Chapter 12 of 21

தெண்திரை தேடலே – 12

October 29, 2026 · 11 min read · ⭐ 5.0 (7)

அத்தியாயம் – 12

“ஆழி, வந்து சாப்பிடு வா” அம்மாவின் குரல் அவளைக் கலைத்தது.

“வேணாம்மா, எனக்குக் கொஞ்சம் வெளிவேலை இருக்கு. அதை முடிச்சுட்டு வந்து சாப்பிடுறேன்”

“சாப்பிட ஒரு பத்து நிமிஷம் ஆகுமா ஆழி? வயிறு பசிச்சுருக்கும் போது பிரச்சனை எல்லாம் பெருசா தெரியும். எதையும் சரியா யோசிக்க முடியாது. புரிஞ்சுதா? மாப்ள நாளைக்கே ஊருக்கு வந்தா அவர்கிட்ட சண்டை போடவாவது உனக்குத் தெம்பு வேணாமா? வா, வந்து சாப்பிடு”

“ப்ச், வேணாம்னா விடும்மா. சாப்பாடுதான் இப்போ ரொம்ப முக்கியமா? நானே அவரைக் காணோம்னு பயந்து போய் இருக்கேன். இதுல நீ வேற..”

“நீ எதுக்கு ஆழி பயப்படுற? மாப்ள அவ்ளோ பொறுப்பில்லாதவரில்ல. அவங்க அம்மாப்பா கிட்ட சொல்லியிருப்பார்.‌ அவங்க மறந்திருப்பாங்க ஆழி. வயசாகுது இல்ல? நானே தினம் எத்தனையை மறந்து போறேன்”

“அவரை எப்படிம்மா மறப்பாங்க?” என்று கோபமாகக் கேட்டவள், “அவர் எங்க வேலை செய்றார்னு கூடத் தெரியாம யார்கிட்ட என்னன்னும்மா ஹெல்ப் கேட்பேன் நான்? என்னைப் பார்த்தா எனக்கே வெறுப்பா இருக்கும்மா” என்றாள் உடைந்த குரலில்.

“ஆழி” என்று மகளை அணைத்துக் கொண்டார். அம்மாவை கட்டிக் கொண்டு மீண்டும் மௌனமாகக் கண்ணீர் வடித்தாள்.

“ரொம்பக் கில்டியா ஃபீல் பண்றேன்ம்மா. எனக்கு அவரைப் பத்தி ஒன்னுமே தெரியல. அக்கறையே இல்ல எனக்கு. எனக்கு என்ன கோபம் இருந்தாலும் அவரை விட்டு வந்திருக்கக் கூடாதோம்மா?” மகளின் பரிதவிப்பு இந்திராணியின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.

கடந்த காலத்துக்குக் கண்ணீர் விட்டு என்ன பயன்?

“ஆழி அழாத. எந்திரி. கொஞ்சமா சாப்பிடு” என்று மகளைத் தேற்ற முயன்றார்.

“போம்மா” என்று சுருண்டு விட்டாள் அவள். அவரே சென்று தட்டில் இட்லி, சாம்பார் எடுத்து வந்து அவளுக்கு ஊட்டி விட்டார்.

“போதும்மா” அவள் மறுத்தும் கேளாமல், மூன்று இட்லிகளை உண்ணச் செய்திருந்தார்.

“நானும் உன்கூட வரவா ஆழி?”

“நான் முதல்ல பேங்க் போய்ட்டு அப்புறம் ஹாஸ்பிட்டல் போய் லீவ் அப்ளை பண்ணணும்மா. அப்புறம் என் ஸ்கூல் ஃப்ரெண்ட் பவித்ரனை பார்க்க அவங்க வீட்டுக்கு போகணும். அவனோட மாமா ஏர்போர்ட்ல வேலை பார்க்கிறார். அவர்கிட்ட பேசணும். கார்த்திக் டாக்டர பார்த்து பேசணும் வேற. நான் நாள் முழுக்க அலையணும்மா. வீட்டுக்கு வர லேட்டாகும். நீ வீட்ல இரு. நான் போன் பண்றேன்” என்றாள்.

“சரி. பார்த்து கவனமா வண்டியோட்டு. அப்பப்போ போன் பண்ணி எங்கருக்கன்னு சொல்லு. ஹாஸ்பிடல் கேண்டீன்ல நேரத்துக்கு ஏதாவது சாப்பிடு. சரியா? பசியோட சுத்தாத. நான் இங்க வீட்டை பார்த்துக்கறேன்” அம்மா சொல்லவும் மௌனமாகத் தலையசைத்தாள்.

“மாப்ள இடையில இங்க கால் பண்ணா உனக்கு உடனே கால் பண்ண சொல்றேன்” என்றார் நம்பிக்கையாக. அதைக் கேட்டதும் ஆழினியின் முகத்தில் லேசாகப் புன்னகை அரும்பியது.

“சரிம்மா, நான் வர்றேன்” என்று கைப்பையை எடுத்துக் கொண்டு எழுந்தாள்.

“ஆழி, மறந்துட்டேன் பாரு. நீ நம்ம வீட்ல இருந்து இந்தப் பீரோ சாவி எடுத்துட்டு வரச் சொன்ன இல்ல. அதை எடுத்துட்டு வந்தேன். இரு தர்றேன்” என்று சொல்லி, வெளியே இருந்த அவரின் பையில் இருந்த சாவியை எடுத்து வந்து கொடுத்தார்.

மற்ற வேலைகள் அனைத்தையும் மறந்து அவசரமாக அந்த இரும்பு அலமாரியை திறந்தாள்.

அங்கே இருவரின் உடையும் தனியாக, ஒன்றாக என்று சீராக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அவளின் நகைகள், அவனின் சொற்ப நகைகள், வீட்டு, சொத்து ஆவணங்கள் ஆகியவை இருந்தனவே தவிர அவனது தனிப்பட்ட ஆவணங்கள், கோப்புகள் எதுவும் அவள் கண்ணில் படவில்லை. மீண்டும் மனம் சோர்ந்து போக அலமாரியை மூடி சாவியைக் கைப்பையில் போட்டாள்.

“நான் ஹாஸ்பிடல் வரைக்கும் போய்ட்டு வந்துடுறேன்த்த” என்றவள், முருகானந்தத்திடம் சென்றாள்.

“மாமா, அவர் என்னைக்கு ஊருக்கு போனார்னு ஞாபகம் இருக்கா?”

“அதெப்படிம்மா மறக்கும்? அதெல்லாம் ஞாபகம் இருக்கு. இரு பார்த்துச் சொல்றேன்” என்றார். அருகில் இருந்த அலைபேசியை எடுத்து பார்த்து விட்டு வீட்டுச் சுவரில் தொங்கிய வருடாந்திர நாள்காட்டியை புரட்டி பார்த்து சரியான தேதியை சொன்னார்.

“அவர் ஊருக்கு கிளம்பும் போதே, என்னைக்குத் திரும்ப வருவார்னு அவரோட காண்ட்ராக்ட்ல இருக்கும். அது என்னைக்குன்னு சொன்னாரா மாமா?”

“அப்படியா மா? சொல்லலையே அவன். அதுல இருக்குமா?” என்று ஆச்சரியமாக வினவினார்.

அவளிடம் சொல்லியிருக்கிறான். இங்கிருந்து விமானம் ஏறும் போதே அங்கிருந்து திரும்ப வரும் தேதியும் சொல்லியே செல்வான். ஆறு மாதங்கள் பணி காலக் கணக்குப்படி பார்த்தாலும் இன்னும் முழுதாக ஒரு மாத காலம் இருக்கிறது.

“சரிங்க மாமா. நீங்க ரெஸ்ட் எடுங்க. நான் சீக்கிரம் வந்துடுறேன்” மூவரிடமும் சொல்லிக் கொண்டு வெளியில் சென்றாள்.

முதலில் வங்கிக்குதான் சென்றாள். அன்றைக்குப் பார்த்து வங்கியில் நல்ல கூட்டம். தனியார் வங்கி என்பதால் விரைவாக அவர்களுக்கான வங்கி அதிகாரியை அவளால் சந்திக்க முடிந்தது.

“ஹாய் மேம், சொல்லுங்க.” என்ற அதிகாரியிடம் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் அவளுக்கு வேண்டிய தகவலை கேட்டு விட்டாள்.

“எங்களோட ஜாயின்ட் அக்கவுண்ட் உங்ககிட்டதான் இருக்கு. தென் ஹஸ்பண்ட்டோட என்ஆர்இ அக்கவுண்ட்டும் இங்கதான் இருக்கு”

“ஓகே. அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க மேம்”

“ஜாயிண்ட் அக்கவுண்ட் நம்பர் சொல்றேன்”

“ஓகே. சொல்லுங்க.” என்றதும் சொன்னாள்.

“ஹஸ்பண்ட் ரீசண்ட்டா கம்பெனி மாறினார். அது அப்டேட்டாகியிருக்கான்னு பார்த்து சொல்ல முடியுமா?”

“கண்டிப்பா மேம்.” என்று கணினி திரையை நோக்கியவன், நிமிர்ந்து அவளைப் பார்க்க, “ராயல் கரீபியன்தான் உங்க ரெக்கார்ட்ல இருக்கா?” என்று கேட்டாள்.

“எஸ், எஸ் மேம்” என்றான் புன்னகையுடன்.

“ஓகே, தேங்க்யூ” என்று எழுந்து கொண்டாள். அதற்கு மேல் அவர்களிடம் என்ன விசாரித்தாலும் எந்த உபயோகமான தகவலும் கிடைக்கும் என்று அவளுக்குத் தோன்றவில்லை.

ஏனென்றால் கணவன் கடந்த சில மாதங்களாகப் பணம் அனுப்பிய போது வந்த குறுஞ்செய்தியை எல்லாம் ஒன்று விடாமல் காத்திருந்த நேரத்தில் பார்த்து விட்டாள். எல்லாப் பணபரிவர்த்தனையும் வெளிநாட்டுப் பணம் அனுப்பும் நிறுவனத்தில் இருந்தே வந்திருந்தது. ஆக, அவன் வெளிநாட்டில் இருக்கிறான் என்பது உறுதி. ஆனால், எங்கு என்பதுதான் பெரிய கேள்விக்குறி. அதைத்தான் அவள் கண்டுபிடிக்க வேண்டும்.

இந்த வங்கியின் வழியாக அவள் எதையும் கண்டுபிடிக்க முடியாது. அப்படியே அவர்கள் முயன்றாலும் அது மிக நீண்ட நடைமுறை. கப்பலில் பிரித்விக்கு, ‘ஓசன் பே கார்ட்” வழங்கி விடுவார்கள். மாதாமாதம் அவனது சம்பளம் மற்றும் இதர சலுகை பணம் அதில் நேரடியாக வந்து விடும். அவர்களுக்குத் தனியாக அமெரிக்க வங்கிக் கணக்கு இருக்க வேண்டியதில்லை. அந்த அட்டையின் வழியாக எல்லாப் பணபரிவர்த்தனையும் செய்ய முடியும். உலகம் முழுக்க விசா அட்டையை (Visa card) ஏற்கும் கடைகளில் அவர்கள் அதைப் பயன்படுத்திப் பொருள்கள் வாங்கிக் கொள்ளலாம். இணையப் பரிவர்த்தனை என அனைத்திற்கும் பயன்படும் அந்த அட்டை.

அவள் வங்கியில் இருந்து வெளிவரும் போது பன்னிரண்டு மணிக்கு மேலாகி இருந்தது.

மருத்துவர் கார்த்திக்கை சந்திக்கச் செல்வதற்கு முன்பு அவளின் பள்ளித் தோழன் பவித்ரனை அழைத்தாள்.

“ஹாய் ஆழி, எப்படியிருக்க?”

“நல்லாருக்கேன்டா. நீ எப்படியிருக்க?”

“என்ன ஆழி நல்லாருக்கேன்றதை நல்லா சொல்ல மாட்டேங்கறியே? என்னாச்சு? என்ன பிரச்சனை?” என்றான் சிரிப்புடன்.

“எங்கடா இருக்க? எனக்கு உன்னை நேர்ல மீட் பண்ணணும். ஐ நீட் யுவர் ஹெல்ப்”

“ஹெல்ப்பா? நான் கிரவுண்ட்ல இருக்கேனே ஆழி. பிராக்டீஸ் ப்ரேக். பரவாயில்ல ஒருநாள் பிராக்டீஸ் கட்டடிச்சா கோச் ஒன்னும் சொல்ல மாட்டார். நீ சொல்லு எங்க மீட் பண்ணலாம்? என்ன ஹெல்ப் வேணும்?”

“நீ பிராக்டீஸ் கன்ட்டினியூ பண்ணுடா.”

“ஹேய் ஏன் டல்லாகுற ஆழி? விஷயம் என்ன சொல்லு? போன்ல சொல்ல முடியாதா?” என்று கேட்டான். சட்டெனச் சொல்லி விட்டாள்.

“ஓ” என்றவன், அவள் வருந்தும்படி எதுவும் சொல்லவில்லை. அவளிடம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. ஒரு நல்ல நண்பனாக அவளுக்குத் தைரியமளித்துப் பேசினான்.

“ஆழி, பிரித்வி எங்க இருக்கார், எந்த ஷிப்னு‌‍ தெரியாம எப்படி..” என்று அவன் இழுக்க, “பவித்ரன் உங்க மாமா ஒருத்தர் சென்னை ஏர்போர்ட் இமிகிரேஷன்ல இருக்கார் தானே?” என்று கேட்டாள்.

“ஆமா, இருக்கார். ஆனா..”

“நான் பிரித்வி டிராவல் பண்ண டேட் அண்ட் டைம் சொல்றேன். அந்நேரம் சென்னையில் இருந்து கிளம்பின ஃபிளைட்ஸ் செக் பண்ண முடியுமா அவரால? அதுல போன பேசஞ்சர் டீட்டெயில் எடுத்தா, எந்த ஊருக்கு போனார்னு தெரிஞ்சுடும் இல்ல?”

“செம்ம ஆழி. நான் எங்க மாமாகிட்ட கேட்டு சொல்றேன். நீ டேட் அண்ட் டைம் மெசேஜ் பண்ணு. பிரித்வியோட‌‍ பாஸ்போர்ட் பேர் சேர்த்து அனுப்பு” என்றான்.

மெல்லிய ஒளிக் கீற்றாக நம்பிக்கை துளிர்க்க, “தேங்க்ஸ் டா” என்றாள்.

“ஹேய் ஃப்ரெண்ட்டுக்காக இது கூடச் செய்ய மாட்டேனா ஆழி. நீ ஸ்ட்ரெஸ் ஆகாம வீட்டுக்கு போ. நான் என்னன்னு விசாரிச்சு உங்க வீட்டுக்கே வந்து சொல்றேன்” என்றான். சரியென்று அழைப்பை துண்டித்து மருத்துவமனை சென்றாள்.

மருத்துவமனையில் வேலை என்றால் பிழிந்து எடுத்து விடுவார்கள். ஆனால் விடுமுறை கேட்டால் காத்திருக்க விட்டு விடுவார்கள். அவள் சென்ற நேரம் நிர்வாக அதிகாரி அங்கில்லை. ஒரு மணி நேரத்துக்கு மேலாக அங்குக் காத்திருந்தவள், அதற்கு மேல் காத்திருக்கப் பொறுமையின்றி விடுமுறைக்கு விண்ணப்பித்து விட்டு கிளம்பி விட்டாள்.

மருத்துவர் கார்த்திக்கை சந்திக்கச் சென்றாள். அவரோ பணி நேரம் முடிந்து வீட்டுக்குச் சென்றிருந்தார்.

“கடவுளே” என்று புலம்பியவள், அவரின் அலைபேசிக்கு அழைத்தாள்.

அவள் விஷயத்தைச் சொன்னதும், “ஓகே, வீட்டுக்கு வாங்க ஆழி” என்றார் அவர்.

மருத்துவமனையில் இருந்து பத்து நிமிட பயணத் தூரத்தில் இருந்த அவரின் வீடு சென்றாள் ஆழினி.

“வாங்க ஆழினி” என்று அவளை வரவேற்றார் கார்த்திக்கின் மனைவி மலர்விழி.

“உள்ள வாங்க. கார்த்திக் பசங்களோட இருக்கார்”

“சாரி மேம். ஒரு எமர்ஜென்சி அதான் வீடு வரைக்கும் வர வேண்டியதாகிடுச்சு..”

“அச்சோ ஆழினி. இட்ஸ் ஓகே. உள்ள வாங்க” என்று அழைத்துச் சென்றார்.

ஆறு வயது மகள், மூன்று வயது மகன் பின் தொடர அவர்களுடன் பேசி சிரித்தபடி வந்தார் மருத்துவர் கார்த்திக்.

“சொல்லுங்க ஆழினி. என்ன ஹெல்ப் கேட்டீங்க? ஷிப் ஜாப்க்கு மெடிக்கல் செக் அப் பண்ற ஹாஸ்பிட்டல்ஸ் தானே?”

“ஆமா, டாக்டர். திநகர்ல இருக்கறது”

“ஹ்ம்ம், ஓகே. அங்கதான் ஒரு ரெண்டு கிளினிக்ஸ் மெடிக்கல் செக் அப் பண்ணுவாங்க. இதுக்குன்னே இருக்காங்க அவங்க. வேற பேஷண்ட்ஸ் பார்க்க மாட்டாங்க. நான் செக் பண்ணி சொல்லவா?”

“ஓகே டாக்டர். அப்புறம் நான் வேலையை விட்டுடலாம்னு இருக்கேன்.”

“ஓ, நீங்க லீவ் தானே கேட்டீங்க? நாளைக்குக் கிறிஸ்மஸ். அதுக்கு லீவ் எடுத்துக்கோங்க ஆழினி. அதை விட்டு மூனு மாசம் லீவ் கேட்டுடாதீங்க. ஏற்கனவே ஸ்டாப் ஷார்ட்டேஜா இருக்கு. நீங்க இல்லாம சமாளிக்கறது கஷ்டம்” என்றார்.

“இல்ல, டாக்டர். மூனு மாசம் லீவ்லாம் வேணாம். நான் ரிசைன் பண்ணலாம்னு இருக்கேன்”

“மூனு மாசம் லீவ் எடுத்துக்கோங்க ஆழினி. எதுக்கு வேலையை விடணும்னு யோசிக்கறீங்க?” என்று அவர்களின் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த மலர்விழி கேட்கவும், “அப்புறம் என்ன சிஸ்டர். உங்களுக்கு அட்மின்னே லீவ் அப்ரூவ் பண்ணிட்டாங்க. நீங்க மூனு மாசம் லீவ் எடுத்திட்டு ஹஸ்பண்ட் திரும்ப ஊருக்குப் போனதும், வாங்க.” என்றார்.

இதயம் மருத்துவமனை அவரின் சொந்த மருத்துவமனை. அவரின் மனைவி மலர்விழி குடும்பத்துக்குச் சொந்தமாக ஐந்து மருத்துவமனைகள் இருக்கிறது. இதயத்தின் நிர்வாகப் பொறுப்பு மலர் விழியின் வசமே இருந்தது.

“நீங்க பேசிட்டு இருங்க. நான் காஃபி எடுத்துட்டு வர்றேன்” என்று மலர்விழி உள்ளே செல்ல அவரைப் பின் தொடர்ந்தார்கள் பிள்ளைகள்.

“டாக்டர், என் ஹஸ்பண்ட் வர்றார்னு லீவ் கேட்கல நான். அவரை..” என்று தயங்கியவள், அவரிடம் விஷயத்தைப் பகிர்ந்தாள்.

“சாரி ஆழினி” என்றவர், “அதுக்குதான் ஷிப் மெடிக்கல் பண்ற கிளினிக் பத்தி கேட்டீங்களா?” என்று கேட்டார்.

“ஆமா டாக்டர்”

“ஓகே. உங்க ஹஸ்பண்ட் ஐடி ஃப்ரூப் எனக்கு அனுப்பி வைங்க. நான் விசாரிச்சி சொல்றேன்” என்றார் உறுதியாக.

“நாம கேட்டா சொல்ல மாட்டாங்கதான். மலர் அப்பாக்கு தெரிஞ்சவங்க கண்டிப்பா அந்தச் சர்கிள்ல இருப்பாங்க. அவங்களைப் பிடிச்சு கேட்டு பாக்கலாம்.”

“தேங்க்ஸ் டாக்டர்”

“எங்கண்ணன், என்னோட பெரியப்பா பையன் ஒருத்தன்.. ம்ம், நார்வேஜியன் க்ரூஸ்ல ஒர்க் பண்றார். கேப்டனா இருக்கார். ரொம்ப வருஷமாச்சு..”

“இவர் ராயல் கரீபியன்ல இருந்தார் டாக்டர்”

“ம்ம். ஸ்டே பாசிட்டிவ். சீக்கிரம் அவரே கால் பண்ணிடுவார். அப்புறம் நீங்க ஹாஸ்பிடல் வந்துடுங்க” என்றார் புன்னகையுடன்.

“இல்ல டாக்டர். நான் ரிசைன் பண்றதா டிசைட் பண்ணிட்டேன்” என்றாள் முடிவாக.

“ஓகே. நல்லா யோசிச்சு முடிவு பண்ணிக்கோங்க ஆழினி” என்று அவர் சொல்லவும் தலையசைத்தாள். ஆனால், அவள் முடிவு மாறப் போவதில்லை.

மலர்விழி காஃபியுடன் வர அவர்களுடன் பொதுவாகச் சிறிது நேரம் பேசி விட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

அவள் வீட்டுக்கு வரும் போது மாலையாகி இருந்தது.

கற்பகம் கூடத்துச் சோஃபாவில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.

வீட்டுத் தொலைக்காட்சியில் செய்தி சேனல் ஓடிக் கொண்டிருந்தது. அதில் கப்பல் விபத்தை முக்கியச் செய்தியாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.

“பிரித்விக்கு ஒன்னும் ஆகியிருக்காது இல்லங்க?” கற்பகம் கண்ணீருடன் கேட்டுக் கொண்டிருந்தார். ஆழினியின் கண்கள் தொலைக்காட்சியில் நிலைத்திருக்க, அப்படியே உறைந்து நின்றாள் அவள்.

இந்திராணி வேகமாக எழுந்து மகளிடம் வந்தார். அவளை ஆதரவாகத் தாங்கிப் பிடித்தார்.

“நாம போலீஸ் கம்ப்ளென்ட் கொடுப்போமாங்க?” என்று கற்பகம் கேட்க, முருகானந்தம் திரும்பி மருமகளைப் பார்த்தார்.

How did this episode feel?
Rate this episode⭐ 5.0 (7)

2 thoughts

Stay Connected A simple, spam-free email update whenever a fresh chapter goes live.
About Us FAQ Contact Us Privacy Policy Terms & Conditions Disclaimer Copyrights
© 2026 Devi Manogaran Novels. All rights reserved.  ·  Created by Vel Studios
error: Content is protected !!