த்த, அய்யனாரை பார்த்தாள் அவள்.
அவரின் ஒற்றைப் பார்வையில் அமைதியானார் அப்பத்தா.
அன்றைக்கு “கெத்து செல்லம் நீ” என்று அவளின் கன்னம் வழித்து, பெரியவர்கள் நெட்டி முறித்த சத்தம் இன்னமும் அவள் காதில் ஒலிக்க, “எஜுகேஷன் லோன் வேணுமா?” என்று அவளைப் பார்த்துக் கேட்டு அசிங்கப்படுத்தி விட்டானே இவன் என்று மனதில் மறுக மட்டுமே அவளால் முடிந்தது.
இன்றைக்கு வேலையில் சேர எத்தனை ஆவலாக காலையில் கிளம்பி வந்தாள். முதல் நாளே இப்படி நிகழ வேண்டுமா? அவள் மனம் சுணங்க, “வேதா, வேலையை பாரு. அதை மட்டும் பாரு” தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.
சரியாக அந்த கணம் அவளை நிமிர்ந்து பார்த்தான் வெற்றி வேந்தன்.
“வாங்க” என்று அவன் கைக் காட்ட, எழுந்து அவனது அறையை நோக்கி நடந்தாள்.
அது சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்திருந்த பெயர் பெற்ற தேசிய வங்கியின் கிளை.
அன்று மாதத்தின் முதல் நாள் என்பதால் கூட்டம் அலை மோதிக் கொண்டிருந்தது. பணம் செலுத்தவும், பெறவும், காத்திருந்த மக்கள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னே நடந்தாள்.
வெற்றி அவனே எழுந்து வந்து தன் அறைக் கதவை அவளுக்காக திறந்து விட்டான்.
“உட்காருங்க.” என்றவன், “உங்க ஃபைல் இப்போ தான் பார்த்தேன். சாரி. காலையில அப்படி பேசினதுக்கு ரொம்ப சாரி” அவன் சொல்ல, மனதில் இருந்த கோபத்தையா அவனிடம் காட்ட முடியும்? ஆகையால், இயல்பாக தலையசைத்து புன்னகைத்தாள் வேதா.
“இட்ஸ் ஓகே சார்” என்றாள். புன்னகைத்தான் வெற்றி.
அதன் பின்னர் அவர்களின் நாளை ஆக்கிரமித்துக் கொண்டது வங்கி வேலைகள்.
மாதத் தொடக்கம் என்பதால், வங்கியில் அத்தனை கூட்டம் நிரம்பி வழிந்தது.
சென்னையின் புறநகர் பகுதியான ஆவடியில் அமைந்திருந்தது அவள் பணியில் சேர்ந்திருந்த வங்கி. கடற்படை வானொலி மையம், விமானப்படை தளம், இராணுவ படை உடைத் தொழிற்சாலை மற்றும் காவல்துறை பயிற்சி அகாடெமி என மத்திய அரசு நிறுவனங்கள் நிறைந்திருந்த பகுதி அது.
அதன் பணியார்களின் வங்கி சேமிப்பு கணக்குகள் அதிகளவு அவர்களின் வங்கியில் தான் இருந்தது.
சம்பளம் எடுக்க, ஓய்வூதியம் பெற என மிகப் பெரிய வரிசை காத்திருந்தது. அத்தனை பணிகளுக்கு நடுவிலும் மிகப் பொறுமையாக அவளின் ஆவணங்களை சரி பார்த்து, தேவையான கோப்புகளில் கையொப்பம் வாங்கி, அவள் பணியில் முறையாக சேர உதவினான் வெற்றி.
அத்தோடு அவளுக்கு பணிச் சூழலையும் அவன் விளக்க, அவளுக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போலிருந்தது.
“ஓகே சார். ஓகே சார்” என்று பள்ளி மாணவியை போல தலையசைத்து, அவன் சொன்னதை அப்படியே செய்தாள்.
“முதல் நாளே எல்லாத்தையும் கத்துக்க முடியாது மேடம். அதுனால பயப்பட வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமா டெய்லி கத்துக்கலாம். ஓகே? இப்போ வீட்டுக்கு கிளம்புங்க” வெற்றி சொல்ல, அதற்காக காத்திருந்ததை காட்டிக் கொள்ளாமல், நிதானமாக அனைவரிடமும் விடை பெற்று வெளியில் வந்தாள் வேதா.
அங்கே அவளுக்காக காத்திருந்த அண்ணனை பார்த்ததும் அவளின் முகமே மலர்ந்து போனது.
“ஹாய் விஜய் ண்ணா” என்றழைத்தாள்.
“என்ன வேதா? அழுதிட்டு வருவனு பார்த்தா அலைப்பறை குறையாம வர்ற? முதல் நாளே உன் மண்டையில் கொட்டி எவனும் வேலை வாங்கலையா?” அவளின் மண்டையில் வலிக்காமல் கொட்டி அவன் கேட்க, “தம்பி, தம்பி. நான் தான் நாலு பேரை வேலை வாங்க வந்திருக்கேன். நான் அசிஸ்டன்ட் மேனேஜர் தம்பி. அது தெரியாம பேசிட்டு இருக்க நீ” அண்ணனின் தோளில் ஓங்கி அடித்து கெத்தாக சொன்னாள்.
அந்த நிமிடம் பார்த்தா அவன் நினைவு வர வேண்டும்? நினைவு மட்டுமா? அவனுமே வெளியில் வந்து நின்றான், வெற்றி வேந்தன்.
அவளுக்கு அனிச்சையாக அவன் கேட்ட, “எஜுகேஷன் லோன் வேணுமா?” நினைவு வர, “விஜய் ண்ணா, வா போகலாம்” அவசரமாக அண்ணனை கிளப்பினாள்.
“இரு அராத்து” நிதானமாக சுற்றுப் புறத்தை பார்வையிட்டு, வண்டியை கிளப்பினான் அவன்.
காலையை விட மிக மோசமான போக்குவரத்து நெரிசலில் இப்பொழுது சிக்கி அரும்பாக்கத்தில் இருந்த அவளின் சித்தி வீட்டிற்கு வந்து சேர அவர்களுக்கு மீண்டும் ஒன்றரை மணி நேரமாகியிருந்தது. அவளின் மொத்த குடும்பமும் தற்போது அங்கு தான் இருந்தார்கள்.
“வா, ஆத்தா. வேலை எப்படி இருந்தது?” வாசலில் அவளுக்காக வழி மேல் விழி வைத்து நின்றிருந்த அப்பத்தா விசாரிக்க, “வேதா, பேங்க் எப்படியிருக்கு? உன் கூட வேலை பார்க்கறவங்க எல்லாம் நல்லவங்க தானே?” என்று தன் பங்கிற்கு கேட்டார் அய்யனார்.
“என்னத்த சொல்ல? நான் இன்னைக்கு என் தாய் சொல்லைத் தட்டாம, சேலையை கட்டிட்டு வேலைக்கு போய் இருக்கணும்” மெலிதாக புலம்பி, அப்பத்தாவை அணைத்துக் கொண்டாள் வேதா.
“மொத நாள்னு வேலை ஒன்னும் கொடுக்கல அப்பத்தா. என்ன வேலை, எப்படி செய்யணும்னு சொல்லிக் கொடுத்தாங்க” இருவருக்கும் கேட்கும் படி சத்தமாக சொன்னாள்.
“ஆங்..” பெரியவர்கள் ஒன்றாக சொல்ல, “ஒன்னும் புரியலை. போக போக புரியும்னு மேனேஜர் சொல்லி அனுப்பினார்.” என்றாள் தோளை ஏற்றி இறக்கி.
“அதெல்லாம் நீ கப்புனு பிடிச்சுப்ப ஆத்தா. அறிவாளி பிள்ளை” அவளின் கன்னம் கிள்ளி அவர் சொல்ல, பளிச்சென்று புன்னகைத்தாள் வேதவர்ஷினி.
“எப்ப டி வேதா வந்த? வேலை ரொம்பவா? உன் முகம் ஏன் இப்படி சோர்ந்து போய் இருக்கு? மதியம் சாப்பிட்டியா இல்லையா? நான் தான் சோறு கட்டிக் கொடுத்தனே? சாப்பிடலையா நீ?” கேள்விகளை அடுக்கினார் அவளின் அம்மா ஜெயலட்சுமி.
அவள் பதில் சொல்லும் முன்னே, “ஏன்பா விஜய். தங்கச்சிக்கு ஏதாவது சாப்பிட வாங்கி கொடுத்து கூட்டிட்டு வந்திருக்கலாம் இல்ல?” என்று சொல்ல, “இவ எல்லாம் சோறை மறக்குற ஆளா மா?” என்று எதிர்க் கேள்வி கேட்டான் அவன்.
“இந்தாடா அண்ணா. ஃபர்ஸ்ட் டே. அரசு பணி வேற. சோறே இறங்கல. தெரியுமா?” அவள் சோகமாக சொல்ல, “சாப்பிடலயா நீ?” மொத்த தாய் குலமும் அதிர்ந்து, அவளை உள்ளே தள்ளிக் கொண்டு போனார்கள்.
“கிவ் மீ ஃபைவ் மினிட்ஸ். முகம், கை, கால் கழுவிட்டு வர்றேன்” என்று அவர்களிடம் இருந்து நழுவி, பத்து நிமிடங்களில் மீண்டும் அப்பத்தா, அம்மா, சித்தி முன்பு வந்து அமர்ந்தாள் வேதவர்ஷினி.
மழைக்கு சூடாக செய்திருந்த மொறுமொறு மசால் வடைக்கு, சோறை பிசைந்து பேத்திக்கு ஊட்டினார் அப்பத்தா.
உப்பு பருப்பு குழம்புக்கு மசால் வடை சுவை சேர்க்க, ரசித்து, ருசித்து உண்டு கொண்டிருந்தாள்.
“என்னம்மா, இப்ப தான் வேலை விட்டு வந்தியா?” அப்பாவை பார்த்ததும் உணவின் ருசி சற்று குறைய, அவரின் கண் ஜாடையில் அம்மா ஜெயலட்சுமி பேச தொண்டையை செருமவும் அப்புச்சியை பார்த்தாள் அவள்.
“என்னப்பா? நீங்களும், உங்க பேத்தியும் மாத்தி மாத்தி பார்த்துகிட்டா ஆச்சா? ரெண்டு பேரும் ஒழுங்கா சொன்ன சொல்லை காப்பாத்துங்க” தன் அப்பாவிடம் குரலை உயர்த்தினார் அவளின் அப்பா வானமாமலை.
“எப்பா புள்ளை சாப்பிட்டுட்டு இருக்கும் போது.. என்ன பஞ்சாயத்து ஆரம்பிக்கிற நீ? இரு. அவ சாப்பிட்டு முடிக்கட்டும்” அப்பத்தா, அப்பாவை அதட்ட, “முத்துமாரி இருக்க வரைக்கும் உன்னை யாரும், எதுக்கும் கட்டாயப்படுத்த முடியாது வேதா” மனதில் ஆனந்த தாண்டவமாடி சொல்லிக் கொண்டாள்.
“ம்மா..” என்று வானமாமலை கோபமாக அழைத்து, “பேச்சு மாறாதீங்க மா” கடுப்புடன் சொன்னார்.
“என்னடா, பேச்சு மாறுறாங்க? வந்துட்டான் பேச. இன்னைக்கு தான் பிள்ளை வேலைக்கு சேர்ந்திருக்கு. அதுக்குள்ள தடை போடுற மாதிரி பேசுற? புத்திக் கெட்டவனே” மகனை அதட்டினார் அய்யனார்.
அவரோ நிதானமான அமைதியுடன் மகளைப் பார்க்க, அவரின் பார்வையை மிக கவனமாக தவிர்த்தாள் வேதவர்ஷினி.
“சரிப்பா. இன்னைக்கு பேசல. அப்புறம் எப்போ பேசுறது?” வானமாமலை, அப்பாவிடம் கேட்க, அவரோ பேத்தியை பார்த்தார்.
“என்ன பேசணும் உனக்கு?” முத்துமாரி மகனை கேட்க, “ஏயப்பத்தா” என்று அவரின் முந்தானையை பிடித்து மெல்ல இழுத்தாள் வேதா.
“என்னை வேலைக்கு போக விடுங்க. அப்புறம் நீங்க சொல்ற மாதிரி கல்யாணம் பண்ணிக்கிறேன்னு உங்க பேத்தி சொன்னாளா? இல்லையா?”
“சொன்னா தான்”
“அதுக்கு நீங்களும் சப்போர்ட்டு தானே?”
“ஆமா, அதுக்கு என்னடா இப்போ?” மீண்டும் அய்யனார் மகனிடம் எகிற,
“என்னப்பா என்னையவே கேள்வி கேட்டு கத்திட்டு இருக்கீங்க? ஒழுங்கா உங்க பேத்தியை கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல வைங்க. அவளை காலத்துக்கும் உங்க கூடவே வெச்சு இப்படியே சோறு ஊட்டி விட்டு, செல்லம் கொஞ்சிட்டு இருக்கப் போறீங்களா ரெண்டு பேரும்?” மகளுக்காக பெற்றவர்களை அவர் முறைக்க, “ஆத்தி, அப்பத்தா.. ஆமான்னு சொல்லிடு. அப்பத்தான் அப்பா இன்னும் ஆடுவார்” முத்துமாரியின் காதில் சிரிப்புடன் குறும்பாக முணுமுணுத்தாள் வேதா.
“என்னடா பேசுற? கூறு இல்லாம. அவளுக்கு கல்யாணம் பண்ணி, அழகு பார்த்து கொஞ்சுவோம் டா நாங்க. உனக்கென்ன பொறாமை. புள்ளை கூட போட்டி போடுறான் பார்” மகனை முறைத்த முத்துமாரி, “உனக்கென்ன கோபம் இப்போ? நாங்க யாரும் பேச்சு மாறல. பேத்தி வேலைக்கு சேர்ந்தாச்சு. உன் சொல்லை நீ காப்பாத்திட்ட. நாங்களும் பேச்சு தவறல சாமி. நீ உன் மகளுக்கு கல்யாணத்துக்கு பாரு.” என்று தீர்க்கமாக சொல்லி முடிக்க, அவரின் பக்கத்தில் அமர்ந்திருந்த அவரின் மீனாட்சி, வேதவர்ஷினி, அவரின் பேச்சைக் கேட்டு காளி அவதாரம் எடுத்திருந்தாள்.
How did this episode feel?
Rate this episode⭐ 5.0 (1)
2 thoughts
Sign in to share your thoughts
One tap with Google, no password needed.
Continue with Google Login or register with email
or write your comment below as a guest
Nice Story
Thanks