Chapter 9 of 21

தெண்திரை தேடலே – 9

October 26, 2026 · 12 min read · ⭐ 5.2 (9)

அத்தியாயம் – 9

பிரித்வியின் முகம் அவள் மனத்தில் அச்சடித்தது போலப் பதிந்திருந்தது. அத்தனை எளிதில் மறக்கும் முகமா அது? ஆனால் அவன் முகவரிதான் தெரியவில்லை. அவன்தான் அவளிடம் தெரிவிக்கவில்லையே. ஆனாலும் கண்டுபிடிக்கத்தான் வேண்டும். முதலில் அவனை நிரந்தரமாகப் பிரிந்து விடும் எண்ணத்தில் தேடி கண்டுபிடித்து விட வேண்டும் என்று நினைத்தாள். இப்பொழுது பிரிவா? அவனைப் பார்த்தால் போதும் என்றிருந்தது.

முதல் முறை அவளைப் பிரிந்து பணிக்குச் சென்ற போது, அவள் கேட்காவிட்டாலும் பிரித்வி ஒவ்வொன்றையும் அவளிடம் தெரியப்படுத்தினான். ஒவ்வொரு முறை விமானம் மாறும் போதும், கடைசியாக அமெரிக்கா சென்றடைந்த போதும், அங்கு அவனுக்காக முன்பதிவு செய்யப்பட்டிருந்த ஹோட்டலுக்குச் சென்ற போதும், அவளுக்குச் செய்தி அனுப்ப மறக்கவில்லை அவன்.

அவனை அழைக்க ஹோட்டல் வாகனம் விமான நிலையத்தில் காத்திருந்தது தொடங்கி, அந்த இரவு ஹோட்டலில் தங்கியது, மறுநாள் கப்பல் நிறுவனம் அனுப்பிய காரில் கப்பல் சென்றது வரை அனைத்தையும் அவளிடம் தெரிவித்திருக்கிறான். முதலில் குறுஞ்செய்தியாக அனுப்பிப் பின்னர் அவளுக்கு அழைத்தும் விரிவாகப் பேசினான்.

“நான் ஹாஸ்பிட்டல்ல இருக்கேன் பிரித்வி. இன்னைக்கு மார்னிங் ஷிஃப்ட்”

“ஓ ஓகே. சாரி, நான் நம்ம ஊர் டைமை மறந்துட்டேன்” என்பான். இங்குப் பகல் என்றால் அங்கு இரவு. அதுவே பல நேரம் அவர்களுக்கு இடையே பெரிய தடையாக இருந்திருக்கிறது. அதிலும் ஆழினியின் வேலை சூழலின் காரணமாகப் பெரும்பாலும் பகலில் பணியில் இருப்பதால் பிரித்வி அழைக்கும் போது, குறுஞ்செய்தி அனுப்பும் போது அவளால் பேச முடியாமல், நேரத்துக்குப் பதில் செய்தி அனுப்ப முடியாமல் போகும்.

அதற்காக என்றைக்குமே அவளிடம் அவன் கோபித்துக் கொண்டது கிடையாது. கோபம் கொண்டது கிடையாது. ஆனால், ஆழினி பதில் அனுப்பி அதற்கு மறுமொழி வரவில்லை என்று பல நேரம் முகத்தைத் தூக்கி வைத்திருக்கிறாள். அதன் பிறகு அவனை வேண்டுமென்றே புறக்கணித்திருக்கிறாள்.

“இவருக்கு நான் முக்கியம் இல்லையா?” என்று அவளின் மனத்தின் எண்ணத்தைத் துல்லியமாக உணர்ந்தது போலத் தெளிவான விளக்கம் கொடுத்து விடுவான் அவன். அவளால்தான் அதை ஏற்றுக் கொள்ள முடியாது தடுமாறுவாள்.

அவன் கப்பலுக்குச் சென்ற முதல் இரண்டு மாதங்கள் எல்லாமே நன்றாகத்தான் சென்றன. கொஞ்சம் நெருக்கமாக, பிரியமாகப் பேசிக் கொண்டார்கள். இருவரின் மனத்திலும் நமக்குத் திருமணமாகி விட்டது என்பது அழுத்தமாக வேரூன்றிய காலம் அது.

ஆழினிக்கு அன்று இரண்டாம் ஷிஃப்ட். அப்போதுதான் பணி முடித்து வீடு திரும்பியிருந்தாள்.

“எம்மா ஆழினி, டைம் என்ன ஆகுதுன்னு கொஞ்சம் பாரும்மா. வேலை முடிச்சு இந்நேரமா வீட்டுக்கு வருவாங்க? பத்து மணியாகப் போகுது? நீ மனசுல என்ன நினைச்சுட்டு இருக்க..” என்று அவள் வீடு நுழைந்ததும் கற்பகம் பேசத் தொடங்க, “கற்பகம், வேலை முடிச்சு வீட்டுக்கு டயர்ட்டா வரப் பொண்ணை இப்பிடித்தான் நிக்க வச்சு பேசுவியா? அமைதியா இரு.” என்று மனைவியை அதட்டி, “நீ உள்ள போம்மா” என்றார் முருகானந்தம், அவளிடம்.

“நீங்க பேசாதீங்க. இவ இந்நேரத்துக்கு வீட்டுக்கு வந்தா பாக்கறவங்க என்ன பேசுவாங்க?”

“என்ன பேசுவாங்க? என்னமும் பேசிட்டு போறாங்க. நீ பேசாம இருந்தா போதும். ஊரு வாயை பத்தி கவலைப்படுறத விட்டுட்டு நீ அமைதியா இருந்தாலே போதும்” என்றார் முருகானந்தம் கோபமாக.

“மதியம் வேலைக்குப் போகும் போதே இன்னைக்குச் செகண்ட் ஷிஃப்ட்னு உங்கிட்ட சொல்லிட்டு தானே போச்சு மருமக? அப்போ இந்நேரம்தான் திரும்பி வரும்னு உனக்குத் தெரியாதா? வேணும்னு பிரச்சினை பண்றியா‍?”

“சும்மா என்னையே சொல்லாதீங்க. நாளைக்கு..”

“இந்தா பாரு கற்பகம். பிரித்வி இங்க வேலைக்குப் போகும் போது இப்படித்தானே லேட்டா வருவான். ஃபிரண்ட்ஸ் பார்க்க போனேன். படத்துக்குப் போனேன், அது இதுன்னு சொல்லிட்டு இதைவிட லேட்டா வருவான். அப்போலாம் அவனை ஏதாவது கேட்டிருக்கியா நீ?”

“ஆ.. என் பையனுக்கு என்ன அவன் ஆம்பிளை. வேலைக்குப் போனா முன்ன பின்ன ஆகத்தான் செய்யும். அவனை யாரு கேள்வி கேட்கப் போறா? வீட்டு பொம்பளை வேலைக்குப் போனா நேரா நேரத்துக்கு வீடு வர வேணாமா”

“உன்னையெல்லாம் திருத்தவே முடியாது. மணி ஒன்பது கூட ஆகல. பத்திரமா வீடு வந்த பொண்ணை எப்படிப் பேசுற நீ?”

ஆழினியின் மனத்தில் இருந்த கேள்விகளை எல்லாம் கேட்டு, அவளுக்காக மாமனார் பரிந்து பேசுவதைக் கேட்டபடியே அறைக்குள் சென்று குளித்து உடை மாற்றினாள்.

அவளுக்காக இந்திய நேரம் பார்த்து அந்நேரம் அவளை அழைத்தான் பிரித்வி. காணொளி அழைப்பில்தான் வந்தான்.

“ஹாய், எப்படியிருக்கீங்க?” அவள் சோர்வுடன் கேட்க, “ஆழி” என்று அழுத்தமாக அழைத்து மயக்கும் புன்னகையுடன், “ரொம்ப நல்லாருக்கேன். நீ எப்படியிருக்க?” என்று கேட்டான்.

“ம்ம். சுமாரா இருக்கேன்”

“பார்க்க சூப்பரா இருக்க. ஆனா சுமார்னு சொல்ற ஆழி. என்னாச்சு?” அவள் முகத்தை வட்டமிட்ட அவன் கண்கள் கழுத்தில் கூடுதலாகப் பதிந்து மீண்டும் கண்களுக்குத் தாவி, அதில் நிலைத்தது.

“ம்ம்..” என்றான் புருவம் உயர்த்தி. அவனது கண்ணசைவு ஒவ்வொன்றையும் பின் தொடர்ந்து கொண்டிருந்தவளுக்கு அவன் கேள்வி மனத்தில் பதியவில்லை.

“உங்களைப் பார்த்து, பேசி ரொம்ப நாள் ஆச்சே? உங்களுக்கு என்னாச்சுன்னு நீங்க சொல்லுங்க முதல்ல?” என்று அவள் கேட்கவும், உதடு பிரிந்து பற்கள் தெரிய புன்னகைத்தான்.

“என்னைத் தேடுனியா ஆழி?”

“ஆழி எல்லாம் யாரையும் தேட மாட்டா” என்றாள் தீவிரமாகப் புன்னகையை மறைத்து.

“ஹாஹாஹா. உண்மைதான். ஆழி யாரை தேடப் போகுது. ஆழிக்குள்ள.. ஆழியின் ஆழ் மனசுல.. ஐ மீன் ஆழியின் ஆழத்துல தொலைஞ்சவங்களதான் வலை போட்டு தேடி கண்டுபிடிக்கணும். ஆழிக்குள்ள தொலைஞ்சு போகணும்னு ஆசைப்பட்டு மூழ்குறவனை ஆழியென்ன ஆண்டவனே நினைச்சாலும் ஒன்னும் பண்ண முடியாது. காப்பாத்த முடியாது” என்றான் இமைக்காமல் அவளையே பார்த்தபடி.

அவனது பார்வையே அவளைத் தொல்லை செய்தது.

“என்ன டபுள் மீனிங்ல பேசுறீங்களா?”

“ச்சே ச்சே, ஒரே மீனிங்தான் ஆழி. நீ என்ன அர்த்தத்தில் எடுத்துக்கறியோ அந்த அர்த்தம் மட்டும்தான். எனக்கு வார்த்தை விளையாட்டுலாம் வராது ஆழி. ஆமா, நான் சொன்னத நீ என்ன ‍அர்த்தத்துல எடுத்துக்கிட்ட?”

“ஹ்ம்ம், நீங்க என்ன அர்த்தத்துல சொன்னீங்களோ அந்த அர்த்தத்துலதான்”

“அப்படியா? நான் என்ன அர்த்தத்துல சொன்னேனாம்? சொல்லு பார்ப்போம். சரியா இருக்கான்னு செக் பண்ணுவோம்” என்றான் நமுட்டு சிரிப்புடன்.

“ஃபர்ஸ்ட் நீங்க சரியா இருக்கீங்களான்னு செக் பண்ணணும்” என்றாள் முறைப்புடன்.

“அதுவும் சரிதான். நீயே செக் பண்ணி சொல்லிடு நர்ஸம்மா” என்று கண் சிமிட்டினான்.

“என்ன?”

“உன்னதான் சொல்றேன். ஆமா, எப்போ செக் பண்ண வர்ற?” அலைபேசியில் தெரிந்த அவன் முகம், என்னவோ நேரில் இருந்து பேசுவதைப் போன்ற பிரம்மையைத் தர, முகத்தில் உணர்ச்சிகளைக் காட்டி விடாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டாள் அவள்.

“வர்றியா நர்ஸம்மா?” கரகரத்த குரலில் கேள்வி கேட்டு ஒற்றைப் புருவத்தை உயர்த்தினான்.

“ஆசதான்” என்றாள் உதடுகள் வளைய. அவளின் வளைந்த உதட்டோடு சேர்ந்து வளைந்தது அவன் கண்கள்.

“ரொம்ப ஆசதான்” கரகரத்த ஹஸ்கி குரலில் சொன்னான்.

அவளின் முயற்சியையும் மீறி துளிர்த்த புன்னகையை மறைக்கும் வழி தெரியாமல், சட்டென அலைபேசியை முகத்தில் இருந்து நகர்த்திக் கட்டிலில் சாய்ந்தமர்ந்தாள்.

“ஆழி..” என்றான் பதற்றத்துடன்.

உடனே அலைபேசியை நேராக உயர்த்திப் பிடித்தாள்.

அவளைப் பார்த்ததும், “ம்ம்..” என்று பெரிதாகப் பெருமூச்சு விட்டான்.

“என்ன?”

“உன்னதான். நீதான் என்னை ரொம்பச் சோதிக்கற ஆழி”

“நானா?”

“ம்ம், இதோ..” என்று நீண்ட அவன் ஒற்றை விரல் அவளைச் சுட்டவும், ஆழியின் விழிகள் அதிர்ந்து விரிந்தன. ஆனால் அவன் விரல் மெல்லத் திரும்பி, அவனின் பின்னால் பரந்து விரிந்திருந்த ஆழியைச் சுட்டியது.

பச்சையும், நீலமும் கலந்த கடல் அவனுக்குப் பின்னணியில் ஒய்யாரமாக மல்லாந்து கிடந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, நீரும் கடலும் வானமுமாக நிலமின்றி நீலம் மட்டுமே நீக்கமற நிறைந்திருந்தது.

“வாவ்”

“வாவ்தான்” என்றவன் பார்வை ஆழியின் மீதல்ல, ஆழினியின் மீதிருந்தது.

ஆழினி தலையணை எடுத்து மடியில் வைத்து அணைவாகப் பிடிக்கவும் மீண்டும் அவனிடம் இருந்து பெருமூச்சு வெளிப்படவும், “என்ன?” என்றாள் கோபமாக.

“உன்ன. என்ன என்னமோ பண்ண.. ம்க்கும்.. ம்க்கும்.. கடல் காத்து சேரல. தொண்டை.. வார்த்த ரொம்பச் சிக்குது ஆழி”

“பார்த்துப் பிரித்வி. நீங்க சிக்கிட போறீங்க”

“சிக்கதான் ஆசைப்படுறேன் நர்ஸம்மா. நடக்காது போலயே..” என்றான் புலம்பலாக.

“உங்களுக்கு நேராவே பேசத் தெரியாதா?”

“நேரா வந்தா நான் ஏன் பேசிட்டு இருக்கப் போறேன்?” பட்டென்று சொன்னவன் அவள் பார்வை மாறியதும், “ஏய், ஆழி. எதுவும் சொல்லிடாத பிளீஸ். அங்க இருந்த வரைக்கும் அத்துமீற பயமா இருந்தது. சாரி” என்றான் அவள் கண்ணைப் பார்த்து.

அவள் மெல்ல தலையசைக்கவும் மீண்டும், “சாரி” என்றான்.

“எதுக்குத் திரும்பத் திரும்பச் சாரி சொல்றீங்க?”

“இல்ல, கல்யாணம்னா உனக்கு நிறையக் கனவுகள் இருந்திருக்கும். கல்யாண லைஃப் எப்படி இருக்கணும்னு, ஹஸ்பண்ட் எப்படி இருக்கணும்னு நிறைய ஆசை, எதிர்பார்ப்புகள் இருந்திருக்கும். நான் எல்லாத்தையும்.. என்னால அதெல்லாம் நிறைவேறாம போய் இருக்கலாம். அதுக்காக..”

“பிரித்வி..”

“இல்ல. நான் சொல்லி முடிச்சுடுறேன் ஆழி. ஏன்னா எனக்கு நிறைய ட்ரீம்ஸ் இருந்தது. மேரேஜ் லைஃப் பத்தி நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தது. அப்படி உனக்கும் இருந்திருக்கும் இல்ல? அதுனாலதான் சாரி சொல்றேன்”

“சரி, மன்னிச்சுட்டேன். விடுங்க. லீவ் திஸ் டாப்பிக்”

“ஆழி மாதிரி ரொம்பப் பெரிய மனசு உனக்கு ஆழி”

“ஹல்லோ..”

“ஐய்யோ, இப்போ நான் ஒரே அர்த்தத்தில்தான் சொன்னேன் ஆழி. பிளீஸ் என்னை நம்பு” என்றவனின் கண்கள் அத்துமீற முயல, “பிராடு பிரித்வி” என்று முணுமுணுத்தாள். அது அவனுக்கும் கேட்டு விட வெடித்துச் சிரித்தான் அவன். அந்தச் சிரிப்பின் சாயல் அவள் இதழ்களிலும் பரவின.

கடல் காற்றுக்கு அலைபாய்ந்து நெற்றியில் புரண்ட முடியை இடக்கரத்தால் ஒதுக்கி விட்டபடி அவளையே பார்த்தவனை ஆழியும் பதில் பார்வை பார்த்தாள்.

அங்கு அவனுக்கு முன் காலைப் பொழுது.

“உன்கிட்ட பேச ப்ரேக் சொல்லிட்டு வந்தேன் ஆழி. உனக்கும் லேட்டாச்சு இல்ல? தூங்கு ஆழி. நாளைக்கு ஹாஸ்பிடல் போகணும் இல்ல?”

“ம்ம்”

“எனக்காக வெயிட் பண்ணாம.. ஐ மீன் நான் மெசேஜ் பண்ணணும்னு வெயிட் பண்ணாம ஏதாவது என்கிட்ட சொல்லணும்னா பேசணும்னா நீயும் மெசேஜ் பண்ணு ஆழி. ஓகே? டேக் கேர். ஐ மிஸ் யூ” என்றான் அடர்ந்த குரலில். அவளை விட்டுக் கண்களைச் சிறிதும் விலக்காமல்.

“ம்ம். மெசேஜ் பண்றேன்” என்பதோடு அழைப்பை துண்டித்து விட்டாள். ஆனால் அவனுக்கு அவளாகக் குறுஞ்செய்தி அனுப்பியதே இல்லை. அதற்கான காரணங்களையும் அவள் உருவாக்கி கொள்ளவும் இல்லை. அவன் அதற்கு வாய்ப்பு தரவும் இல்லை. எப்போதும் அவனே குறுஞ்செய்தி அனுப்பி, காணொளி அழைப்பின் மூலம் பேசியும் விட, அவளுக்கு அழைக்கவோ, குறுஞ்செய்தி அனுப்பவோ தோன்றவோ இல்லை. பிரித்வி பேசி பேசியே நெருக்கத்தைக் கூட்ட முயன்றான். ஆனால் அவர்களுக்கு இடையே இருந்த பெருங்கடலின் தூரம் அவர்களைத் தூர நிறுத்தியது.

அவளுக்குக் காலையில் எழுந்ததும் வீட்டு வேலை, பின் மருத்துவமனை வேலை கூடவே மாமியாரின் பேச்சு, இரவானால் வீடு திரும்பினால் உறக்கம் என அவளின் வாழ்வு ஒரு சுழற்சிக்குள் சிக்கிய உணர்வு. முன்னர் அம்மாவுடன் வசிக்கையில் தினம் ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார் அவர்.

காலையிலேயே சுப்ரபாதம் போல அவளைத் திட்டி எழுப்பினாலும், அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்துச் செய்வார். அவரின் எல்லாச் செய்கையிலும் அவளுக்கான அன்பிருக்கும், அக்கறை இருக்கும். அடிக்கடி வெளியில் செல்வார்கள். கோவில், ஷாப்பிங், விசேஷ வீடுகள் என அம்மாவுடன் கழிந்த நாள்கள் சுவாரசியமானவை. ஆனால் இங்கு? என்னமோ தன்னந்தனியாக அவள் மட்டும் ஓரிடத்தில் வந்து சிக்கி கொண்ட உணர்வு அவளுக்கு.

தினம் மருத்துவமனை செல்கிறாள். மாலையானால் விடுதி வருகிறாள், இங்கும் வேலை செய்கிறாள் என்பது போலாகி இருந்தது அவள் நிலை. விடுதி என்றால் நட்பிருக்கும், இங்கு அதுவும் இல்லை.

அவளின் விடுமுறை தினங்களிலும் தனிமைதான் துணையானது. பேசி சிரிக்க ஆள் இல்லையென்றாலும் அன்றாடத்தைப் பகிர யாரேனும் அனுக்கமானவர் வேண்டும் என ஆவல் கொண்டது ஆழியின் மனம். ஆழியின் மறுபாதி ஆழிக்குள் இருக்க, அவளும்தான் என்ன செய்வாள்.

கற்பகம் எப்போதும் அவளை மருமகளாக மட்டுமே பார்த்தார். மகளைப் போலப் பார்த்துக் கொள்வேன் என்று திருமணத்துக்கு முன்னர்ச் சொன்னதெல்லாம் அவரே மறந்திருப்பார் என்பது நிச்சயம்.

அவளிடம் பேசுவார்தான். வீட்டு வேலைகள் குறித்து, என்ன சமையல் செய்ய வேண்டும் என்று சொல்வார். வீட்டுக்கு என்ன பொருள்கள் வாங்கி வர வேண்டும் என்று சொல்லி அனுப்புவார். ஆனால், கோவில், கல்யாணம், விசேஷம், சொந்தபந்தங்கள் வீடு, அவ்வளவு ஏன் கடைக் கன்னிகளுக்குக் கூட அவளைத் தன்னுடன் அழைத்துச் சென்றதில்லை கற்பகம்.

“நீயும் வர்றியா?” என்ற சம்பிரதாயக் கேள்வி கூட வராது.

“என்ன இன்னைக்கு உனக்கு லீவா? ஹ்ம்ம், இவரோட தங்கச்சி பேரனுக்குப் பெரியப்பாளையம் கோவில்ல மொட்டை போடுறாங்களாம். நாங்க போய்ட்டு வந்துடுறோம். நீ உனக்கு மட்டும் சமைச்சுக்கோ. எங்களுக்கு எதுவும் வேணாம்” என்று தகவல் மட்டுமே தெரிவிப்பார் கற்பகம்.

“பெரியப்பாளையம் கோவிலுக்குப் போறோம். எங்களோட நீயும் வர்றியா?” என்று அவளிடம் கேட்டதேயில்லை அவர்.

“உனக்கு ஒருநாள் தானேம்மா லீவு. ரெஸ்ட் எடும்மா” என்று அக்கறையுடன் சொல்லிச் செல்வார் முருகானந்தம்.

உண்மையில் அவர்களோடு செல்லவே விரும்பினாள் ஆழினி. இப்படி ஒவ்வொரு முறையும் தன்னை மட்டும் அவர்கள் ஒதுக்கிச் செல்வது, அந்த வீட்டில் என்னவோ வேண்டாத பொருளாகத் தன்னை ஒதுக்குவது போலிருந்தது அவளுக்கு. அதனால், “உங்களோட நானும் வர்றேன் அத்த” என்று பிடிவாதமாகக் கிளம்பி அவர்களோடு சென்றிருக்கிறாள். ஆனால் புருஷனோடு செல்லும் போது கொடுக்கும் மரியாதையைத் தனியாகச் சொல்லும் போது பெண்ணுக்கு தர மறந்து விடுகிறார்கள் பலர்.

அங்கு, “பிரித்வி பொண்டாட்டியா இது? இன்னைக்குதான் பாக்கறேன். வாம்மா, பிரித்வி எப்போ வர்றான்?” என்று அவர்கள் சாதாரணமாகப் பேசினாலும், அவள் முகம்தான் மாறிப் போகும்.

“ஹ்ம்ம், அந்த இதயம் ஹாஸ்பிட்டல்ல வேலைக்குப் போறா. அதான் எங்கேயும் வர மாட்டா. இன்னைக்கும் நான்தான் நீ வந்தே ஆகணும்ன்னு கையோட கூட்டிட்டு வந்தேன். அப்புறம் நம்ம பக்கத்து ஆளுங்கள எப்போத்தான் இவ தெரிஞ்சுக்கறது” என்று நீட்டி முழக்கும் மாமியாரை ஆச்சரியமாகப் பார்த்து நிற்பாள். அதிசயமாக ஏதாவது விஷேசத்திற்கு இந்திராணி அவர்களுடன் வந்து கற்பகம் இப்படிப் பேசினால், ஜோலி முடிந்தது. இருவருக்கும் முட்டிக் கொள்ளும். இவள்தான் இடைப் புகுந்து பிரித்து விட வேண்டியிருக்கும்.

மகளை யாரும் எதுவும் சொன்னால் இந்திராணியால் பொறுத்துக் கொள்ள முடியாது.

“அம்மா, பிளீஸ் நீ பேசாம இரும்மா.” என்று அம்மாவைதான் ஆழியும் கடிவாள்.

How did this episode feel?
Rate this episode⭐ 5.2 (9)

2 thoughts

Stay Connected A simple, spam-free email update whenever a fresh chapter goes live.
About Us FAQ Contact Us Privacy Policy Terms & Conditions Disclaimer Copyrights
© 2026 Devi Manogaran Novels. All rights reserved.  ·  Created by Vel Studios
error: Content is protected !!