Chapter 14 of 21

தெண்திரை தேடலே – 14

October 30, 2026 · 11 min read · ⭐ 5.0 (11)

அத்தியாயம் – 14

அதன் பிறகு வந்த நாள்கள் அத்தனை அழகானது. அவர்கள் நிரம்ப நிரம்ப மகிழ்ச்சியாக வாழ்ந்த நாள்கள் அவை. அவர்களின் திருமண வாழ்க்கையை அப்போதுதான் வாழவே தொடங்கினார்கள்.

அந்த விடுமுறையை வீட்டிலும், மனைவியுடனும் மட்டுமே கழித்தான் அவன்.

அடிக்கடி அவளின் அம்மா வீடு சென்று வந்தார்கள். ஆழினியை பிரித்விக்குப் பிடித்த ஆழி பார்க்க அழைத்துச் சென்றான். பாண்டிச்சேரி சென்று அங்கிருந்த அலைகள் இல்லா அமைதியான கடற்கரையோர விடுமுறை வாசஸ்தலத்தில் சில நாள்கள் தங்கி வந்தார்கள்.

அலைக் கடலை போலவே அவர்களின் மகிழ்ச்சியும் உயர்ந்த வேகத்தில் குறைந்தும் போனது.

பிரித்வியின் விடுமுறை முடியும் நாள்கள் நெருங்க நெருங்க ஆழியின் மனம் அலைப்புறத் தொடங்கியது. திரும்பவும் கணவனைப் பிரிய வேண்டுமா? அவள் விரும்பிய நேரத்தில் இனி அவனைப் பார்க்கவோ, பேசவோ முடியாது. மீண்டும் அவளைத் தனிமை தின்று தீர்க்கும். அவனின்றி இந்த அறையே வெறுமையாகப் போகிறது என்று நினைத்து மறுகியவள், அவனிடம் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஆனால், அவள் முகம் பார்த்தே அவள் மனம் புரிந்து, “என்ன ஆழி? நானும் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்.” என்றான் அணைத்து.

“ஆறு மாசம் தானே? அரை நிமிஷம் போல ஓடிப் போய்டும்” என்று அவன் சொல்லவும், அலைபேசியை எடுத்துக் கண்ணைச் சுருக்கிப் பார்த்தாள்.

“ஆழி.. ஆழி..” என்று பத்து முறைக்கும் மேல் அழைத்து, அவளை இறுக அணைத்தான்.

“அரை நிமிஷம் போல ஓடிடுமா? அரை நிமிஷம் இல்ல, முழுசா ஒரு நிமிஷமே ஆகிடுச்சு. ஆறு மாசம் என்ன அரை நாள் கூடப் போகல” என்றாள் தீவிரமாக. பிரித்வி உடல் குலுங்க சத்தமாகச் சிரித்தான்.

“சாரி ஆழி, சீக்கிரம் வந்துடுவேன்” என்று அழுத்தமாக முத்தமிட்டான். அவனது அணைப்பில் ஒன்றி நின்றாள் அவள்.

இப்போதும் அறைக்குள் வந்து அவனது புகைப்படத்தை வருடியபடி நின்றிருந்தாள். அவள் கண்கள் கலங்கி புகைப்படம் தெளிவில்லாமல் தெரிந்தது.

அன்று விடுமுறை முடிந்து பிரித்வி அமெரிக்கா கிளம்பும் போதும் இப்படித்தான் நின்றாள். தன் தளும்பிய கண்களை அவனிடம் இருந்து மறைக்கப் பெரும் முயற்சி செய்தாள்.

“ஆழி” தொண்டையடைக்க அழைத்தவன், “என் கூட ஏர்போர்ட் வர்றியா?” என்று கேட்டான். மறுப்பாகத் தலையசைத்தாள்.

“பிளீஸ்..” என்று கெஞ்சினான்.

“ம்ஹூம்”

“பிளீஸ், எனக்குத் தனியா போக என்னவோ போலருக்கு. உன் கூட இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கணும் போலருக்கு. என் கூட வாயேன் ஆழி” என்று கெஞ்சி, கொஞ்சி அவளைக் கரைத்தான்.

“என் கூடவே இருந்துடுங்களேன்” உதட்டில் உதித்த வார்த்தைகளை உதிர்க்காமல் அப்படியே விழுங்கினாள் ஆழினி.

அவனுக்கு விடைக் கொடுத்து வீட்டில் இருந்திருந்தால் கூடப் பிரிவின் வலி அவளை அத்தனை பாதித்திருக்காதோ என்னவோ. விமான நிலையம் சென்று விடை கொடுக்கையில் கண்கள் கலங்கி விடாமல் இருக்க அவள் மிகுந்த பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது.

அவளைத் தோளோடு சேர்த்தணைத்து, “பத்திரமா இரு ஆழி. சீக்கிரம் வந்துடுவேன். ஐ வில் மிஸ் யூ” என்றான்.

“ம்ம்” என்றவள் கண்களில் அவனுக்கான தேடல் இருந்தது. வெளிக்காட்டிக் கொள்ளவில்லை அவள். பிரித்விக்குப் புரிந்துதான் இருந்ததோ?

“நீ டாக்சி எடுத்து வீட்டுக்கு போ ஆழி. போற வழியெல்லாம் என்னோட பேசிட்டே போ. நான் செக் இன் முடிச்சு செக்யூரிட்டி போக டைமிருக்கு. உன் கூடப் பேசிட்டு இருக்கேன். சரியா?” என்று அவளை வழியனுப்பி வைத்தான். அவனோடு பேசிக் கொண்டே வீடு வந்தாள். அவன் விமானம் ஏறிய பின்னர் அவனோடு பேச ஏங்கினாள். ஆனால், வேலை, மருத்துவமனை, வீடு என்று வாழ்க்கை நகரத் தொடங்கவும் கொஞ்சம் இயல்பானாள்.

பிரித்வியின் முதல் இரு வாரங்களை வேலை விழுங்கிக் கொண்டது. பின்னர் அவன் அழைக்கும் நேரம் அவளுக்குப் பகல் பொழுது, மருத்துவனையில் இருந்தாள். அவளுக்காகவே அவனது பணி நேரத்தில் இடைவெளி எடுத்து இரவில் அவளை அழைத்தான்.

ஆழினிக்கு பிரித்வியை அதிகமாகத் தேடியது. எங்கே தான் அதை வெளிப்படுத்தினால் அவன் வருந்துவானோ என்று நினைத்தே வெளிக்காட்டிக் கொள்ளவில்லை அவள். அவன் சென்ற ஒரே மாதத்தில் பிரிவாற்றாமையில் வாடியிருந்தாள்.

“மாப்ளதான் உன்கிட்ட அடிக்கடி பேசுறார் இல்ல ஆழி? அப்புறம் ஏன் இப்படிச் சோகமாவே சுத்துற?” என்று இந்திராணிதான் அவளை அதட்டி உண்ண வைத்தார். இந்த ஒரு மாதமாக அம்மா வீட்டுக்கும் அடிக்கடி செல்வதில்லை அவள்.

“பேசாம அடுத்த முறை நீயும் அவரோடயே போயிடு”

“அதைத்தான் செய்யப் போறேன் மா” என்ற மகளைச் சிரிப்புடன் பார்த்தார் அவர்.

“நல்லா சாப்பிடு ஆழி. அந்தம்மா உங்க வீட்ல எந்த வேலையும் செய்யுறது இல்லையா?” என்று கற்பகத்தைக் கேட்டவர், “தினம் நீயே சமைச்சு சாப்பிடறதுனாலேயே உனக்குச் சாப்பிட பிடிக்காம போகும். ஹாஸ்பிடல் போற வழியில நம்ம வீட்டுக்கு வந்துட்டு போ ஆழி. அம்மா உனக்குச் சமைச்சு வைக்கிறேன்” என்றார் இந்திராணி அக்கறையுடன்.

“வேணாம்மா. நான் உன்னைப் பார்க்க வர்றேன். நீ சமைச்சுலாம் வைக்க வேணாம். என்னால டெய்லி வர முடியாதும்மா. தினம் வேலைக்குப் போய்ட்டு வர்ற அலைச்சலே ரொம்ப டையர்ட்டாகுது” என்ற மகளை வாஞ்சையுடன் பார்த்துக் கன்னம் வருடி கொடுத்தார்.

மகளுக்காகச் சூடாக மதிய உணவு சமைத்து அவ்வப்போது மருத்துவமனை சென்று அவர் கொடுக்க, “நீயேன் மா, இப்படி அலையற? நாளையில் இருந்து நானே வர்றேன்” என்றாள். ஆனால் வீடு, வேலை நெருக்கடி அவளைச் சூழ அம்மாவிடம் தினம் சில நிமிடங்கள் பேசினாலும் வீடு செல்ல மறந்தே போனாள்.

இரண்டு வாரங்களுக்கு மேலாகவும், “நாளைக்கு வீட்டுக்கு வந்துட்டு போ ஆழி” என்று முன்தினம் மாலையே அழைத்து அவளிடம் சொன்னார்.

“சரிம்மா, வர்றேன்” அப்படியொரு சோர்வு அவள் குரலில்.

“என்ன சமைச்சு வைக்கட்டும் ஆழி? மீன் இல்லனா இறால் எடுத்து செஞ்சு வைக்கவா?”

“தக்காளி ரசம் போதும்மா”

“ரசமா, சேட்டையைப் பாரு. அதை நீயே செஞ்சுக்க மாட்டியா? வேற ஏதாவது சொல்லு அம்மா செஞ்சு வைக்கிறேன்”

“தலை வலிக்குதும்மா. தூங்க போறேன். நீ ஏதாவது செஞ்சு வை” என்று சொல்லி வைத்து விட்டாள்.

அம்மாவிடம் சொன்னது போலத் தலைவலி, உடற்சோர்வு என்று மருத்துவமனையில் இருந்து வந்ததும் படுத்து விட்டாள்.

இரவு எட்டு மணி போலப் பிரித்வி அவளை அழைத்தான். எப்போதும் போலக் காணொளி அழைப்பில்தான் வந்தான். அவள் படுக்கையில் இருப்பதைப் பார்த்ததும் பெருமூச்சு விட்டான்.

“ஆழியிலே முக்குளிக்கும் அழகே” மயக்கும் புன்னகையுடன் பாடினான்.

அவள் கண்ணோடு கண் பதித்து, “உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி முந்தானை படியேறவா மூச்சோடு குடியேறவா?” கண்கள் மெல்ல அத்துமீற பாடினான்.

காணொளி அழைப்பு அவள் அகத்தின் அலைப்புறுதலை முகத்தில் காண்பித்து விட்டது. அவன் இந்தப் பாட்டைப் பாடினாலே சிவக்கும் அவள் முகம் இன்று வெறுமையாக இருந்தது. கண்களில் ஒளியின்றி அவனைப் பார்த்தாள்.

“ஆழி, என்ன பண்ணுது? ஏன் டல்லா இருக்க?”

“தலவலி பிரித்வி. வேற ஒன்னுமில்ல.”

“அச்சோ, அதான் இந்நேரமே படுத்துட்டியா? நான்தான் கால் பண்ணி எழுப்பி விட்டுட்டேனா? சாரி. நீ தூங்கு”

“இல்லல்ல. ஹாஸ்பிடல்லருந்து வந்ததும் படுத்துட்டேன். நல்ல தூக்கம். இப்போ தலைவலி ஓகே. நீங்க பேசுங்க.”

“இல்ல நீ ரெஸ்ட் எடு ஆழி”

“பேசுங்க பிரித்வி. ஐ ஆம் ஓகே. நீங்க எப்படி இருக்கீங்க?” என்றாள் அவன் முகம் பார்த்து.

“நீயில்லாம ரொம்பச் சுமாரா இருக்கேன். ஐ மிஸ் யூ ஆழி. அப்படியே ஓடி வந்து உன் போர்வைக்குள்ள புகுந்துக்கணும் போலருக்கு. வரவா?” அவளைக் கண்ணால் வாரி சுருட்டியபடி, பிரிவின் தாபத்தில் பிதற்றினான்.

“வாங்களேன்” என்றாள் தீவிரமாக. அவள் பேச்சை அவன் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை போலும்.

“அச்சோ ஆழி. வான்னு சொல்லாத. நீ வான்னு சொன்னா நான் எங்கருந்து இப்போ வர்றது? நான் வேலைக்கு வந்தே ரெண்டு மாசம் கூட ஆகலயே. வெளிய விட மாட்டானுங்களே இவனுங்க” என்று புலம்பினான்.

ஆழினி அமைதியாகப் பார்த்திருக்க, “இன்னும் தலைவலி போகலையா ஆழி? தூக்கம் வருதா?” என்று கேட்டான்.

அவள் மறுப்பாகத் தலையசைத்தாள். ஆனாலும், “நீ தூங்கு. ரெஸ்ட் எடு. நான் நாளைக்குப் பேசறேன். ஓகே? எனக்கும் பிரேக் முடியுது” என்று விடை பெற்றுக் கொண்டான். அவனை விடப் பெரியதாகப் பெருமூச்சு விட்டுக் கண்ணை மூடியவளுக்கு அதன்பின் உறக்கமே வரவில்லை.

அதிகாலையில் அலாரம் அடித்து எழுப்பி விடக் காலையில் வீட்டு வேலை செய்யும் போது அவளுக்குக் கண்ணைக் கட்டியது. அதனால் காலை உணவை மட்டும் செய்தவள், “அத்த, இந்தாங்க காஃபி. உங்களுக்கும் மாமாக்கும் காலைலைக்குச் சப்பாத்தியும், முட்டை குருமாவும் பண்ணிட்டேன். மதியத்துக்கு நீங்களே ஏதாவது சமைச்சுக்கறீங்களா? எனக்கு ஹாஸ்பிட்டலுக்கு டைமாச்சு.” என்று கற்பகத்திடம் சொன்னாள்.

“சரி சரி நானே சமைச்சுக்கறேன். எனக்கே உடம்பு முடியல. இதுல நான் இந்த அடுப்பு சூடுல வேற நிக்கணுமா? நீ இப்போ வேலைக்குப் போகலன்னு யார் அழுதா? ஒழுங்கா வீட்ல இருக்கறத விட்டுட்டு.. என் பையன் ஊருக்குப் போனதும் வேலைக்குக் கிளம்பிட்ட. அவன் போய் ரெண்டு மாசம் ஆகப் போகுது. இன்னும் ஒரு செய்தியும் சொல்லல நீ. உங்களுக்குக் கல்யாணமாகியே..” என்று கற்பகம் அந்நேரமே அர்ச்சனையைத் தொடங்கி விட, அமைதியாக அங்கிருந்து நழுவி விட்டாள் ஆழி.

அவள் வீட்டு வாசலில் வண்டி எடுக்கும் போது எதுவும் பேசாமல் முறைத்து பார்த்து நின்றார். அவரின் பார்வையைப் பொருட்படுத்தாமல் அம்மா வீடு சென்றாள் அவள். வீட்டுக்குள் நுழையும் போதே மீன், இறால் சமைக்கும் வாசம் அவள் நாசிக்குள் நுழைந்தது. கடல் உணவுகள் அவளுக்கு மிகவும் பிடிக்கும். இன்றைக்குக் கவுச்சி வாசம் ஏனோ குமட்டியது.

“அம்மா, உன்னை ரசம் தானே வைக்கச் சொன்னேன்?” அவள் கத்தவும், “ஆமா, ரசம் வைக்கிறாங்க போ. வேலையில்லாம. மீன் குழம்பு வச்சு இட்லி ஊத்தியிருக்கேன், சாப்பிடு வா. இறால் உனக்குப் பிடிச்ச மாதிரி சின்ன வெங்காயம் மிளகு தூள் போட்டுச் சுக்காவா பண்ணியிருக்கேன்.” என்று அவர் நீட்டி முழக்க, “இட்லி குடும்மா போதும்” பொத்தென்று சோஃபாவில் அமர்ந்து கண் மூடினாள்.

“என்ன ஆழி பண்ணுது உனக்கு? உன் மூஞ்சியே சரியில்ல. எங்க, நீ ஒழுங்கா சாப்பிட்டா தானே? இப்போ ஒழுங்கா தூங்குறதும் இல்லையா? இங்க உக்கார்ந்து தூங்கிட்டு இருக்க?”

“நைட் இவர் கால் பண்ணார் மா” என்று அவள் சொல்லவும் அமைதியானார்.

“ரொம்ப டல்லா தெரியுற ஆழி. உன்னைப் பார்த்தாலே எனக்கு மனசு கேட்கல. சாயந்திரம் வர்றியா நாம கோவிலுக்குப் போய்ட்டு வருவோம்?”

“கோவிலுக்கா? கவுச்சி சாப்பிட்டாம்மா?”

“சரி, அப்போ நாளைக்குக் காலையில சீக்கிரம் வரியா போகலாம்? முருகன் கோவிலுக்குப் போய்ட்டு நீ அப்படியே ஹாஸ்பிடல் போயிடு. என்ன? உனக்குப் பீரியட்ஸ் எதுவும் இல்லையே?” அதுவரை அசிரத்தையுடன் அம்மா பேச்சை கேட்டுக் கொண்டிருந்தவள் சட்டென்று விழி விரித்து அம்மாவை பார்த்தாள்.

“இல்லம்மா” என்றாள் யோசனையுடன். “நாளைக்குக் கோவிலுக்குப் போகலாம்” என்றாள்.

இந்திராணி அவளை வற்புறுத்தி உண்ண செய்ததை அங்கிருந்து கிளம்பும் முன்னே வாந்தி எடுத்து, சோர்ந்து மருத்துவமனை வந்தவள், வந்ததும் முதல் வேலையாகத் தன் சந்தேகத்தை நிவர்த்திச் செய்து கொண்டாள்.

நொடியில் மனம் லேசாகி, மகிழ்ச்சியில் நிறைந்து கனமானது.

“பிரித்வி கிட்ட சொல்லணும்” என்று அவள் நினைக்கும் போதே, பிரித்வி அவளை அழைத்து விட்டான்.

“வீடியோ கால்ல வரவா ஆழி? எனக்கு உன் முகத்தைப் பார்க்கணும். நேத்து நைட் ரொம்ப டல்லா இருந்த. இப்போ முடிஞ்சா பிரேக் எடுத்து வீடியோ கால்ல வாயேன் பிளீஸ்” என்றான்.

“பிரேக்லதான் இருக்கேன். தனியா” என்று அவள் சொல்லி முடிக்கவும், காணொளி அழைப்பில் வந்தான்.

“ஆழி..” அழுத்தமாக அழைத்து, “இப்போ எப்படியிருக்கு தலைவலி? ஆர் யூ ஓகே?” என்றான் அவளையே இமைக்காமல் பார்த்து.

“பிரித்வி”

“என்ன ஆழி?”

“நீங்கதான்..”

“என்னது நானு?”

“எனக்கு உடம்புக்கு முடியாம போனதுக்கு நீங்கதான் காரணம்.”

“என்னது நானா? நான் என்ன பண்ணேன். அடிப்பாவி ஆழி. என்னைத் தலைவலின்னு சொல்றியா நீ? அநியாயம் ஆழி. நான் ஒன்னுமே பண்ணல”

“அப்படியா?”

“அப்புறம் என்ன பண்ணேன் உன்னை..”

“ஹ்ம்ம்” என்று இழுத்தவள், “நீங்களே பாருங்க” என்று கர்ப்பத்தைப் பரிசோதிக்கும் கருவியை அலைபேசி திரைக்கு உயர்த்திக் காட்டினாள்.

“ஆழி..” அதிர்ச்சியில் கண்கள் பெரிதாக அவளையே பார்த்திருந்தான்.

“இப்பவே உன்னைப் பாக்கணும் போலருக்கு ஆழி. வந்துடவா?” என்று ஆழ்ந்த குரலில் கேட்டான். இருவருக்கும் அத்தனை மகிழ்ச்சி. அதை அலைபேசி வாயிலாக மட்டுமே பகிர்ந்துக் கொண்டார்கள். வேறு வழியும் இல்லையே.

“உன்னைப் பார்க்கணும் போலருக்கு ஆழி. எப்படி இருக்க? வெயிட் போட்டுட்டியா? ரொம்ப அழகாகிட்ட ஆழி” என்று சொல்லி கொண்டேயிருந்தான். அவன் ஆசைப்பட்டபடி அவன் வரவில்லை. ஆனால் அவன் வர வேண்டிய சூழல் உருவானது.

ஆழினி மாடியின் படுக்கையறையில் இருந்தாள். கடந்த கால நினைவுகள் அவளை மூச்சு முட்ட செய்ய ஆழ்ந்த மூச்சுகளை எடுத்துத் தன்னை நிதானப்படுத்த முயன்றாள். அந்த அறை அவளுக்குக் கணவனின் நினைவுகளை அதிகமாகக் கிளறி விட்டது.

மனத்தைத் திசைத் திருப்ப படுக்கையை ஒட்டியிருந்த மேஜை இழுப்பறையை இழுத்தாள்.

மெல்ல மெல்ல விரிந்தது அவள் விழிகள். அவளின் கண்ணாடி வளையல்கள், கடல் கன்னி உருவம் பதித்த மெர்மெய்ட் மோதிரம் அங்கிருந்தது. கூடவே அவனது வெள்ளிக் காப்பும் கிடந்தது. அந்தக் காப்பை எடுத்துக் கையில் அணிந்து மெல்ல வருடிக் கொடுத்தாள்.

How did this episode feel?
Rate this episode⭐ 5.0 (11)

2 thoughts

Stay Connected A simple, spam-free email update whenever a fresh chapter goes live.
About Us FAQ Contact Us Privacy Policy Terms & Conditions Disclaimer Copyrights
© 2026 Devi Manogaran Novels. All rights reserved.  ·  Created by Vel Studios
error: Content is protected !!