தெண்திரை தேடலே – 11
அத்தியாயம் – 11
இரவு விடியலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. ஆழினி அந்த இரவை விழித்தே கடந்திருந்தாள். அந்த அறையையே தேடுதல் போர்வையில் புரட்டி போட்டு விட்டாள். அங்கே பூட்டியிருந்த ஒரு பீரோவை தவிர மற்ற அனைத்தையும் தலைகீழாகத் திருப்பிப் போட்டு சோதித்திருந்தாள். அவளைச் சோதிக்கும் வகையில், அவளுக்கு உபயோகப்படும் எந்தவொரு தகவலும் அதிலிருந்து கிடைக்கவில்லை.
அவள் உடலிலிருந்து ஒட்டு மொத்த சக்தியையும் உருவி எடுத்தது போலிருக்க, சோர்வினால் தானாகக் கண்கள் சொருகின. சரியாக உண்ணாத காரணத்தினால் மயக்கமும் உறக்கமும் கலந்த ஒருநிலை.
மேஜை மேலிருந்த தண்ணீரை எடுத்துக் குடித்து, எழுந்து சென்று முகம் கழுவி வந்தாள். அத்தோடு உறக்கத்தையும் சேர்த்தே உதறி வந்தாள்.
கணவனின் ஆவணங்களைச் சீராக அடுக்கி அதற்குரிய கோப்புகளில் தொகுத்து வைத்தாள்.
அந்த அறை அவளுக்கு அதிகமாகக் கணவனை நினைவுப்படுத்தியது, அவனோடு மகிழ்ச்சியாகக் கழித்த நாள்களை, முறைத்த நிகழ்வுகளை, முத்தமிட்ட தருணங்களை, மனம் கலங்கிய தினங்களை, சண்டையிட்டுப் பேசாமல் முகம் திருப்பிப் படுத்த நாள்களை, இறுதியாகப் பிரிந்த நாள்களையும் மாற்றி மாற்றி அவளின் மனக் கண்ணில் கொண்டு வரவும், அவளால் அங்கிருக்கவே முடியவில்லை.
நள்ளிரவென்றும் பாராமல் அறைக் கதவை திறந்து சத்தமில்லாமல் கூடத்திற்குச் சென்று, அங்கிருந்து சாவி எடுத்துக் கொண்டு முதல் தளம் சென்றாள்.
முதல் தளத்தில் ஒற்றை அறையும், அதையொட்டி மொட்டை மாடியும் உண்டு. அங்குச் சிறியதாகப் பூ, காய்கறி தோட்டம் அமைத்திருக்கிறார் கற்பகம்.
பிரித்வி ஊருக்கு வந்தால் காலை பொழுதுகளில் அவனது உடற்பயிற்சி கூடம் இந்த அறையும், மொட்டை மாடியும்தான்.
அவர்கள் திருமண வாழ்வின் மிக மிக இனிமையான தருணங்களுக்கு இந்த அறைதான் சாட்சி.
பிரித்வி இல்லையென்றால் பெரும்பாலும் மூடியேதான் இருக்கும் அந்த அறை.
ஆழினி இப்பொழுது திறந்து உள்ளே சென்றாள்.
அந்த அறை சிறிய கூடம், ஓய்வறையுடன் கூடிய மிக விசாலமான படுக்கையறை, கூடத்தின் மறுபக்கம் குட்டி சமையல் அறையைக் கொண்டது. வெளிநாடுகளில் ஸ்டூடியோ அபார்ட்மெண்ட் என்று சொல்வார்கள். அதை மாதிரியாகக் கொண்டு கட்டியிருந்தார்கள்.
கூடத்திற்குள் நுழைந்ததும் வலப்பக்க சுவரில் ஒன்றாக நின்றிருந்தார்கள் ஆழினியும், பிரித்வியும். அவர்களுக்குப் பின்னே அமைதியாக ஆழி பரந்து விரிந்திருக்க, ஆழி அமைதியாக நிற்க, அவள் தோளில் கைப் போட்டு நெருக்கமாக நின்றிருந்த பிரித்வி பற்கள் தெரிய சிரித்துக் கொண்டிருந்தான்.
சுவரில் சட்டமிடப்பட்டிருந்த அந்தப் புகைப்படத்தை மிகவும் நெருங்கி நின்று பார்த்தாள். அப்படியே அந்தப் புகைப்படத்தைக் கையோடு எடுத்து நெஞ்சோடு சேர்த்தணைத்துக் கொண்டாள். அவளாகக் கணவனைக் கட்டிக் கொண்ட நாள்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அவன் மூச்சுக் காற்று உரசும் நெருக்கத்தில் இருந்த நாள்களை எல்லாம் வீணடித்து விட்டு இப்போது வருந்தி என்ன செய்வது?
கண்கள் கசிய தான் தவற விட்ட பொக்கிஷ தருணங்களுக்காக வருந்தினாள் அவள்.
அந்தப் புகைப்படத்தைக் கையில் வைத்தபடியே வெறும் தரையில் சரிந்து படுத்து விட்டாள். பிரித்வியின் நெற்றி, புருவம், கண்கள், நாசி, மீசை என விரலால் வருடிக் கொண்டே வந்தவளின் விழிகள் மெல்ல மூடின.
“ஒரே ஒரு கிஸ் குடு நர்ஸம்மா பிளீஸ். ஆனாலும் நீ இவ்வளோ கஞ்சமா இருக்கக் கூடாது” மீசை உரச கெஞ்சிய பிரித்வி, அவள் முத்தம் கொடுப்பதற்காகக் காத்திருக்காமல் மனைவியின் இதழில் ஆழமாய்ப் புதைந்தான்.
“தூங்கு ஆழி..” அவளின் பாதம் பற்றி உறங்கச் சொன்னான்.
இப்பொழுது, “பிரித்வி..” என்று முணுமுணுத்தாள். அவள் இமைகள் ஈரமாய் நனைந்து மூடியது.
நான்கு மணிக்கு உறங்கியவள் ஐந்தரை மணிக்கு அலைபேசியில் குறுஞ்செய்தி வந்ததற்கான அறிவிப்பு ஒலி வரவும் பட்டென்று விழித்து விட்டாள்.
அவள் மனம் பரபரத்து பிரித்வியோ என்று அவசரமாக அலைபேசியை எடுத்தது. ஆனால், விஷ்ணுப்பிரியாதான், “நீ இன்னைக்கும் லீவ் தானே ஆழி?” என்று கேட்டு செய்தி அனுப்பியிருந்தார்.
“ஆமா கா. கார்த்திக் டாக்டர்கிட்ட ஆல்ரெடி இன்பார்ம் பண்ணிட்டேன். இன்னைக்கு ஹாஸ்பிடல் வந்து ப்ராப்பரா லீவ் எழுதி குடுத்துடுறேன்கா” என்று பதில் அனுப்பினாள். அதற்கு முன்னே கணவனிடம் இருந்து பதில் வந்திருக்கிறதா என்று பார்த்து விட்டாள். ம்ஹூம், அவள் அனுப்பிய செய்தியே இன்னும் அவனைச் சென்று சேரவில்லை. முகநூல் கணக்கிலும் அதே கதைதான். ஆனாலும் அவனை அழைத்துப் பார்த்தாள். அழைப்பே செல்லவில்லை.
“என்னாச்சு இவருக்கு? என்னவாகியிக்கும் இவருக்கு? கடவுளே அவருக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது” அவளே கேள்வியும் கேட்டு பிரார்த்தனையும் வைத்தாள்.
கணவனை எப்படிக் கண்டுபிடிப்பது? என்ன செய்ய வேண்டும்? யாரை தொடர்பு கொள்வது? இந்த நவீன இணைய உலகத்தில் தொடர்பு கொள்ள முடியாத தூரத்துக்குப் போகப் பிரித்வியால் மட்டுமே முடியும். அவனைத் தேடி மனைவி தவிப்பாள் என்பது கூடத் தெரியாமல் தொலைந்திருந்தான் அவன்.
மெல்ல எழுந்து அந்த அறையைச் சுற்றி வந்து சோதித்து எதுவும் சிக்காமல் கீழிறங்கினாள். கூடத்தில் படுத்திருந்த கற்பகம் அந்தச் சத்தத்தில் கண் விழித்துப் பதறி எழுந்து அமர்ந்து அவளைப் பார்த்தார்.
“நீங்க படுங்கத்த. நான் காஃபி போட்டுட்டு உங்கள எழுப்பறேன்”
“மாடி ரூமுக்கு போனியா?”
“ம்ம், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் போனேன். அந்த ரூம்ல எதுவும் இருக்கான்னு பார்க்க போனேன். அப்படியே அங்கேயே தூங்கிட்டேன்த்த”
“ம்ம், பிரித்வி அங்கதான் இருப்பான் எப்பவும். நீ போனதுக்கு அப்புறம் அங்கயேதான் பழியா கிடந்தான்” என்றார். சேலைத் தலைப்பால் வாய் மூடி அழுகையை அடக்கினார்.
“நான் அப்படி வீட்டை விட்டு போய் இருக்கக் கூடாது. தப்புதான்த்த” என்றவளை ஆச்சரியமும், அதிர்ச்சியுமாகப் பார்த்தார்.
“நாளைக்குள்ள அவர்கிட்ட உங்களை நான் பேச வச்சுடுறேன்த்த. சத்தியமா பேச வைப்பேன். சரியா? இப்போ அழாம படுங்க” என்று அவரிடம் சொன்னவள், உள்ளே சென்று முகம் கழுவி திருத்தமாக வெளியில் வந்தாள்.
வாசலுக்குச் சென்று அவள் பாலை எடுக்கையில் அந்த அதிகாலையில் ஆட்டோவில் வந்து அவள் வீட்டு வாசலில் இறங்கினார் இந்திராணி.
“ம்மா, வாம்மா.. என்ன..”
“என்ன? என்னன்னு கேக்கற ஆழி. உன்னைத் தனியா தவிக்க விட்டுட்டு அம்மாவால எப்படி அங்கருக்க முடியும் சொல்லு?” என்று கேட்டவர், அவள் கையில் இருந்த பாலை வாங்கிக் கொண்டார்.
அவளின் கைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார்.
“ரெண்டே நாள்ல ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மெலிஞ்சு போய்ட்ட ஆழி. உன் கண்ணுக்கு கீழ கருவளையம் வந்துடுச்சு. நீ போய்க் கொஞ்ச நேரம் படு. அம்மா வேலையைப் பார்க்கறேன்” என்று மெல்லிய குரலில் அவளை அதட்டி அறைக்குள் தள்ளினார்.
“ம்மா, விடும்மா. எனக்கு வேலையிருக்கு”
“ஆழி” குரலை உயர்த்தி அவளின் தோளை அழுத்தி கட்டிலில் அமரச் செய்தார்.
“எனக்குக் கண்ணை மூடினாலும் தூக்கம் வரலம்மா? என்னை என்ன பண்ற சொல்ற?” அண்ணாந்து அவர் முகம் பார்த்துக் கேட்டாள்.
மகளை அப்படிப் பார்க்கவே அவருக்கு மனம் உருகிப் போனது.
“மாப்ள பத்திரமா கப்பல்ல இருப்பார் ஆழி. நெட்வொர்க் கிடைக்காத இடத்துல இருப்பார். அதான் போன் பண்ணல. புரியுதா? இன்னைக்கே அவரா போன் பண்ணி உன்கிட்ட பேசுவாரு பாரு” என்று அவர் சமாதானமாகச் சொல்லவும், “எனக்குப் பயமா இருக்கும்மா” என்ற கேவலுடன் அம்மாவை இடையோடு கட்டிக் கொண்டு கதறினாள்.
“அவரை விட்டு நான் வந்திருக்கக் கூடாது. எனக்கு அவரைப் பத்தி எதுவுமே தெரியலம்மா. என்ன பொண்ணு நானு? புருஷன் எங்கருக்கான், எப்படியிருக்கான்னு கூடத் தெரியாம ஒரு பொண்டாட்டி இருப்பாளா மா? அவர் மேல அன்பு, பாசம், அக்கறை எதுவுமே இல்லாம? நான் என்னைப் பத்தி மட்டுமே யோசிச்சு.. அவரை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன் இல்லம்மா. அவர்கிட்ட சாரி சொல்லணும்மா எனக்கு. என்ன நடந்தாலும் எப்பவும் அவர்தான் சாரி சொல்வார். இந்த டைம் நான் மன்னிப்பு கேட்கணும்மா. என்னை மன்னிப்பார் தானேம்மா?”
“ப்ச், ஆழி..”
“அவர்கிட்ட மன்னிப்பு கேட்க.. அவர்கிட்ட பேச.. முடியாமயே போயிடுமாம்மா? அவருக்கு என் மேல இருக்கக் கோபமும் வெறுப்பும் போகாமலே..”
“ப்ச், ஆழி. என்ன பேச்சு இது? மாப்ள பத்திரமா இருப்பார். முதல்ல இந்த மாதிரி யோசிக்கிறத நிறுத்து. இப்படிப் பயப்படுறத நிறுத்து”
“முடியலையேம்மா”
“அம்மா மடியில படு, கொஞ்ச நேரம் தூங்கு. நல்லா தூங்கி எந்திரி. எல்லாப் பிரச்னையும் சரியா போகும்” குழந்தைக்குச் சொல்வது போலக் கண்டிப்புடன் மென்மையாகச் சொன்னவர், தன் இடுப்பில் இருந்த மகள் கரத்தை பிரித்து அவளைப் படுக்கச் செய்தார்.
அவள் தலையைத் தூக்கி மடியில் வைத்து மென்மையாகத் தலைக் கோதி கொடுத்தார். அந்தச் செய்கையில் ஆழினியின் அழுகை இன்னுமே கூடியது.
பிரித்வி அவள் படுக்கையில் அமர்ந்தாலே உருண்டு அவள் மடியில் தலை வைத்து விடுவான். அவள் கரங்களைப் பற்றி அவனுக்கு அவனாகவே நெற்றிப் பிடித்து விடுவான்.
“என் கையை விடுங்க. நானே பிடிச்சு விடறேன்”
“ஹா, கண்ணு சொருகுது ஆழி. என்னைத் தூங்க வச்சுடாத நர்ஸம்மா. உன்னோட தூங்காம இருக்கப் பிளான் பண்ணிட்டு இருக்கேன். என்னைத் தூங்க வச்சுடுவ போலயே..” நெற்றி முழுதும் மென்அழுத்தத்துடன் பதிந்து விலகும் அவள் விரல்களைப் பற்றி ஒவ்வொரு விரலிலும் முத்தமிடுவான்.
“தூங்கற ஆளா நீங்க?” அவள் கிண்டலாகச் சொல்லி அவன் தலை கலைத்தால், “ஆறு மாசம் நல்லா தூங்கியிருக்கேன் ஆழி. அது போதும். இந்த மூனு மாசம் முழிச்சுருக்கணும்னு வேண்டுதல் எனக்கு.. உன்னோட முழிச்சு..” என்று கண் சிமிட்டி அவன் சொல்வது மனத்தில் வந்து போக உடல் குலுங்க சத்தமில்லாமல் அழுதாள்.
“ஒன்றுமிருக்காது, தூங்கு ஆழி” என்று சொல்லிக் கொண்டேயிருந்தார் இந்திராணி. இரண்டு நாள்களின் மனவுளைச்சலும் அயர்ச்சியும் அவளைக் கண்ணயர செய்திருந்தது. மகள் உறங்கியதும் இந்திராணி எழுந்து வெளியில் சென்றார்.
வாசல் பெருக்கி, தண்ணீர் தெளித்து, கோலம் போட்டு அடுப்பில் பாலை ஏற்றி, இன்னொரு பக்கம் காலை உணவை தயாரிக்கத் தொடங்கினார்.
“ஆழினி” என்று கற்பகம் குரல் கொடுக்க, “இந்தா வந்துட்டேன். இந்தாங்க அண்ணி. காப்பிக் குடிங்க” என்று சூடாக நுரைக்க ஆற்றிய காஃபியுடன் வந்தார் இந்திராணி.
கற்பகத்தின் முகத்தில் அவரை எதிர்பார்த்திராத அதிர்ச்சி அப்பட்டமாக வெளிப்பட்டது.
“வாங்க” என்றார் மெதுவாக. முருகானந்தமும் விழித்து விட, “வாங்கம்மா” என்றவர், சட்டென எழுந்து படுக்கையைச் சுற்றி வைத்து விட்டு, உள்ளறைக்குள் சென்று மறைந்தார்.
கற்பகமும் எழுந்து நிற்க, “நீங்க போய் முகம் கழுவிட்டு வாங்க. நான் படுக்கையை மடிச்சு வைக்கறேன்” என்ற இந்திராணி, அவரை வேலை செய்யவே விடவில்லை.
ஆழினி அந்த வீட்டு மருமகளாக வந்ததில் இருந்து அவர்களுக்குள் எத்தனையோ பிரச்சினைகள், வாக்குவாதங்கள், சண்டைகள் வந்திருக்கிறது. ஆனால், இது போன்ற தருணங்களில் அவர்களுக்கு ஆறுதலாக வந்து நிற்க வேண்டியது அவசியம் என்பது புரிந்து அங்கு வந்திருந்தார் அவர்.
காலை காஃபி கொடுத்து, அவர்களைக் கட்டாயப்படுத்திக் காலை உணவையும் உண்ணச் செய்திருந்தார். கடந்த சில தினங்களாகச் சரியாக வயிறை கவனிக்காதவர்கள் அன்றுதான் நிறைவாக உண்டார்கள்.
“நீங்க எதையும் யோசிச்சு மனச போட்டு குழப்பிக்காதீங்க. மாப்ள இன்னைக்குக் கால் பண்ணிடுவார் பாருங்க. நெட்வொர்க் இல்லாம இருக்குமா இருக்கும்” என்று மகளுக்குச் சொன்ன ஆறுதலையே அவர்களுக்கும் சொன்னார்.
“என் பையனை நானே இப்படிக் கண் காணாத தூரத்துக்கு.. ஒரு அவசரத்துக்குப் பேச முடியாத தூரத்துக்கு அனுப்பிட்டேனே. எந்தக் கடலுக்கு நடுவுல இருக்கானோ? எப்படி இருக்கானோ? நாங்க இருக்கும் போது அவனுக்கு ஏதாவது ஆச்சுன்னா..”
“ஐய்யய்யோ இப்படிலாம் பேசாதீங்க. என்ன பேசுறீங்க நீங்க. மாப்ள பத்திரமா திரும்பி வருவார்” மகளை நினைத்து பதறி பதில் சொன்னார் இந்திராணி.
“அவனை ஷிப் வேலைக்குப் போகாதன்னு அவ்ளோ சண்டை போட்டுச்சு ஆழினி. அன்னைக்கு அவளைத்தான் திட்டினேன் நான். இப்படியாகும்னு தெரிஞ்சிருந்தா அவனைப் போகவே விட்டிருக்க மாட்டேனே”
“கற்பகம்..” முருகானந்தம் அதட்ட, “விடுங்க. நீங்க நல்லது நினைச்சுதான் செஞ்சீங்க. மருமகன் ஆசைப்பட்டுத் தானே கப்பல் வேலைக்குப் போனார். அதுக்கு நீங்க என்ன பண்ண முடியும்?” என்று இந்திராணி அவர்களைத் தேற்ற முயன்றார்.
“இல்ல. எல்லாம் என் பணத்தாசை. நான்தான் வாழ வேண்டிய வயசுல இவர வெளிநாடு அனுப்பிட்டு தனியா இருந்தேன்னா… என் புள்ளையையும் தனியா இருக்க விட்டுட்டேனே. அவன் வாழவே இல்ல. நான் சொன்னா கேட்டுருப்பான், கப்பல் வேலைக்குப் போய் இருக்க மாட்டான். அவன் பொண்டாட்டி சொன்னதயாவது அவன கேட்க விட்டிருக்கலாம் நானு.. எங்க.. என் புத்தியை எதை வச்சு அடிக்க..”
“அத்த..” என்று ஆழினி வந்து நிற்கவும் அவர் புலம்பல் பாதியில் நின்று போனது.
“என் பையனை நானே..” என்று மீண்டும் அவர் புலம்பத் தொடங்கவும், “அப்படியெல்லாம் யோசிக்காதீங்க..” என்று அவரின் அருகில் அமர்ந்து சமாதானம் சொல்லத் தொடங்கினார் இந்திராணி.
“நீ உள்ள போ” என்று மகளுக்குக் கண் காட்டினார். ஆழினி இரண்டு மணி நேரங்கள் நன்றாக உறங்கி விழித்திருந்தாள். இப்போது குளித்து வெளியில் செல்ல தயாராக வந்தாள்.
அவள் அறைக்குள் நுழைந்த ஐந்தாம் நிமிடம் அவளிடம் வந்தார் இந்திராணி.
கண்ணாடி முன் நின்று வகிட்டில் குங்குமம் வைத்துக் கொண்டிருந்த மகளைக் காண்கையில் அவருக்கு அடிவயிறு கலங்கியது.
இந்தத் திருமணத்துக்கு எத்தனை முரண்டினாள் அவள். அவர்தான் பிடிவாதமாக நின்று, அவளைக் கட்டாயப்படுத்திக் கல்யாணம் செய்து வைத்தார்.
என்ன வாழ்ந்து விட்டாள் அவள்? திருமணமான மூன்று ஆண்டுகளில் முழுதாக மூன்று மாதம் கூட மகிழ்ச்சியாகக் கணவனுடன் வாழ்ந்திருக்க மாட்டாள் என்று நினைக்க நினைக்க அவர் நெஞ்சம் முழுவதும் குற்ற உணர்ச்சி பரவியது. இருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள, அவர்களுக்குக் கொஞ்சம் கால அவகாசம் கொடுத்திருக்க வேண்டுமோ?
அப்படிக் கொடுத்திருந்தால் இந்தக் குழப்பங்கள் எல்லாம் நேர்ந்திருக்காது என்று சிந்தித்து வருந்தினார். இப்போது வருந்துவதை விட்டு விரைவில் எல்லாம் சரியாக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டார்.
வகிட்டில் குங்குமம் வைத்த ஆழினியின் விரல்களில் மெல்லிய நடுக்கம். “பிரித்வி, பிரித்வி” என்று அவள் மனம் பாராயணம் செய்து கொண்டிருந்தது. அவனுடன் சில மாதங்கள் என்றாலும் நிரம்பச் சந்தோஷமாகத்தான் வாழ்ந்தாள்.
அப்படியே தொடர்ந்திருக்கலாம். இருவருக்கும் இடையே இருந்த தூரம் அவர்களுக்குள் நெருக்கத்தை உண்டாக்காமல் மனதூரத்தை மேலும் அதிகரிக்கச் செய்திருந்தது.
அவர்களுக்குள் தூரம் மட்டுமல்ல நேர மாறுபடும் பெரும் சதி செய்தது. அவர்கள் நினைத்திருந்தால் எல்லாவற்றையும் எளிதாகக் கடந்திருக்கலாம்தான். அப்படிக் கடக்கவும் செய்தார்கள்தான். அந்த இழப்பு நேரும் வரை. அதன் பிறகுதான் எல்லாமே மாறிப் போனது. முக்கியமாக ஆழினி. ஆனால் பிரித்வியால்தான் மாற முடியவில்லையோ?
How did this episode feel?
Rate this episode⭐ 4.9 (9)
2 thoughts
Sign in to share your thoughts
One tap with Google, no password needed.
Continue with Google Login or register with email
or write your comment below as a guest
Very nice
Thank you ma ❤️