Chapter 15 of 21

தெண்திரை தேடலே – 15

October 31, 2026 · 12 min read · ⭐ 5.0 (8)

அத்தியாயம் – 15

அவர்களின் வாழ்க்கை அவர்கள் விரும்பிய வண்ணம் வளையவில்லைதான். ஆழினி நினைத்தால் மாற்றியிருக்கலாம். அதற்கு அவனும் ஒத்துழைத்திருந்திருக்கலாம். அதைச் செய்திருக்கலாம், மாற்றியிருக்கலாம், முக்கியமாக அவன் மாறியிருக்கலாம். அவளை மாற்றியிருக்கலாம். இப்படிப் பல கலாம்கள் இருந்தன. எல்லாவற்றையும் காலம் கடந்த பிறகுதான் உணர்ந்து கொள்கிறோம்.

அவளின் நினைவுகளோடு நேரமும் நழுவ இரவு கவிழ்ந்திருந்தது. கீழிறங்கி செல்ல வேண்டும், பெரியவர்கள் தனியாக இருக்கிறார்கள் என்று தோன்றினாலும், அம்மா பார்த்துக் கொள்வார் என்ற எண்ணத்துடன் அங்கேயே அமர்ந்து விட்டாள்.

அந்த மேஜையின் இரண்டாம் இழுப்பறையை இழுத்தாள். அதில் ஒரு கோப்பு இருக்கவும் பரபரப்புடன் வேகமாக எடுத்துப் பிரித்தாள்.

கண்ணில் விழுந்த காட்சியில், ஹாவென்று ஆழ மூச்சிழுத்தாள். அது அவளின் மருத்துவக் கோப்பு. அவள் கர்ப்பத்தை உறுதி செய்ததில் இருந்து, பரிசோதனை முடிவுகள், ஒவ்வொரு முறை ஸ்கேன் செய்தது வரை என அனைத்து தகவலும் அதிலிருந்தது.

அவள் அனுப்பியிருந்த ஸ்கேன் காப்பியை புகைப்படமாக அச்சிட்டு வைத்திருந்தான் அவன்.

அதன் கீழே, “அப்பா மிஸ் யூ பேபி. ஐ மிஸ்டு யூ” என்று உடைந்த இதயம் வரைந்து பிரித்வி கைப்பட எழுதியிருந்தான்.

ஸ்கேனில் குட்டியாய் தெரிந்த குழந்தையை ஒற்றை விரலால் வருடினாள். அவள் கையில் கிடைக்காமல் போன வரம் அவன்.

பிரித்விக்கும் அது பேரிழப்புதானே. மனம் கலங்க அழுது விடாமல் இருப்பதற்காகக் கண்களை இறுக மூடிக் கொண்டாள். தொண்டையடைத்து வலித்தது. எத்தனை மாதங்கள் கடந்தாலும் கடக்கவே முடியாத இழப்பு. மனத்தின் ரணத்தைக் கீறி விட்டது போல வலி பரவியது.

மனத்தைத் திசைத் திருப்ப பிரித்வியைப் பற்றி யோசிக்கலானாள்.

அவளின் மோதிரம், வளையல் என்று பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான். இந்த அறையில் அதை எதற்காகக் கழற்றி வைத்தாள் என்ற நினைவு வரவும், மெலிதாகப் புன்னகையும், வருத்தமும் சேர்ந்தே தோன்றியது.

அந்தப் படுக்கையறை சுவரில் கடல் பின்னணியில் அவளின் தோளில் கைப் போட்டு அணைத்து நின்றிருந்த பிரித்வியின் மேல் நிலைத்தது அவள் பார்வை.

“ஆழி..” என்று கொஞ்சி அணைக்க வருபவனை எத்தனையோ முறை உதறி உதாசீனப்படுத்தியிருக்கிறாள். அவளின் பார்வை வட்டத்தில் இருக்கும் போதே விலக்கி வைத்தவள், இப்பொழுது பார்க்கவே முடியாமல் போய் விடுமோ என்ற சூழலில் அவனைத் தொட்டு தழுவ விரும்பினாள். அவனைத் தன்னுடன் இறுக்கமாகப் பிணைத்து பிரிய விடாமல்.. ப்ச், பிரிந்துதான் விட்டாள் அவனை. கொஞ்சம் நிதானமாகக் கையாண்டிருக்க வேண்டுமோ அந்தச் சூழலை?

மெல்ல எழுந்து எதிரிலிருந்த சுவரின் அருகே சென்று பிரித்வியின் முகத்தை வருடினாள். அவள் கையில் அணிந்திருந்த அவனது காப்பு கழன்று வர, அதை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.

“இதயம் இதயம் இணைகிறதே இது ஒரு புதுக் கவிதை..” பக்கத்து மாடியில் இருந்து பாடல் கசிந்து வந்தது.

“பூங்காற்றே நில்லு நீ விலகியே நில்லு, பூ மேனி தெரிந்தால் நீ தழுவியே செல்லு. நான் இங்கு நலமே நலமே. நலமா நலமா காற்றே சொல்லு…”

பிரித்வி எங்கிருந்தாலும் நலமாக இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனை அவள் மனத்தில் மந்திரம் போல விடாமல் உச்சரித்தாள். விழிகள் கசிய அப்படியே சுவரில் சாய்ந்து சரிந்து அமர்ந்தாள்.

இதே போன்ற வேண்டுதலை முன்பொரு முறையும் செய்தாள். ஆனால் அப்போது அவளைக் கடவுளும், அவள் கடவுளாகப் பார்க்கும் மருத்துவர்களும் கூடக் கைவிட்டு விட்டார்கள்.

“என் பிரித்வி பத்திரமா என்கிட்ட வந்திட்டா போதும். வந்துடுங்க பிரித்வி பிளீஸ்” என்றாள் உயிர் உருக.

அவளுக்கு இழப்பை நினைத்தாலே நெஞ்சம் பதறியது. நெஞ்சில் பயம் அழுத்தமாக வேரூன்றியிருந்தது. கையில் இருந்த ஸ்கேன் புகைப்படத்தைத் தவற விட்ட பொக்கிஷத்தை இறுக்கமாக இப்போது பற்றிக் கொண்டாள்.

மனைவி கர்ப்பம் என்றதும் பிரித்வியின் மகிழ்ச்சியின் அளவு அவனிருந்த கடலினும் பெரிதாக இருந்தது.

“ஆழி, இந்நேரம் உன் கூட இருக்க முடியல என்னால. ஐ ஆம் சாரி” என்றான் உருக்கமாக.

“இட்ஸ் ஓகே பிரித்வி”

“டாக்டர் பார்த்தியா என்ன சொன்னாங்க? விட்டமின் டேப்லெட்ஸ் கொடுத்தாங்களா? இப்போ உனக்கு வாமிட் குறைஞ்சிருக்கா? அதுக்கு டேப்லெட் கொடுத்தாங்களா?”

“பிரித்வி”

“என்ன ஆழி? டாக்டர் என்ன சொன்னாங்க?” என்றான் பதற்றத்துடன். அவன் முகத்தை அப்படிப் பார்க்கையில் அவள் இதழ்களில் மெலிதாகப் படர்ந்தது புன்னகை.

“என்ன சிரிக்கிற? அழகா இருக்க ஆழி. அப்படியே உன்னைக் கட்டிக்கணும் போலருக்கு”

“யாராவது உங்களைத் தடுக்கறாங்களா?” என்று அவள் கிண்டலாகக் கேட்கவும், “ஹாஹாஹா ஆழி. ஆமா இந்த ஆழி தடுக்குதே. உன்னைக் கட்டிக்க இந்த ஆழிதான் தடையா இருக்கு. இதைத் தாண்டி வந்தாதான் உன்னைக் கட்டிக்க முடியும். ஆனா, என்னால இப்போ இதைக் கடக்க முடியாதே. என்ன பண்ண?” என்றான் சோகமாக.

“நேத்து டாக்டர் பார்த்தேன்” என்று பேச்சை மாற்றினாள்.

“ம்ம், என்ன சொன்னாங்க? எல்லாம் ஓகே தானே? நீ எப்போ பாரு வாந்தி எடுக்கறன்னு அம்மா சொன்னாங்க. டாக்டர் கிட்ட அதுக்கு டேப்லெட் கேட்டியா?”

“பிரித்வி”

“நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு ஆழி”

“நான் ப்ரெக்னன்ட்டா இருக்கேன் பிரித்வி”

“ஆமா. நான்..”

“ஐ ஆம் நாட் சிக்” என்றாள் கோபமும், கிண்டலுமாக.

“ஓகே ஓகே, நர்ஸம்மா. சாரி. நீ சிக் இல்லதான். ஆனாலும் நீ ரொம்பச் சிரமப்படுறியோன்னு..”

“இதெல்லாம் நார்மல் பிரித்வி.”

“ஹ்ம்ம்” என்றான் அவளைக் கண்ணால் வருடியபடி.

“டேக் கேர் ஆழி. இந்நேரம் உன் கூட இருக்க முடியலையேன்னு ரொம்பப் பீலிங்ஸ்ஸா இருக்கு ஆழி” என்றான் வருத்தத்துடன். வார்த்தைகள் இழுத்து தேய்ந்து போயின.

“அங்கருந்து ஃபீல் பண்ணி என்னாகப் போகுது” என்று அவள் முனங்க, “அதானே? சீக்கிரம் வந்துடுறேன் ஆழி.” என்றான் உறுதியாக. அந்தச் சீக்கிரம் மேலும் ஒரு மாதம் கடந்த பின்னரும் அவன் வரவில்லை.

ஆழி மருத்துவரை சந்தித்த போதெல்லாம் அதுகுறித்து அவனிடம் விரிவாகப் பகிர்ந்து கொண்டாள்.

முதன்முறையாக ஸ்கேன் செய்து அதை அவனுக்கு அனுப்புகையில், உணர்ச்சி பெருக்கில் பிரித்வி ஒன்றுமே பேசவில்லை.

“லேசா ஹார்ட் பீட் கேட்டுச்சுப் பிரித்வி”

“அப்படியா ஆழி. நான்தான் எல்லாத்தையும் மிஸ் பண்றேன். உன்னை ரொம்ப ரொம்ப மிஸ் பண்றேன் ஆழி” என்றான்.

அவர்களுக்கு இடையே இருந்த பிரிவின் தூரம் பிரியத்தைக் கூட்டியதோ இல்லையோ நிச்சயமாகப் பிரிவை பெரிதாக்கியது.

“கொஞ்சம் வெயிட் போட்டுட்ட இல்ல ஆழி? அழகா இருக்க ஆழி. ஆழியின் அழகை சொல்ல அகிலத்தில் வார்த்தை ஏது?” என்றான். ஆழி வாய் விட்டு சிரித்தாள்.

“பிராடு பிரித்வி. என்ன வேணும் உங்களுக்கு? எதுக்கு இப்படி அளந்து விடுறீங்க?”

“அது வந்து ஆழி, நாலு மாசம் ஆச்சுல்ல? உனக்குக் குட்டியா வயிறு வச்சுருக்கும் இல்ல? வெளில தெரியுதா?”

“ம்ம் கொஞ்சமா..”

“காட்டு பார்ப்போம்”

“பிரித்வி” என்று கண்ணை உருட்டினாள்.

“இப்படிப் பார்த்தா உன் டிரஸ் மறைச்சு ஒன்னுமே தெரியல ஆழி. பிளீஸ்”

“அதுக்காக வீடியோல..”

“ஆழி, ஆழியை அங்குலம் அங்குலமா எனக்குத் தெரியும்.”

“ஹல்லோ”

“என்ன ஹல்லோ? நான் இங்கதான் இருக்கேன். நான் சொன்னதைச் செய் நீ”

“கூச்சமே இருக்காதா உங்களுக்கு?”

“உங்கிட்ட ம்ஹும், சுத்தமா கிடையாது. அப்படிப் பார்த்தா இப்படி ஆகியிருக்க மாட்ட நீ”

“பிரித்வி..” என்று போலி கோபத்துடன் கண்ணை உருட்டினாள். அவள் கண்களில் வழிந்த சிரிப்பை கண்டு கொண்டவன், “பிளீஸ், பிளீஸ், பிளீஸ் ஆழி” என்று விடாமல் கெஞ்சினான்.

ஆழியின் லேசான மேடிட்ட வயிறை கண்டதும், காற்றின் வழியே முத்தங்களைக் கடத்தினான்.

“அப்படியே தொட்டு பார்க்கணும் போலருக்கு ஆழி. உன்னை ஃபீல் பண்ணணும் போலருக்கு. ஐ மிஸ் யூ” என்றான் அடர்ந்த குரலில்.

“வரச் சொன்னா, சீக்கிரமா வந்துடறேன்னு சொல்லுவீங்க”

“சத்தியமா வந்துடுறேன் ஆழி” என்றான் சத்தியம் போல. வரத்தான் செய்தான். ஆனால்…

அவள் கர்ப்பம் என்று வீட்டினருக்குத் தெரிவித்ததும் கற்பகத்தைக் கையில் பிடிக்க முடியவில்லை.

கணவருடன் அடிக்கடி வெளியில் செல்வது. இல்லையென்றால் தொலைக்காட்சியே கதி என்று கிடப்பவர், பேரக் குழந்தை வரப் போகிறது என்றதும் முந்தானையை உதறி எழுந்து கொண்டார்.

“நீ போய்ப் படும்மா. நைட்டுக்கு நான் செய்யறேன்” என்று அவளை ஓய்வெடுக்க அனுப்பினார். மறுநாள் காலையில், “எதுக்கு இவ்ளோ சீக்கிரம் எழுந்துக்கற நீ? வேலைக்குப் போற பொண்ணு போய் இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு. சமையல் வேலையை நான் பார்த்துக்கறேன்” என்றார் கண்டிப்புடன்.

அவரின் மாமியார் குணம் அடியோடு மாறவில்லை என்றாலும் மகனின் மகவு வரப் போகிறது என்றதும் அவர் மாறிப் போனார். ஆழினியை நன்றாகக் கவனித்துக் கொண்டார். அவரின் அன்புத் தொல்லையில் இருந்து தப்பித்துக் கொஞ்சம் வீட்டு வேலையும் செய்தாள் அவள்.

“நீ ஹாஸ்பிடல் போயும் வேலை தானே பார்க்கப் போற? இங்கயாவது ரெஸ்ட் எடு” என்று அதட்டினார். அவள் வேலைக்குச் செல்வது மட்டும்தான் அப்போதும் அவருக்குப் பிரச்சனையாக இருந்தது.

அந்தப் பேச்சை மட்டும் ஒதுக்கி கடக்க அவளும் பழகியிருந்தாள்.

இந்திராணி மகளுக்கு நல்லதொரு வாழ்வு அமைய வேண்டுமென்று எத்தனை தெய்வங்களை வேண்டியிருப்பார். மகளையே அதற்காக எத்தனை பாடுபடுத்தி இருப்பார். இப்போது அவள் மகிழ்வான செய்தியை சொன்னதும் மகளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டார்.

அவளுக்கு வேண்டியதை எல்லாம் வாங்கிக் கொடுத்தார். அவளுக்குப் பிடித்ததாகச் சமைத்துக் கொடுத்தார். அவள் ஒவ்வொரு முறை மகப்பேறு மருத்துவரை சந்திக்கச் செல்லும் போதும் அவளுடன் துணையாகச் சென்றார்.

“மாப்ள கிட்ட சொல்லிட்டு கொஞ்ச நாளைக்கு இங்கேயே இரேன் ஆழி.” என்று கெஞ்சினார். அதற்காக அங்கே ஒரு வாரம் தங்கினாள்.

“என்ன ஆழினி ஒரு வாரமா வீட்டுக்கு வரல நீ. உடம்பு எப்படி இருக்கு? எதுவும் முடியலையா என்ன?” என்று கற்பகம் கவலையாகக் கேட்கவும், மாமியார் வீடு சென்றாள்.

“ஆழி இந்தப் பிரெக்னன்சி டைம்ல க்ரேவிங்ஸ் வரும் சொல்வாங்க இல்ல? உனக்கு அப்படி ஏதாவது இருக்கா? லைக் எதுக்காகவாது ஆசைப்படுறியா? சொல்லேன் பிளீஸ். நான் வாங்கித் தர்றேன்” என்று அவளிடம் பிரித்வி கேட்கும் போது அவளுக்கு ஐந்தாம் மாதம் தொடங்கியிருந்தது.

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல பிரித்வி”

“நிஜமா?”

“ம்ம். அத்த எனக்குப் பிடிச்சதாதான் செய்யுறாங்க. அம்மாவும் செஞ்சு தர்றாங்க. எதுவும் நான் கேட்கிறதுக்கு முன்னாடியே அம்மா வாங்கித் தந்துடுறாங்க”

“ஓகே ஓகே. குட். பட் என்கிட்ட ஏதாவது கேளேன் ஆழி பிளீஸ். ஐ வாண்ட் டு கிவ் யூ சம்திங்க். நான் குடுக்கற மாதிரி எதாவது கேளேன்” என்று அவன் அழுத்தி கேட்க கேட்க அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.

“ஆழி..” என்றான் அவள் முன் கையசைத்து. ஆழியின் பார்வை மாறவேயில்லை.

“என்ன வேணும் ஆழி?”

‘நீங்கதான் வேணும்’ என்றது அவள் பார்வை.

“இப்படி ஆளை முழுங்கறது போலப் பார்க்காம ஆன்சர் பண்ணு ஆழி” என்று கேள்வி கேட்டவனுக்கு அவளின் விழி சொன்ன பதில் மொழி புரியவில்லை போலும், பிரித்வி பைத்தியக்காரனுக்கு.

அவளுக்கு அவனை வருத்த மனமில்லை.

“நீங்க வரும் போது கேட்கறேன், வாங்கிக் குடுங்க” என்றாள்.

“ஆஹா இது நல்ல ஐடியாவா இருக்கே. நீ லிஸ்ட் போட்டு வை. நான் வாங்கித் தர்றேன். நீ கேட்டது எல்லாம் வாங்கித் தர்றேன். நீ கேட்காதது எல்லாம் நானே தர்றேன். ஓகே?” என்றான் கண் சிமிட்டி, மயக்கும் புன்னகையுடன், காற்றில் முத்தமிட்டு.

அந்த முத்தம் காற்றில் கலந்து மறைந்தது போல அவனின் கனவும் மறைந்ததோ?

ஆழிக்கு ஐந்தாம் மாதம் முடியும் தருவாயில் இருந்தது. மருத்துவமனை பணி முடித்து மாலை வீடு திரும்பியிருந்தாள். ஒரு பக்கம் அம்மாவின் அன்புத் தொல்லை. இன்னொரு பக்கம் மாமியார். அதுவொரு உரிமை போராட்டம் போல இருவருக்கும் நடுவில் உருவாகியிருந்தது. அம்மா அப்போதுதான் அலைபேசியில் பேசியிருந்தார். அவள் வீடு வந்ததும் மாமியார் புலம்ப, “இருங்கத்தே வர்றேன்” என்று அறைக்குள் நுழைந்தாள்.

ஏனோ அன்று மிகவும் சோர்வாக இருக்கவும் உடையை மாற்றி விட்டுப் படுக்கையில் சரிந்தவள் அப்படியே உறங்கியிருந்தாள்.

எட்டு மணி போலப் பிரித்வி அழைக்கவும்தான் விழித்தாள்.

“சொல்லுங்க பிரித்வி”

“சாரி ஆழி. தூங்கிட்டு இருந்தியா? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?”

“ம்ம், இல்ல இல்ல. சொல்லுங்க” என்று எழுந்து அமர்ந்தாள். பிரித்வியின் பார்வை பிரியத்துடன் அவளின் மேடிட்ட வயிற்றின் மீது படிந்தது.

“என்ன இந்நேரம் தூக்கம்? முடியலையா ஆழி?”

“இல்ல, கொஞ்சம் டயர்ட்டா இருந்தது”

“லீவ் போட்டு ரெஸ்ட் எடுக்கலாம் இல்ல? இல்லன்னா உங்கம்மா வீட்டுக்குப் போகலாம் இல்ல? அங்கருந்து உனக்கு ஹாஸ்பிடல் பக்கம்ல?”

“லீவ் கிடைக்காது பிரித்வி. சும்மா சும்மா லீவ் எடுக்க முடியாது.” என்றவள், “அம்மாவும் இதேதான் சொல்றாங்க. அங்க வரச் சொல்றாங்க” என்றாள்.

“அப்புறம் என்ன அங்கருந்து ஹாஸ்பிடல் போ. உனக்கு அலைச்சல் கம்மியாகும்”

“பட் அத்த விட மாட்டாங்க. பேசாம இப்பவே லீவ் போட்டு வீட்ல இருன்னு சொல்றாங்க. வளைகாப்பு முடிச்சுதான் அம்மா வீட்டுக்கு போகணும்னு சொல்றாங்க”

“ஓ?”

“ம்ம், உடனே அம்மா என்னன்னா இப்பவே வளைகாப்பு வைப்போம்னு சொல்றாங்க. அஞ்சாம் மாசமே..”

“இப்பவா?” என்றான் அதிர்ந்து.

“ஆமா.”

“உனக்கு ஓகே வா? நீ என்ன சொன்ன?”

“நீங்க வரணும்னு சொன்னேன்” என்று அவள் சொன்னதும் அவன் முகத்தில் பளிச்சென்று புன்னகை உதயமானது.

“நீங்க வந்த பின்னாடி ஏழாம் மாசம் பண்ணிக்கறேன்னு சொல்லியிருக்கேன்” அவள் சொல்ல சொல்ல தன் கடலை கண்ணால் விழுங்கினான் பிரித்விராஜன்.

“என்ன ஒன்னுமே சொல்ல மாட்டேங்கறீங்க?”

“ஐ மிஸ் யூ ஆழி” என்றான் கரகரத்த குரலில். ஆழி துள்ளி சிரித்து வயிறை பிடித்தாள்.

“என்ன ஆழி? என்னாச்சு?”

“பேபி கிக் ஃபீல் பண்ணேன் பிரித்வி. உதைக்கிறானா நகருறானா தெரியல. லேசா பட்டாம்பூச்சி துடிச்சது போல ஃபீலாச்சு.”

“ஐயோ.. என்னால அதை ஃபீல் பண்ண முடியலையே ஆழி”

“நீங்க வரும் போது நல்லா ஃபீல் பண்ண முடியும் பிரித்வி. அப்போதான் வயித்துக்குள்ள ஃபுட் பால் ஆடுவான். அப்போ பாருங்க” என்றாள் கண்ணில் மின்னலுடன்.

“முதல்ல உன்னை ஃபீல் பண்ணணும் ஆழி” என்றான் கண்ணால் அவளைக் கட்டிக் கொண்டு. சிரிப்புடன் பேசி வைத்தாள் ஆழினி.

மறுவார தொடக்கத்தில் நிரம்பச் சோர்வாக உணர்ந்தாள். திடீரென்று குறுக்கும், முதுகும் வலித்தது. அன்றிரவு லேசான வயிற்று வலியும் சேர்ந்து கொண்டது.

இரவு அவளை அழைத்த பிரித்வி காணொளியில் அவளின் சோர்ந்த முகம் பார்த்ததும், “ஏன் டல்லா இருக்க ஆழி?” என்று அக்கறையுடன் கேட்டான். உண்மையில் அந்த நிமிடம் அவனது அண்மைக்காக நிரம்பவும் ஏங்கினாள் அவள்.

அவன் தோள் சாய்ந்து கொள்ள வேண்டும் போலிருந்தது. அவனோடு இருக்க வேண்டும் போலிருந்தது. அவனது அண்மை போதும் வேறெதுவும் வேண்டாம் என்ற மனநிலை. அவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள்.

“ஆழி? என்ன பண்ணுது? ஏன் ஒரு மாதிரி இருக்க?”

“என்னன்னு சொல்லத் தெரியல பிரித்வி” என்றாள். அவனுக்கும் அவளை அதிகமாகத் தேட, “நான் ஊருக்கு வர்ற வரைக்கும் வெயிட் பண்ணாம நீ நாளைக்கே உங்கம்மா வீட்டுக்கு போ ஆழி. நான் வந்து உன்னைக் கூப்பிட்டுக்கறேன். ஓகே?” என்று கேட்டான். மௌனமாய்த் தலையசைத்தாள்.

“சரி. நீ தூங்கு. நான் மார்னிங் கால் பண்றேன்” என்றான்.

How did this episode feel?
Rate this episode⭐ 5.0 (8)

2 thoughts

Stay Connected A simple, spam-free email update whenever a fresh chapter goes live.
About Us FAQ Contact Us Privacy Policy Terms & Conditions Disclaimer Copyrights
© 2026 Devi Manogaran Novels. All rights reserved.  ·  Created by Vel Studios
error: Content is protected !!