தெண்திரை தேடலே – 20
அத்தியாயம் – 20
அன்றாட வழக்கமாக ஆழினி காலையில் கண் விழித்து விட்டாள். மெல்ல புரண்டு படுக்க முயன்றவளால் முடியாமல் போகவும் லேசாக நிமிர, கணவனின் கைப் பிடிக்குள் இருந்தாள். அவள் மனம் லேசாக உணர்ந்தது. அத்தனை வருடங்களில் இல்லாத நிறைவை அந்த நொடியில் உணர்ந்தாள்.
இவனையா நிரந்தரமாகப் பிரியும் முடிவில் இருந்தோம்? தன்னையே கேள்வி கேட்டுக் கொண்டாள்.
அவனைத் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்தது முழுதாக மூன்று நாள்கள்தான். அவனில்லையோ, அவனுக்கு என்னவாக விட்டதோ என்று அவள் பயந்தது. அதற்குள் அவள் உயிரை உருவி உடலை மட்டும் உலவ விட்டது போல ஜீனவற்று போய் விட்டாள். இனி அவனில்லாமல் ஒரு வாழ்வா? என்று யோசிக்கக் கூட அவளால் முடியவில்லை. அவனைப் பிரிந்து அவளால் நிச்சயமாக வாழ்ந்திட முடியாது என்பதை இப்பொழுது நன்றாகப் புரிந்து கொண்டாள்.
மெதுவாக எழுந்து குளித்து வந்தவள், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனை ஆராய்ந்தாள்.
அவனது பின்னந்தலையில் இன்னமும் வீக்கம் இருந்தது. புறங்கையில் சிராய்ப்புக் காயம் ஆறி வடுவாக மாறியிருந்தது. கணுக்காலில் வீக்கம் குறைவதற்காகக் கட்டுப் போட்டிருந்தான்.
இதுவா இவனுக்குச் சிறிய விபத்து? என்று அவள் மனம் பதற, அவனை முறைத்து, “சார் தூங்கி எழுந்திருக்கட்டும் இருக்கு” என்று முணுமுணுத்து சென்றாள்.
அங்கே கூடத்தில் கற்பகம் பரபரத்துக் கொண்டிருந்தார்.
“என்னம்மா பிரித்வி தூங்குறானா?” அவள் கதவைத் திறந்ததும் அந்தக் கேள்வியைத்தான் கேட்டார்.
“ஆமாத்த”
“சரி, சரி. மூனு மணிக்குதான் வந்தான்னு இவர் சொன்னாரு. அதான் எழுப்ப வேணாம்னு.. சரி உனக்குக் காஃபி தரவா?” என்று கேட்டார்.
“வேணாம்த்த. நீங்க உக்காருங்க. நானே கலந்துக்கறேன்” என்று சமையல் அறைக்குள் நுழைந்தவளின் பின்னேயே அவரும் சென்றார்.
“உனக்குப் பிரித்வி மேல கோபம் இருக்கும். நான் அத தப்பு சொல்லல.” என்றவரை திரும்பிப் பார்த்தாள்.
“இப்பவே அவன்கிட்ட சண்டை போடாத. நீங்க சேர்ந்து வாழணும்னுதான் நாங்க எல்லாரும் வேண்டிக்கறோம். எதுனாலும் நல்லா பொறுமையா உக்காந்து பேசி முடிவெடுங்க. என்ன?” என்றார்.
ஆழினி அவருக்குப் பதில் சொல்லாமல் அடுப்பில் கவனத்தை வைத்தாள்.
“நீயும் வேலையை விட்டுட்ட. உனக்காக..”
“டிஃபன் என்னத்த பண்ணட்டும்? இட்லி ஊத்தி சட்னி, சாம்பார் பண்ணிடவா? வடையும், கேசரியும் சேர்த்து பண்ணிடறேன்.” என்று அவள் பேச்சை மாற்றவும், வேறு வழியின்றி மண்டையை ஆட்டினார் அவர்.
“நான் டிஃபன் பண்ணிட்டு போய் அவரை எழுப்பறேன். நாம பிளான் பண்ண மாதிரி கோவிலுக்குப் போய்ட்டு வந்துடலாம்” என்றாள்.
“சரிம்மா. ஒருவேளை பிரித்வி டையர்டா இருக்குன்னு சொன்னா அவனை வீட்லயே விட்டுட்டு நாம மட்டும் போயிட்டு வந்துடலாம்”
“இல்ல அவரும் வரட்டும்” என்றாள். புது வருட பிறப்பிற்காக மட்டுமல்ல, அவன் பத்திரமாக வீடு வந்து விட்டான் என்பதற்காகவும்தான் கோவிலுக்குச் செல்கிறாள். கற்பகத்தின் வேண்டுதல் அது. முன்தின இரவு அதற்காகத்தான் மாமியார் வீடு வந்திருந்தாள் அவள்.
பிரித்வியிடம் பேசிய மறுநாளே அம்மா வீடு சென்று விட்டாள். இப்போது அம்மாவையும் உடன் அழைத்துக் கொண்டு கோவில் செல்வதுதான் திட்டம்.
“இருங்கத்தே. அம்மாக்கு ஒரு போன் பண்ணிட்டு வந்துடுறேன்” என்று கற்பகத்திடம் சொல்லி விட்டு உள்ளே சென்று அம்மாவுக்கு அழைத்துப் பேசினாள்.
“மாப்ள வீட்டுக்கு வந்துட்டாரா? எப்போ ஆழி? எப்படி?”
“எமர்ஜென்சி லீவ் போட்டு வந்திருக்கார் போலம்மா”
“ரொம்பச் சந்தோஷம் ஆழி.” என்றார் இந்திராணி, மகளுக்காக மகிழ்ந்தவராக.
“இரு. அம்மா உடனே கிளம்பி வர்றேன்” என்று பரபரத்தார்.
“நீ அலையாத மா, நாங்க கோவிலுக்குப் போற வழியில உன்னைப் பிக் அப் பண்ணிக்கறோம்”
“இல்லயில்ல. இந்தா இருக்க உன் வீட்டுக்கு வர்றது என்ன பெரிய அலைச்சல்? நான் வர்றேன். நீ தனியா எல்லா வேலையும் செய்வியா? பேசாம இரு”
“என்னம்மா பெரிய வேலை? சமையல் வேலை தானே?”
“ஆமா. ஆமா. மாப்ள வந்திருக்கார். ஸ்பெசலா ஏதாவது செய்யணும் இல்ல?”
“உனக்குத் தெரியாதா மா? அவர் ஊருக்கு வந்ததும் ரசம் சோறுதான் கேப்பார்” என்றாள் சிரிப்புடன். உண்மைதான், கப்பலில் வகை வகையாகப் பல நாட்டு உணவுகள் உண்ண கிடைத்தாலும் கூட நம் ஊர் உணவு போல வருமா?
அம்மா, மனைவி கையால் வைக்கும் ரசம் சோறுக்குத்தான் ஏங்குவான்.
தக்காளி, மிளகு ரசம் அத்துடன் பருப்பு, மல்லி, புதினா என ஏதேனும் ஒரு துவையல் போதும் அவனுக்கு.
“ஐயோ இந்தச் சாப்பாடு இல்லாம நாக்கு செத்து போய் இருந்தேன். ம்ம், டிவைன் ஆழி” என்று ரசித்து உண்பான்.
“சரி ஆழி, நீ மாப்ளைக்கு ரசம் வை. நான் இந்தா கிளம்பி வர்றேன்” என்று அழைப்பை துண்டித்தார் இந்திராணி.
அவளின் பேச்சுச் சத்தத்தில் கண் விழித்து, “ஆழி” என்றழைத்தான் பிரித்வி.
“அச்சோ சாரி. டிஸ்டர்ப் பண்ணிட்டேனா? நீங்க தூங்குங்க. நான் வெளில போறேன்” என்றவளை ஒரே இழுப்பில் தனக்கருகில் கொணர்ந்திருந்தான்.
“பிரித்வி” என்று அவள் திமிற, “சாரி ஆழி” என்றான் அவள் முகம் பார்த்து.
“எதுக்கு? அதான் ஏற்கெனவே நிறைய முறை சொல்லிட்டீங்களே?”
“இது ஏற்கனவே சொல்லாம விட்டதுக்குன்னு வச்சுக்கோ ஆழி”
“ஓகே வச்சுக்கறேன்” என்றாள் முகம் உயர்த்தி.
இருவரின் மனத்திலும் ஒரே சிந்தனைதான் ஓடியது. அவர்களின் குழப்பங்கள் எல்லாம் நீங்கி மனம் தெளிந்த நீரலைகளைப் போலாகியிருந்தது. இருவரும் ஒரே முடிவைதான் எடுத்திருந்தார்கள். ஒருவரையொருவர் இமைக்காமல் பார்த்திருந்து, இணைந்து சிரித்தார்கள்.
“எனக்குக் கிச்சன்ல வேலையிருக்கு. நீங்க போய்க் குளிச்சுட்டு வாங்க. நான் காஃபி எடுத்துட்டு வர்றேன்” என்று எழுந்துச் சென்றாள்.
சற்று நேரத்தில் இந்திராணியும் வீடு வந்து விட்டார்.
பிரித்வியைப் பார்த்ததும் அழுகையுடன் அவன் கைப் பிடித்தார் கற்பகம். பெரியவர்களுக்கு அவனைப் பார்த்ததில் அத்தனை மகிழ்ச்சி. வேறெந்த கேள்விகளும் அவனைக் கேட்கவில்லை அவர்கள்.
அன்று திட்டமிட்டபடி கோவிலுக்குச் சென்று வந்தார்கள்.
அன்றிரவு பிரித்வியின் பெட்டியை பிரித்துப் பொருட்களை எல்லாம் வெளியில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் ஆழினி.
துணிகளை எல்லாம் துவைக்கப் போட்டு, மற்ற பொருள்களை எடுத்து அடுக்கி என அவனோடு பேசிக் கொண்டே வேலை மும்முரத்தில் இருந்தவளின் கையில் சிக்கியது அது.
நீலநிற கற்கள் பதித்த அவள் அடிக்கடி அணியும், அவளுக்கு மிகவும் பிடித்த துப்பட்டா.
“இது என்னோடது, எப்படி உங்க பெட்டியில வந்தது?” என்று கண்ணைச் சுருக்கி அவனைப் பார்த்து கேட்டாள்.
“எது உன்னோடது? நீயே என்னோடதுதான். அப்புறம் உன்னோடது எல்லாம் என்னோடது தானே?” என்று மயக்கும் புன்னகையுடன் கண் சிமிட்டி சொன்னவனை இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.
“என்ன சொன்னீங்க?”
“ஹே கோபப்படாத நர்ஸம்மா. இதை இப்படிப் பாரேன். நான் உனக்கு அடிமைன்னு”
“சும்மா அளந்து விடாதீங்க”
“சத்தியமா இல்ல ஆழி.” என்று எட்டி அவளின் கைப் பிடித்தான்.
அந்நேரம் அவளின் கையில் சிக்கியது அவளின் கொலுசு. குட்டி குட்டி நட்சத்திரங்கள் பதித்த ஐம்பொன் கொலுசு.
அவன் கண் முன்னே அதை ஆட்டி, “என்ன?” என்றாள் விழிகளால்.
“நீ என் கூடவே இருக்க ஃபீல் இருக்கணும்னு…” என்று அவன் இழுக்க,
“அதுக்கு நான் கூடவே இருக்கணும். என்னைப் போக விட்டுட்டு..” என்று அவள் கோபமாகப் பதில் பேசவும்,
“பிளீஸ், வேணாம் ஆழி. இனி உன்னை விட்டு எங்கேயும் போறதா இல்ல நான்” என்று ஆழியைப் பேச விடாமல் தடுத்து, இறுக அணைத்துக் கொண்டான். அவள் விலகினாலும் விடவில்லை. இனி அவளை விலகவும் விடப் போவதில்லை எனும் முடிவுடன். அவன் முடிவுக்கு அவளும் உடன்பட்டாள். அவன் அணைப்பில் ஒன்றியவளின் கரம் அவனைச் சுற்றி பின்னியது.
ஆழினி முறையாக வேலையை விட்டிருந்தாலும் அவள் இடத்திற்குப் புதிய செவிலி ஒருவர் வந்து சேரும் வரை, அவளை மருத்துவமனை வரச் சொன்னது நிர்வாகம். அதனால் பணிக்குச் சென்று கொண்டிருந்தாள் அவள். பிரித்விதான் அவளின் சாரதி.
அவள் மருத்துவர் கார்த்திக்கிற்கு மனதார நன்றி சொல்லியிருந்தாள். பிரித்வி அவன் பங்கிற்கு அவனும் அவரை நேரில் சந்தித்து நன்றி சொன்னான்.
ஆழினி கணவனைத் தேடி மனஉளைச்சலுடன் அலைக்கழிந்து கொண்டிருந்த நேரம்தான் அந்தச் செய்தியை பார்த்திருந்தாள்.
“தமிழகத்தின் பிரபல கிரிக்கெட் வீரர் பவித்ரனின் மனைவி மஹதியின் கார் விபத்தில் சிக்கியது.”
அன்றைய இரவும் மறுநாளும் கூட அதையேதான் தலைப்புச் செய்தியாக, முக்கியச் செய்தியாகத் தொடர்ந்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.
ஆழினி நண்பனுக்காக வருந்தினாள். அவன் நிலை புரிய அவனுக்கு வருத்தம் தெரிவித்து, அவன் மனைவியின் நலம் விசாரித்து நீண்டதொரு குறுஞ்செய்தி அனுப்பி வைத்தாள்.
*****
“அம்மா..” கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த பெற்றோரின் முன் சென்று அமர்ந்த பிரித்வி, அம்மாவை அழைத்தான்.
“என்னப்பா? காஃபி வேணுமா?”
“இல்லம்மா” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனருகில் வந்து அமர்ந்தாள் ஆழினி.
“என்ன ரெண்டு பேரும் ஒன்னா வர்றீங்க? என்னா விஷயம்?” இருவரையும் சந்தேகமாகப் பார்த்துக் கற்பகம் கேட்க, “முதல்ல அவனைப் பேச விடு கற்பகம்” என்றார் முருகானந்தம்.
“சரிப்பா, சொல்லு” என்றவர், “என்ன? என்ன சொல்லப் போறான்?” என்று மருமகளிடம் செய்கையில் வினவினார்.
அவள் சிரிப்பை அடக்கவும் முறைத்து, “இங்கப் பாருப்பா பிரித்வி, திரும்பக் கப்பலுக்குப் போறேன்னு வந்து நிக்காத. உன் பொண்டாட்டியை விடு. நானே உன்னைப் போக விட மாட்டேன். இங்க சென்னைக்குள்ளயே ஒரு வேலையைப் பாரு. அவ்ளோ தூரம்லாம் இனிமே எங்களால உன்னை அனுப்ப முடியாது” என்றார் தீர்மானமாக.
“அப்படிச் சொல்லும்மா” என்றாள் அவன் தங்கை லீலாவதி.
“லீலா நீ பேசாத” முருகானந்தம் மகளை அதட்ட, ஆழி அப்போதும் அமைதியாகத்தான் இருந்தாள்.
“ம்மா..”
“இந்த அம்மா அம்மாலாம் என்கிட்ட நடக்காது. நான் உன்னை எங்கேயும் அனுப்பறதா இல்ல. அவ்ளோதான். சொல்லிட்டேன்” என்று முடிவாகச் சொல்லி முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
“முதல்ல நான் என்ன சொல்றேன்னு கேளும்மா.”
“நீ என்னத்தயாவது சொல்லி என்னைக் கரைச்சுடுவ. நீ சொல்றதை நான் கேட்க மாட்டேன்” என்று அவர் சொல்லவும் ஆழி சிரித்து விட்டாள்.
“உனக்காக நான் பேசறேன். நீ சிரிக்கிற?” என்று அவளை முறைத்தான்.
“உங்க பையன் சொல்றதை கேட்டுட்டு அப்புறம் பேசுங்கத்த” என்றாள் அழுத்தமாக.
“என்னடா?”
“ஏன்மா, முன்னாடிலாம் என் பையன் ஆசைதான் பெருசுன்னு எனக்குச் சப்போர்ட் பண்ணி பேசுவ. இப்போ என்னன்னா..”
“இப்பவும் உனக்கு நல்லதுன்னா அம்மா சரின்னுதான் சொல்லுவேன். ஆனா நீ ஷிப்க்கு போறதுக்கு மட்டும் நான் ஒத்துக்க மாட்டேன்” என்றார் தீர்க்கமாக.
“ஹ்ம்ம்” என்று சலித்துக் கொண்டான்.
“என்னடா சலிச்சுக்கறா?”
“சரிம்மா. உன் ஆசைப்படி நான் ஷிப்க்கு போகல”
“அப்புறம்..” என்று ஒன்று போலக் கேட்டார்கள் கற்பகமும், லீலாவும்.
“எனக்கொரு நல்ல ஆஃபர் துபாய்ல இருந்து வந்திருக்கு. சோ நான் துபாய் போறேன்” படபடவெனச் சொல்லி விட்டு அம்மாவின் முகத்தைப் பார்த்தான்.
எதையோ சொல்ல வந்த கற்பகம் எதிர்மறையாக எதுவும் சொல்ல விரும்பாமல், “ரொம்ப நல்லதுப்பா. மருமகளையும் உன் கூடக் கூட்டிட்டு போற தானே?” என்று கேட்டார்.
“ஆமா, ஆழி இல்லாம நான் மட்டும் எப்படிம்மா போவேன்?” என்று பதில் கேள்வி கேட்டான் அவன்.
அந்த வகையில் துபாய் செல்கிறார்கள் என்றதும் ஓரளவு சமாதானமாகி, சம்மதித்து விட்டார்கள் அவன் பெற்றோர்.
அமெரிக்கக் கப்பல் நிறுவனத்தில் பணி புரிந்தவனுக்கு அதே அளவு சம்பளம் எதிர்பார்த்ததுதான் பிரச்சினையாக இருந்தது. துபாய் நிறுவனம் கிட்டத்தட்ட அதை நெருக்கி ஊதியம் தரவும் உடனே பணியில் சேர சம்மதித்து விட்டான்.
மனைவி வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருப்பதில் அவனுக்கு உடன்பாடில்லை. அதனால் ஆழினிக்கும் துபாயில் வேலைத் தேடினார்கள்.
மகனின் முயற்சி முருகானந்தத்திற்குத் தெரியும். அவனுக்கு வாழ்த்துகள் சொல்லி தோளில் தட்டிக் கொடுத்தார்.
கற்பகத்தைப் பொறுத்தவரை துபாய் என்றால் மகன் பக்கத்தில் இருப்பான். ஏதேனும் அவசரம் என்றால் சட்டென்று பயணித்துப் பார்க்கும் தூரத்தில் இருப்பான். அவர்களும் அடிக்கடி சென்று வரலாம் என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு மகனை மகிழ்ச்சியுடன் வழியனுப்ப தயாரானார்.
How did this episode feel?
Rate this episode⭐ 5.0 (9)
4 thoughts
Sign in to share your thoughts
One tap with Google, no password needed.
Continue with Google Login or register with email
or write your comment below as a guest
Nice
தேங்க்ஸ் மா ❤️
Nice update
Thank you sis ❤️