தெண்திரை தேடலே – 7
அத்தியாயம் – 7
அந்த அதிகாலையிலேயே சென்னை மாநகரம் பரபரப்பாக இயங்கத் தொடங்கியிருந்தது. ஆழினியின் அலைபேசி அந்நேரம் ஒலியெழுப்பவும் உறக்கம் கலைய, அடித்துப் பிடித்து எழுந்தமர்ந்து அலைபேசியை எடுத்தாள்.
அவசரமாக அழைப்பை ஏற்று, “பிரித்வி” என்று கத்தினாள்.
“என்னம்மா ஆழி, புருஷனை ரொம்பத் தேடுதா? அதான் வேலைக்குக் கூட வராம மட்டம் போட்டுட்டுக் கனவு கண்டுட்டு இருக்கியா?” அந்தப் பக்கமிருந்து பிரித்வி பேசவில்லை. மருத்துவமனையில் இருந்து மூத்த செவிலி விஷ்ணுபிரியா அழைத்திருந்தார். ஆழினி நள்ளிரவுக்கு மேல்தான் உறங்கியிருந்தாள். சோர்வும், தொடர் சிந்தனையும் அவளை நள்ளிரவுக்கு மேல் உறங்கச் செய்திருந்தது. இப்போதும் போதிய உறக்கமின்றி மூளையும், உடலும் தடுமாற, “விஷ்ணுக்கா?” என்றாள். அவரின் கேலியை ரசிக்கும் மனநிலை அவளுக்கில்லை.
“நான்தான் மா ஆழி. என்ன இன்னைக்கு வேலைக்கு வரலையா நீ?”
“இல்லக்கா. நேத்து நைட் உங்களுக்கு மெசேஜ் பண்ணியிருந்தேன். பார்க்கலையா கா நீங்க?”
“அச்சோ, நான் பாக்கலையே ஆழி. கார்த்திக் டாக்டர் வேற வந்தாச்சு. உன்னைக் கேட்டா என்ன சொல்றது?”
“நான் டாக்டருக்கும் மெசேஜ் பண்ணிட்டேன்கா. லீவ் சொல்லிட்டேன். அப்புறமா அவருக்குப் போன் பண்ணி பேசிடுறேன்.”
“அப்போ சரி. ஆமா, வீட்ல என்ன பிரச்சினை? நேத்தும் எமர்ஜென்சின்னு பெர்மிஷன் போட்டு போனியே? மாமியாருக்கு ஒன்னும் இல்லையே?”
“இல்லக்கா. அத்த நல்லாருக்காங்க.” என்றவள், அதற்குமேல் பேச்சை வளர்க்க விரும்பவில்லை. விஷ்ணுப்பிரியாவும் மேலே விசாரிக்காமல், “சரி. பார்த்துக்கோ ஆழி. நாளைக்குக் கண்டிப்பா ஹாஸ்பிட்டல் வந்திடு. இல்லன்னா என்னால சமாளிக்க முடியாது. நீ ஹஸ்பண்ட் வர்றார்னு மூனு மாசம் லீவ் எடுக்கிறது போல இப்பவும் லீவ் கேட்டுடாதம்மா” என்று கேலி பேசி வைத்து விட்டார்.
ஆழினிக்கு சிரிப்பிற்குப் பதில் சினமும், கண்ணீரும் சேர்ந்து வந்தது. படுக்கையில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்து திரும்பிப் பார்த்தாள். மாறா புன்னகையுடன் அங்கிருந்தான் பிரித்விராஜன்.
அலைபேசியை இயக்கி வாட்ஸ்அப் திறந்தாள். முன்தினம் அவனுக்கு அனுப்பிய செய்தி இன்னமும் அவனைச் சென்று சேரவில்லை. அப்படியே ஒற்றை டிக்கில் நின்றது. அவளின் இதயம் தானாகப் படபடக்கத் தொடங்கியது. அவனது எண்ணிற்குச் சாதாரண அழைப்பு, வாட்ஸ்அப் அழைப்பு இரண்டும் முயற்சித்தாள்.
ம்ஹூம், அழைப்பு செல்லவேயில்லை.
ஆனாலும், மனம் தளராமல் அவனது முகநூல் பக்கம் சென்று பார்த்தாள். அவள் அங்கு அனுப்பிய செய்தியுமே அவனைச் சென்று சேரவில்லை.
கடைசியாக அவன் முகநூல் பயன்படுத்தியது பதினைந்து நாள்களுக்கு முன்பு என்றது முகநூலின் மெசஞ்சர் ஆப்.
அப்படியே திரும்பி அவன் பக்கத்திற்கு வந்தாள். மீண்டும் மீண்டும் அவன் புகைப்படங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
கப்பல் பின்னணியில் கம்பீரமாக நின்றிருந்தான் பிரித்விராஜன். பெரும்பான்மையான புகைப்படங்களில் அவனை ஆழி சூழ்ந்திருந்தது.
நீலக் கடலும், நீல வானமும் கொண்ட பின்னணியில் நின்றவன் ஆழியில் தளும்பும் நீரை போல ஆழியின் மனத்திலும் நிறைந்து நின்றான்.
ஓர் நொடி, ஒரே ஓர் நொடி அவனுக்கு ஏதேனும் ஆகியிருக்குமோ என்று யோசித்துப் பட்டென்று ஓங்கி நெற்றியில் அறைந்துக் கொண்டாள்.
“நோ நோ நோ. பிரித்விக்கு எதுவும் ஆகியிருக்காது. நெட்வொர்க் கிடைக்காம இருக்கும். ஷிப் ஏதாவது கடலுக்கு நடுவுல இருக்கலாம். அவருக்கு ஒன்னும் ஆகியிருக்காது. பத்திரமா இருப்பார் பிரித்வி.” என்று சத்தமாக வாய் விட்டு சொன்னவள், “பத்திரமா என்கிட்ட வந்துடுங்க பிரித்வி” என்று அவன் புகைப்படத்தைப் பார்த்துச் சொன்னாள். மனைவி இப்படிப் புலம்புகிறாள் என்றால் அவனே நம்ப மாட்டான்.
அவள் கண்கள் கலங்கி அவனது புகைப்படத்தை மறைத்தன.
அவனில்லாமல் எத்தனையோ நாள்கள் தனிமையில் அவனைத் தேடி தவித்திருக்கிறாள். ஆனால், இப்படிப் பதற்றத்துடன் பயத்துடன் அவளைத் தேட விட்டதில்லை அவன்.
மனம் சோர்ந்து போக, தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டு எழுந்து குளித்து வந்தாள்.
மாமா கூடத்தில் உறங்கிக் கொண்டிருக்க, அத்தை சோஃபாவில் உறக்கம் சுமந்த கண்களுடன் அமர்ந்திருந்தார்.
அவளைப் பார்த்ததும், “பிரித்வி எங்கன்னு ஏதாவது தெரிஞ்சதா ஆழினி?” என்று கேட்டார். பெற்றவளின் தவிப்புப் புரிய அதைப் போக்கும் வழி தெரியாமல், “அவருக்கு மெசேஜ் பண்ணியிருக்கேன்த்த. அவர் லேப்டாப்ல இருக்க டாக்குமெண்ட்லாம் இன்னைக்குச் செக் பண்ணணும். அவங்க கப்பல் நெட்வொர்க் கிடைக்காத இடத்துல இருக்குமா இருக்கும். அவர் கண்டிப்பா பத்திரமா இருப்பார். நீங்க பயப்படாதீங்க. சீக்கிரம் அவரே கால் பண்ணுவார். இல்ல, நாமளே அவர்கிட்ட பேசுவோம். வெயிட் பண்ணுங்கத்த” என்றாள் ஆறுதலாக. நம்பிக்கை வார்த்தைகள் பகிர்ந்து.
“ம்ம். இப்படி அவன் போன் பண்ணாம இருந்ததே இல்லம்மா. அவனுக்கு என்னாச்சோ ஏதாச்சோன்னு பெத்த மனசு கிடந்து அடிச்சுக்குது. அவன் குரலை கேட்டா போதும்னு இருக்கு. இப்படியா பொறுப்பில்லாம இருப்பான். எப்பவும் இப்படிப் பண்ணதில்ல” என்று அவர் புலம்ப, அவளுக்கும் அவன் குரலைக் கேட்டு விட்டால் போதும் என்றிருந்தது.
சட்டென நகர்ந்து வாசலை நோக்கிச் சென்றாள். வாசல் தெளித்துக் கோலம் போட்டு, பால் பாக்கெட்டுடன் வீட்டுக்குள் வந்தாள். முன்னர் இதற்காகப் பலமுறை அவளுக்கும், கற்பகத்துக்கும் முட்டிக் கொண்டிருக்கிறது.
“வீட்டுக்கு வந்த மருமக ஒரு நாளாவது சீக்கிரமா எழுந்து வாசல்ல ஒரு கோலம் போடுறியா? நீ பாட்டுக்கு எந்திரிச்சி வேலைக்குப் போயிட்டே இருக்க. என்னதான் நினைச்சுட்டு இருக்க உன் மனசுல?” என்று கற்பகம் கத்தும் போது, அமைதியாக வேலைக்குச் செல்வாள்.
“அதான் நீ கோலம் போட்டுட்ட இல்லம்மா? அப்புறம் எதுக்கு ஆழியைத் திட்டுற?” என்று அவளுக்காகப் பிரித்விதான் பரிந்து பேசுவான்.
“மருமக சாயந்திரம் வந்து வீட்ல எல்லா வேலையும் பார்த்து சமையலையும் பார்க்குது இல்ல? சும்மா கத்தாம, பேசாம இரு கற்பகம்” என்று மனைவியை அதட்டுவார் முருகானந்தம். அந்தக் கோபம் எல்லாம் அவள் மேல்தான் திரும்பும். அதனாலேயே வேலைக்குச் செல்லும் முன்னர் விரைவாக எழுந்து வீட்டு வேலைகள் முடித்து வேலைக்குச் சென்றிருக்கிறாள்.
“நீ வேலைக்குப் போற அவசரத்துல வீட்ல ஒரு வேலையும் உருப்படியா செய்யாத. உன்னை யாராவது வேலை செய்யச் சொன்னாங்களா இங்க?” என்று அப்போதும் குறை சொல்லி முகம் திருப்புவார் கற்பகம்.
அதை யோசித்தபடியே பாலை அடுப்பில் ஏற்றினாள்.
எத்தனையோ முறை அவள் சமையலறையில் நிற்கையில் பூனை போலப் பிரித்வி பின்னிருந்து அணைத்திருக்கிறான். அப்போதெல்லாம் எரிச்சலுற்றவள், இப்போது அப்படி வந்து நின்று விட மாட்டானா என்று ஏங்கினாள்.
வாழ்க்கை விசித்திரமானது. நம் மனத்தைப் போலவே.
அத்தை, மாமாவுக்குக் காஃபி கொடுத்து விட்டு, தானும் ஒன்றை அருந்தியபடி காலை உணவு தயாரிக்கத் தொடங்கினாள்.
அந்நேரம் இந்திராணி அவளை அழைத்தார்.
“சொல்லுங்கம்மா?”
“ஆழி, தூங்கினியா இல்லையா?”
“ம்ம், தூங்கினேன் மா”
“உன் குரலே சரியில்லையே? நீ எங்க தூங்கியிருக்கப் போற? நீ நேத்தெல்லாம் சாப்பிடல வேற. இப்பவும் சாப்பிட எதுவும் செஞ்சுருக்காதே அந்தம்மா?”
“நான் ரவா கிச்சடி பண்றேன் மா”
“அப்ப இன்னைக்கு நீ ஹாஸ்பிட்டல் போகலையா? ரவா கிச்சடிலாம் உனக்குப் பிடிக்காதே. பேசாம நீ நம்ம வீட்டுக்கு வா. அங்கருந்து என்ன பண்ண போற? இங்கருந்து மாப்ளய தேடு. அந்த வீட்ல இருந்தா உன்னை நீ ஒழுங்கா பார்த்துக்க மாட்ட..” என்று அவர் பேசிக் கொண்டே போக, “ப்ச், அம்மா. நீ போனை வை. நான் அப்புறமா பேசுறேன்” என்றாள்.
“என்ன ஆழி, எரிச்சலா எடுத்தெறிஞ்சு பேசுற? எனக்கு உன்னை நினைச்சு தூக்கமே வரல. நீயென்னன்னா…”
“அம்மா பிளீஸ் மா. நான் ஈவ்னிங் வர்றேன். இப்போ போனை வைம்மா. எனக்கு வேலையிருக்கு. நீ வொர்ரி பண்ணாம ரெஸ்ட் எடு. அவர் பத்தி எதுவும் தெரிஞ்சா நானே கால் பண்றேன்”
“இப்படியா எதுவுமே தெரியாம இருப்பாங்க அந்த வீட்ல..” என்று அவர் முதலில் இருந்து ஆரம்பிக்க, ஆழினி நொந்துப் போனாள். அம்மாவிடம் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி ஒரு வழியாக அவரைச் சமாளித்து அழைப்பை துண்டித்தாள்.
காலை உணவை தயாரித்துக் கூடத்துக்கு எடுத்து வந்தாள். இப்போது முருகானந்தம் எழுந்திருந்தார். சோர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தவர் காலையிலேயே காகிதங்களைப் பரப்பி வைத்து எதையோ தேடிக் கொண்டிருந்தார்.
“கிச்சடியும், தேங்காய் சட்னியும் செஞ்சுருக்கேன். சாப்பிட வாங்க” இருவரையும் பொதுவாக அழைத்தாள்.
கற்பகம் எழுந்து வர, “இந்தப் பேப்பர்ஸ் கொஞ்சம் பாரும்மா” என்று அவளை அழைத்தார் முருகானந்தம்.
அவரிடமிருந்த காகித கற்றையை வாங்கிப் பிரித்தாள். எல்லாமே பிரித்வி தொடர்புடையதுதான். ஆனால், அனைத்தும் பழைய பயனற்ற தகவல்கள்.
“நான் பார்க்கறேன் மாமா. நீங்க போய்ச் சாப்பிடுங்க” என்றாள்.
“என்னம்மா? இதுல எந்த முக்கியமான டீட்டேயிலும் இல்லையா?” அவர் கலக்கத்துடன் கேட்க, “இருக்கு மாமா. ஆனா, ராயல் கரீபியன் டீட்டெயில்ஸ். இதை வச்சு அவங்களுக்குக் கால் பண்ணாலும் யூஸ் இல்ல மாமா. அங்க அவரோட க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் யாருன்னு தெரிஞ்சா ஹெல்ப்பா இருக்கும். எந்த ஷிப்புக்கு போறேன்னு அவங்ககிட்ட சொல்லி இருப்பார். சான்சஸ் இருக்கு. என்கிட்ட தமிழ் பசங்களே இந்த ஷிப்ல பார்க்க முடியலன்னு ஒரு டைம் பேச்சு வாக்குல சொன்னார் மாமா.” என்றாள் யோசனையுடன்.
“நான் அவன்கிட்ட கேட்டிருக்கேன் மா. கிச்சன், ஹவுஸ் கீப்பிங்ல தமிழ் பசங்க இருப்பாங்கப்பா. எங்க டிபார்ட்மெண்ட்ல தமிழ் பேச கூட ஆள் இல்லைன்னு சொல்லியிருக்கான்” என்று சொல்லும் போதே அவர் குரல் உடைய, பட்டென்று தலை குனிந்தாள் அவள்.
“சரி. நீ பாரும்மா.” என்று அவர் சோர்வுடன் ஓய்வறை நோக்கி நடக்க, “நான் அவருக்கு ஃபேஸ்புக்ல மெசேஜ் பண்ணியிருக்கேன் மாமா. பதில் அனுப்புவார். வெயிட் பண்ணுவோம்” என்றாள்.
அவளுக்கு முன்தினம்தான் தகவல் தெரியும். ஒரு நாளிலேயே கணவனைக் காணாது கலங்கி போய் இருந்தது மனம். அவர்களுக்கு ஒரு வாரத்துக்கு மேலாக அந்தக் கலக்கம் இருக்கும் என்பதை நினைக்கையில், அவளால் அவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிந்தது.
அவர் கொடுத்த அனைத்து ஆவணங்களையும் ஆராய்ந்து விட்டாள். அதிலிருந்து ஒன்றுமே கிடைக்காமல் போகவும் அமைதியாக அதை ஓரமாக வைத்து விட்டு, அறைக்குள் சென்று முடங்கினாள்.
மீண்டும் அவனது மடிக்கணினியை உயிர்பித்தாள். ஆனால், மனம் எதிலும் செல்ல மறுத்தது. அவனது புகைப்படச் சேமிப்பை திறந்தாள்.
ஆழினியும், ஆழியும் மட்டுமே அதில் இருந்தார்கள்.
பலவேறு வண்ணங்களில், பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தியபடி ஆழினி இருக்க, அவளைப் போலவே ஆழியையும் பல்வேறு கோணத்தில், பல்வேறு நிலைகளில் புகைப்படம் எடுத்திருந்தான். அதிசயமாக அவன் கண்களின் வழியே ஆழியும் கூடப் பல வண்ணங்களைக் கொண்டிருந்தது. கடலின் நிறம் நீலம் என்பதைச் சந்தேகிக்கும் வகையில் பச்சை, பழுப்பு, வெள்ளை, வெளிர் மஞ்சள், அடர் நீலம் எனப் பல்வேறு வண்ணங்களில் கடலை சேகரித்து வைத்திருந்தான்.
“ஆழி..” மூச்சுக்காற்று செவியைத் தீண்ட அடர்ந்த அவன் குரல் அடர்த்தியாய் அவள் இதயம் தீண்ட, அந்தக் குரலை இப்பொழுது நெருக்கத்தில் கேட்க ஏங்கினாள். அவன் தீண்டலுக்காக, ஸ்பரிசத்திற்காக அவனுக்காக ஏங்கினாள். இதுவரை வீணாக்கிய நாள்களுக்காக வருந்தினாள் ஆழினி. முதல்முறையாக நேராகச் சிந்திக்கத் தொடங்கினாள்.
தவறு தன் மீதும் இருக்கிறது என்பதைத் தன்னிடமே ஒப்புக் கொண்டாள்.
பாண்டிச்சேரி கடற்கரையில் இருவரும் ஒன்றாக நிற்கும் புகைப்படம் வர, பிரித்வியைப் பார்வையால் படம் பிடித்தாள். தன்னிச்சையாக அவளின் ஒற்றை விரல் நீண்டு அவனைத் தீண்டியது.
“சாரி” என்று முணுமுணுத்தாள். அப்படியே ஓவென்று கத்தத் வேண்டும் போலிருந்த மனத்தை அடக்கிக் கொண்டாள்.
அவளுக்கு மனம் முழுக்கக் கோபம் மண்டியது. அவள் தொடங்கி அனைவரின் மீதும் கோபமாக வந்தது. பிரித்வியைப் பிரிந்து அம்மாவிடம் சென்ற போது என்ன ஏதென்று விசாரிக்காமல் அப்படியே அவளை அரவணைத்துக் கொண்டார்.
அன்றைக்கு அவளின் மாமியார் வீட்டைதான் மொத்தமாகக் குற்றம் சாட்டினார். ஆழினிக்கு இருந்த மனநிலையில் அதைத் தடுக்கவும் இல்லை அவள்.
இப்போது யோசிக்கையில், “நீ என்ன பண்ண? எதுக்குப் புருஷனை பிரிஞ்சு வந்த? புருஷனோட சேர்ந்து வாழ முடியாதுன்னா உனக்கெதுக்குக் கல்யாணம்? மாப்ளைக்குக் கப்பல்ல வேலைன்னு உனக்கு முதல்லயே தெரியும் தானே? தெரிஞ்சு தானே அவரைக் கல்யாணம் பண்ண? இப்போ வாழ முடியாதுன்னு வந்து நின்னா எப்படி? ஒழுங்கா போய்ப் புருஷன் கூட வாழுற வழிய பாரு” என்று நியாயமாக அவளைக் கேள்வி கேட்டிருக்க வேண்டும். கண்டித்திருக்க வேண்டும். கணவனின் வீட்டிற்குத் திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், அம்மாவால் அப்படிக் கேள்வி கேட்க முடியாது.
ஏனென்றால் பிரித்வியை மணக்க முடியாது என்று மறுத்தவளை கட்டாயப்படுத்தி மிரட்டி கல்யாணம் பண்ணி வைத்ததே அவர் தானே. பிறகெப்படி அவரால் அந்தக் கேள்விகளைக் கேட்க முடியும்.
அன்றைக்கு மகளுக்கு நல்லபடியாகத் திருமணம் முடித்து விட வேண்டும் என்பது மட்டுமே அவரின் முக்கியக் கவலையாக இருந்தது. வேறு எதையும் யோசிக்கும் நிலையில் இல்லை அவர். அதற்காகப் பின்னர் வருந்தி என்ன பயன்?
இப்படியாகி விட்டதே என்று புலம்பி, எல்லாரையும் குற்றம் சாட்டுகிறார். தன் மீதிருந்த தவறை ஒத்துக் கொள்ள அத்தனை எளிதில் மனித மனம் ஒப்புவதில்லையே.
“உன்னை மணக்க எனக்கு விருப்பமில்லை” என்ற ஆழினியின் மறைமுகப் பதிலை நேராகப் புரிந்து கொண்டான் பிரித்விராஜன்.
அன்றைக்கு அவள் வீடு திரும்பிய போது இந்திராணியின் கோபத்தை அவளால் எதிர்கொள்ளவே முடியவில்லை. அது எதிர்பார்த்ததுதான் என்றாலும், கோபத்தின் உச்சத்தில் அம்மா அழவும் பதறி விட்டாள் அவள்.
“அம்மா, பிளீஸ் மா. உனக்கென்ன இப்போ நான் கல்யாணம் பண்ணிக்கணும். அவ்ளோதானே? நான் பண்ணிக்கறேன் மா. நீ பாரு..”
“நான் என்னத்த பார்க்க ஆழி? மாப்ள நம்ம கண்ணு முன்னாடி இருக்கையில..”
“ஷிப்ல வேலை பார்க்கறவர் வேணாம்மா. வேற..”
“என்ன வேற? இவரை உனக்குப் பிடிச்சிருக்கு தானே? நாலைஞ்சு மாசத்துக்கு முன்னாடி அவங்க குடும்பம் உன்ன பொண்ணு பார்க்க வர்றாங்கன்னு சொல்லும் போதே மாப்ளய பிடிச்சிருக்குன்னு சொன்ன தானே? ம்ம் சொன்ன தானே? இப்போ மட்டும் எப்படிப் பிடிக்காம போகும்?”
“நான் பிடிக்கலன்னு சொல்லல..”
“அப்புறம் என்ன உனக்குத்தான் பிடிச்சிருக்குல்ல? இவரையே கல்யாணம் பண்ணிக்கோ. நான் அவங்க வீட்ல பேசுறேன்” என்று பரபரத்தார்.
“ம்மா..” என்று குரலை உயர்த்தினாள்.
“பிளீஸ் புரிஞ்சிக்கோம்மா. இன்னைக்கு நீ கம்பெல் பண்றதால கல்யாணம் பண்ணிட்டு நாளைக்கு நான் கஷ்டப்பட முடியாது மா. மேரேஜ் லைஃப்டைம் கமிட்மெண்ட் மா”
“ஆமா ஆழி. கல்யாணம் கமிட்மெண்ட் குடுக்கும். கல்யாணம் கௌரவம் ஆழி. நீயும் உன் தங்கச்சி மாதிரி பண்ணலாம்னு நினைச்சா, நான் உயிரோடவே இருக்க மாட்டேன்” என்று அவர் அழுகுரலில் கத்தவும், “போம்மா, உங்கிட்ட பேச முடியாது” என்று கோபத்துடன் உள்ளே சென்று விட்டாள்.
அவளின் தங்கையைப் பற்றி சொல்லி சொல்லியே அவளை மிரட்டினார் இந்திராணி. அப்படியும் மசியவில்லை அவள்.
“ஒரு வருஷம் போகட்டும்மா. அப்புறமா நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்” என்று அம்மாவை தாஜா செய்ய முயன்றாள். ம்ஹூம், உடும்பு பிடியாக நின்றார் அவர்.
பிரித்வியின் பக்கமிருந்து அதன் பிறகு எந்தச் செய்தியும் வராததால் ஆழினி அவள் போக்கில் வேலைக்குச் சென்று வந்து கொண்டிருந்தாள்.
இந்திராணிக்கு திடீரென்று சளித் தொல்லையும், அதனால் காய்ச்சலும் வர, உடல் சோர்வுடன் நான்கு நாள்கள் படுத்து விட்டார் அவர். ஆழினி நன்றாகக் கவனித்தும் மருத்துவனைச் செல்லும் நிலைக்குக் கொண்டு சென்றது அவரின் மோசமான உடல்நிலை.
“ஆழி, அம்மா உடம்புக்கு ஒன்னுமில்ல. எனக்கு மனசுலதான் நோவு. உனக்கு ஒரு நல்லது செய்யாம, உங்கப்பா மாதிரியே நானும் போய்ச் சேர்ந்துட்டா.. நாளைக்கு நீ தன்னந்தனியா நிப்பன்னு நினைச்சாலே பெத்த மனசு பதறுது. உனக்கு அம்மா கவலை புரியலையா ஆழி? அம்மாவோட ஆசையை நிறைவேத்தி வைக்க மாட்டியா? எனக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா..” என்ற இறைஞ்சுதலுடன் அவளின் கைப் பிடித்தார். அவரின் கண்கள் கலங்கியிருக்க, மகளுக்கு மனம் கலங்கியது.
“ஆழி..” என்று அழைக்கும் போதே இருமல் வர, தொடர் இருமலால் மூச்சு விடச் சிரமப்பட்டுக் கண்களில் கண்ணீர் திரள அவளைப் பார்த்தார்.
“அம்மா, பிளீஸ். தண்ணியைக் குடிம்மா.” என்று அவரைக் கட்டாயப்படுத்தித் தண்ணீர் அருந்த செய்து நீஞ்சை நீவி விட்டாள்.
“எனக்கென்ன குறை மா? நான் நர்சிங் படிச்சிருக்கேன். உலகத்துல எந்த மூலைக்குப் போனாலும் எனக்கு வேலை கிடைக்கும். இத்தன வருஷம் வேலைப் பார்த்ததுல பேங்க்ல கொஞ்சம் சேர்த்து வச்சிருக்கேன். அப்பா நமக்காக விட்டுப் போன வீடு, சேவிங்ஸ் இருக்கு. நீ சேர்த்து வச்சிருக்க ஜூவல்ஸ் இருக்கு. இதெல்லாம் இருக்கும் போது என்னை அந்தப் பிரித்விராஜன் வெள்ளை குதிரையில் வந்துதான் காப்பாத்த போறாரா என்ன? தேவையே இல்லம்மா” என்றாள் தீர்க்கமாக, திட்டவட்டமாக. ஆனால், மகளை அப்படியே விட்டால் அவர் அம்மா இல்லையே.
உடல் நலமில்லாமல் படுத்திருக்கும் போது உணர்ச்சிகரமாகப் பேசி, மிரட்டி, கட்டாயப்படுத்தி அவளைக் கல்யாணத்திற்குச் சம்மதிக்க வைத்திருந்தார்.
How did this episode feel?
Rate this episode⭐ 5.0 (10)
2 thoughts
Sign in to share your thoughts
One tap with Google, no password needed.
Continue with Google Login or register with email
or write your comment below as a guest
Very nice ud. முழு சம்மந்தமில்லாத அம்மாக்கள் கல்யாணம்
அதே அதே மா 😌