Chapter 21 of 21

தெண்திரை தேடலே – 21

November 6, 2026 · 10 min read · ⭐ 5.0 (11)

அத்தியாயம் – 21

சில ஆண்டுகளுக்குப் பிறகு…

“ஆழி”

“….”

“ஆழி..”

“அப்பா…” என்று கத்தி அவனை நோக்கி ஓடி வந்தாள், அவர்களின் மூன்று வயது மகள் சமுத்ரா.

“செல்லக் குட்டி. வாங்க வாங்க” என்று குனிந்து மகளைக் கையில் அள்ளிக் கொண்டான் பிரித்வி.

“ஆழி..” மீண்டும் அவன் அழைக்க, அப்போதுதான் மருத்துவனையில் இருந்து வீடு திரும்பியிருந்த ஆழினி அவனைத் திரும்பியே பார்க்கவில்லை.

“ஆழி, ஐ ஆம் சாரி” என்று அவன் கெஞ்சலாகச் சொல்லவும், சட்டென அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தாள்.

“ஆழி, சாரி” என்று அப்பாவை போலவே சொன்ன மகளை முறைத்தாள் ஆழினி. மகளைப் பார்த்து வெடித்து வெளிவரவிருந்த சிரிப்பை அடக்கிய பிரித்வி, “ஆழி பிளீஸ்” என்றான்.

“போங்க” என்று முகம் திருப்பிக் கொண்டு சமையல் அறை சென்றாள். அப்பாவும் மகளும் அவளைப் பின் தொடர்ந்தார்கள்.

“இதுல என் தப்பு என்ன ஆழி இருக்கு? அங்க சைனால ஏதோ இஸ்யூனு என்னைப் போகச் சொல்றாங்க. அர்ஜென்ட் வொர்க் மா. அன்பிளான்ட்டு பிசினஸ் ட்ரிப். நான் என்னடி பண்ணுவேன். பிளீஸ்..” என்று அவளை உரசியபடி நின்றான்.

பிளீஸ் புரிஞ்சுக்கோயேன் என்று கண்ணால் கெஞ்சினான்.

அப்பாவை போலவே பூனைக் குட்டியாக அம்மாவை உரசி அவள் மேல் தாவ முயன்றாள் சமுத்ரா.

“ஷ்ஷ் அம்மா கோபமா இருக்காங்க செல்லக் குட்டி. பேசாம இரு” என்று மகளிடம் கிசுகிசுத்தான் பிரித்வி.

“கிஸ்ஸி குடுத்தா அம்மா கோபம் போயிடும் ப்பா.” என்று அவனிடம் பதிலுக்குக் கிசுகிசுத்த சமுத்ரா, “இருங்க நான் குடுக்கறேன்” என்று மழலையில் அவனிடம் சொல்லி கை காட்டி விட்டு, எட்டி அம்மாவின் கன்னத்தில் ஈரமாய் முத்தம் வைத்தாள். அவர்களின் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த ஆழினிக்கு தன் கோபத்தை இழுத்துப் பிடிப்பது பெரும்பாடாக இருந்தது.

“ப்பா, இப்ப நீங்க குடுங்க. ம்ம்” என்று அப்பாவின் கன்னத்தைப் பிடித்து இழுத்தாள் மகள்.

பிரித்வி சிரிப்புடன் குனிந்து மனைவியின் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.

“ரெண்டும் ஆள் மயக்கிங்க” என்று முணுமுணுத்த ஆழினிக்கு முறைப்புக்குப் பதில் சிரிப்பு வந்து விட்டது.

அவளோடு இணைந்து சிரித்தார்கள் அப்பாவும், மகளும்.

“ஆழி கோவிலுக்குப் போகணும்னு சொன்ன இல்ல? போ ஃப்ரெஷ்ஷாகிட்டு வா போகலாம்” என்றான்.

“டென் மினிட்ஸ் குடுங்க” என்று சொல்லி உள்ளே சென்றாள். அதற்காகவே விரைவாக வீடு வந்திருந்தான் அவன். மகளுக்குச் சூடாகப் பால், மனைவிக்கும் அவனுக்கும் காஃபி போட்டு அவன் எடுத்து வர, ஆழி தயாராகி வெளியில் வந்தாள்.

மென்பட்டுச் சேலையில் இருந்தாள் அவள். அதைக் கண்டதும் அவன் விழிகள் விரிய மயக்கும் புன்னகையுடன் கண்ணடித்தான்.

“இந்த டைம்ல எல்லாம் சேஃப்தான். நர்ஸம்மா உங்களுக்குத் தெரியாதது இல்ல. ம்ம், என்ன சொல்றீங்க? ஏதாவது பண்ணுவோமா?” என்று கண்ணடித்தவன் முதுகில் ஓங்கி அடித்தாள்.

“அ..ப்பா..” என்று வேகமாக எழுந்து அவன் முதுகை தடவிக் கொடுத்தாள் அவனின் சமுத்ரா குமாரி.

“பார்த்தியா என் செல்லக் குட்டியை..” என்று மகளைத் தூக்கி பெருமை பேசி, முத்தமிட்டான்.

“என் பையன் வரட்டும். அப்புறம் இருக்கு உங்க ரெண்டு பேருக்கும்..” என்ற ஆழினியின் கரம் அவள் வயிறை தடவியது. சமுத்ரா அப்பாவின் கையில் இருந்து நழுவி அவளிடம் ஓடி வந்து, மேடிட்டிருந்த அவள் வயிற்றில் முத்தமிட்டாள்.

“தம்பி” என்றாள் பால் பற்கள் தெரிய புன்னகைத்து.

“தம்பிதான். சீக்கிரம் வந்துடுவான். வெயிட் பண்ணுவோம்” என்று நம்பிக்கையுடன் சொன்னான் பிரித்வி.

மனைவி, மகளுடன் பர்துபாயில் இருந்த கோவிலுக்குச் சென்றான்.

அவன் பர்துபாயில் பணிபுரிகிறான். துபாயை மையமாகக் கொண்டு இயங்கும் கப்பல் பணிகளுக்கான நிறுவனத்தில் நல்ல பதவியில் வேலை கிடைக்கவும் உடனடியாகப் பணியில் சேர சம்மதித்திருந்தான்.

இங்கு வந்த பிறகு ஆழினியும் வேலை தேட, அவளுக்கு அதிர்ஷ்டவசமாகப் பர்துபாயில் அமைந்திருந்த ஒரு மருத்துவனையிலேயே வேலை கிடைத்திருந்தது.

அடுத்த மாதமே அம்மா அப்பாவை அங்கு அழைத்துக் கொண்டான் பிரித்வி. இருவரும் வேலைக்குச் செல்ல வீட்டை ஒதுக்கி அடுக்க உதவி செய்தது பெரியவர்கள்தான்.

மூன்று மாதத்தில் அவர்கள் ஊருக்கு திரும்பி சென்று விட, ஒரே வாரத்தில் இந்திராணியை வரவழைத்து விட்டான். இப்போது வரை அதுதான் தொடர்கிறது.

அவர்கள் சில நிமிடங்களில் கோவிலை அடைந்திருந்தார்கள். காரை நிறுத்திய பிரித்வி இறங்கி சுற்றி வருவதற்குள் ஆழி கீழிறங்க, “அம்மா தூக்கு” என்று அவளை நோக்கி கையை உயர்த்தினாள் சமுத்ரா.

ஆழினியும் அவளைத் தூக்கப் போக, “ஆழி” என்று அதட்டிய பிரித்வி, விரைந்து வந்து, “சமுத்ரா குட்டி, அப்பாகிட்ட வாங்க” என்று மகளைக் கையில் அள்ளிக் கொண்டான்.

மூவரும் கோவிலுக்குச் செல்ல அங்கே அவர்களுக்கு முன்னே கிளம்பி கோவிலுக்கு வந்திருந்த இந்திராணி சாமி தரிசனம் முடிந்து அவர்களுக்காகக் காத்திருந்தார்.

“அம்மாச்சி” என்று அவரைப் பார்த்ததும் கத்தினாள் சமுத்ரா. அப்பாவிடம் இருந்து தாவி அவரிடம் சென்றாள்.

“நீயும் வர்றியாம்மா?” ஆழினி கேட்க, “நீங்க முன்னாடி போங்க ஆழி. நான் இந்தக் குட்டியோட வர்றேன்” என்றார்.

“சரிம்மா” என்றவள், “வாங்க போவோம்” என்று கணவனின் கைப் பிடிக்க, “இரு ஆழி வர்றேன்” என்றவன் விரைந்து சென்று அங்கிருந்த பெருமாள் கடையில் அவளுக்காக நெருங்க தொடுத்த மதுரை மல்லிகைப்பூ வாங்கி வந்தான்.

“இந்தா, பூ வச்சுக்கோ” என்று அவன் நீட்டவும் புன்னகையுடன் வாங்கித் தலையில் சூடினாள். அவள் திரும்பி பார்க்க சமுத்ராவின் தலையிலும் மல்லிகை பூத்திருந்தது. அவளுக்கு இந்திராணி வைத்து விட்டிருந்தார்.

நால்வரும் சென்று நிறைவாகச் சாமி தரிசனம் செய்து வெளியில் வந்தார்கள்.

“அப்பா வாங்க” ஆவலுடன் கத்தி ஆர்வமுடன் அவன் கைப் பிடித்து இழுத்துப் போனாள் மகள்.

அங்கே அவர்கள் முன் விரிந்திருந்தது கடல் நீர். அப்பாவை போலவே சமுத்ராவிற்கும் கடல் மேல் கொள்ளை ஆசைதான்.

தேராதுபாய் – பர்துபாய் இரண்டையும் இணைக்கும் அல்லது இரண்டையும் கடக்கப் பயன்படும் சிறிய படகுகள் வந்து நிற்கும் அப்ரா ஸ்டேஷன் அது. அதையொட்டிய க்ரீக் பகுதியில் பெரிய படகுகள், யாட்ச், கப்பல்கள் என வரிசையாக நிற்கும். அங்கிருக்கும் நீண்ட நடை பாதையில், பூங்காவில் மாலையானால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

அங்குப் புறாக்களுக்கும் பறவைகளுக்கும் தீனியிடுவது சமுத்ராவிற்கு மிகப் பிடித்த பொழுது போக்கு. இப்போதும் அப்பாவை அதற்காகத்தான் அழைத்தாள்.

அடுத்தப் பத்து நிமிடங்கள் மகளுடன் பறவைகளுக்கு உணவிட்டு, மனைவியோடு க்ரீக் பூங்காவில் காலாற சிறிது நேரம் நடந்து, நன்றாக இருட்டத் தொடங்கவும் வீடு திரும்பினார்கள்.

வீடு வந்ததும் ஆழினியின் முகம் வாடி விட்டது.

“ஆழி” என்று பிரித்வி நெருங்க, அவனுக்குப் பெட்டி அடுக்குவதில் கவனமாக இருந்தாள் அவள்.

“நீங்க பத்திரமா போயிட்டு வாங்க பிரித்வி” முயன்று வருவித்த புன்னகையுடன் சொன்னாள்.

அவன் பதினைந்து நாள் அலுவலகப் பயணமாகச் சீனா செல்கிறான். இது அவ்வப்போது நடப்பதுதான். ஆனால் அன்றிரவு அவன் சீனா செல்ல மறுநாள் மாலையில் இந்திராணி அமெரிக்கா செல்கிறார். இளைய மகளைப் பார்க்க. அவளின் தங்கை யாழினியிடம் இப்போது ராசியாகி விட்டார் அம்மா.

யாழினிக்கு அவளின் காதலனுடன் திருமணமாகி விட்டது. அதனால் அவரின் கோபமும் குறைந்து விட்டது. இப்போது மகள் கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரியவும் அவளைப் பார்க்க அவர் துடிக்க, அவர் அமெரிக்கச் செல்ல ஏற்பாடு செய்து விட்டான் பிரித்வி.

கற்பகம், முருகானந்தம் இருவரும் ஆழினியின் துணைக்குத் துபாய் வருகிறார்கள்தான். ஆனால், அவர்கள் வர இன்னும் நான்கு நாள்கள் இருக்கிறது. அதுவரை அவள் தனியாகச் சமாளிக்க வேண்டும். எப்போதும் சமாளித்து விடுவாள்தான். அப்படி யாரையும் சார்ந்து இருக்கும் பழக்கம் அவளுக்கு இல்லை.

ஆனால், இம்முறை அவளின் பயத்தின் காரணம் அவள் இரண்டாம் முறையாகக் கர்ப்பமாக இருப்பதுதான்.

அதிலும் இன்னும் இரண்டு வாரங்களில் அவளுக்கு ஐந்தாம் மாதம் தொடங்கப் போகிறது. அதை நினைத்தாலே அவளுக்குப் பயம் பிடித்துக் கொள்கிறது.

“ஆழி, நமக்கு ஒன்னும் ஆகாது. உன்னைப் பார்த்துக்க அம்மா வந்துடுவாங்க. ஓகே?” என்று அவளை அணைத்துக் கொண்டான் அவன்.

“ம்ம்” என்று அவன் மார்பில் தஞ்சமானாள்‌. முதல் முறை ஐந்தாம் மாதம் தானே அவள் குழந்தையை இழந்தது. அந்தப் பயம் இன்னமும் அவளுக்கு நீங்கவில்லை.

அவளே மருத்துவனையில் பணி புரிந்தாலும், அவள் மனநிலை அவனுக்குப் புரிந்திருந்தது.

“ஹாஸ்பிடல்ல வேலை பார்க்கறேன் நான். என்னால என் குழந்தையைக் காப்பாத்த முடியலையே பிரித்வி” என்று அவள் அழுததை அவன் மறக்கவே மாட்டான்.

அவள் சமுத்ராவை சுமந்து கொண்டிருந்த போது இரண்டு வீட்டுப் பெரியவர்களும் மாறி மாறி வந்து அவளை நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள். சமுத்ராவை நல்லபடியாகப் பெற்றெடுத்தாள் ஆழினி. இப்போதும் அந்த நம்பிக்கையை அவளுக்குக் கொடுத்தான் அவன்.

“என் நம்பர் எப்பவும் ஆக்ட்டிவா இருக்கும் ஆழி. இது என்னோட டிராவல் டீட்டேயில். இது நான் ஸ்டே பண்ற ஹோட்டல். என் நம்பரை ரீச் பண்ண முடியலைன்னா இங்க ஆபீஸ்க்கு கூப்பிடு. இல்லனா இந்தச் சைனா நம்பருக்கு மெசேஜ் போடு” என்று அவனைத் தொடர்பு கொள்ளும் அத்தனை வழிகளையும் அவளுக்கு மீண்டும் ஒருமுறை தெரியப்படுத்தினான். அதை வழக்கமாக்கி இருந்தான்.

“ம்ம்” என்றவள், அவன் பெட்டியில் இருந்த அவளின் டிஷர்ட்டை எடுத்து, “இது என்னோடது” என்றாள்.

“யாரு இல்லனா? ஃபர்ஸ்ட் அதை உள்ள வை டி” என்று அதட்டினான்.

“என் டிஷர்ட் உங்களுக்கு எதுக்கு?” பதில் தெரிந்தே கேள்வி கேட்டாள்.

“ம்ம், நான் போட்டுக்கதான். பேசாம பேக் பண்ணு ஆழி”

“இதுக்கெல்லாம் ஒன்னும் குறைச்சல் இல்ல” என்று அவள் உதடு சுழிக்க, “வேற என்ன குறைஞ்சதாம் என் ஆழிக்கு?” என்று புருவம் உயர்த்தி, குனிந்து அவளின் சுழித்த உதட்டில் ஆழ முத்தமிட்டான்.

“என் டிஷர்ட்டை நான் தர மாட்டேன்” என்று அவள் அதை எடுத்து ஓரமாக வைக்கவும், வேறொன்றை எடுத்துப் பெட்டியில் போட்டான் பிரித்வி. அத்தோடு மகளின் சட்டை ஒன்றையும் எடுத்து வைத்தான்.

“நீ எப்பவும் என்னோட இருக்க ஃபீல்” என்பான்.

ஆழி முறைத்துக் கொண்டிருக்க அந்நேரம் உள்ளே வந்தாள் சமுத்ரா.

அப்பாவின் பெட்டியில் தன் உடையைப் பார்த்ததும், குஷியாகி விட்டாள்.

“அப்பா இந்தாங்க. இந்தாங்க ப்பா” என்று அவளின் உடைகள், பொம்மைகள், விளையாட்டுப் பொருட்கள் என அனைத்தையும் ஒவ்வொன்றாக ஓடிப் போய் எடுத்து வந்து அவனிடம் கொடுத்து அவனது பெட்டியில் வைக்குமாறு பணித்தாள்.

“ஒரு டிரஸ் போதும் செல்ல குட்டி” என்று அவன் சொல்ல, “அவ உங்களோட வர்றதானு நினைச்சுட்டு எல்லாத்தையும் எடுத்துட்டு வர்றா” என்று நமுட்டு சிரிப்புடன் சொன்னாள் ஆழி.

“என்னது? ஹே செல்லக் குட்டி. அப்பா பெட்டியில் இடமில்ல” என்று அவன் சொல்லவும் கத்தி அழ ஆரம்பித்து விட்டாள் சமுத்ரா.

“மாட்னீங்களா?” என்று ஆழி சிரிக்க, மகள் ஒவ்வொன்றாக எடுத்து வந்ததை நினைக்கவும் அவனுக்கும் சிரிப்பு வந்து விட்டது.

மகளுக்குச் சமாதானம் சொல்லி, மனைவியை அணைத்து விடுவித்து மனமில்லாமல் சீனா கிளம்பிச் சென்றான் அவன்.

இந்திராணி அமெரிக்கா செல்ல கற்பகம், முருகானந்தம் அவளுக்குத் துணையாக துபாய் வந்தார்கள்.

பதினைந்து நாள்களில் பிரித்வி திரும்பி வந்து விட்டான்.

“ஆழி”

“ம்ம்” என்று கண் விழித்தவளின் இதழ்கள் அவனைக் கண்டதும் அனிச்சையாகப் புன்னகைத்தன.

“இப்பத்தான் வந்தீங்களா? ஃப்ளைட் லேட்டா? ஏதாவது சாப்பிட தரவா?”

“வேணாம். நீ தூங்கு”

“ஃப்ளைட்ல என்ன சாப்பிட்டீங்க? உங்களுக்கு அந்தச் சாப்பாடே பிடிக்காதே. பால் மட்டும் சூடு பண்ணி தரவா?”

“வேணாம் ஆழி. நீ தூங்கு” என்று அவளை நெருங்கிப் படுத்தான்.

அவர்களின் பேச்சுச் சத்தத்தில் சமுத்ரா கண் விழித்து விட்டாள்.

ஆழினி கணவனின் கையைத் தலையணையாக்கிப் படுக்க, அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான் பிரித்வி.

“அப்பா நானு, நானுப்பா..” அரைத் தூக்கத்தில் எழுந்து தாவி இருவருக்கும் நடுவில் வந்தாள் மகள்.

“நானும் கிஸ்ஸி” என்று அம்மா அப்பா இருவருக்கும் மாறி மாறி முத்தமிட்டாள் மகள். மகளைத் தூக்கி தன் மார்பில் கிடத்தியவன் மனைவியைச் சுற்றி அணைவாகக் கைப் போட்டான்.

“அப்பா…” என்று மகள் மகிழ்ச்சியாக அழைக்க, மகளின் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டு, மகள் கைக் காட்டவும் மகிழ்வுடன் மனைவியின் கன்னத்தையும் ஈரமாக்கினான்.

அன்று ஞாயிற்றுக் கிழமை. அவர்களின் விடுமுறை நாள். அந்த அதிகாலையில் ஊரே விழித்திருக்க, சாலையில் வாகனங்களின் இரைச்சல் கேட்டது. அதிகாலை தொழுகைக்கு அழைக்கும் ஒலி கேட்டது.

“அப்பாவும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் செல்லக் குட்டி” என்று பிரித்வி மகளிடம் சொல்ல, அதற்கு மகள் பதில் சொல்ல என அவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஆழினியின் விழிகளில் உறக்கமும், இதழ்களில் புன்னகையும் இருந்தது.

பிரித்வியின் கரம் அவளைச் சுற்றி வளைத்து வருடிக் கொடுத்தது. புன்னகைத்தாள் அவள். அது என்றென்றும் நிலைத்திருக்கும்.

நிறைந்தது!

சுபம்!

How did this episode feel?
Rate this episode⭐ 5.0 (11)

3 thoughts

Stay Connected A simple, spam-free email update whenever a fresh chapter goes live.
About Us FAQ Contact Us Privacy Policy Terms & Conditions Disclaimer Copyrights
© 2026 Devi Manogaran Novels. All rights reserved.  ·  Created by Vel Studios
error: Content is protected !!