தெண்திரை தேடலே – 18
அத்தியாயம் – 18
ஆழினியின் விழிகள் அவசரமாகப் பிரித்வியை ஆராய்ந்தன. அவன் பத்திரமாக இருக்கிறான் என்பதை ஊர்ஜிதம் செய்தன அவள் விழிகள். அவன் பிம்பம் மெல்ல மெல்ல அவள் மனத்திற்குள் பதியவும் அதுவரை தவித்த அவள் மனம் சற்றே சாந்தமானது. இதற்குள் இரண்டு மடங்காகியிருந்த இதயத் துடிப்பு அவளைப் போலவே தன் துடிப்பின் வேகத்தைக் குறைத்தது. ஆழியின் கண்களில் ஆழி தேங்கி நிற்க, மனைவியை முழுதாக ஆறு மாதங்களுக்குப் பிறகு பார்க்கும் பிரித்விராஜன் பதறிப் போனான்.
அவள் உடலில் இன்னமும் பதற்றம் மிச்சமிருக்க, “பி..ரித்..வி” என்று உடைந்த குரலில் அழைத்தாள்.
அவனைப் பிரிந்து சென்ற மனைவி அவளாகவே அதுவும் இந்திய நேரப்படி நள்ளிரவில் அவனை அழைக்கிறாள் எனவும் பதறிப் போனான் பிரித்வி. அதிலும் அவனிருந்த கப்பலின் கேப்டன்களில் ஒருவர் வந்து அவரின் அலைபேசியை நீட்டி, “யுவர் வைஃப் வாண்ட்ஸ் டு டாக் டு யூ. எமர்ஜென்சினு சொன்னாங்க. பேசுங்க” என்று சொன்னால் பதறாமல் என்ன செய்வான் அவன்? ஒரு நொடியில் நெஞ்சம் நடுக்கம் கொண்டு விட்டது.
“ஆழி என்னாச்சு? ஏன் அழற? என்னடி? என்னாச்சு உனக்கு? அங்க இப்போ நைட் தானே? யாருக்கு என்னாச்சு? ஏன் இந்நேரம் கால் பண்ணியிருக்க? ஆழி என்னாச்சு. சொல்லு ஆழி” என்று பதற்றத்துடன் கேள்விகளைச் சரமாரியாக எழுப்பினான். அவனுக்குத் தொண்டை அடைத்திருந்தது. ஒவ்வொரு கேள்விகளுக்கு இடையிலும் இருமினான். சரியாகப் பேச முடியாமல் சிரமப்பட்டான்.
“ஃபர்ஸ்ட் உங்களுக்கு என்னாச்சுன்னு சொல்லுங்க. உடம்பு முடியலையா உங்களுக்கு? ஏன் கேபின்ல இருக்கீங்க?”
“எனக்கென்ன? எனக்கொன்னும் இல்லையே? நான் நல்லாதான் இருக்கேன்”
“நல்லா இருக்கீங்களா? அப்புறம் ஏன் இப்படி இருமறீங்க? ஏன் டியூட்டிக்கு போகல?”
“ப்ச், ஆழி. ஐ ஆம் ஓகே. நீ சொல்லு, என்னாச்சு? என்ன இந்நேரம் கால் பண்ணியிருக்க? அதுவும் மிட்நைட்டுல? தூங்காம. எனக்கு டென்ஷனாகுது ஆழி. உனக்கு ஒன்னுமில்லையே?”
“நான் கேட்கிறதுக்கு ஃபர்ஸ்ட் பதில் சொல்லுங்க பிரித்வி. நீங்க ஏன் இந்நேரம் கேபின்ல இருக்கீங்க? இன்னைக்கு டியூட்டிக்கு போகலையா நீங்க? பீவரா? உங்களுக்கு என்னாச்சு பிரித்வி?” கணவனுக்கு ஒன்றும் நேர்ந்திருக்கக் கூடாது என்பது மட்டுமே அவள் மனத்தில் இருக்க, அவனிடம் கேட்க நினைத்த அனைத்தும் மறந்து, சோர்வுடன் அறையில் அமர்ந்திருந்தவனின் உடல் நலத்தைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தாள்.
“ஆ…ழி..னி” என்று அழுத்தமாக உச்சரித்தான்.
“என்னாச்சுன்னு சொல்லு?” என்று அதட்டினான்.
இப்போது பதற்றமும் அழுகையும் சேர்ந்து ஆத்திரத்தையும் கோபத்தையும் அவளுக்குத் தந்திருந்தது.
“எனக்கு ஒன்னும் ஆகல. நான் நல்லாதான் இருக்கேன். நீங்க போனை வைங்க” என்று அழுகையை அடக்கிய குரலில் கத்தி விட்டு, காணொளி அழைப்பை துண்டித்தாள்.
ஆழினி முழுதாக இரண்டு நாள்கள் அவனுக்காகப் பதறி துடித்திருந்தாள். இப்பொழுது அந்தப் பதற்றம் அவனுக்குக் கடத்தப்பட்டிருந்தது.
“ஆழி.. கட் பண்ணாத” என்று அவன் கத்தும் போதே அழைப்பை துண்டித்து விட்டாள் அவன் மனைவி.
ஆழியின் ஆழி தேங்கிய ஈர விழிகள் அவனைச் செயலிழக்கச் செய்தது. மனைவிக்கு உடல் நிலை சரியில்லையோ? அவள் வீட்டினருக்கு எதுவுமோ? இல்லை அவன் வீட்டினருக்கோ? இல்லை, அப்படியெதுவும் இருக்காது. எல்லாரும் நலமாகவே இருப்பார்கள். அப்படியில்லையென்றால் அதைத்தானே முதலில் சொல்லியிருப்பாள்.
இத்தனை மாத பிரிவில் அவளாக அதிசயமாக அவனை அழைத்திருக்கிறாள். அவனது இதயம் லயம் மாறி, ‘என்ன என்ன?’ என்று துடிப்பது போலிருந்தது அவனுக்கு.
மனைவியை மீண்டும் அழைத்தான். அழைப்பை ஏற்கவில்லை அவள். பிரித்வி எழுந்து அறைக்குள் நடந்தபடி திரும்ப அழைத்தான்.
இம்முறை அழைப்பை ஏற்றாள் ஆழினி.
“ஆழி, ஆர் யூ ஓகே? உனக்கு ஒன்னும் இல்லையே? என்ன திடீர்னு இந்நேரத்துக்குக் கால் பண்ணியிருக்க? அதுவும் கேப்டன் போனுக்கு? வீட்ல யாருக்கும்?” அந்தக் கேள்வியை முடிக்க முடியாமல் இருமி, “என்னாச்சு ஆழி? பிளீஸ் சொல்லேன். எனக்குப் பதறுதுடி. டென்ஷனாகுது” என்று தொண்டையைச் செருமி செருமி பேசினான்.
“என்ன என்னாச்சு என்னாச்சுன்னு திரும்பத் திரும்ப அதையே சொல்லி என்னையே கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க? எனக்கு ஒன்னும் ஆகல. என்ன ஆகணும்னு எதிர்பார்க்கறீங்க நீங்க பிரித்வி?”
“ஆழி என்ன பேசுற நீ? நான் என்ன கேட்டுட்டு இருக்கேன்?”
“எனக்கு ஒன்னும் ஆகல. நான் நல்லாத்தான் இருக்கேன். உண்மையைச் சொல்லணும்னா உங்களைக் காணோம்னு இத்தனை நாளா தேடினதுல எனக்குப் பைத்தியம் பிடிச்சுருக்கணும். ஆனா, நான் நல்லாத்தான் இருக்கேன், கல்லு கணக்கா.. போதுமா?” என்று பதிலுக்குப் படபடத்தாள்.
“ஆழி, என்னைத் தேடுனியா நீ? எதுக்கு? என்னாச்சு?”
“என்னாச்சு? என்னாச்சு? என்னாச்சு? இந்தக் கேள்வியைத் தவிர வேற எதுவும் கேட்கத் தோனலையா உங்களுக்கு? உங்களுக்கு என்னாச்சு ஃபர்ஸ்ட் அதைச் சொல்லுங்க? உங்களைக் காணோம்னு பத்து நாளா அத்தையும், மாமாவும் உங்களைத் தேடி தவிச்சு அழுதுட்டு இருக்காங்க இங்க. உங்களை எப்படி ரீச் பண்றதுன்னு தெரியாம பயந்து போய்.. நீங்க என்னன்னா கல்லு குண்டு மாதிரி அங்க உக்கார்ந்துட்டு என்கிட்ட என்னாச்சுன்னு கேட்டுட்டு இருக்கீங்க.”
“ஐயோ ஆழி, ஐ ஆம் சாரி.”
“உங்க சாரியை நீங்களே வச்சுக்கோங்க. யாருக்கு வேணும் உங்க சாரி? அந்தச் சாரி உங்களுக்குத்தான் ரொம்ப ரொம்பத் தேவைப்படும். சோ நீங்களே வச்சுக்கோங்க. இன்னும் உங்கம்மா அப்பா கிட்ட வேற சாரி சொல்லணும் இல்ல நீங்க. சோ உங்களுக்குத் தேவைப்படும். பத்திரமா வச்சுக்கோங்க.”
“ஆழி ஐ ஆம் ரியலி சாரி. இங்க பாரு ஆழி, என்னைப் பார்த்து பேசு ஆழி. பிளீஸ்” என்று கெஞ்சினான்.
“முடியாது போங்க. உங்களுக்குக் கொஞ்சம் கூடப் பொறுப்பே இல்ல. நீங்க ஷிப்புக்கு போனதை என்கிட்ட சொல்லல. வேற ஷிப் மாறினதை என்கிட்ட சொல்லல. நான் உங்களுக்கு வேணாம்னே முடிவு பண்ணிட்டீங்க இல்ல?”
“ஐயோ, அப்படியில்ல ஆழி. பிளீஸ் என்னைப் பாரு. கேமராவை சரியா பிடி.”
“முடியாது”
“எனக்கு ஜஸ்ட் பீவர்தான் ஆழி. பிளீஸ் என்னைப் பார்த்து பேசு. என்னைப் பாரு டி ஆ..ழி..னி”
“ஜஸ்ட் பீவருக்குத்தான் டியூட்டிக்கு போகாம கேபின்ல இருக்கீங்களோ? நீங்க விடுற கதையை என்னை நம்பச் சொல்றீங்களா பிரித்வி? பிராடு” என்றாள் கோபம் குறையாமல்.
“ப்ச், எனக்கொன்னும் இல்ல ஆழி. பிளீஸ் இங்க பாரேன். எனக்கு உன் முகமே தெரியலடி”
“தெரிய வேணாம். உங்களுக்கு வேண்டாத பொண்டாட்டி மூஞ்சியைப் பார்த்து நீங்க எதுக்குப் பேசணும்? நான் உங்களுக்கு வேண்டாத பொண்டாட்டி தானே? சரி என் மேலதான் கோபமா இருக்கீங்க, என்கிட்ட பேசல. எல்லாம் ஓகே. பட் பத்து நாளா உங்க வீட்டுக்கு போன் பண்ணாம இருக்கீங்களே, உங்க பேரன்ட்ஸ் பயந்து போவாங்கன்னு தெரியாதா? ஏன் போன் பண்ணல நீங்க?”
“அச்சோ ஆழி. என் போன் உடைஞ்சு போச்சு ஆழி. அதுனால..”
“அதுனால ரொம்ப நல்லது” என்றாள், அவனைப் பேச விடாமல் தன் கோப முகத்தை அவனுக்கு நன்றாகக் காண்பித்து.
“நேத்து நைட் உங்க பிரெண்ட் தினேஷை சூப்பர் மார்கெட்ல பார்த்தேன். அவரோட தம்பி உங்க ஷிப்ல ஜாயின் பண்றாராம். அவருக்கு ஹெல்ப் பண்ணுவீங்களாம். அவர் சொல்லச் சொன்னார். அதுக்காகத்தான் உங்களைக் கூப்பிட்டேன். அதைச் சொல்லதான் கூப்பிட்டேன். சொல்லிட்டேன். அதையாவது ஒழுங்கா செய்ங்க. சரியா? நாளைக்கு மறக்காம உங்க அம்மா அப்பாகிட்ட பேசுங்க. பாவம் அவங்க” என்று படபடத்து அவன் பதில் பேசும் முன்னே அழைப்பை துண்டித்து விட்டாள்.
அவளுக்கு அப்படியொரு கோபம் வந்தது. அதைக் கோபம் என்று துல்லியமாகச் சொல்லிட முடியாது. அந்த உணர்வை அவளால் சரியாக அறுதியிட்டு மொழி பெயர்க்க முடியவில்லை.
ஒருவித ஆசுவாசம், இயலாமை, நிம்மதி, கோபம், கண்ணீர் எனக் கலவையான உணர்வுகள் அவளைச் சூழ்ந்தது.
“ஆழி, என்னாச்சு? உனக்கு ஒன்னும் இல்லையே? ஆழி.. ஆழி..” என்று கணவனின் குரலே அவள் மனத்தில் விடாது எதிரொலித்துக் கொண்டிருந்தது.
மெலிதான புன்னகை தோன்றியது அவள் இதழ்களில். அக்கணமே கண்ணீரும் புன்னகையுடன் போட்டி போட்டுக் கொண்டு கன்னத்தில் வழிந்தது.
இதுவரை யாரோ தொண்டைக் குழியை நெரித்தது போலிருந்த உணர்வு நொடியில் மறைய, பாலைவனத்தில் அலைந்து திரிந்தது போல நா வறண்டு தாகம் எடுத்தது. பலநாள் உணவையே கண்ணால் காணாதது போல அப்படியொரு பசி பசித்தது. அறையில் அம்மா வைத்து விட்டு போய் இருந்த தண்ணீரை எடுத்துத் தொண்டையில் சரித்தாள். கடைசிச் சொட்டு வரை குடித்த பின்னரும் தாகம் தீரவில்லை.
அதற்குள் பிரித்வி இரு முறை அவளை அழைத்து விட்டான். அவள் அழைப்பை ஏற்கவில்லை என்றதும், “ஆழி, பிளீஸ் ஆன்சர் த போன்” என்று குறுஞ்செய்தி அனுப்பினான்.
“மார்னிங் மாமாக்கு கால் பண்ணுங்க. ஐ ஆம் ஹேப்பி அண்ட் ரிலீவ்ட் தட் யூ ஆர் சேஃப். டேக் கேர் பிரித்வி” என்று பதில் அனுப்பியவள், அலைபேசியைப் படுக்கையில் வீசி விட்டு அவளும் பொத்தென்று படுக்கையில் விழுந்தாள். ஆறு மாத அசதி போல அவளுக்கு உடல் வலுவிழந்து கண்கள் சொருகின.
இங்கே ஆழிக்கு நடுவே கப்பலில் அமர்ந்திருந்து கண்ணாடி வழியே ஆழியைப் பார்த்திருந்தவனின் மனத்தில் அவனின் ஆழி பேரலையாக எழுந்தெழுந்து அடங்கிக் கொண்டிருந்தாள்.
“பிரித்வி” என்ற அவளின் அழைப்பு, அவள் கண்களில் தெரிந்த அவனுக்கான தேடல், உயிர் உருக அவனை அழைத்த விதம், அவனது உச்சி முதல் உள்ளங்கால் வரை விழிகளால் அவள் வருடியது என அதுவே அவன் மனத்திற்குள் படமாக ஓடிக் கொண்டிருந்தது. அவள் பேசியதை திரும்பத் திரும்ப மனத்தில் ஓட்டி பார்த்தான்.
“ஐ ஆம் ஹேப்பி அண்ட் ரிலீவ்ட் தட் யூ ஆர் சேஃப்” அவளின் அந்தச் செய்தியை ஐந்தாம் முறையாக வாய் விட்டு வாசித்து விட்டான். அதையேதான் அவனும் உணர்கிறான் என்று அவளிடம் சொல்வதற்கு வாய்ப்புக் கொடுக்காமல் போய் விட்டாளே அவனது கருநீல கடல்.
ஆழி அவனைத் தேடியிருக்கிறாள். அவன் மீதான அன்பு அவளிடம் இன்னமும் குறையவில்லை. இதைவிட வேறென்ன வேண்டும் அவனுக்கு? மற்றதெல்லாம் பின்னே போய் அது மட்டுமே அக்கணம் அவன் சிந்தையில் சிம்மாசனமிட்டு அமர்ந்தது.
அவனது வீட்டில், அவர்களின் அறையில் இருக்கிறாள். அவனைத் தேடினது மட்டுமல்ல அவனிடம் திரும்பியிருக்கிறாள்.
“நான் உங்களுக்கு வேணாம்னே முடிவு பண்ணிட்டீங்க இல்ல?” அவளின் கோபமான கேள்வி நினைவில் வர, “ஐயோ இல்ல ஆழி” என்று அடித்தொண்டையில் இருந்து கத்த விரும்பினான்.
மனைவியைப் பிரிவதென்று அவன் ஓர் நொடி கூட யோசித்ததே கிடையாது. உலகின் எந்தக் கடலில் அவனிருந்தாலும் அவன் ஆழி அவள்தான். ஆழி காதலன்தான் அவன். ஆனால் ஆழியை விட ஆழ் கடல் அவனுக்கு முக்கியமல்ல. அவன் எத்தனையோ தருணங்களைத் தவற விட்டிருக்கிறான். இம்முறை சரியான தருணத்திற்காகக் காத்திருந்ததுதான் தவறாகி போனதோ? வாழ்வு இன்னொரு வாய்ப்புத் தந்திருக்கிறது அவனுக்கு. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வான் அவன்.
இதுநாள் வரை அவர்கள் வாழ்வில் வீசிய புயல் கரையைக் கடந்திருக்க இப்பொழுது தெளிந்த நீரலைகள் மட்டுமே கண்ணில் தென்பட்டது.
இருவரின் மனத்திலும் தெளிந்த நீரலைகளாகத் தெளிவு பிறந்திருந்தது. அவளின் தேடல் மட்டுமல்ல அவனது தேடலும் வெற்றிப் பெற்றதாக அகமகிழ்ந்தான் பிரித்வி.
ஆழினி அரைத் தூக்கத்தில் அலைபேசியைக் கையில் எடுத்துப் பார்த்தாள். உறக்கம் சுமந்த விழிகளுடன் எழுந்து போய்த் தன் அலைபேசியைக் கூடத்தில் படுத்திருந்த கற்பகத்தின் பக்கத்தில் வைத்து விட்டு வந்து படுக்கையில் விழுந்தவளை உறக்கம் பேரலையாகச் சுருட்டி கொண்டது. ஆறு மாதம் உறங்காதது போல, அடித்துப் போட்டது போல உலகம் மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்தாள் அவள்.
மறுநாள் காலையில், “மாப்ள போன் பண்ணியிருக்கார். எழுந்துக்கோ” என்று காரியத்தை முதலில் சொல்லி அவளை உலுக்கினார் இந்திராணி.
“ஆழி, ஆழி. எழுந்துக்கோ. மாப்ள பேசுறார். அவர் நல்லா இருக்காராம், எழுந்திரு ஆழி, வந்து அவர்கிட்ட பேசு” என்று அவர் பதற்றத்துடன் அவளருகில் அமர்ந்து படபடக்க, “ப்ச் தூங்க விடும்மா” என்று புரண்டு படுத்தாள் அவள்.
“ஆழி, அம்மா சொல்றது கேட்குதா உனக்கு? மாப்ள, உன் புருஷன் போன்ல..”
“அம்மா, நான் நேத்து நைட்டே அவர்கிட்ட பேசிட்டேன் மா” என்று சொல்லி தலையணையில் முகம் புதைத்தாள்.
“என்ன சொல்ற ஆழி?” என்று கேட்டபடியே திரும்பி பார்த்தவர் கண்ணில் விழுந்தது கற்பகம் கையில் இருந்த மகளின் அலைபேசி.
“ஆமா, மாப்ள உன் போனுக்குத்தான் கால் பண்ணியிருக்கார்” என்று அவர் ஆச்சரியமும் அதிர்ச்சியுமாகச் சொல்லியபடியே திரும்ப, “பின்ன நாங்க பயப்படாம என்னப்பா செய்வோம்? நீ எங்களுக்குப் போன் பண்ணி பத்து நாளைக்கு மேல ஆச்சு. என் பிள்ளைக்கு என்னாச்சோன்னு பெத்த வயிறு கலங்குது..” என்று புலம்பி கற்பகம் அழுவது அவர் கருத்தில் பதிந்தது.
“இப்பவும் மருமக மூனு நாளா தூங்காம அலைஞ்சு திரிஞ்சு உன்னைக் கண்டுபிடிக்கலன்னா எங்ககிட்ட பேசியிருக்க மாட்ட இல்ல நீ? அப்படி என்னடா என் மேல உனக்குக் கோபம்?”
“எப்போருந்து இப்படிப் பொறுப்பில்லாம ஆன பிரித்வி? இப்போ போன் பண்ண மாதிரி முன்னாடியே கூட வேலை பார்க்கறவன் போன்ல இருந்து எங்ககிட்ட பேசியிருந்தா, நாங்க ஏன் பா பயப்படப் போறோம்?” என்று கற்பகம், முருகானந்தம் இருவரும் மாறி மாறி மகனிடம் பேசுவதைக் கேட்டவர் திரும்பி மகளைப் பார்த்தார். அவள் காதிலும் அந்தப் பேச்சு கிணற்றிலிருந்து கேட்பது போல விழுந்தது.
“ஆழி, மாப்ளய எப்படிக் கண்டுபிடிச்ச?” இந்திராணி ஆச்சரியமாகக் கேட்க, அவளோ ஆழ்ந்த உறக்கத்திற்குள் அமிழ்ந்து கொண்டிருந்தாள். இந்திராணிக்கு ஒரு தாயாக மகளின் வாழ்வு குறித்துப் பெரும் கவலையும், பெரிய பிரார்த்தனையும் இருந்தது. கடந்த இரண்டு நாள்கள் அவர் வேண்டிய தெய்வங்கள், வைத்த வேண்டுதல்களை எண்ணிக்கையில் அடக்கிட முடியாது.
இந்த நிமிடம் மகளின் வாழ்வு விரைவில் நேராகிடும் என்ற நம்பிக்கை அவருக்கு வந்திருந்தது. அந்த நிச்சயத்தை மகள்தான் அவருக்குத் தந்திருந்தாள். கால்கள் இரண்டையும் மடக்கி சிறு பிள்ளையைப் போலப் படுத்திருந்த மகளின் தலைக் கோதி கன்னம் வருடி முத்தம் வைத்தார்.
“ஆழி, எழுந்திரு. அம்மா டிபன் பண்றேன். சாப்பிட்டு படு.” என்றார் அக்கறையுடன். அவளிடம் அசைவேயில்லை.
“நீ மூனு நாளா ஒழுங்காவே சாப்பிடல ஆழி. எழுந்து சாப்பிட்டு படு செல்லம்” என்று கெஞ்சி கொஞ்சினார். ம்ஹூம், அவளின் ஆழ்ந்த உறக்கம் கலையவேயில்லை.
“ஆழி..” அதற்கு மேல் அவளை எழுப்ப மனமின்றிப் படுக்கையில் இருந்து எழுந்து போனார் அவர்.
*****
“ஆ..ழி..”
“ம்ம்…”
“ஆ…ழி..” நீர்த்துளிகள் ஈரமாய் முகத்தில் முத்து முத்தாக விழ, அந்த அடர்ந்த குரலின் இதமான அழைப்பு அவளின் உறக்கத்தை மொத்தமாகத் துடைத்தெறிய பட்டென்று கண் விழித்து, பதறி புரண்டு படுத்தாள் ஆழினி. படுக்கையில் மல்லாந்து அவனை அண்ணாந்து பார்த்தாள்.
“ஹே, தூங்கு ஆழி”
“பி…ரித்வி”
ஆழியின் குரலில் அவனை எதிர்பாராத ஆச்சர்ய பாவனை. ஆழி பேரலை போல எழுந்து அவன் முன் நின்றாள்.
அவனையே இமைக்காமல் பார்த்திருந்தாள்.
“நான்தான் ஆழி” என்றான் பிரித்வி, புன்னகையுடன்.
அவளின் விழிகள் இமைகளை அவசரமாக அடித்து அடித்து உறக்கத்தை அடியோடு விரட்ட முயன்றன. அவள் எதிரில் நிற்பது பிரித்விதான். அவனேதான்.
“ஆழி” என்று அவள் முகம் பார்த்து மென்மையாக அழைத்தவன் மேல் அப்படியே அலை போல் பாய்ந்தாள் ஆழி.
பிரித்வியின் இரண்டு கரங்களும் தன்னிச்சையாக மனைவியை நோக்கி விரிந்தன. ஆனால், ஆழியை அதற்குள் அடக்கி விட முடியுமா என்ன?
ஆழி ஆர்ப்பரித்துக் கொண்டிருப்பது தெரியாமல் ஆசையாக ஆவலோடு அவளைத் தனக்குள் அடக்கிட ஆவல் கொண்டு கை விரித்தான்.
ஆழி அவன் மேல் பாய்ந்து அவனைப் புயலாகச் சுழற்றி அடித்தாள்.
“என்ன ஆழி? என்ன ஆழின்னு கேக்கறேன்? ம்ம்” என்று அவள் கேட்க,
“என் ஆழி. என் பொண்டாட்டி. அப்புறம்..” என்று மயக்கும் புன்னகையுடன் சொன்னவனை,
“ஓ சாருக்கு இப்போதான் பொண்டாட்டி இருக்கறது ஞாபகம் வந்ததோ? இத்தனை நாள் இந்தப் பொண்டாட்டி ஞாபகம் எங்க போச்சாம்? ஆழியாம்ல ஆழி. அடி பிச்சுடுவேன் பார்த்துக்கோங்க” என்று பல்லைக் கடித்துக் கத்தி, அவன் மார்பில் சரமாரியாக அடித்தாள்.
“நான் ஆழியை மறந்தா தானே..” அவன் சொல்லி முடிப்பதற்குள், “டயலாக் பேசாதீங்க” என்று வயிற்றில் குத்தினாள்.
“ஆழி” என்று சிரித்தவன், அவள் கொடுத்த அடிகளை அமைதியாக வாங்கிக் கொண்டான். அவளைத் தடுக்கவேயில்லை.
“எதுக்கு வீட்டுக்கு போன் பண்ணாம இருந்தீங்க?” அவன் டிஷர்ட்டின் காலரை கொத்தாகப் பிடித்துக் கேட்டாள்.
“என் போன் உடைஞ்சு போச்சு. இல்லைனா நான் கால் பண்ணாம இருப்பேனா ஆழி?”
“ஓ, பிரித்விராஜனுக்கு ஷிப்க்குப் போனதும் மறதி நோய் வந்திடுச்சு போல. சார் எப்போ அவரோட பொண்டாட்டிக்கு கால் பண்ணாராம் சொல்லுங்க? நீங்க என்கிட்ட பேசி அஞ்சு மாசத்துக்கு மேலாச்சு”
“சாரி ஆழி”
“உங்க சாரியும் வேணாம். நீங்களும்..”
“பிளீஸ் இன்னொரு தடவ தெரியாம கூட, மறந்து கூட, வாய் தவறி கூட என்னை வேணாம்னு சொல்லாத ஆழி. பிளீஸ்” என்று கெஞ்சி அவள் முகத்தைக் கையில் ஏந்தினான். முரட்டுத்தனமாக அவனிடம் இருந்து விலகினாள் அவள்.
“போன் உடையற அளவுக்கு என்ன பண்ணீங்க என்ஜினியர் சார்? இதெல்லாம் ஒரு காரணமா சொல்றீங்க பாருங்க. உங்களை.. ம்ம்ம்” என்றாள் கோபம் குறையாமல்.
“உங்க போன் இல்லனா ஷிப்ல இருந்து எங்களைக் காண்டாக்ட் பண்ண வேற வழியே இல்லையா என்ன? வேற ஆப்ஷனே இல்லாத மாதிரி போன் இல்லங்கறத ஒரு பெரிய காரணமா சொல்றீங்க? ஹ்ம்ம்?”
“நான் போன் பண்ணியிருக்கலாம்தான். உன் நம்பரை தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் நான் சொல்லுவேன் ஆழி” என்றவன், அவளின் அலைபேசி எண்ணை அவள் விழி பார்த்தே சொல்லி முடித்தான்.
“பட் நான் கால் பண்ணா நீ எடுப்பியான்னு தெரியாம. நீ என் கூடப் பேச மாட்டியோன்னு.. எனக்கு எப்பவும் உன் நினைப்பு இருக்கும்டி. நீ இப்படிப் பதறினன்னு தெரிஞ்சா.. உன்னைத் தெரிஞ்சே தவிக்க விடுவேனா நான்? நீயே சொல்லு ஆழி?”
“விடுங்க பிரித்வி. இதுக்கு முன்னாடி அப்படி என்னைப் பலமுறை தவிக்க விட்டுருக்கீங்க. அதுனாலதான் நாம பிரிய..”
“ப்ச், ஷ்ஷ்ஷ். பேசாத ஆழி” என்று அவன் கைக்குள் அடங்க மறுத்து திமிறியவளின் வாய் மூடினான். பிரிவு என்ற வார்த்தையை மீண்டும் கேட்க விரும்பவில்லை அவன்.
“நான் இந்த ஷிப்க்கு போன புதுசுல, நீ என்னை விட்டு போன கோபத்துல அம்மாப்பாகிட்ட பல நாள் பேசாம இருந்திருக்கேன். அதுனால நான் கால் பண்ணாதத அவங்க பெருசா எடுத்துக்க மாட்டாங்கன்னு நினைச்சேன் ஆழி. சாரி. சத்தியமா சாரிடி. பிளீஸ்..”
“ம்ம்” என்று திமிறினாள். அவள் வாயில் இருந்து கையை விலக்கவில்லை அவன்.
“இந்த டைம் என் லேப்டாப்பும் வீட்லயே விட்டுட்டுப் போயிட்டேன். இல்லனா வாட்ஸ்ஆப் அதுல இருந்திருக்கும். அப்பாவுக்கு மெசேஜ் பண்ணியிருப்பேன். நான் புதுப் போன் ஆர்டர் பண்ணியிருந்தேன். அது வர லேட்டாகிடுச்சு, அது வந்த பிறகு பேசிக்கலாம்னு இருந்தேன்..”
ஒரே உதறலில் அவன் கையை விலக்கி, “அது வர இன்னும் பத்து நாள் ஆகியிருந்தா? சார் அப்படியே இருந்திருப்பீங்க. அப்படித்தானே? அவ்ளோ அசால்ட்டு இல்ல?” என்று கோபமாகக் கேட்டாள்.
“அப்படியில்ல ஆழி. நீங்க இவ்ளோ பயப்படுவீங்கன்னு நான்..”
“நீங்க நினைக்கல அப்படித்தானே? உங்களுக்கு என்ன? கப்பல் வேலை என் கனவு. ஆழி என் ஆசைன்னு பெருசா வசனம் பேசிட்டு இங்க எங்களை அம்போன்னு விட்டுட்டு நீங்க பாட்டுக்கு உங்க வேலையைப் பார்த்திட்டு போயிடுவீங்க. நீங்க இல்லாம நாங்க இல்ல இங்க தனியா கிடந்து தவிச்சு, உங்களுக்காக ஏங்கிட்டு கிடக்கணும். அதைப் பத்தி நீங்க ஏன் கவலைப்படப் போறீங்க?” என்று படபடத்தாள். அவளையும் அறியாமல் கண்ணில் நீர் துளிர்த்து விட்டது. குரல் உடைந்து விட்டது.
“ரொம்பப் பயந்துட்டியா ஆழி?” மேலும் அவளை நெருக்கமாக இழுத்து கேட்டான்.
“விடுங்க. நான் ஏன் பயப்படப் போறேன்? நான்தான் உங்களை வேணாம்னு விட்டுட்டு போய்ட்டேனே. உங்களுக்கும் நான் வேணாம் தானே? அதானே நீங்களும் என்னைத் தேடல?”
“ரொம்பப் பயந்துட்டியா ஆழி? அப்படி என்னடி எனக்கு ஆகிடப் போகுது?”
“என்ன ஆகப் போகுதா? நீங்க கேட்க மாட்டீங்க பின்ன. நாங்க பயந்தது எங்களுக்குத் தானே தெரியும்”
“நீ இருக்கும் போது எனக்கு ஒன்னும் ஆகாது ஆழி. அப்படியே எனக்கு எதுவும் ஆனாலும் உனக்குத்தான் ஃபர்ஸ்ட் கால் பண்ணுவாங்க..” பொளிச்சென்று அவன் வாயிலேயே போட்டு, “பேசாதீங்க” என்று கத்தினாள்.
“ஆழி..”
“பேசாதீங்க, பேசாதீங்க, உங்களைப் பேசாதீங்கன்னு சொன்னேன்” என்று கண்ணீருடன் சொல்லி சொல்லியே அடித்தாள்.
“சாரி..” என்று சேர்த்தணைத்தான்.
“நான் சாதாரணமா நடக்குற ஆக்சிடென்ட் பத்தி சொல்..”
“நீங்க ஒன்னும் சொல்லத் தேவையில்ல..” என்றவள், அவன் வாயை மூடினாள். நொடியில் அவனைப் பேச விடாமல் செய்தாள். இருவரின் இதழ்களும் பேசிக் கொண்டன. கரங்கள் ஒருவரையொருவர் ஆரத் தழுவி கொண்டன. இதயத் துடிப்பும் ஒரே லயத்துடன் துடிக்கத் தொடங்கியிருந்தது.
முத்தத்தை ஆழினி தொடங்கினாலும் அதில் மூழ்கியது அவன்தான்.
“சாரி ஆழி” என்றான் உணர்ச்சிகரமாக அவள் இதழ்களுக்குள்.
“ஐ மிஸ்டு யூ ஆழி” உன்மத்தத்துடன் அவள் உதடுகளுக்குள் உச்சரித்தான். ஆழியை அவன் அன்பின் பேரலை வாரிச் சுருட்டியது. அவளின் உச்சந்தலையில் உதயமாகிய உணர்வொன்று உள்ளங்கால் வரை பரவி, சிலிர்க்க செய்தது.
அவன் உடலின் கதகதப்பை தன் விரல் நுனியில் உணர்ந்தவளின் உடல் விசித்திரமாகக் குளிர்ந்து சில்லிடலை உணர்ந்தது.
“ஐ மிஸ்டு யூ டூ பிரித்வி” மூன்று வருடத்தில் முதல் முறையாக மனத்தில் இருந்து அவனைத் தேடியதை அவனிடமே சொன்னாள்.
பிரித்வியின் கரம் உணர்ச்சி மிகுதியில் அவளை இறுக அணைத்தது.
“எல்லாத்துக்கும் சாரி ஆழி, என்னை மன்னிச்சிடு” என்றான் உளமார. எப்போதும் போல அவளின் பதிலை செயலில் காண்பித்தாள்.
அவனை இழுத்துக் கொண்டு படுக்கையில் விழுந்தாள். அவளோடு சரிந்தான். கணத்தில் மனம் லேசாகச் சத்தமாகச் சிரித்தான் அவன். அவன் சிரிப்பை முத்தமிட்டாள் ஆழி.
அவளின் கரம் இரண்டும் கொத்தாக அவன் பின்னந்தலை முடியை பற்றின. சட்டென மோகவலை அறுபட வலியில் முனங்கினான்.
“என்னாச்சு?” புருவங்கள் சுருங்க அவனை ஏறிட்டு கேட்டாள்.
“ஒன்னுமில்ல ஆழி” என்றான் கரகரத்த குரலில்.
“என்னன்னு சொல்லுங்க. என்னமோ இருக்கு. என்ன மறைக்கறீங்க என்கிட்ட? தலையில என்ன? அடிபட்டிருக்கா? உங்க முகம் ஏன் சுருங்குச்சு?”
“நர்ஸம்மா. சொன்னா கேளு. எனக்கு ஒன்னுமில்ல”
“அப்படியா காமிங்க நான் பார்க்கறேன்”
“முதல்ல நான் பார்த்துக்கறேன். அப்புறமா..”
“ச்சீ, டபுள் மீனிங்ல பேசாதீங்க பிரித்வி”
“ஒரே மீனிங்தான் ஆழி” என்று அழுத்தமாக முத்தமிட்டான்.
“ம்ம்ம் விடுங்க” என்று விலகி, அவனைப் பரிசோதித்தாள். அவனது பின்னந்தலையில் காயத்தைப் பார்த்ததும் ஆழ மூச்சிழுத்து, “என்னது இது? எப்படி அடிபட்டுச்சு?” என்று பதறி வருத்தத்துடன் வருடி வினவினாள்.
“அது ஒன்னுமில்ல விடு ஆழி” என்று அவளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தான். அவன் வசமாகினாலும், “என்னாச்சு சொல்லுங்க பிரித்வி” என்றாள் விடாப்பிடியாக.
“ஒரு பத்து நாளைக்கு முன்னாடி ரஃப் சீ (Rough Sea). ஜூனியர் ஒருத்தன் டூல்ஸோட என்ஜின் ரூமுக்குள்ள வந்தவன் மேனேஜ் பண்ண முடியாம ஸ்லிப்பாகி விழுந்துட்டான்”
“அச்சச்சோ. உங்க மேல விழுந்துட்டாரா?”
“ம்ம், நான் போய் ஒரு பக்கம் விழுந்து எனக்கு மண்டையில அடி. நான் விழுந்த வேகத்துல என் கையில இருந்த போன் ஒரு பக்கம் விழுந்து சிதறிடுச்சு. அந்தப் பையன் என் மேல விழுந்து என் கை கால் எல்லாம் லேசா சிராய்ச்சு..” சட்டென அவனிடம் இருந்து விலகி, அவனை ஆராயப் போனவளின் கையை இறுக தடுத்துப் பிடித்தான் பிரித்வி.
“இப்போ நான் ஓகே ஆழி. என்னை அப்பவே ஆன்போர்ட் டாக்டர் செக் பண்ணிட்டு ரெண்டு நாள் ரெஸ்ட் எடுக்கச் சொன்னார். நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு திரும்ப டியூட்டி ஜாயின் பண்ணா பீவர், த்ரோட் இன்ஃபெக்ஷன்னு வச்சு செஞ்சுடுச்சு. அதான் நாலு நாள் எனக்கு ரெஸ்ட் கொடுத்தாங்க.”
“இவ்வளவு நடந்திருக்கு. அங்க பார்த்துக்க ஆள் இல்லாம தனியா கிடந்து கஷ்டப்பட்டிருக்கீங்க இல்ல? என்னைத் தேடவே இல்லையில்ல நீங்க?”
“அப்படியில்ல ஆழி”
“பேசாதீங்க” என்று அதட்டிய உதடுகளை முத்தமிட்டே தன் வசப்படுத்தினான். ஆழியின் கரம் மென்மையாக மேனி தழுவி செல்லும் அலை போல மோகத்திலும் அவன் காயங்களை வருடி கொடுத்தது.
அவளின் அன்பு அவனை ஆழி பேரலையாக மையம் கொண்டது. இந்தப் பிரித்விராஜன் கப்பலிலும் விமானத்திலும் பயணித்து ஆறு, கடல், மலை கடந்து தன் ஆழியை அடைந்திருந்தான்.
ஆழி அவனுக்குள் அடங்கியது.
இரண்டு வெவ்வேறு பாதையைக் கடந்து வரும் வேறு வேறு பெயர்கள் கொண்ட, தன்மையைக் கொண்ட ஆறுகள் ஒரே ஆழிக்குள் சங்கமிப்பது போல இருவரும் தங்களின் வேறுபாடுகளுடன் ஒன்றிணைந்தார்கள்.
How did this episode feel?
Rate this episode⭐ 5.0 (11)
2 thoughts
Sign in to share your thoughts
One tap with Google, no password needed.
Continue with Google Login or register with email
or write your comment below as a guest
Very nice story.
Thank you ma ❤️