உயிர் உனைச் சேர – 1
உயிர் உனைச் சேர…
அத்தியாயம் – 1
மழைக் காலத்திற்கே உரிய மெல்லிய சோம்பலுடன் புலர்ந்தது அன்றைய அதிகாலைப் பொழுது. ஒருபக்கம் சூரியன் மெல்ல மேலெழுந்து கொண்டிருக்கையில், அவனைப் பொருட்படுத்தாமல் மழை மேகங்கள் சிதறலாய் பொழிந்து கொண்டிருந்தது. மெல்லிய சூரிய ஒளி பட்டு மின்னிய ஒவ்வொரு மழைத் துளியும் பொன்னாய் மின்னி பூமியை அடைந்ததைக் காணவே கொள்ளை அழகாக இருந்தது.
“கீர்த்தி, இதென்ன இன்னைக்கு வெயிலும் அடிக்குது, மழையும் பெய்யுது? நான் போய் நம்ம ரெண்டு பேருக்கும் ரெயின் கோட் எடுத்துட்டு வர்றேன். ஒரே நிமிஷம் வண்டியை ஆஃப் பண்ணு பிளீஸ்” என்ற கெஞ்சலுக்குக் கீர்த்தனா மழைத் துளி அளவும் அலட்டிக் கொள்ளவில்லை.
“ஆல்ரெடி ரொம்ப லேட்டாகிடுச்சு ரம்யா, நீ முதல் மாடிக்கு ஓடிப் போய்க் குடை எடுத்துட்டு வர்றதுக்குள்ள நாம நம்ம தெருவை தாண்டிடலாம்” என்று சொன்ன வேகத்தோடு வண்டியை இயக்கி மிதவேகத்தில் நகர்த்தியும் இருந்தாள் கீர்த்தனா.
“அய்யய்யோ, நாம ஸ்டூடியோக்கு நனைஞ்சுட்டே போனா நல்லாவா இருக்கும்?”
“இன்னைக்கு நாம மட்டும் இல்ல, எல்லாருமே ஸ்டூடியோக்கு நனைஞ்சுட்டேதான் வருவாங்க ரம்மு. சோ நீ கொஞ்சம் கம்முனு வா”
“போச்சு, என் முடி நனைஞ்சிருச்சு.” என்று ரம்யாவும் விடாமல் புலம்ப, “அப்புறம்.. ஊரே மழையில நனையுது. நீ மட்டும் குடை பிடிச்சுத் தப்பிக்கப் பார்ப்பியா?” ஸ்கூட்டியின் பக்கவாட்டுக் கண்ணாடியில் தோழியைப் பார்த்துக் கண் சிமிட்டி, “நீ மழையில நனையாட்டி அதுக்கென்ன மரியாத” என்று கேலியாகக் கேட்டு சிரித்தாள்.
கீர்த்தனாவின் தோளில் சுளீரென்று அடித்து, “இப்படி நனைஞ்சுட்டு போய் நின்னா செட்ல நமக்கு மரியாத இருக்காது பார்த்துக்கோ” என்ற ரம்யாவின் எச்சரிக்கைக்குக் கீர்த்தனாவின் பதில் அசட்டையான தோள் குலுக்கல் மட்டுமே.
மழையும், வாரயிறுதி விடுமுறையும் சேர்ந்து கொள்ளச் சென்னையின் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறைவாக இருக்க, சென்னையின் புறநகர் பகுதியில் இருந்த பிரபல தனியார் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் படப்பிடிப்பு நடக்கும் செட் அமைந்திருந்த ஸ்டுடியோவிற்கு விரைவாகச் சென்றிருந்தாலும், நன்றாக நனைந்தே சென்று சேர்ந்தார்கள் தோழிகள்.
இன்னும் இரண்டே மணி நேரத்தில் ஷூட்டிங் ஆரம்பித்து விடும் என்பதால், வண்டியை நிறுத்திய வேகத்தில் இறங்கி உள்ளே ஓடி நேராக ஒப்பனை அறைக்குச் சென்றிருந்தார்கள்.
ஒரு மணி நேரத்தில் இருவரும் வேறு உடை, ஒப்பனை எனத் தயாராகி அவர்களின் குழுவோடு காலை உணவுண்ண அமர்ந்தார்கள்.
கீர்த்தனா இட்லி, வடகறியில் கை வைக்கும் முன் அலைபேசியில் அம்மாவுக்கு அழைத்து விட்டாள்.
அவளின் அம்மா துர்கா தேவிக்கு மகளென்றால் அதிமுக்கியம். ஒரு நாளும் அவளின் அழைப்பை தவற விட்டதில்லை. இம்முறையும் அலைபேசியைக் கையிலேயே வைத்திருந்தது போல உடனடியாக மகளின் அழைப்பை ஏற்றிருந்தார்.
“கீர்த்தி” என்று வாஞ்சையாய் வந்த அழைப்பில் கீர்த்தனாவுக்கு அப்போதே அம்மாவின் முகம் காண வேண்டும் போலிருந்தது.
“வீடியோ கால் வரவாம்மா?” என்று கேட்டிருந்தாள்.
“நீ ஷூட்டிங்ல இருப்பியே, எதுக்கு? வேணாம்” என்று மறுத்து விட்டார்.
அவளும் வற்புறுத்தாமல், “ஹ்ம்ம், இன்னும் ஷூட் ஸ்டார்ட்டாகலம்மா. நானும் ரம்யாவும் பிரேக்பாஸ்ட் சாப்பிட்டுட்டு இருக்கோம். கிருத்தி எப்படிம்மா இருக்கா? நேத்து நைட் டாக்டர் பார்த்துட்டு வந்ததுக்கு அப்புறம் அவளுக்குக் காய்ச்சல் குறைஞ்சதா?” என்று விசாரித்தாள்.
“ஓரளவு..”
“நாலு நாளா விடாம காய்ச்சல் அடிக்குது இல்ல? பேசாம ப்ளட் டெஸ்ட் எடுத்து பார்த்துடுங்கம்மா.”
“டாக்டரும் அதான் சொன்னாங்க கீர்த்தி”
“அப்போ இதுக்கு மேல வெயிட் பண்ணாம இன்னைக்கே ப்ளட் டெஸ்ட் குடுத்துடுங்கம்மா. டிலே பண்ணாதீங்க. கிருத்தி ஊசிக்கு பயந்து வேணாம்னு சொல்லுவா. நான் ப்ரேக்ல அவகிட்ட பேசுறேன், அவ உங்களோட ஹாஸ்பிடல் வருவா” என்று சொன்னவளுக்கு உடனடியாகத் தங்கையையும், அம்மாவையும் பார்த்தேயாக வேண்டும் என்ற ஆவல் மனம் நிறைந்து நின்றது.
இப்போது தான் அம்மாவுக்கும் தங்கைக்கும் துணையாக அங்கிருக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியுடன், “சாரிம்மா” என்றாள்.
“கீர்த்தனா..” என்று அதட்டிய துர்காதேவி, “கிருத்திக்கு சாதாரண வைரல் பீவராதான் இருக்கும். அவ காய்ச்சல் வந்ததும் அடங்காம ஐஸ்கிரீம் சாப்பிட்டா சரியா போகும்னு ஃபேமிலி பேக் வாங்கிட்டு வந்து சாப்பிட்டு மேல இழுத்து வச்சுக்கிட்டா.. ஹ்ம்ம், விடு. ஒன்னும் இருக்காது. நீ பிரேக்ல அவகிட்ட பேசு, நா அதுக்கு முன்னாடியே முடிஞ்சா அவளைக் கிளப்பி ஹாஸ்பிடல் போயிட்டு வர்றேன்” என்றார். இப்போது காய்ச்சலின் தாக்கத்தில் அசந்து உறங்கும் இளைய மகளை எழுப்பவும் அவருக்கு மனம் வரவில்லை.
“சரிம்மா” என்று மேலும் சில நிமிடங்கள் பேசி விட்டு வைத்தவளின் சிந்தை சிங்கார சென்னையை விட்டு மதுரைக்குப் பறந்திருந்தது.
அவள் ஊருக்கு சென்று இரண்டு மாதங்களுக்கு மேலாகிறது. அதனாலேயே அம்மாவை அதிகம் தேடியது. இது போன்ற சமயங்களில் துர்காதேவி கல்லூரி இறுதியாண்டு படிக்கும் இளைய மகள் கிருத்திகாவுடன் பெரிய மகளைக் காண வந்து விடுவார். கடந்த இரண்டு மாதங்களாக அரசு பணியில் இருக்கும் அவராலும் விடுமுறை எடுக்க முடியாத சூழல்.
கீர்த்தனாவுக்கு அம்மாவும், தங்கையும்தான் உலகமே. கிருத்திகா பிறந்தது சில மாதங்களிலேயே அப்பா அவர்களின் வாழ்க்கையில் இல்லாமல் போய் விட்டார்.
அவளின் பெற்றோர் வீட்டை எதிர்த்து காதல் மணம் புரிந்தவர்கள் என்பதால் இரு வீட்டு உறவுகளும் அவர்களை அப்போதே வேண்டாத உறவாக ஒதுக்கி விட, இப்போது இவர்களுக்கு உறவென்று சொல்லிக் கொள்ள யாருமில்லை.
“கீர்த்தி, சாப்பிடு” என்று ரம்யா அவளின் தோளை இடிக்க, ஒரு பெருமூச்சுடன் உண்ணத் தொடங்கினாள் அவள்.
“எனக்கு ஊருக்கு போகணும் போலருக்கு ரம்மு. ரெண்டு பேரும் லீவ் போட்டுட்டு ஊருக்கு போயிட்டு வந்துடுவோமா?” வாயில் இட்லியை திணித்தவாறு அவள் கேட்க, “என்னாது? லீவா? அதுவும் இப்பவா? இந்தச் சூப்பர் சிங்கர் சீசன் முடியற வரைக்கும் நாம எங்கேயும் போக முடியாது கீர்த்தி. நம்ம தலை ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் மிஸ்ஸானாலும் நமக்குக் கீர்த்தனை பாடிடுவார் டைரக்டர், அதுனால வாய்ப்பில்லை ராசாத்தி” என்று உதடு பிதுக்கினாள்.
“ப்ச், வீக் டேஸ்ல ஆபீஸ் லீவ் போட்டுட்டு போவோம்ங்கறேன்”
“இதுவொரு நல்ல ஐடியா. ஆனா நம்ம டீம் லீட்டுக்கு அது பேட் ஐடியாவா படுமே கீர்த்தி” என்றவள், தோழியின் முகம் வாடுவதைக் கண்டு, “உனக்கென்ன இப்போ ஊருக்கு போகணும். அவ்ளோதானே? நெக்ஸ்ட் வீக் ஷூட்டிங் முடிச்சுட்டு.. அப்படியே மதுரை பஸ் ஏறிடுறோம். ஓகே?” என்றதும், கீர்த்தனாவின் முகம் மலர்ந்தது.
அதே மலர்ந்த முகத்துடன் படப்பிடிப்பு நடக்கும் தளத்திற்குச் சென்றார்கள்.
கீர்த்தனா, ரம்யா இருவரும் கல்லூரித் தோழிகள். இரண்டாமாண்டு படிக்கையில் இருவருக்கும் கல்லூரி ஆண்டு விழா கலை நிகழ்ச்சியில் பாடும் வாய்ப்பு அமையவும், அந்த வயதுக்கே உரிய துள்ளலுடன் கலந்து கொண்டனர்.
அன்றைக்குச் சிறப்பு விருந்தினராக முன்னாள் சூப்பர் சிங்கர் வெற்றியாளர் வந்திருக்க, இவர்கள் இருவரையும் குறிப்பிட்டு அழைத்துப் பாராட்டியதோடு மட்டுமில்லாமல், அவர்கள் குழுவில் இவர்களையும் இணைத்துக் கொண்டார்.
முதன்மையான பாடகர்களாக அல்ல. குழுவிசை பாடகிகளாக (chorus singers) வாய்ப்பு கிட்டியதை, இருவருமே தட்டி விடவில்லை.
கல்லூரி முடித்து, பணியில் சேர்ந்த பிறகும் கூடப் பாடகி பணியை இருவரும் விடவில்லை.
இருவரும் இசைப் பிரியர்கள். முறையாகக் கற்கவில்லை என்றாலும், பாட நிரம்பப் பிடிக்கும். அதற்கு மேல் அதன் வழியாக வரும் வருமானமும் அதைத் தொடர வைத்தது. ஆனால் சமீபமாகப் பாடுவதை நிறுத்தி விடும் எண்ணம் ரம்யாவுக்கு.
“நீ இல்லாம, நான் மட்டும் எப்படிப்பா தனியா பாட போவேன்? நீ க்விட் பண்ணா நானும் க்விட் பண்ணிடுவேன்” என்று கீர்த்தனாவும் முடிவாகச் சொல்லி விட்டாள்.
அவர்களின் அந்த முடிவுக்குக் காரணம் அவர்களுக்குப் பின்னேயேதான் அமர்ந்திருந்தான்.
போட்டியாளர்கள், நடுவர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் என அரங்கம் நிரம்பிட நிகழ்ச்சியின் படப்பிடிப்பும் தொடங்கியது. அனைவரும் அதில் மூழ்கிட, தங்களுக்குப் பின்னால் இருந்தவனைப் பொருட்படுத்தாமல் இசையில் மூழ்கினார்கள் இருவரும்.
ஒவ்வொரு பாடலுக்கும் நடுவே அரை மணி நேரம் இடைவெளி விடப்படும். நான்கு பாடல்கள் முடிந்திருக்க, “அம்மாக்கு கால் பண்ணணும்” என்று கீர்த்தனா பரபரக்க, “ஹாய் குயில்ஸ்” என்று அவர்களின் முன்னே வந்து வழி மறித்து நின்றான் அவன், ராஜேஷ். கிடார் வாசிப்பவன். நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இதே துறையில் இருக்கிறான். நல்ல இசை கலைஞன், அதில் சந்தேகமில்லை.
அவன் கையில் இரண்டு சூடான காஃபி கோப்பைகள் இருக்க, ஒன்றை ரம்யாவின் முன் நீட்டினான்.
“குயிலுக்குப் பிடிச்ச காஃபி” என்று முறுவலித்தான்.
“நான் குயிலும் இல்ல, எனக்குக் காஃபியும் பிடிக்காது” என்று பட்டென முகத்தில் அடித்தது போல ரம்யா பதில் சொல்ல, கீர்த்தனாவின் இதழ்கள் புன்னகையில் லேசாக வளைந்தன.
“அப்படியா? ம்ம், குடிலுக்கு எப்போல இருந்து காஃபி பிடிக்காதாம்?” அவன் அழுத்தமாக நின்று கேட்க, “நீங்க காஃபி குடிக்கறியான்னு கேட்ட நிமிஷத்துல இருந்து.” என்று அவனுக்குப் பதிலை சொன்ன கீர்த்தனா, “வழிய விடுங்க ராஜேஷ்.” என்று குரலை உயர்த்திச் சொல்லி விட்டு அவனைச் சுற்றிக் கொண்டு நடந்து விட்டாள்.
அவள் அம்மாவிடம் பேசி விட்டு வைக்கவும், படப்பிடிப்பு தொடங்கவும் சரியாக இருந்தது.
“சின்னச் சின்ன வண்ண குயில்” பாடலை போட்டியாளர் தேர்வு செய்திருக்க, அதில் வரும் குழுவிசையை ரசித்துப் போட்டியாளருடன் இணைந்து இவர்கள் பாடி முடிக்க, அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது.
நடுவர்கள், போட்டியாளர், தொகுப்பாளர்கள் எனக் கேமரா கண்கள் அவர்களை மொய்த்திருக்க, “மாலை சூடி ம் ம், மஞ்சம் தேடி ம் ம்..” எனச் சீண்டலாகப் பாடியபடி இவர்களை நெருங்கியிருந்தான் ராஜேஷ்.
“பருவம் என்னும் கீர்த்தனம் பாட பாட பாட.. பாட..” என்று அவர்களைப் போலவே அவன் ராகமிழுக்க, இருவரும் கோபத்துடன் பல்லை கடித்தனர்.
“செட்ல இத்தன கேமரா இருக்கும் போதே சீண்டுறீங்க ராஜேஷ். ஹ்ம்ம் தைரியம்தான்” என்று கீர்த்தனா முறைக்க, “தள்ளுங்க கீர்த்தனா, நான் கீர்த்தனம் பாட விரும்புறது உங்களோட இல்ல” என்று ரம்யாவை நோக்கி நகர்ந்தான்.
“எனக்கு உங்களோட பாட என்ன, பேச கூட விருப்பம் இல்ல. நானும் நிறைய டைம் வார்ன் பண்ணிட்டேன். நீங்க இப்படியே பண்ணிட்டு இருந்தீங்கன்னா ஏடி நிகிலா மேம் கிட்ட கம்ப்ளைன் பண்ணிடுவேன் பார்த்துக்கோங்க” என்று மிரட்டலாகச் சொல்லி அந்த நிகழ்ச்சியின் அசிஸ்டன்ட் டைரக்டர் நிகிலாவை கண்களால் அவள் தேடவும், “குயிலுக்குக் கோபம் வந்தா பார்க்கவே நல்லா இல்லையே” என்று சிரிப்புடன் சொன்னவனைக் கொலை வெறியுடன் பார்த்தனர் தோழிகள் இருவரும்.
அவர்களைப் பார்க்கும் யாருக்கும் எந்தவித சந்தேகமும் வராத வண்ணமே ராஜேஷின் நடவடிக்கை இருக்கும். அவர்களிடம் எப்போதும் இடைவெளி விட்டு நின்றே பேசுவான். உடல் மொழியில் நட்பின் தோரணை இருக்கும். மேலும் சிரிப்புக் குலையாமல் பேசுவதே அவனது வாடிக்கை.
“ராஜேஷ்..” என்று ரம்யா எச்சரிக்கையுடன் அழைக்க, “குயிலே குயிலேன்னு கொஞ்சி கொஞ்சி போர் அடிக்குது குயிலே. ஒரே ஒரு நாள் என் கூட வெளில வந்தா என்ன?” என்று விடாமல் தூண்டில் போட்டுக் கொண்டிருந்தான் அவன்.
“போடாங்க..” என்று ரம்யா சிரித்துக் கொண்டே திட்ட, கீர்த்தனா தோழியின் கைப் பிடித்து இழுத்து அவர்களின் குழுவினரோடு சென்று இருக்கையில் அமர்ந்து விட்டாள்.
“நரேஷ் அண்ணா கிட்ட இவனைப் பத்தி சொல்லிடுறது நல்லதுப்பா” என்று கீர்த்தனா சொல்ல, “சும்மாதானே சீண்டுறான்னு பார்த்தா.. வர வர எல்லை மீறி போய்ட்டு இருக்கான். கோவளம் போகலாமா? கோவா போகலாமா? தேவாரம் சார் கிட்ட சான்ஸ் வாங்கித் தர்றேன்னு.. கேவலமா பண்ணிட்டு இருக்கான். கடுப்பா வருது. இவன் மேல கம்ப்ளைன்ட் பண்ணா நம்மளை நம்புவாங்களான்னு வேற சந்தேகமா இருக்கு. அதுக்கு மேல இவன் மேல் ஆக்ஷன் எடுப்பாங்களாங்கறது அடுத்தக் கேள்வி” என்று ரம்யா சந்தேகத்துடன் கேள்வி எழுப்ப, “எதையும் டிரை பண்ணி பார்க்காம நாமளா ஒரு முடிவுக்கு வர கூடாது ரம்ஸ்” என்றாள் கீர்த்தனா அழுத்தமாக.
“நம்மள சுத்தி இத்தன கேமரா இருக்கும் போது நாம ப்ரூஃப்காக யோசிக்கவே கூடாது. நமக்கு நிச்சயமா எப்படியாவது ஆதாரம் சிக்கிடும், இல்லன்னா நாமளே அவன் பேசும் போது ரெகார்ட் பண்ணிடுவோம்” என்று நம்பிக்கையுடன் அவள் சொல்ல, “ரைட்டு அப்போ நரேஷ் அண்ணா இல்லன்னா நிகிலா மேம் கிட்ட போவோம்” என்று ரம்யாவும் சம்மதித்தாள்.
“மேம்.. மேம்..” என அவர்கள் நிகிலாவை தேடிச் செல்லும் போதெல்லாம் அவளுக்கு முக்கியமான வேலை இருந்தது.
“என்ன கேர்ள்ஸ்? கிவ் மீ ஃபைவ் மினிட்ஸ்” என்று சொல்லி திரும்பி, “அடுத்து பாடப் போற சிங்கருக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குல்ல. அந்த வீடியோ காலை ரெடியா வைங்க” என்று அவரின் உதவியாளரிடம் கத்தினாள் அவள்.
அடுத்து பாடப் போகும் போட்டியாளர் பதற்றத்துடன் இருக்க, அவரைத் தேற்ற போனார். அடுத்த முறை நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு உதவி என நிற்க நேரமின்றிப் பறந்து கொண்டிருந்தவளை இவர்களால் பிடிக்க முடியவில்லை.
“நாளைக்குக் காலைல செட்டுக்கு வந்ததும் மேம்ம தனியா மீட் பண்ணி சொல்லிடலாம் ரம்ஸ்”
“ம்ம் ஓகே. வேற வழி” என்று தலையசைத்து, தொண்டையைச் செருமி சரி செய்து இருவரும் அடுத்தப் பாடலுக்குத் தயாரானார்கள்.
அடுத்து வந்த இடைவெளியில் கீர்த்தனா அம்மாவை அழைக்க, “நீ நைட்டு ரூமுக்கு வந்துட்டு பேசு கீர்த்தி.” என்று அழைப்பை துண்டிக்கப் போனார் துர்கா தேவி.
“ம்மா.. ப்ளட் டெஸ்ட் கொடுத்துட்டு இன்னுமா நீங்க வீட்டுக்கு போகல? கிருத்திக்கு ரொம்ப முடியலயாம்மா?” என்று பதறினாள் மகள்.
“ம்ம், காலையில இருந்து ஒரே வாந்தி. ஆள் சுருண்டு சுருண்டு படுக்கறா. டாக்டர் டிரிப்ஸ் போட்டு விட்டிருக்காங்க. நீ ஒன்னும் பயந்துக்காத. இந்த ட்ரிப்ஸ் முடிஞ்சதும் வீட்டுக்கு கிளம்பிடுவோம் நாங்க” என்று அம்மா சொன்னாலும் அவளுக்கு மனம் தாங்கவில்லை. கண்கள் கலங்கி விட்டன. அந்நேரம் ராஜேஷ் ஏதோ கிண்டலாகச் சொல்லியபடி அவர்களை நெருங்க, “ஸ்டாப் இட் ராஜேஷ். ஏதாவது ஏடாகூடமா பேசினீங்க நா நேரா ஹெட் கிட்ட போயிடுவேன்” என்று குரலை உயர்த்தி எச்சரித்திருந்தாள் கீர்த்தனா. சட்டெனச் சில தலைகள் அவர்கள் பக்கம் திரும்ப, ராஜேஷ் சிரிப்புடன் எதுவுமே நடவாதது போல அவர்களைக் கடந்து இசைக் குழுவினர் இருக்கும் பகுதிக்குச் சென்றிருந்தான். அதற்கு மேல் அவர்களை அவன் தொந்தரவு செய்யவும் இல்லை. அப்பாடா என்று பெருமூச்சுடன் இருவரும் இசையில் மூழ்கி, சற்றே தெளிந்த மனத்துடன் வீட்டுக்குக் கிளம்பினார்கள்.
அப்போதே நேரம் இரவு பத்தரையை நெருங்கியிருந்தது.
“வண்டிய இங்கேயே விட்டுட்டு புரொடக்ஷன் கேப்ல போயிடுவோமா? ரொம்ப லேட்டாகிடுச்சு?” என்று கீர்த்தனா கேட்க, “ம்ம், காலையில மாதிரி மழை பெய்யல இல்ல. நம்ம வண்டியிலேயே போயிடலாம் கீர்த்தி. நாளைக்கு வேணா கேப்ல வந்துப்போம். எனக்கு ரொம்பத் தலைவலியா இருக்கு. வீட்டுக்கு போய் ஒரு டேப்லெட் போட்டு படுக்கணும். இல்லன்னா நாளைக்கு என்னால பாட முடியாது” என்று ரம்யா சொல்லவும், “சரி வா” என்று கீர்த்தனாவும் சம்மதித்து விட்டாள்.
அன்றைக்குப் படப்பிடிப்புக்கு வந்திருந்த கார்கள், இரு சக்கர வாகனங்கள் சூழ எந்தவித பயமும் இன்றி அந்த இரவிலும் சாலையில் பயணித்தனர். எல்லாம் அவரவர் வழியில் செல்லும் வரையில்தான்.
அதன் பிறகு அவர்களைச் சீரான இடைவெளியில் வேறொரு வாகனம் பின் தொடர்ந்து வர, சற்றுத் தாமதமாகத்தான் அதைக் கவனித்தாள் ரம்யா.
“கீர்த்தி.. பதறாத.. ஒருத்தன் ரொம்ப நேரமா நம்மளை பாலோ பண்ற மாதிரி இருக்கு” என்று தோழியின் தோளை அணைத்துச் சொன்னவளின் குரலில் பயம் துளிர்த்திருந்தது.
“நான் அத எப்பவோ கவனிச்சிட்டேன்.. நம்ம ரோமியோ ராஜேஷ்தான். இந்நேரம் வேற யார் நம்மள ஃபாலோ பண்ணுவாங்க? ரிலாக்ஸ் ரம்யா. நாம ஒன்னும் தனியா இல்ல, நம்மளோட ரோட்ல எத்தன வண்டி வருதுன்னு பாரு. இதை மீறி நம்மளை என்ன செஞ்சுடுவான்?” என்று சொன்னாலும், கீர்த்தனாவின் கண்களிலும் கவனம் வந்திருந்தது. மிகக் கவனமாக அவனைத் தவிர்த்து வீடு வந்து சேர்ந்திருந்தார்கள்.
“நானே தலைவலியோட போராடிட்டு இருக்கேன். இதுல இவன் வேற டென்ஷன் பண்ணி விட்டுட்டான். நாளைக்கு இவனுக்கு நாம ஒரு முடிவு கட்டாம விடக் கூடாது சொல்லிட்டேன்” ரம்யா தலைவலி மாத்திரையை முழுங்கி விட்டுச் சோஃபாவில் சரிய, கீர்த்தனா இரவு உடைக்கு மாறிய கையோடு நிகிலா, நரேஷ் இருவருக்கும் ராஜேஷ் பற்றிய புகாரை குறுஞ்செய்தியாக அனுப்பி விட்டிருந்தாள். நாளை இது குறித்து நேரடியாகப் புகார் தெரிவிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டு அனுப்பியிருந்தாள். இரவு பதினொரு மணிக்கு மேலாகி இருந்ததால் இருவருமே அவள் அனுப்பிய செய்தியை அந்நேரம் பார்க்கவில்லை.
“நரேஷ் அண்ணா அண்ட் நிகிலா மேம் ரெண்டு பேருக்கும் வாட்ஸ்அப் பண்ணிட்டேன் நான். மிச்சத்தை நாளைக்குப் பார்த்துப்போம். நீ தூங்கு ரம்ஸ்”
“வாட்?” பட்டென்று கண்களைத் திறந்து கேட்ட ரம்யா, “அந்த லூசு பய ஹாரஸ் பண்றது என்னைய. உனக்கு முன்னாடி நான்தானே கம்பளைன்ட் பண்ணணும்? எங்க என் மொபைலை? இரு, நானும் ஒரு வாட்ஸ்அப் மெசேஜ் போட்டுட்டு அஃபீசியலா எப்படிக் கம்பளைன்ட் பண்ணணும்னு கேட்டு வைக்கிறேன்” என்று படபடத்து, எழுந்தமர்ந்து அலைபேசியைத் தேடி எடுத்தாள்.
“உன் போனை எங்கிட்ட கொடுத்துட்டு நீ தூங்கு. நான் மெசேஜ் பண்ணிடுறேன்” என்று சொன்ன கையோடு ரம்யாவின் அலைபேசியை வாங்கி அதைச் செய்தும் முடித்திருந்தாள் கீர்த்தனா.
ரம்யா தூக்க கலக்கத்துடன், “எங்க வீட்ல இதெல்லாம் சொன்னா, போதும் நீ அந்த டிவில லாலா போட்டதுன்னு கிளம்பி வர சொல்லிடுவானுங்க என்னை. நாம சாப்ட்வேர் இன்ஜினியர்ங்கற மரியாதையே அவனுங்களுக்குக் கிடையாது. அதுவும் எங்கப்பா அந்த மீசை இருக்காரே, அந்தக் கரகரத் தொண்டைய வச்சுக்கிட்டு என்னம்மா நீயின்னு நம்மள விட அழகா வாய்ஸ் மாடுலேஷன் பண்ணி எமோஷனல் சீன் ஓட்டி ஸ்கோர் பண்ணிடுவார். எங்கம்மா உடனே ஊருக்கு வா ஆத்தா, எங்கண்ணுங்கள்ளயே இருக்கத் தங்கப்புள்ளன்னு கண்ண கசக்கிடும்.. ஷ்ஷ்ஷ்ஷப்பா இப்பவே கண்ண கட்டுதே” என்று அவள் ராகம் போட்டு புலம்ப, கீர்த்தனாவின் இதழ்களில் சிரிப்பின் சாயல்.
“சிரிக்காத கீர்த்தி. உனக்கென்ன உங்கம்மா உன்னை ஒன்னும் சொல்ல மாட்டாங்க. நீ சொல்றதுதான் அவங்களுக்குத் தேவ வாக்கு. எங்க வீட்ல அப்படியா? எங்கப்பா முறுக்கு மீசையோட தங்கச்சி இருக்கே..”
“உங்கத்த..”
“ஆமா, அந்தச் சொத்தைதான். போதும்ண்ணே, என் மருமகளை எதுவும் பேசாதன்னு எங்கப்பாவை சொல்லிட்டு, அந்தம்மா என்னைய போட்டு தாளிச்சு கொட்டிடும்..”
“ஆமா, நீ அவங்களுக்கு அப்படியே பயந்தவ மாதிரியில்ல பேசுற”
“பயமா? என்னைய எங்கத்தகிட்ட இருந்து காப்பாத்த எங்கத்த பெத்த ரத்தினம் இருக்க வரைக்கும் எனக்கு என்னா பயம் இருக்கப் போகுது சொல்லு?” என்று தலையைச் சரித்துக் கேட்டாள்.
“நீயும் அவர் புகழை ரொம்ப வருஷமா பாடுற, ஆனா நான் இதுவரைக்கும் ஒரு ஆக்ஷனையும் பார்க்கலையே. உன்னைய எப்பவும் நான்ல வந்து காப்பாத்தி விட வேண்டியதா இருக்கு? ம்ம்? இத்தன வருஷத்துல உன் மாமா மூஞ்சிய கூடப் பாக்கல நான்”
“ஏய் கீர்த்தி..”
“தூங்கு ரம்ஸ். காலையில சீக்கிரம் எழுந்து ஸ்டூடியோ போகணும்” என்று அதட்டினாள். ரம்யா விடாமல் பேசிக் கொண்டே உறங்கியிருந்தாள். கீர்த்தனா உறங்கும் முன் தங்கைக்குக் குறுஞ்செய்தி அனுப்பிட, உடனடியாகப் பதில் வரவும், “மணி என்னாகுது கிருத்தி? இன்னும் தூங்கலையா நீ?” என்ற கேள்வியுடன் தங்கைக்கு அழைத்து விட்டாள்.
“எனக்கு டெங்குன்னு சொல்லிட்டாங்க கா” தளும்பிய குரலில் வந்தது பதில்.
“என்ன சொல்ற நீ?”
“ம்ம், ஒன்பது மணி போல ப்ளட் டெஸ்ட் ரிசல்ட் பார்த்துட்டு டாக்டர்தான் டெங்குன்னு சொல்லி அட்மிட் பண்ணிட்டார். அம்மா உன்கிட்ட காலையில சொல்லிக்கலாம்னு சொன்னாங்க. நான்தான் உளறிட்டேன் கீர்த்திக் கா” சின்னவள் சொன்னதும், கீர்த்தனாவின் கண்கள் மலுக்கென்று உடைந்து விட்டன.
“டெங்குவா?”
“ம்ம்”
“சீக்கிரம் சரியாகிடும் கிருத்தி.”
“அம்மா உன்கிட்ட சொல்ற வரைக்கும் உனக்குத் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத கா பிளீஸ்.”
“நீ போனை அம்மாகிட்ட குடு கிருத்திகா” என்று அழுத்தமாகச் சொன்னாள். சின்னவள் புலம்பியபடியே அம்மாவை அழைத்தாள்.
“நான் இப்பவே கிளம்பி ஊருக்கு வர்றேன்ம்மா. நீங்க தனியா எப்படிச் சமாளிப்பீங்க?”
“கீர்த்தி, இப்போ டைம் என்னான்னு பாரு மொத. இந்நேரம் கிளம்பி வருவியா நீ? ஹ்ம்ம்? நாளைக்கு ஷூட்டிங் முடிச்சுட்டு வா போதும். இங்க டாக்டர் பயமில்லன்னு சொல்லியிருக்கார், இவள நான் பார்த்துக்கறேன். நீ வேலைய பாதில விட்டுட்டு வராத, என்ன?”
“ம்மா”
“அம்மா சொன்ன கேட்கணும் கீர்த்தனா”
“சரிம்மா” என்று சொல்லி வைத்தவளின் மனம் சரியில்லாமல் போனது. அன்றைய இரவை அலைப்புறுதலுடன் கழித்தவள் அதிகாலையிலேயே எழுந்து குளித்துத் தயாராகி விட்டாள். அந்தச் சத்தத்தில் விழித்த ரம்யா, “என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்ட? இரு, நான் பிரஷ் பண்ணிட்டு வர்றேன். அப்புறமா காஃபி குடிச்சுட்டே நீ சொல்ற கதையைக் கேட்கறேன்” என்று எழுந்து ஓய்வறை சென்றவள், அடுத்த நிமிடம் ஓங்கரித்து வாந்தி எடுத்திருந்தாள்.
“ரம்ஸ் வாந்தியா எடுக்கற? இந்நேரம் பார்த்து நீயும் முடியலன்னு படுத்துடாத தெய்வமே.” என்று அவளுக்கு உதவ ஓடினாள்.
“நேத்து தலைவலி எபெக்ட் எனக்கு, வேற ஒன்னும் இல்ல” என்று சொன்னவளை கரிசனத்துடன் பார்த்து அமர்ந்திருந்தாள்.
“ஏ கீர்த்தி, ஒரு லெமன் ஜூஸ் குடிச்சா நார்மல் ஆகிடுவேன் யா. இதுக்குப் போய் ஃபீல் பண்ணிட்டு இருக்க” என்று அவளின் தலையைக் கலைத்து விட்டு எழுந்து சமையல் அறை சென்றாள் ரம்யா.
அந்நேரம் அங்கிருந்த ரம்யாவின் அலைபேசி ஒலியெழுப்பவும் கை நீட்டி எடுத்திருந்தாள் கீர்த்தனா. அலைபேசி திரையில், “ரகுவரன் காலிங்” என்று ஒளிர்ந்தது.
அவளின் விரல் பட்டு அழைப்பு ஏற்கப்பட்டிருக்க, “ஹலோ..” என்ற கணீர் குரல் அவள் செவியை நிறைத்தது.
“ஹலோ, இருங்க போனை ரம்யாகிட்ட குடுக்கறேன்” என்று இவள் சொன்னது அவனுக்குக் கேட்கவில்லை போலும்.
“ஹலோ ரம்யா.. ரம்யா.. எமர்ஜென்சி கால் பண்ணுங்க மாமான்னு மெசேஜ் பண்ண, என்ன விஷயம்?” என்று கத்தினான்.
“ஷ்ஷ்ஷ் என் காது போச்சு” என்று தனக்குள் புலம்பி, “இந்தா போனை பிடி” என்று ரம்யாவின் கையில் அவளின் அலைபேசியைத் திணித்திருந்தாள்.
“யாரு?” என்று கேட்டு, திரையைப் பார்த்தவள், “மாமா பத்து நிமிஷம் குடு. நான் கால் பண்றேன் உனக்கு” என்று சொல்லி அழைப்பை துண்டித்து விட்டாள் ரம்யா.
“வீட்ல லெமன் இல்ல கீர்த்தி. நான் போய்க் கீழ ஓனர் ஆன்டி கிட்ட கேட்டு கடன் வாங்கிட்டு வர்றேன்”
“இப்படி மூஞ்சி கூடக் கழுவாம நீ கீழ போனா அந்த ஆன்டி திட்ட போறாங்க. நான் போய் வாங்கிட்டு வர்றேன் உட்காரு”
“கீர்த்தனா, மூஞ்சி கழுவாம போனாதான் எனக்கு உடம்புக்கு முடியலன்னு அந்தம்மா நம்பும். இரு, நான் போய்ட்டு வர்றேன்” என்று கீழிறங்கி சென்று, இரண்டு எலுமிச்சை பழங்களுடன் மேலேறி வந்தாள்.
“நான் லெமன் கட் பண்றேன். நீ இந்தக் கருப்பட்டியை இடி” எனச் சொல்லி, சப்பாத்தி கட்டையை அவளிடம் நீட்டினாள்.
கீர்த்தனா கருப்பட்டியை இடித்தபடியே தோழியைப் பார்க்க, “நாம போட்ட மெசேஜ்க்கு ரிப்ளை எதுவும் வந்ததா கீர்த்தி? என்ன நமக்கு ஹெல்ப் பண்ண முடியாது, நம்ம மேலதான் தப்புன்னு பாலிஷ்டா சொல்லிட்டானுங்களா?” என்று ரம்யா கடுப்பாகக் கேட்க, மறுப்பாகத் தலையசைத்தாள் அவள்.
“இல்லையா? அப்புறம் என்னதான் பதில் போட்டாங்க, சொல்லு கீர்த்தி” என்று அவள் அழுத்திக் கேட்க, “ஆமா, சொல்லு கீர்த்தி” என்று அவளைப் போலவே சொல்லி காட்டியது ஆண் குரல். இருவரும் விதிர்த்து பதறி திரும்பிப் பார்க்க, அங்கே சமையலறை நிலையில் மார்பின் குறுக்கே கையைக் கட்டியபடி சாய்ந்து நின்றிருந்தான் ராஜேஷ். அவன் கண்கள் ரம்யாவின் மேல் நிலைத்திருக்க, “நீ எப்படி எங்க வீட்டுக்குள்ள வந்த? வெளில போடா” என்று கத்தினாள் கீர்த்தனா.
அவள் கையில் இருந்த கட்டை அனிச்சையாக அவனை நோக்கி உயர்த்திட, “கட்டய கீழ போடு கீர்த்தனா” என்று மிரட்டினான் அவன்.
அவன் ஆவென்று கத்திய பிறகுதான் கட்டையை ஓங்கி அவன் மண்டையில் போட்டதையே உணர்ந்தாள் அவள். ஆனால், கட்டையால் மண்டையில்தானே அடித்தாள்? அவன் கையில் ஏன் ரத்தம் பீறிடுகிறது? அவள் சட்டென மிரண்டு திரும்பி பார்க்க, ரம்யாவின் கையில் இருந்த கத்தியை காணவில்லை.
தோழிகள் இருவரும் கலக்கத்துடன் திரும்பி ராஜேஷை பார்த்தனர்.
How did this episode feel?
Rate this episode⭐ 5.0 (16)
30 thoughts
Sign in to share your thoughts
One tap with Google, no password needed.
Continue with Google Login or register with email
or write your comment below as a guest
😍😍😍
மறுபடியும் புது கதையா? 😱😱
ஆமா கா 😌
All the best devi ma 🌺🍀
Thank you dear ❤️
All the very best 🌹🌹🌹🌹devi ma 👍👍👍
Thank you so much ma ❤️
Anbe ❣️
அன்பே பவி ❤️
வழக்கம் போல மழையுடன் அழகான ஆரம்பம்.
தலைவலி, டெங்குன்னு ரத்த களறில முடிச்சிருக்கீங்க..
Phone ல வந்த மாமா தான் hero வோ.. கீர்த்தனா தான் நாயகின்னு நான் நினைச்சுக்கிட்டேன்.
நன்றி நன்றி சூர்யா 😍 எது மாமா ஹீரோவா. அப்போ ராஜேஷ் நிலைமை 🫢🫢
Arambamey murder ah 😂
Murder எங்கடா பண்ணாங்க 😒
Adutha episode panniruvinga la 😂
ச்சே ச்சே, காதல் கதையில் போய் கொலையா? 😒
ஏற்கனவே போட்ட புதுக்கதை படிக்க எனக்கு நேரம் இல்லை இந்த கதைய நானும் முழுதாக படிக்கனும் நீங்களும் முழுதாக எழுதி முடிக்கனும் சிஸ் 🤩கதை ஆரம்பமே மழை ❤️🔥ரம்யா கீர்த்தனா வீட்டுக்குள்ள ராஜேஷ் எப்படி?ஒருவேளை கனவா?
நன்றி நன்றி சிஸ்❤️❤️. ஆமா, நானும் அதான் வேண்டிக்கறேன். இந்தக் கதையை கண்டிப்பா எழுதி முடிப்பேன். என்னை நம்பி படிங்க ❤️
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மா. ஆரம்பமே ரணகளம் இருக்கிறது
நன்றி மா ❤️
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் மா. ஆரம்பமே ரணகளம் இருக்கிறது
நன்றி மா, காதல் கதைதான் 😁
Sissy… next epi..
சீக்கிரம் வர்றேன் சூர்யா 😌 நானும் எழுதணும்னு உட்காரும் போதெல்லாம் ஏதாவது பெர்சனல் வேலை வருது. என்ன செய்ய? விரைவில் கதையோட வருவேன், நம்புங்க.
பண்டிகையை நல்லபடியாக கொண்டாடிட்டு வாங்க தேவி sis
ஓகே சூர்யா சிஸ். நீங்களும் சிறப்பா தீபாவளி கொண்டாடிட்டு வாங்க 🥰😍😍
புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள் dear. மழையோடு ஆரம்பம்
Interesting 🥰
நன்றி நன்றி மா ❤️
புதிய தளத்திற்கு வாழ்த்துகள் தேவிமா.💐💐💖
நன்றி நன்றி டெய்சி சிஸ் ❤️
புதிய தளத்திற்கு வாழ்த்துகள் தேவிமா.💐💐💖.
😍😍😍