Chapter 17 of 21

தெண்திரை தேடலே – 17

November 2, 2026 · 17 min read · ⭐ 4.9 (15)

அத்தியாயம் – 17

பிரித்வியின் பெயரைக் கேட்டதும் ஆழினி அடுத்த அடி எடுத்து வைக்காமல் அப்படியே நின்று விட்டாள்.

“ஹாய் சிஸ்டர், எப்படியிருக்கீங்க?” என்று கேட்டவன் அவள் பதில் சொல்லும் முன்னே, “நான் தினேஷ், பிரித்வி ஃப்ரெண்ட். பிரித்வி அப்பா துபாய்ல வேலைப் பார்த்திட்டு இருக்கும் போது நாங்க ஒரே அபார்ட்மெண்ட்ல இருந்தோம். எதிரெதிர் பிளாட்.” என்று தன்னை அறிமுகப்படுத்தி யாரென்றும் சொன்னான்.

“ஓ, அப்படிங்களா?”

“ஆமா சிஸ்டர். பிரித்வி ஃபேமிலி சொந்த வீடு கட்டிட்டு போனதுக்கு அப்புறம் எங்களுக்குள்ள டச் விட்டுப் போச்சு. இப்போ ஒரு அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி ஃபேஸ்புக்ல கனெக்ட்டானோம். உங்க போட்டோ பிரித்வி ப்ரோஃபைல்ல, வாட்ஸ்அப் டிபில பார்த்திருக்கேன். அதான் இப்போ உங்களைப் பார்த்ததும் பேசலாம்னு வந்தேன்” என்றவன், “நல்லா இருக்கீங்களா சிஸ்டர்? அம்மா, அப்பா நல்லா இருக்காங்களா?” என்று கேட்டான்.

“எல்லாரும் நல்லாருக்கோம். நீங்க?”

“நல்லது சிஸ்டர். நானும் நல்லாருக்கேன். நானே உங்க வீட்டுக்கு வரணும்னு நினைச்சுட்டு இருந்தேன். உங்க வீடு போரூர்னு ஞாபகம் இருக்கு. பட் அட்ரஸ் ஞாபகம் இல்ல. பிரித்வி பண்ண ஹெல்ப்புக்கு அம்மா, அப்பாவை பார்த்துத் தேங்க்ஸ் சொல்லணும்னு நினைச்சேன். எங்க வீட்ல அம்மாவும் கற்பகம் அத்தையைப் பாக்கணும்னு ஆசைப்பட்டாங்க. பிரித்வியை ரீச் பண்ண முடியாததால அம்மாவை கூட்டிட்டு வர முடியல”

“ஓ, அத்தைகிட்ட பேசுறீங்களா? நான் போன் பண்ணித் தரவா?”

“நம்பர் குடுங்க சிஸ்டர். நாளைக்கு அம்மாவை கால் பண்ணி பேச சொல்றேன். பிரித்வியைதான் பிடிக்க முடியல. எனக்கு ரொம்பப் பெரிய ஹெல்ப் பண்ணியிருக்கான். ஒரு தேங்க்ஸ் கூடச் சொல்ல முடியல அவனுக்கு. என் மெசேஜ் அவனுக்கு டெலிவராகல..” என்று அவன் சொன்னதும், ஆழினி முகம் அனிச்சையாக வாடியது. அதை மறைக்கப் பெரும் முயற்சி செய்தாள்.

“உங்களை மீட் பண்ணதை அவர்கிட்ட சொல்றேன் நான்.”

“கண்டிப்பா சொல்லுங்க சிஸ்டர். என் தம்பிக்கு ஷிப்ல வேலை வாங்கிக் கொடுத்தார் உங்க பிரித்வி. அதுக்குத் தேங்க்ஸ் சொல்லிடுங்க‌. ரியலி, அது எங்களுக்கு ரொம்ப ரொம்பப் பெரிய ஹெல்ப். என் தம்பிக்கு மூனு வருஷமா, சரியான வேலை அமையாத வருத்தத்துல இருந்தோம். பிரித்விதான் ஷிப்புக்கு ரெபர் பண்ணான்.” என்று அவன் சொன்னதும் சொடக்கிட்டது போல நிமிர்ந்து, கூர்ந்து கவனித்தாள்.

“அப்படிங்களா? ராயல் கரீபியனுக்கா ரெபர் பண்ணார்?”

“இல்லங்க சிஸ்டர். பிரித்வி இப்போ வொர்க் பண்ற நார்வேஜியன் க்ரூஸ்லதான் தம்பியும் ஜாயின் பண்றான்” அதைக் கேட்டதும் காதில் தேன் வந்து பாய்ந்தது என்ற பதத்தின் பொருளை ஆழினி அக்கணம் உணர்ந்தாள்.

“நார்வேஜியன் க்ரூஸா?” என்று திரும்பக் கேட்டு ஊர்ஜிதம் செய்து கொண்டாள்.

“எஸ் சிஸ்டர். டெமி செஃப்பாதான் போறான். பட் சீக்கிரமே மேல வந்துடுவான்னு நம்பிக்கை இருக்கு”

“கண்டிப்பா. உங்க தம்பிக்கு எங்களோட விஷ்ஷஸ் சொல்லிடுங்க.”

“மறக்காம சொல்லிடுறேன் சிஸ்டர்”

“பிரித்வி வொர்க் பண்ற ஷிப்லயா உங்க தம்பியும் இருக்கார்?” ஆமான்னு சொல்லிடு தெய்வமே என்று அனைத்து கடவுளையும் வேண்டியபடி கேட்டாள்.

“இல்ல, இல்ல. என் தம்பி வேற ஷிப்புக்குப் போறான். நார்வேஜியன் க்ரூஸ்தான், பட்…”

“புரிஞ்சது”

“இன்னைக்குத்தான் கிளம்பினான். இப்போதான் ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி ஃப்ளைட் ஏத்தி விட்டு வர்றேன்.” என்றான். அவளுள் சட்டென முளை விட்ட நம்பிக்கையும் வாடிப் போனது.

“உங்க தம்பி நம்பர் குடுங்க. நான் பிரித்வியைப் பேச சொல்றேன்”

“பிளீஸ் பிரித்விக்கு நேரம் கிடைக்கும் போது பேச சொல்லுங்க. தம்பி ஃபர்ஸ்ட் டைம் அப்ராட் போறான். அதுவும் ஏர்போர்ட்ல இருந்து ஹோட்டல். மறுநாள் ஹோட்டல்ல இருந்து போர்ட் போய், அங்கிருந்து ஷிப்ல ஏறணும்னு ப்ரோசிஜர் கேட்டதும் சரியா ஷிப்ல ஜாயின் பண்ணிடணும்னு டென்ஷனா போறான். எங்களுக்கு அங்க பிரித்வியை விட்டா யாரையும் தெரியாது. அதான் அவனுக்கு மெசேஜ் பண்ணேன். வாட்ஸ்அப் பேஸ்புக் ரெண்டுலயும் மெசேஜ் பண்ணி பிரித்வி பார்க்கலன்னதும், அங்க போடா அதெல்லாம் ஹெல்ப் பண்ண ஆள் இருப்பாங்கன்னு தம்பிக்கு தைரியம் சொல்லி அனுப்பியிருக்கேன்”

“கோவால இருக்க ஏஜென்சி மூலமா தானே போறார்? அவங்க தெளிவா கைட் பண்ணுவாங்க. நீங்க வொர்ரி பண்ணிக்காதீங்க”

“ஆமா. பிரித்வி சொன்ன ஏஜென்சிதான். அவங்க ஹெல்ப் பண்ணுவாங்கன்னா கவலையில்ல” என்றவன், அந்த நிறுவனத்தின் பெயரையும் சொன்னான். அந்நிறுவனத்தின் பெயரை பட்டென மனத்தில் பதிய வைத்துக் கொண்டாள் ஆழினி.

“உங்களை மீட் பண்ணதுல ரொம்பச் சந்தோஷம் சிஸ்டர். நான் சீக்கிரமே அம்மாவோட உங்க வீட்டுக்கு வர்றேன்.”

“வாங்க. நான் அத்தைக்கிட்ட சொல்லி வைக்கறேன்”

“இந்த வாரமே வர டிரை பண்றோம்” என்றவன், “இது தம்பி நம்பர். பிரித்விக்கு மெசேஜ் பண்ணிடுங்க. நானும் பண்ணியிருக்கேன்” என்று சொல்லி அலைபேசி எண்ணை ஒரு சிறிய அட்டையில் எழுதிக் கொடுத்தான். மேலும் இரண்டு நிமிடங்கள் அவனிடம் பேசி விட்டு விடைப் பெற்றுக் கொண்டாள் ஆழினி.

அம்மா கொடுத்த பட்டியலில் இருந்த பொருள்களை வாங்குவதற்குத் துளி கூட அவளுக்குப் பொறுமையில்லை. அதுவரை எடுத்திருந்த பொருள்களுக்கு மட்டும் பணம் செலுத்தி, வண்டியை அதைவிட விரைவாகச் செலுத்தி வீடு வந்து சேர்ந்தாள்.

“அம்மா, இந்தாம்மா” என்று பையைக் கூடத்தில் வைத்தவள், பெரியவர்கள் யாரையும் திரும்பிக் கூடப் பார்க்காமல் அறைக்குள் நுழைந்து அலைபேசியை எடுத்தாள்.

“ஆழி” என்று அம்மா வர, அவள் அவரை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை.

பிரித்வியைப் பணிக்கு அனுப்பிய கோவா நிறுவனம், பிரித்வி பணிபுரியும் அமெரிக்கக் கப்பல் நிறுவனம் இரண்டின் தகவலையும் இணையத்தில் தேடத் தொடங்கினாள்.

முதலில் கோவா நிறுவனத்தைத் தொடர்பு கொண்டாள். இங்கே இரவு அலுவலக நேரத்தை கடந்திருந்ததால் அவளின் அழைப்பு முழுதாக ஒலித்து அடங்கியது. பதிலளிக்கப்படவில்லை. அவள் விடாமல் முயற்சி செய்தாள். அவர்களின் அவசர தொடர்பு எண் என அனைத்தையும் முயற்சித்தாள். அனைத்தும் தோல்வியில் முடிய மனம் துவண்டு போனாள்.

“வேற ஏதாவது வழி இருக்கணுமே? ஆழி திங்க் திங்க்.” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.

“ஆழி” என்று அவளை உலுக்கினார் இந்திராணி.

“சூடா தோசை ஊத்துறேன். வா, வந்து சாப்பிடு”

“வேணாம்மா. பசிக்கல”

“இப்படிச் சொல்லி சொல்லியே சாப்பிடாம உடம்பை கெடுத்துக்கற நீ. ரெண்டே நாள்ல ஆள் பாதியா ஆகிட்ட. நாளைக்கு மாப்ள வந்து உன்னை இப்படிப் பார்த்தா, கோபப்படப் போறார். யாரு அவருக்குப் பதில் சொல்றது?”

“உன் மாப்பிள்ளைக்கு நான் பதில் சொல்லிக்கிறேன் விடும்மா. ஃபர்ஸ்ட் உன் மாப்ள எனக்கு எப்படிப் பதில் சொல்றாருன்னு பார்க்கறேன். எனக்குச் சரியான பதில் வரலைன்னா அப்படியே அவர் சங்கை கடிச்சு துப்பிடுறேன்” என்று கடைசி வாக்கியத்தைப் பல்லைக் கடித்து முணுமுணுத்தாள்.

“ஆழி, அப்படியென்ன அந்த மொபைல்ல பார்த்திட்டு இருக்க நீ?”

“சொல்றேன் இரும்மா” என்றாள் பொறுமையின்றி. அவள் கைகள் கோவா நிறுவனத்தின் இணையத் தளத்தை அக்குவேர் ஆணிவேராகப் பிரித்து ஆராய்ந்து கொண்டிருந்தன.

“ஆழினி..” கற்பகம் படுக்கையறை வாசலில் நின்று அவளை அழைக்க, “சொல்லுங்கத்த” என்று நிமிர்ந்தாள்.

“சாப்பிடும்மா. சாப்பிட்டு படு.” என்றார்.

“நீ நாளைக்கு ஹாஸ்பிட்டல் போகணுமா? இன்னும் ரெண்டு நாள் லீவ் கேட்டா தருவாங்களா உனக்கு?” என்று கேட்டார்.

“நாளைக்கு நான் ஹாஸ்பிட்டல் போகலத்த. லீவ் கேட்டிருக்கேன். ஆனா, மேனேஜ்மென்ட்ல ரிசைன் பண்றேன்னு சொல்லிட்டேன். சோ அவங்க லீவ் குடுத்தாலும், குடுக்கலைன்னாலும் பிரச்சினை இல்ல” என்றாள்.

“என்னது, வேலையை விட்டுட்டியா?”

“என்ன, வேலையை விடப் போறியா?” அம்மா, அத்தை என இருவரும் ஒன்றையே வெவ்வேறு வார்த்தையில் கேட்கவும், “ஆமா” என்றாள். கற்பகத்தின் முகத்தில் அதிர்ச்சி ரேகைகள்.அவர் வேறெதுவும் சொல்லாமல், “சாப்பிட்டு வேலையைப் பாரும்மா” என்று சொல்லி சென்றார்.

பிரித்வி குறித்துக் கிடைத்த தகவலை அவர்களிடம் பகிரவில்லை அவள். அவனிடம் நேரடியாகப் பேச வைக்கும் மும்முரத்தில் இருந்தாள்.

“என்ன ஆழி சொல்ற நீ? வேலையை விடப் போறியா?”

“ஆமாம்மா” என்றவள், அந்தக் கோவா நிறுவனத்தின் வாட்ஸ்அப் எண்ணிற்குத் தனிப்பட்ட குறுஞ்செய்தி அனுப்பினாள். அதென்னவோ கடவுள் ஒரேடியாக ஒருவருக்கு ஒன்று போலச் சோதனைகளைக் கொடுப்பான் போலும்.

அந்த எண்ணில் வெற்றிகரமாகக் குறுஞ்செய்தி சென்றாலும் வாசிக்கப்படாமலே இருந்தது.

“ஆழி, இப்போ வேலையை ஏன் விடுற நீ?” என்று அம்மா அவளை உலுக்க, “ப்ச் என்னம்மா? எதுக்குன்னு உனக்குத் தெரியாதா?” என்று எரிச்சலுடன் கேட்டாள்.

“எனக்குத் தெரியல. அதான் கேட்கிறேன். நீ சொல்லு”

“நான் எப்பவும் எனக்காக அவர்கிட்ட நிறைய எதிர்பார்க்கறேன் மா. எதிர்பார்த்திருக்கேன்னு சொல்லணும். ஆனா, பதிலுக்கு நான் அவருக்காக என்ன செஞ்சேன்? எங்களுக்காக? ம்ம், எதுவுமே செய்யலையே. அவர்கிட்ட நான் ஒன்னை எதிர்பார்த்தா, நானும் கொஞ்சம் அதுக்காக அட்ஜெஸ்ட் செய்யணும் இல்லம்மா? நானும் இறங்கி வரணும் இல்ல? நிறைய இல்லைனாலும் கொஞ்சமா விட்டுக் குடுக்கணும் இல்ல? அதான்” என்றாள்.

“அவரால வேலையை விட்டுட்டு வீட்ல இருக்க முடியாதும்மா. கண்டிப்பா முடியாது. ஆனா, என்னால முடியும் தானே? எங்களுக்கு ஒரு குழந்தை வர்ற வரைக்கும் நான் வீட்ல இருக்கேன் மா. அதுனால இப்போ எனக்கு என்ன குறைஞ்சுட போகுது?”

“எதுவும் குறையாது ஆழி. நிறையத்தான் செய்யும். உங்க சந்தோஷம் நிறையும்” என்ற இந்திராணியின் கண்ணில் கண்ணீர் தேங்கி நின்றது. மகளின் மனமாற்றம் அவருக்கு அத்தனை மனநிம்மதியை தந்தது.

“உனக்கு என் மேல கோபம் இல்லையாம்மா?”

“நான் எதுக்குக் கோபப்படப் போறேன் ஆழி? அதுவும் உன் மேல? எனக்கு எப்பவும் உன் சந்தோஷம்தான் முக்கியம். நீ என்ன முடிவெடுத்தாலும் எனக்குச் சம்மதம்தான்” என்றார் மகளின் முகம் வருடி.

அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தாலும் ஆழினியின் விரல்கள் அலைபேசியில் இயங்கிக் கொண்டேயிருந்தன.

“இரு. அம்மா உனக்குத் தோசை ஊத்தி எடுத்துட்டு வர்றேன். சும்மா வேணாம் பசியில்லன்னு சொல்லாத. மாப்ள வந்தா சண்டை போட தெம்பு வேணும்ல” என்று அவர் கேட்கவும், அவள் இதழ்களில் மெல்லிய புன்னகை வந்து போனது.

கோவா நிறுவனத்தை இப்போது மட்டுமல்ல கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக நாளை தொடர்பு கொண்டாலும் அவர்கள் பதில் அளிப்பது சந்தேகமே என்று உணர்ந்த ஆழினி, நேரடியாக அமெரிக்கக் கப்பல் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ள முடிவெடுத்தாள்.

பொழுது புலர்ந்தால் கிறிஸ்து பிறந்த தினம். அமெரிக்காவில் மிக முக்கியப் பண்டிகை அது. கிறிஸ்துமஸ், புது வருட பிறப்பு இரண்டுக்கும் சேர்த்து நீண்ட விடுமுறை அங்குண்டு. அதைக் கொண்டாடவும் உல்லாச கப்பல்களுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

இப்பொழுது அமெரிக்காவில் 24ஆம் தேதி என்பதால் அவர்கள் விடுமுறையில் சென்றிருக்கக் கூடாது என்று பிரார்த்தித்துக் கொண்டே அந்த எண்ணை தொடர்பு கொள்ள முயன்றாள். இணையத்தில் இருந்த எண்ணைதான் அழைத்தாள். ஆனால், அழைப்பு செல்லவேயில்லை.

அவளுக்குக் கோபமும் ஆத்திரமும் சேர்ந்து வந்தது.

“பிரித்வி. பிளீஸ் நீங்களே கால் பண்ணிடுங்களேன். என்னால இதுக்கு மேல முடியல பிரித்வி” என்று அவனது புகைப்படத்தைப் பார்த்து புலம்பினாள்.

ஒருவேளை சர்வதேச எண்ணை தான் சரியாக அழைக்கவில்லையோ என்ற சந்தேகத்தில் மீண்டும் ஒருமுறை ஒவ்வொரு எண்ணாக அழுத்தி அழைத்தாள். ம்ஹூம், அழைப்பு செல்லவேயில்லை.

இந்திராணி உள்ளே வந்து அவளுக்கு உணவை கொடுக்க, அதை ஏறெடுத்து பார்க்கும் நிலையில் அவளில்லை. அங்கும் இங்குமாக அறைக்குள் நடந்து கொண்டேயிருந்தாள்.

அவளின் பதற்றத்தை பார்த்தாலும் எதுவும் கேட்கவில்லை அவர்.

“சாப்பிடு ஆழி” என்று அவளோடு நடந்தபடி உணவை அவளுக்கு ஊட்டி விட்டார்.

நார்வேஜியன் க்ரூஸின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்திற்குச் சென்று செய்தி அனுப்பினாள். அவளுக்கு உடனடி பதிலை கணினிதான் அனுப்பியது. அங்கிருந்த எண்ணும் அவள் அழைத்த எண்ணும் ஒன்றே என்பதால் அடுத்தென்ன செய்வது என்று தெரியாமல் சோர்ந்து அமர்ந்தாள்.

“இந்தா இந்தத் தண்ணியைக் குடிச்சுட்டு படு ஆழி. மிச்சத்தை நாளைக்குப் பார்க்கலாம்” என்றார் இந்திராணி. தண்ணீரை மடக்கென்று தொண்டையில் சரித்துக் காலி கோப்பையை அம்மாவிடம் நீட்டினாள்.

“நீ போய்ப் படும்மா. எனக்குத் தூக்கம் வரல. நான் கொஞ்ச நேரம் மொட்டை மாடியில நடந்து வர்றேன்” என்று எழுந்து கொண்டாள்.

“ரொம்ப நேரம் பனியில நிக்காத ஆழி. பத்து நிமிஷம் மேல இருந்துட்டு கீழ வந்துடு” என்றார் கண்டிப்புடன். சரியெனத் தலையசைத்து மாடிக்குச் சென்றாள்.

பக்கத்து மாடியில் நடைபயின்று கொண்டிருந்த இளம் தம்பதி அவளைப் பார்த்ததும் புன்னகைத்துக் கையசைத்தார்கள். ஆழியும் புன்னகைக்க, “என்னக்கா, உங்களை ஆளையே பார்க்க முடியல? மாமா ஊருக்கு வந்தாதான் இந்தப் பக்கம் வருவீங்களா?” என்று கேலியாகக் கேட்டாள் அந்தப் பெண்.

ஆழியின் பதிலை எதிர்பாராமல் அவளே பேசியபடி கணவனின் கைப் பிடித்து நடந்து கொண்டிருந்தாள். அந்தக் காட்சி ஆழிக்குப் பெருமூச்சை வரவழைத்தது. முன்பு கணவனுடன் அவளும் இப்படி நடந்திருந்திருக்கிறாள். அது ஏதோ முன் ஜென்ம நிகழ்வு போலிருந்தது அவளுக்கு.

“நடந்துட்டே பேசு. பேச ஆரம்பிச்சா நடக்க மறந்துடுவியே நீ” என்று அந்த இளைஞன் மனைவியைக் கண்டிக்க அவனை முறைத்து, அவனை இடித்து நடந்தாள் அந்தப் பெண்.

அவளின் அலைபேசியில் ஒலித்துக் கொண்டிருந்த பாடல் ஆழினியின் ஆழ்மனம் வரை தீண்டிச் சென்றது.

“ஊரெங்கும் மழையும் இல்லை வேறெங்கும் புயலும் இல்லை என்றாலும் நெஞ்சில் இடி இடிக்குதே

கண்ணாளன் நிலைமை என்ன

கடலோடு பார்த்துச் சொல்ல

கொக்குக்கும் நாரைக்கும் கண் அலையுதே..” அலைபாய்ந்த அவளின் மனத் தவிப்பை யாரோ பாடலாக்கியது போலிருந்தது அவளுக்கு.

“நீரின் மகன் எந்தன் காதலன்

நீரின் கருணையில் வாழுவான்

இன்று நாளைக்குள் மீளுவான்..” சட்டெனத் துளிர்த்த கண்ணீரை கண்ணைச் சிமிட்டி சிமிட்டி உள்ளிழுத்தாள்.

அவளுக்கு இப்போது கணவன் எங்குப் பணிபுரிகிறான் என்று தெரிந்து விட்டது. ஆனாலும் அவனைத் தொடர்பு கொள்ள முடியாமல், சரியான தொடர்பு கொள்ளும் வழித் தெரியாமல் திணறிக் கொண்டிருந்தாள் அவள்.

அந்நிறுவனத்திற்குச் சொந்தமான ஒவ்வொரு கப்பலுக்கும் தனிப்பட்ட தொடர்பு எண் இருக்கும். அதன் வழியே பணியாளர்களிடம் பேச முடியும். அவர்களின் அறை எண்ணை குறிப்பிட்டால் அழைப்பை இணைப்பார்கள். அதற்கு முதலில் அவளின் அழைப்பு செல்ல வேண்டுமே என்ற அலைப்புறுதலுடன் முயற்சியைக் கைவிடவில்லை அவள்.

ஒரு கட்டத்திற்கு மேல் சோர்ந்து போய்க் கீழிறங்கினாள். பெரியவர்கள் அப்போதுதான் படுக்க ஆயத்தமானார்கள்.

ஆழி அறைக்குள் நுழைந்து, “ஆஆஆ” என்று சத்தமில்லாமல் கத்தி, அலைபேசியைப் படுக்கையில் தூக்கி எறிந்தாள்.

“கார்த்திக், பவித்ரன் ஹெல்ப் பண்ணலன்னு ஃபீல் பண்ணா, ஹெல்ப் கிடைச்சும்..” என்ற அவள் சிந்தனை அப்படியே அந்தரத்தில் தொக்கி நிற்க அவசரமாக அலைபேசியை எடுத்து மருத்துவர் கார்த்திக்கை அழைத்தாள்.

அவளுக்கு நேரம் காலம் பார்க்கும் இங்கிதம் அந்நேரம் காலாவதியாகி போய் இருந்தது.

“ஹாய் டாக்டர். சாரி எமர்ஜென்சி. அதான் டைம் பார்க்காம உங்களுக்கு அன்டைம்ல கால் பண்ணிட்டேன்”

“சொல்லுங்க ஆழி. நீங்க கேட்ட டீட்டேயில் பத்தி பேசியிருக்கேன்..”

“அது இருக்கட்டும் டாக்டர். என் ஹஸ்பண்ட் நார்வேஜியன் க்ரூஸ்லதான் வொர்க் பண்றார்”

“அடடே, அப்படியா?”

“ஆமா டாக்டர். உங்க பிரதர் அங்க கேப்டனா இருக்காருன்னு நீங்க சொன்னீங்களே. அவங்க நம்பர் தர முடியுமா டாக்டர்? அவர் ஹெல்ப் பண்ணுவாரா?”

“கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவான். ஒன் செகண்ட் குடுங்க. அவன் நம்பர் உங்களுக்கு அனுப்பறேன்” என்று சொன்னவர் அந்தக் கணமே அந்த எண்ணை அவளுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

கேப்டன் பிரபஞ்சனின் அலைபேசி எண்ணுக்கு அவசரமாக அழைத்தாள். அங்கு நெட்வொர்க் இல்லை போலும். அழைப்பு செல்லவேயில்லை.

அவள் தான் யார் எனக் குறிப்பிட்டு, மருத்துவர் கார்த்திக்கின் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டு, சாதாரணக் குறுஞ்செய்தி அனுப்பினாள். ஒருவேளை அதை அவர் பார்க்காவிட்டால் என்ற எண்ணத்தில் வாட்ஸ்அப் செய்தி அனுப்பி, அவரை அழைக்கவும் செய்தாள். அழைப்பு செல்லவில்லை.

மனம் உடைய அப்படியே படுக்கையில் பொத்தென்று அமர்ந்தாள்.

“இவருக்காவது மெசேஜ் டெலிவராகிடணும் ஆண்டவா. பிளீஸ் பிளீஸ்” என்று கண்ணை மூடி மனமுருக சொல்லிக் கொண்டிருந்தாள்.

சில பல நிமிடங்கள் கழித்துப் பார்த்தாலும் அப்படியேதான் இருந்தது. ஆனாலும் முயற்சியைக் கை விடாமல் வாட்ஸ்ஆப்பில் திரும்பத் திரும்ப அழைத்துப் பார்த்து சோர்ந்தவள், அப்படியே படுக்கையில் சரிந்து தலையணையில் முகம் புதைத்து ஓவென்று கத்தினாள்.

மெல்ல விசும்பியபடி இருந்தவளை உறக்கம் இழுத்துக் கொண்டு போனது.

“பிரித்வி” பாதி உறக்கத்தில் பதறி விழித்து மீண்டும் கேப்டன் பிரபஞ்சனை தொடர்பு கொள்ள முயன்றாள்.

இம்முறை வாட்ஸ்அப் அழைப்புச் சென்றது.

“அப்பாடா.. பிளீஸ் பிளீஸ் அன்சர் த கால்” என்று மந்திரம் போல முணுமுணுத்தாள்.

“ஹலோவ்” என்றது எதிர்முனை கம்பீரமாக, சற்றே எரிச்சல் கலந்த தொனியில்.

“ஹாய் கேப்டன். நான் ஆழினி. டாக்டர் கார்த்திக் கிட்ட வொர்க் பண்றேன். டாக்டர்தான் உங்க நம்பர் குடுத்தார்” படபடவென்று பேசினாள்.

“ஓ, ஹாய்” என்றான் மெல்ல அவள் சொன்னதைக் கிரகித்து.

“ஓகே. சொல்லுங்க”

“ஒரு எமர்ஜென்சி, உங்ககிட்ட பேசலாமா கேப்டன்? நீங்க இப்போ ஃப்ரீயா?”

“டியூட்டிலதான் இருக்கேன். பட் இட்ஸ் ஓகே. நீங்க சொல்லுங்க”

“கேப்டன் என்ன சொல்றீங்க? எனக்குக் கேட்கல”

“என்ன எமர்ஜென்சின்னு சொல்லுங்கன்னு சொன்னேன்”

“ஹலோ கேப்டன். நீங்க பேசுறது சரியா கேட்கல” என்று பதற்றத்துடன் கத்தினாள்.

“என்ன சொல்றீங்க? புரியல” என்று அந்தப் பக்கமிருந்து அவன் கத்தினான்.

“கேப்டன் கேட்குதா?”

“ஹலோவ், லைன்ல இருக்கீங்களா?” கப்பல் நடுக்கடலில் இருக்க மோசமான இணைப்புக் காரணமாக ஒருவர் பேசுவது மற்றவருக்குத் தெளிவாகக் கேட்கவில்லை. ஆழினி அந்த அழைப்பை துண்டித்து விட்டு மீண்டும் அழைத்தாள்.

“ஹலோவ், இப்போ கேட்குதுங்களா?”

“எஸ், எஸ் கேப்டன். நான் ஆழினி.”

“சொல்லுங்க ஆழினி. என்ன விஷயம்?”

“கேப்டன் கேட்குதா?”

“நீங்க பேசுறது எனக்குக் கேட்குது சொல்லுங்க” என்றான் பிரபஞ்சன்.

அவள் பிரித்வியிடம் பேசும் போதும் இப்படியெல்லாம் நடந்திருக்கிறதுதான். ஆனால், இன்றைக்கு இருந்த மனநிலைக்கு ஆழி நொந்து போனாள்.

“கேப்டன், என் ஹஸ்பண்ட் உங்க ஷிப்.. நார்வேஜியன் க்ரூஸ்லதான் வொர்க் பண்றார். ஒரு வாரமா அவரைக் கான்டாக்ட் பண்ண முடியல. வாட்ஸ்அப் கால், மெசேஜ் எதுவும் போகல. அவரைக் கான்டாக்ட் பண்ணணும். கேன் யூ ஹெல்ப்? பிளீஸ்” என்றாள். அதிசயமாக அந்நேரம் அவள் சொன்னது அவன் செவியில் தெளிவாக விழுந்திருந்தது.

“எந்த வெசல் (Vessel)?” என்று சந்தேகம் கேட்டான் அவன். கணவன் இந்தக் கப்பல் நிறுவனத்தில் பணிபுரிகிறான் என்று கண்டுபிடிக்கவே அவளுக்கு முழுதாக இரண்டு நாள்களாகி இருந்தது. இதில் எந்தக் குறிப்பிட்ட கப்பல் என்று அதன் பெயரை கேட்டால் அவள் என்ன செய்வாள்.

“ஹலோவ்? எந்த வெசல்னு சொல்லுங்க” என்றான் அழுத்தமாக. அந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக இருபதுக்கும் மேற்பட்ட கப்பல்கள் இருக்கையில் அவனது கேள்வியிலும் தப்பில்லை.

“எனக்கு..” என்று அவள் தடுமாற, “எந்த டிபார்ட்மெண்ட், என்ன பொசிஷன்ல இருக்கார்ன்னு சொல்லுங்க. அதை விட ஃபர்ஸ்ட் அவர் பேரை சொல்லுங்க” என்றான்.

“என்ஜினியர், செகண்ட் லெவல் ஆபீஸர்”

“ஓகே. பேரென்ன சொன்னீங்க?”

“பிரித்வி..”

“என்ன பேர்?”

“கேப்டன் கேட்குதா? ஹலோ.. ஹலோ..”

“இப்போ கேட்குது. பேர் சொல்லுங்க”

“பிரித்வி, பிரித்விராஜன். பிரித்விராஜன் முருகானந்தம்” என்று அவனது அலுவல் பெயரை முழுதாகச் சொன்னாள்.

“ஹலோ கேப்டன்..” என்று அவள் கத்த, இணைப்பு மோசமாகி அழைப்புத் துண்டிக்கப்பட்டிருந்தது.

“ஹலோ..” என்று கத்தியவள் மீண்டும் அழைக்க, இம்முறை அழைப்பு செல்லவில்லை. உடனே அவசரமாக அவன் கேட்ட தகவல்களைக் குறுஞ்செய்தியாக அவனுக்கு அனுப்பி வைத்தாள்.

அதை அவன் பார்க்கவில்லை. அப்படியே ஆழ மூச்சிழுத்து விட்டாள் அவள்.

இனி கணவனை எப்படியும் பிடித்து விடலாம் என்ற நம்பிக்கை அவளுக்கு நிரம்ப வந்திருந்தது. ஆனால், அதை விட அதிகமாக அவனுக்கு எதுவும் நேர்ந்திருக்கக் கூடாது என்ற பயமும் பதற்றமும் அவளைச் சூழ்ந்தது.

அவளின் இதயத் துடிப்பு அதிகரித்திருக்கப் படுக்கையில் அமர முடியாமல் எழுந்து அறையில் நடக்கத் தொடங்கினாள்.

கொஞ்சம் தண்ணீர் குடித்துத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் முயன்றாள். அழைப்பு செல்லவில்லை.

“நெட்வொர்க் இஸ்யூ போல. பெருசா சாட்டிலைட் கனெக்சன் இருக்குன்னு பெருமை பீத்துவார். ஒரு கப்பல்ல இருந்து இன்னொரு கப்பலுக்குக் கால் பண்ணலாம்னு சொல்லுவார். ஆனா அவசரத்துக்கு இவரை ரீச் பண்ண முடியல. இவரை மட்டுமா? எல்லாருக்கும் இதான் கதி போல. பெரிய ஷிப் வேலை” என்று புலம்பிக் கொண்டே நடந்தாலே ஒழிய படுக்கையில் அமரவுமில்லை, கண் சொக்கினாலும் படுக்கையில் சரியவுமில்லை.

அப்படியே எத்தனை நேரம் சென்றது என அவளுக்குத் தெரியவில்லை. மனம் முழுக்கக் கணவனே நிறைந்திருக்க அவனது புகைப்படத்தை இமைக்காமல் பார்த்தபடி நின்றிருந்தாள்.

இப்பொழுது திரும்ப அலைபேசியைக் கையில் எடுத்தாள். நேரம் அதிகாலை மூன்று மணி என்றது அலைபேசி திரை.

மீண்டும் ஒருமுறை முயற்சிக்கலாம் என்று அவள் நினைக்கையில் பிரபஞ்சனே அவளை அழைத்தான். இம்முறை காணொளி அழைப்பில் வந்தான்.

“வீடியோ காலா?” என்று ஒரு கணம் தயங்கினாலும், கணவனைக் குறித்த தகவல் வேண்டும் என்பதால் பட்டென அழைப்பை ஏற்று விட்டாள்.

அவளின் திரையில் கப்பலறை தெரிந்தது.

“என்ன கேபின் போல இருக்கு?” என்று குழம்பி, “கேப்டன்” என்று அழைக்கப் போனவளின் விழிகள் மொத்தமாக அதிர்ந்து முழுதாக விரிந்தது.

கப்பலறையின் படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தவனைப் பார்த்ததும் அவளுக்குப் பேச்சே வரவில்லை.

“ஆ…ழி..” என்று தொண்டையடைக்க வந்தது அவளுக்கான அழைப்பு. இரவு உடையில் கலைந்து, களைத்து, சோர்ந்து நெற்றியில் புரண்ட முடியுடன் இருந்தவனைப் பார்க்க பார்க்க அவளுக்கு அப்படியொரு ஆசுவாசம் வந்தது.

“பிரித்வி..” என்றழைத்தாள், சிறிய கேவலுடன். விழிகளால் அவனை வருடியபடி.

“ஆ…ழி” அடர்ந்த கரகரத்த குரலில் வந்த அந்த அழைப்பு போதும் என்றானது அவளுக்கு.

How did this episode feel?
Rate this episode⭐ 4.9 (15)

2 thoughts

Stay Connected A simple, spam-free email update whenever a fresh chapter goes live.
About Us FAQ Contact Us Privacy Policy Terms & Conditions Disclaimer Copyrights
© 2026 Devi Manogaran Novels. All rights reserved.  ·  Created by Vel Studios
error: Content is protected !!