தெண்திரை தேடலே – 10
அத்தியாயம் – 10
அவர்கள் எங்குச் சென்றாலும் பெரும்பாலும் பிரித்வியைப் பற்றியே விசாரிப்பார்கள். அதுவே அவளுக்கு அயர்ச்சியைத் தரும். அவனைத் தேடச் செய்யும். ஆனால், அவனைப் போல, “ஐ மிஸ் யூ பிரித்வி” என்று சொன்னதில்லை அவள்.
இப்படி என்னைத் தனியா நிக்க விட்டுட்டியே என்று அவன் மேல் கோபம்தான் கொண்டிருக்கிறாள்.
அடுத்ததாக, “என்ன கற்பகம், மகனை ஆசைப்பட்டபடி வெளிநாடு அனுப்பிட்ட போல? மருமக மாசமா இருக்கா என்ன?” என்று கேட்பார்கள். என்னென்னவோ சொல்லி மகனின் பெருமை பேசி அவர்களின் வாயை அடைக்கும் கற்பகத்தின் கோபமெல்லாம் அவள் மேல்தான் திரும்பும்.
“நான் உனக்கு மாமியார்தான். ஆனா உனக்கு எதுனா சந்தேகம் இருந்தா என்கிட்ட கேளும்மா. எதையும் யோசிச்சு தயங்காத. என்னா?” பிரித்வி ஊருக்குச் சென்ற பத்தாம் நாளே அவளிடம் அதைச் சொல்லி விட்டார் கற்பகம்.
“பிரித்வி ஊருக்கு போய் ஒரு மாசத்துக்கு மேலாச்சு. நீயென்ன ஒன்னும் சொல்ல மாட்டேங்கற?” என்று கேட்டு அவர் முகத்தைத் திருப்பவும்தான் அவளுக்கு விஷயமே விளங்கியது.
பிரித்வியின் வாசம் கூட அவள் மீது படவில்லை. இதில் விசேஷத்துக்கு வாய்ப்பு எங்கிருந்து வரப் போகிறது என்பதை நினைக்கையிலேயே அவளுக்குச் சிரிப்பு வந்து தொலைத்தது.
“பிரித்வி பொண்டாட்டியா? நல்லா இருக்கியாம்மா? பேர் என்ன சொன்ன? எதுவும் விசேஷமா?” என்று கேட்பவர்களைப் பார்த்து கோபத்துக்குப் பதில் அவளுக்குச் சிரிப்புதான் வந்தது.
“அட லூசுங்களா. என் புருஷன் பிரித்வி ஷிப்ல இருக்கான். அப்புறம் எங்களுக்கு எப்படிப் புள்ளை வரும்?” என்று கேள்வி கேட்கத் துடித்த நாவை அடக்கினாள். அந்தக் கேள்விகளில் இருந்து தப்பிக்கவே அதன்பின் கற்பகத்துடன் செல்வதைத் தவிர்த்தாள்.
அவரும் அவளை அழைத்துப் போவதில் ஆர்வம் காட்டவில்லை.
பல வருடங்களுக்குப் பிறகு முருகானந்தம் ஊர் திரும்பியிருக்கக் கணவருடன் சேர்ந்து செல்வதையே விரும்பினார் அவர்.
ஆழினி அதைப் புரிந்து ஒதுங்கிக் கொண்டாள். அவள் தனியாக உணரும் போதெல்லாம் அம்மா வீடு செல்லத் தொடங்கினாள். பின்னர் அதுவே வழக்கமானது.
பிரித்விக்கு அது தெரிந்தும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை அவன்.
“பிரித்வி இங்கல்லன்னா என்ன? இதான் அவன் வீடு. அவன் பொண்டாட்டி நீயும் இங்கதான் இருக்கணும். சும்மா சும்மா எப்பப் பாரு உங்கம்மா வீட்ல போய் உக்கார்ந்திட்டா எப்படி? என்னைக்காவது ஒரு நாள் அங்க போனா பரவாயில்ல? வாரத்துல ஐஞ்சு நாள் அங்க போய் உக்கார்ந்துட்டா எப்படி? சும்மாவே வேலைக்குப் போறேன்னு வீட்ல இருக்கறது இல்ல. இதுல அம்மா வீட்ல போய் உக்கார்ந்திட்டா என் புள்ளைக்கு யார் பதில் சொல்றது” என்று அதற்கும் கற்பகம் கோபம் கொண்டு பேச, முருகானந்தம்தான் அவளுக்குச் சாதகமாகப் பேசினார்.
பிரித்வி அழைக்கும் போது அவனிடமே அம்மா வீட்டில் சில நாள்கள் இருக்கிறேன் என்று நேரடியாகச் சொல்லி விட்டாள் அவள்.
“இதெல்லாம் என்கிட்ட சொல்லணுமா ஆழி? நீ உன் விருப்பம் போல உங்கம்மா வீட்ல இரு. எங்கிட்ட பெர்மிஷன் கேட்கத் தேவையில்ல. ம்ம்?” என்றான்.
“ம்ம்” என்றாள் பதிலுக்கு அழுத்தமாக.
ஆனால், சில மாதங்கள் கழித்து அவன் வீடு வரும் போது அவன் வீட்டில்தான் இருந்தாள்.
“இந்த மந்த் எண்ட்ல ஊருக்கு வந்திடுவேன் ஆழி” என்று அவளிடம் சில முறை சொன்னவன் தேதியை குறிப்பிட்டு சொல்லியிருக்கவில்லை. விமான டிக்கெட் கைக்கு வந்ததும்தான் அவளிடம் தெரியப்படுத்தினான்.
அவளை அழைத்து அதைச் சொல்கையில் தன் வீட்டில் இருந்தவளை அதிசயமாகப் பார்த்தான் அவன்.
“நம்ம ரூம்ல இருக்க ஆழி” என்றான்.
அவள் பதில் பேசும் முன், “எப்போ வந்த?” என்று கேட்டான்.
“நீங்க இந்த மந்த் எண்ட் ஊருக்கு வந்திடுவேன்னு சொன்ன அன்னைக்கு..”
“ஓ, ஐ சீ..” என்றவன் பார்வையே மாறிப் போனது.
“பத்திரமா வீடு வந்து சேருங்க” என்று முறைப்புடன் சொல்லி வைத்தாள் அவள். “நீ சொல்லிட்ட இல்ல ஆழி. பத்திரமா வந்துடுறேன்” என்றான் சத்தமாகச் சிரித்து, ஆழி முகத்தில் சிரிப்பு, வெட்கம், பொய் கோபம் எனக் கலவையான உணர்வுகள் அன்றிருந்தது.
அன்று சொன்னது போலப் பத்திரமாக வீடு வந்தான் பிரித்விராஜன். ஆனால், இன்று?
நேரம் நள்ளிரவை நெருங்கியிருக்க ஆழினிக்கு உறக்கமே வரவில்லை. மனத்தின் சோர்வு உடலுக்கும் கடத்தப்பட்டிருக்க அசதி அழுத்தினாலும் கணவனுக்கு என்னவாயிற்றோ என்ற பயம் அவளின் தூக்கத்தைத் தூர நிறுத்தியது.
திநகர் மருத்துவமனை தகவல்களைத் திரும்பத் திரும்ப இணையத்தில் தேடிப் பார்த்தாள். குறிப்பிட்ட ஒரு மருத்துவமனையைக் குறிப்பிடாமல் திநகர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இருந்த அனைத்து மருத்துவமனைகள், சிறிய சிறிய கிளினிக், மெடிக்கல் சென்டர் என்று ஒன்று விடாமல் தன்னிடம் இருந்த அனைத்து தரவுகளையும் தந்து அவளைச் சோதித்தது இணையம்.
விஷ்ணுப்பிரியாவிடம் மாலை மீண்டும் பேசியிருந்தாள்.
“அச்சோ ஆழி, இன்னைக்கு ஹாஸ்பிடல்ல பயங்கரக் கூட்டம். சாரி, நீ கேட்டது எனக்கு ஞாபகத்துல இல்ல. நாளைக்கு விசாரிச்சு சொல்லவா?” என்று அவர் சொல்லவும், வேறு வழியின்றி, “சரிங்கக்கா” என்று வைத்து விட்டாள்.
இப்போது யோசிக்க மருத்துவர் கார்த்திக்கிடம் உதவி கேட்கலாம் என்று தோன்றியது. அவள் பணிபுரியும் மருத்துவமனையில் வேறு யாரையும் உதவியென்று அணுக அவளுக்குத் தயக்கமாக இருந்தது. காரணம் சொல்ல பயம். கணவனைப் பற்றித் தெரியாதா என்று கேட்டால் என்ன சொல்வாள்?
படுக்கையில் பரத்தி கிடந்த காகிதங்கள் அனைத்தையும் எடுத்துச் சரியாக அடுக்கி ஒரு தனிக் கோப்பில் சேமித்து வைத்தாள்.
சிறிய குறிப்பேடு ஒன்றை எடுத்து அடுத்துச் செய்ய வேண்டியதை பட்டியலிட்டு குறித்து வைத்தாள்.
“மருத்துவர் கார்த்திக்கிடம் பேச வேண்டும். கப்பல் பணிகளுக்கான மெடிக்கல் செக் அப் செய்யும் மருத்துவமனை குறித்த தகவல் கேட்டறிய வேண்டும்”
“கூடுதல் விடுமுறைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அப்படி விடுமுறை கிடைக்கவில்லை என்றால்…???” அவள் மனத்தில் தோன்றிய கேள்விக்குறி காகிதத்திலும் பிரதிபலித்தது.
அப்படி விடுமுறை கிடைக்கவில்லை என்றால் வேலையை விட வேண்டும் என்று எழுதி அதற்குப் பெரிய முற்றுப் புள்ளியை அழுத்தமாக வைத்தாள்.
“பிரித்வியின் வங்கிக்கு செல்ல வேண்டும்.” அவர்களது வங்கிக் கணக்கு இருவருக்குமான ஜாயின்ட் அக்கவுண்ட். அவர்களின் திருமணம் முடிந்த பத்து நாள்களிலேயே அவளைக் கட்டாயப்படுத்தி அந்த வங்கிக் கணக்கை திறந்து விட்டான் அவன்.
அவனது மாத ஊதியத்தில் இருந்து ஒரு தொகையை அவளுக்கு அதில் அனுப்பியும் வைப்பான். ஆரம்பத்தில் அதைப் பார்த்தாலும் ஒரு நாளும் அந்தக் கணக்கை அவள் உபயோகித்ததில்லை. அவளுக்கான செலவுகளை அவளது சம்பளத்தில் இருந்து செய்து கொள்வாள். அதை ஒருநாளும் பிரித்வி தடை செய்ததில்லை.
“நம்ம அக்கவுண்ட்ல இருந்து ஏன் பணம் எடுக்க மாட்டேங்கற?” என்று அவளிடம் கேள்வி கேட்டதும் இல்லை. அவன் ஊருக்கு வருகையில் அவளுக்குத் தேவையான உடைகள் வாங்கித் தந்திருக்கிறான். பரிசுகள், நகைகள் என.. இப்போது நினைக்க நினைக்க அவள் மனம் ஆழி சுழலுக்குள் சிக்கிய சிறு படகாகத் துடித்தது.
“அவனது.. இல்லை எங்களது வங்கிக் கணக்கில் தந்திருக்கும் தகவல்களை ஆராய வேண்டும். அவன் எந்த ஊரில் இருந்து, எந்த நிறுவனத்தில் இருந்து பணம் அனுப்புகிறான் என்று கேட்டறிய வேண்டும்” என்று குறித்துக் கொண்டாள்.
அந்த வங்கிக் கணக்கை இப்போதே திறந்து பார்த்தால் என்ன என்று தோன்றவும் அவசரமாக அலைபேசியைத் திறந்தாள்.
அந்த வங்கியின் மொபைல் பேங்க்கிங் ஆப் கூட அவளின் அலைபேசியில் இருக்கவில்லை. அப்புறம் எப்படி அந்த வங்கிக் கணக்கு மற்றும் மற்ற தகவல்கள் அவளிடம் இருக்கும்.
பிரித்வி பரிசளித்துப் பல மாதங்களுக்கு முன் புதிய அலைபேசி மாற்றியிருந்தாள். அந்த விடுமுறையில் அவர்களுக்கு இடையே இடைவெளி உண்டாகியிருக்க அவன் மேலிருந்த கோபத்தில் அவன் சார்ந்த எதையுமே வைத்துக் கொள்ளவில்லை அவள்.
“இது உனக்காக வாங்கிட்டு வந்த போன் ஆழி. பிளீஸ். யூஸ் பண்ணு. நான் ஷிப்புக்கு போயிட்டா ஒரு போனை வச்சிட்டே யூஸ் பண்ணாம பூஜைதான் போடணும். இதுல ரெண்டு போன் வச்சு நான் என்ன பண்ண போறேன்?” என்று கேட்டு வற்புறுத்தி அவளிடம் அந்த அலைபேசியைக் கொடுத்திருந்தான். இன்றைக்கும் அதைத்தான் வைத்திருக்கிறாள்.
அவளுக்காக எல்லாமே செய்தான். ஆனால், அவளோடு அவனில்லை என்ற ஒன்றே அவளுக்குப் பெருங்குறையாகத் தெரிகையில், நிறைகள் எல்லாம் குறையாகி, அவளின் ஆசையின் முன் நிராசையாகி போனது.
அலைபேசியில் உடனடியாக அந்த வங்கியின் மொபைல் ஆப்பை தரவிறக்கம் செய்து உள்நுழைந்தாள். மாதாமாதம் வங்கியில் இருந்து குறுஞ்செய்தி வரும்தான். அதை ஒருநாளும் சிரத்தை எடுத்து பார்த்ததில்லை அவள்.
இன்று அதிலிருந்த பெரும் தொகையை விழிகள் விரிய அதிர்ச்சியுடன் பார்த்தாள். அவனது மாத ஊதியத்தின் பெரும் பகுதியை இந்தக் கணக்குக்குதான் அனுப்பியிருந்தான். அதிலும் இந்த மாதம் பணம் அனுப்பிருக்கவில்லை என்பதைப் பார்த்ததும் அவள் மனம் மீண்டும் சோர்வுற்றது.
ஏனோ வாய் விட்டு அழ வேண்டும் போலிருந்தது.
“பிளீஸ் பிரித்வி. எங்க இருந்தாலும் பத்திரமா என்கிட்ட வந்திடுங்க” திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டு வங்கிக் கணக்கில் தனிப்பட்ட தகவல்களைத் தேடினாள். ம்ஹூம், உருப்படியாக எதுவும் சிக்கவில்லை.
“நாளை வங்கிக்கு செல்ல வேண்டும்” என்று குறித்துக் கொண்டாள்.
கணினித்திரை, அலைபேசி திரை, காகிதங்கள் என மாற்றி மாற்றிப் பார்த்தது மட்டுமில்லாது உறங்காமல் இருந்ததும் சேர்ந்து அவளுக்குக் கண்ணெரிச்சலைக் கொடுக்க, உள்ளங்கைகளால் கண்ணைத் தேய்த்து கொண்டாள்.
“கேன் ஐ ஹெல்ப் ஆழி?” அவளுக்கு நெருக்கமாக வந்து நின்று கண்ணோடு கண் நோக்கி கேட்கும் பிரித்வியின் நினைவு நேரம் காலம் பாராமல் இப்பொழுது வர, அன்றைக்குக் கண் எரிச்சல் மட்டுமல்லாது அவன் மீதும் எரிச்சல் கொண்டு தள்ளி விட்டிருக்கிறாள். ஆனாலும் நெருங்கி ஈரமாய்க் கண்ணில் முத்தமிட்ட வெப்பமான அவன் உதடுகளின் தீண்டலுக்காக இப்பொழுது ஆழினி தவித்தாள்.
“நம்ம பையனுக்கு எதுவும் ஆகியிருக்காது இல்லங்க?” அந்த நள்ளிரவில் கூடத்தில் கற்பகம் அழுது கொண்டே முருகானந்தத்திடம் கேட்டது அவள் காதிலும் விழ, “நோ, பிரித்விக்கு எதுவும் ஆகியிருக்காது” என்று அவளையும் அறியாமல் சத்தமாகச் சொன்னாள்.
“பிரித்விக்கு எதுவும் ஆகியிருக்காது” அதையே திரும்பத் திரும்பச் சொன்னாள். ஒரு கட்டத்திற்கு மேல் சோர்ந்து அமர்ந்தவளின் மனம் சர்வதேச கப்பல் செய்திகளைப் பார் என்று பலமுறை அறிவுறுத்தியும் அவன் கப்பலுக்கு அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும் என்று நம்பவில்லை அவள்.
கப்பல் வாழ்க்கையின் சாகசங்களை அன்றாடச் சிரமங்களை முன்னர்ப் பிரித்வி பகிர்ந்தது நினைவு வர, அவளுக்கு மூச்சு விடவே சிரமமாக இருந்தது.
“ஆழிக்குள்ள தொலைஞ்சு போகணும்னு ஆசைப்பட்டு மூழ்குறவனை ஆழியென்ன ஆண்டவனே நினைச்சாலும் ஒன்னும் பண்ண முடியாது. காப்பாத்த முடியாது” பிரித்வியின் வார்த்தைகள் அவன் குரலிலேயே அவள் காதில் ஒலிக்க அனிச்சையாக உடல் உதறியது.
“பிரித்வி..” மேஜையில் மேலிருந்த அவன் புகைப்படத்தைப் பார்த்து உயிர் உருக அழைத்தாள்.
மனைவி தனக்காக இப்படித் துடிப்பதும், தன்னைத் தேடி தவிப்பதும் தெரிந்தால் என்ன செய்வான் பிரித்விராஜன்?
How did this episode feel?
Rate this episode⭐ 5.0 (10)
2 thoughts
Sign in to share your thoughts
One tap with Google, no password needed.
Continue with Google Login or register with email
or write your comment below as a guest
Very nice
Thanks ma