Chapter 13 of 21

தெண்திரை தேடலே – 13

October 30, 2026 · 13 min read · ⭐ 5.0 (9)

அத்தியாயம் – 13

கப்பல் விபத்து என்றதும் உறைந்து நின்று விட்டாள் ஆழினி. அதிலும் கப்பல் கடலுக்குள் மூழ்கும் காட்சி மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்படவும் அவளால் அசையவே முடியவில்லை.

“ஆழி..” அம்மா அழைக்க, முருகானந்தம், கற்பகம் இருவரும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, “நியூஸை சரியா கவனிங்கத்த. ஆக்சிடென்ட்டானது எல்சா 3 கார்கோ ஷிப்னு சொல்றாங்க. ஆக்சிடென்ட் கேரளாவுல நடந்திருக்கு.” என்றாள் முயன்று வருவித்த இயல்பான குரலில்.

“கேரளா அரசு இந்த விபத்தை மாநில பேரிடராக அறிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு மட்டுமே இந்தியாவில் 186 கடல் சார்ந்த விபத்துகள் நிகழ்ந்திருக்கிறது. அதில் என்பதுக்கும் அதிகமான உயிர் இழப்புகள் நேர்ந்திருக்கிறது. அதனால் தொடரும் இது போன்ற கப்பல் விபத்துகளைத் தவிர்க்க அரசு தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை..” என்று ஒளிபரப்பாகிய செய்தி அவர்களின் பயத்தின் அளவை ரிக்டர் அளவில் அதிகரிக்கச் செய்தது.

ஆழினி விரைந்து சென்று தொலைக்காட்சியை நிறுத்தினாள்.

“அவர் பாரின்ல இருக்காருத்தே. உங்களுக்கு அங்கருந்து தானே இத்தனை மாசமும் கால் பண்ணியிருப்பார்? நான் பேங்க் அக்கவுண்ட்ல செக் பண்ணிட்டேன். அவர் அனுப்பின பணம் பாரின்ல இருந்துதான் வந்திருக்கு” அவர்களைச் சமாதானம் செய்யும் பொருட்டு அவள் விளக்கம் சொல்ல, “பாரின்ல இருந்தா மட்டும் பத்திரமா இருந்துருவானா என் பையன். அங்க அவனுக்கு என்ன நடந்துச்சோ தெரியலையே. இல்லன்னா இத்தன நாள்லாம் எனக்குப் போன் பண்ணாம இருக்க மாட்டானே. இந்த நியூஸ பார்த்தாலே பயமா இருக்கே. நானே என் பையனை..” என்று கண்ணீருடன் கற்பகம் புலம்ப ஆரம்பித்து விட்டார்.

“போலீஸ் கம்ப்ளைன்ட் பண்ணுவோமா மா?” முருகானந்தம் தயக்கத்துடன் அவளிடம் கேட்க, “என்னனு மாமா கம்ப்ளைன்ட் பண்றது? என்ன சொல்லி கம்ப்ளைன்ட் பண்றது? நம்மகிட்ட ஆயிரத்தெட்டுக் கேள்வி கேட்பாங்க மாமா. எனக்கு இன்னைக்கு ஒரு நாள் டைம் குடுங்க. நான் டாக்டர் கார்த்திக், அப்புறம் என் ஃப்ரெண்ட் கிட்ட ஹெல்ப் கேட்டிருக்கேன். அவர் எங்க இருக்கார், எங்க ஒர்க் பண்றார்ன்னு தெரிஞ்சிட்டா, நேரா அந்தக் கம்பெனிக்கே கால் பண்ணி பேசிடலாம் மாமா” என்றாள்.

அதைக் கேட்டதும் பெரியவர்கள் மூவரின் முகத்திலும் வெளிச்சம் பரவியது.

கற்பகம் கேட்ட கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதில் சொல்லி, அவரின் புலம்பலுக்குச் செவி சாய்த்து ஆறுதல் சொல்லி அரை மணி நேரம் கழித்து அறைக்கு வந்தாள்.

இந்திராணி அவளுடன் அறைக்குள் நுழைந்தார்.

“மதியம் ஏதாவது சாப்பிட்டியா ஆழி?”

“ம்ம்”

“என்ன சாப்பிட்ட?”

“ஏதோ சாப்பிட்டேன் மா. சாப்பிட்டேன்னு சொன்னா விடேன்”

“சரி எங்க சாப்பிட்ட சொல்லு”

“அம்மா” என்றாள் எரிச்சலுடன்.

“நான் படுக்கப் போறேன். நீ போய் வேலையைப் பாரும்மா”

“உன்னைப் பார்த்துக்கறதுதான் என் வேலை ஆழி. என் பொண்ணு உன்னை விட இந்த உலகத்துல எனக்கு வேறென்ன முக்கியமானது இருக்குன்னு நீயே சொல்லு?” அவளின் தலைக் கோதி அவர் கேட்க, மளுக்கென்று குளம் கட்டின அவள் கண்கள்.

இந்த வார்த்தைகளை, இதே வார்த்தைகளைக் கணவனிடம் எதிர்பார்த்தாள். நிரம்பவே எதிர்பார்த்தாள். எதிர்பார்ப்புகள் எல்லாம் ஏமாற்றங்களை மட்டும் தானே தரும்? அவனும் அதைத்தான் தந்தான்.

“என் பையனை உன்னைப் பார்த்துக்கிட்டே வீட்ல உக்கார சொல்றியா நீ?”

“உத்யோகம் புருஷ லட்சணம். பிரித்வி வேலைக்குப் போவான். நீ வீட்ல இரு. சொல்லிட்டேன். அதை விட்டுட்டு அவனை வீட்ல இருக்கச் சொல்வியா நீ?”

“பிரித்வி வேலைக்குப் போக வேணாம்னா வேற என்ன பண்ண சொல்ற அவனை?, டெய்லி நீ வேலைக்குப் போறதை பார்த்திட்டு வீட்ல இருக்கணுமா அவன்? டெய்லி உன்னைக் கொண்டு போய் ஹாஸ்பிடல்ல விட்டுட்டுத் திரும்பக் கூட்டிட்டு வரணுமா என் பையன்? உனக்கு டிரைவர் வேலை பார்த்திட்டு இருக்கணுமோ? ஹான், நல்லா இருக்கே கதை. பேசாம நீ வேலையை விட்டு வீட்ல உக்காரு. உங்களுக்குக் கல்யாணமாகி எத்தனை வருஷமாச்சு? இன்னும் பிள்ளை இல்லையேன்னு கவலையில்ல உனக்கு”

“அம்மா” என்று கத்தி கற்பகம் அவ்வளவு நேரம் புலம்பியதை அடக்கினான் பிரித்வி.

ஆழினிக்கு இப்போது அதை நினைத்ததும் சட்டெனக் கொந்தளிக்கும் ஆழியைப் போல அவள் மனம் கொந்தளிக்க, “நீ போய் முகம் கழுவிட்டு வா ஆழி. அம்மா உனக்குச் சூடா காஃபி போட்டு எடுத்துட்டு வர்றேன்” என்றார் இந்திராணி.

அவள் அப்படியே அமர்ந்திருக்க, அவர் சென்று மகளுக்காக உணவெடுத்து வந்தார்.

“வேணம்னா விடேன்மா. நான்தான் சாப்பிட்டேன்னு சொன்னேன்ல்ல?”

“உன் மூஞ்சியைப் பார்த்தே நீ சாப்பிட்டியா இல்லையான்னு நான் சொல்லிடுவேன். சரி, சரி. நீ ஏற்கெனவே சாப்பிட்டுட்ட. இப்போ முறைக்காம எனக்காகக் கொஞ்சம் சாப்பிடு” என்று சோறை பிசைந்து அவளுக்கு நீட்டினார். ஆழி பிடிவாதமாக வாய்த் திறக்காமல் அமர்ந்திருந்தாள்.

இந்திராணியின் கரமும் நகரவில்லை. சில நொடிகளில் ஆழியின் ‍இதழ் பிரிய, உணவை ஊட்டி விட்டார் அவர்.

“என் ஃப்ரெண்ட் பவித்ரன்கிட்ட சொல்லியிருக்கேன் மா. அவங்க மாமாகிட்ட விசாரிக்கச் சொல்றேன்னு சொல்லியிருக்கான்.‌ அவர் எந்த ஃப்ளைட்ல டிராவல் பண்ணாருன்னு தெரிஞ்சா அவரைக் கண்டுபிடிச்சுடலாம்மா”

“அப்படிக் கண்டுபிடிக்க முடியுமா?”

“ம்ம், ஃப்ளைட் டிக்கெட் அவங்க கம்பெனிதான் புக் பண்ணியிருக்கும். எந்த ஃப்ளைட்ன்னு தெரிஞ்சுட்டா புக்கிங் டீட்டெயில் பார்த்தா போதும்.” என்றவளுக்கு அந்தத் தகவல்களைத் திரட்டுவது அத்தனை எளிதல்ல என்பது நன்றாகவே தெரியும். எல்லா விமான நிறுவனங்களும் பயணிகளின் தகவல்களை மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கும்.

“கொஞ்சம் ரிஸ்க்தான் மா. ஆனா, நமக்கு வேற வழியில்ல” என்றாள் சோர்வுடன்.

மனத்தில் குழப்பங்கள் அதிகரிக்க, “பவித்ரன், நானே ஏர்போர்ட் வந்து என்கொயர் பண்ணட்டா? ப்ராப்பரா கம்ப்ளைண்ட் பண்ணிடவா? நீ என்ன சஜெஸ்ட் பண்ணுவ?” என்று கேட்டு நண்பனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினாள். அவனுக்கு வாட்ஸ்அப் செய்தி செல்லவில்லை. உடனே அவனை அலைபேசியில் அழைத்தாள். அழைப்பும் செல்லவில்லை.

“என்னம்மா இவனுக்குக் கால் போக மாட்டேங்குது? என் நேரம் எப்படி இருக்குன்னு பாரு.” என்று புலம்பியபடி திரும்பவும் முயற்சித்தாள். மூன்றாம் முயற்சியில் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்றது கணினி குரல்.

“போதும்மா” என்று அம்மாவை தடுத்தாள். அதற்கு மேல் உணவு உள்ளிறங்கும் என்று அவளுக்குத் தோன்றவில்லை.

அம்மா சென்றதும் கணவனின் வாட்ஸ்அப், ஈமெயில், முகநூல் பக்கம் என எல்லாப் பக்கமும் திரும்பச் சென்று பார்த்தாள். எந்த மாற்றமும் இல்லை. அவளின் செய்தியே அவனைச் சேராத போது பதில் எங்கிருந்து வரப் போகிறது.

மகளின் மனநிலை புரிந்து அவளுக்குத் தனிமை கொடுத்து விட்டு, கற்பகத்துடன் அமர்ந்தார் இந்திராணி.

இங்கே ஆழியின் தேடுதல் வேட்டை மீண்டும் தொடங்கியது. காலையில் விட்ட இடத்தில் இருந்து இப்பொழுது திரும்பத் தேட ஆரம்பித்தாள்.

அந்த இரும்பு அலமாரியின் ஒவ்வொரு பகுதியையும் ஆராய்ந்தாள்.

இம்முறை அடித்தட்டில் மறைவாக வைக்கப்பட்டிருந்த பிரித்வியின் கோப்பு ஒன்று கையில் சிக்கியது.

“கடவுளே இதுலயாவது ஏதாவது இன்ஃபர்மேஷன் இருக்கணும்” என்று அனிச்சையாக முணுமுணுத்தது அவள் இதழ்கள்.

அந்தக் கோப்பை பிரித்தால் முதல் பக்கத்திலேயே அச்சிடப்பட்ட அவளின் புகைப்படம் இருந்தது.

இந்திராணி திருமணத் தரகரிடம் கொடுத்திருந்த புகைப்படம் அது. அதை இன்னமும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான்.

“பிராடு பிரித்வி”

அதனோடு அவளின் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் அங்கிருந்தது. அதையெல்லாம் ஒதுக்கி மேலும் பக்கங்களைப் புரட்டினாள்.

“ஓயாசிஸ் குளோபல்” என்ற பெயரில் இருந்த அந்த ஆவணத்தை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

அது துபாயை மையமாகக் கொண்டு இயங்கும் கப்பல் பணிகளுக்கான நிறுவனம். அதில் முதல் கட்ட நேர்காணலை வெற்றிகரமாக முடித்திருந்தான் பிரித்விராஜன். அதற்காக அந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தார்கள் அவர்கள். அவனுக்கு வந்திருந்த இமெயிலை பிரிண்ட் செய்து வைத்திருந்தான்.

அதில் அவனது தனிப்பட்ட ஆவணங்களை, மேலும் சில தகவல்களைக் கேட்டிருந்தார்கள் அந்த நிறுவனத்தார். இரண்டாம் கட்ட நேர்காணலை விரைவில் எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்திருந்தார்கள்.

“இந்த வேலைக்கு எப்போ அப்ளை பண்ணார்? என்கிட்ட சொல்லவே இல்ல? ஒருவேளை இந்த வேலை அவருக்குக் கிடைக்கலையா? முதல்ல எதுக்காகத் துபாய்க்கு வேலைக்குப் போகணும்னு யோசிச்சார்? எதுவுமே என்கிட்ட சொல்லல. பொறுப்பே இல்லாத பிரித்வி” என்று காகிதத்தைப் பார்த்து கத்தினாள்.

“டேட் பார்ப்போம்” என்று தேதியை பார்த்தாள். சரியாக ஐந்தரை மாதங்களுக்கு முந்தைய தேதியில் அனுப்பப்பட்டிருந்தது அந்தக் கடிதம்.

“அப்படின்னா, அப்படின்னா? பிரித்வி புது வேலைக்கு டிரை பண்ணாரா? ஏன்? நான் அவரை விட்டு போனதாலயா? எனக்காகவா? இந்த வேலை அவருக்குக் கிடைக்கலையா? செகண்ட் ரவுண்டு இன்டர்வியூ போனாரா? இல்லையா? ஐயோ எதுவும் தெரியாம மண்டை காயுதே” என்று கத்தி படபடவென அந்தக் கோப்பில் இருந்த மற்ற ஆவணங்களையும் அவசரமாக ஆராய்ந்தாள். ம்ஹூம், அது குறித்த வேறு தகவல்களே இல்லை.

கோபமும் இயலாமையுமாக ஓங்கி நெற்றியில் அறைந்து கொண்டாள்.

கணவன் அந்த வேலைக்குச் செல்லவில்லை என்பது அவளுக்கு நிச்சயமாகத் தெரியும். முருகானந்தம் முப்பது வருடங்களுக்கு மேலாகத் துபாயில் பணிபுரிந்திருக்கிறார். பிரித்வி அங்கு வேலைக்குச் சென்றால் கண்டிப்பாக அவரிடம் தெரிவித்திருப்பான். மேலும், இந்தத் துபாய் நிறுவனம் கப்பல் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனம் மட்டுமே. அதற்குச் சொந்தமாகக் கப்பல்கள் ஏதுமில்லை என்று இணையத்தில் பார்த்து உறுதி செய்தாள்.

இம்முறையும் கப்பல் பணிக்குச் சென்றவன் கண்டிப்பாகத் துபாய்ச் சென்றிருக்க வாய்ப்பில்லை எனவும் அந்தக் கோப்பை மூடி அதே இடத்தில் வைத்தாள்.

பிரித்வியின் உடைகளைச் சீராக்குகையில் அவளின் உடைகளும் அவனதில் கலந்திருந்தது.

அவனது பொருட்களைத் தொடத் தொட அவனது நினைவுகள் ஆக்கிரமிக்க, அலமாரியை பூட்டி விட்டு மாடிக்குச் சென்றாள்.

அங்கிருந்த பூக்களைப் பறிக்க ஆளில்லாமல் மலர்ந்து வாடி உதிர்ந்து கிடந்தன. காய்கறி செடிகள் வெயிலில் வதங்கியிருந்தன. அங்கிருந்த குழாயில் நீர் பிடித்து ஒவ்வொரு செடியாக ஊற்றினாள்.

அதிலிருந்த வாடிய பூக்களைப் பார்க்கையில் பிரித்வியின் நினைவு வந்தது. மருத்துவமனை பணி என்பதால் அவள் பூ வைப்பதே அரிது. ஆனால், அவன் ஊருக்கு வரும் போதெல்லாம் அவளின் பின்னலின்‌‍ பூ இருக்கும்படி பார்த்துக் கொள்வார் இந்திராணி.

“உதிரி பூ வாங்கிக் கட்டினேன் ஆழி. முல்லைப் பூதான். பிரிட்ஜ்ல வச்சீன்னா நாலு நாளைக்கு வாடாம இருக்கும்” என்று காற்று புகாத டப்பாவில் போட்டு கொடுத்து விடுவார்.

“இப்படிப் பூ வச்சு நின்னு பிரித்வியைச் சோதிக்கலாமா ஆழி?” இதே மொட்டை மாடியில் நிற்கும் போது அவளுக்குக் கேட்டு விடக் கூடாது என்று சன்னக் குரலில் சொன்னான் பிரித்வி. ஆனால், அவளுக்குக் கேட்டிருந்தது.

“என்ன?”

“உன்னதான் ஆழி. என்ன என்னமோ..” என்று சொல்லி கண் சிமிட்டி தலைக் கோதி, “ம்க்கும், தொண்டை சிக்குது” என்றான் வலிய தொண்டையைச் செருமி சீர் செய்து.

“பார்த்து நீங்க சிக்கிட போறீங்க” என்று உதடு சுழித்துச் சொன்னவள், அவனை முறைத்து நடக்க, தன் மேல் உரசிச் சென்ற மனைவியை வாசம் பிடித்து ஆழ மூச்சிழுத்தான்.

செடிக்குத் தண்ணீர் ஊற்றிய ஆழி, மொட்டை மாடியில் இருந்த அறைக்குச் செல்ல, அவளைப் பிரித்வி பின் தொடர்ந்தான்.

“மாடில வந்துதான் காஃபி, சாப்பாடு எல்லாம் சாப்பிடுவீங்களா?” என்று திரும்பி கணவனை முறைத்தாள்.

“இந்தத் தட்டு, டம்ளர் எல்லாத்தையும் இங்கேயே போட்டுட்டு வந்துடுங்க. உங்கம்மா என்னைத் திட்டுறாங்க. என்னமோ நான்தான் உங்களை..”

“நீதான் என்னை.. ஹ்ம்ம்..” என்று அவன் நெருங்கி வர, “என்ன?” என்று பின்னகர்ந்தாள்.

“ஆழி..னி..” அடர்ந்த குரலில் அந்த ஆழியில் அழுத்தம் கொடுத்து அழைத்தான்.

“பிளீஸ்..”

“அடுத்தென்ன சாரியா?” மென்சிரிப்புடன் கிண்டலாக அவள் கேட்க, புன்னகையில் பிரிந்த அந்த இதழ்களில் பதிந்தது அவன் பார்வை.

“நான் போய் இதைக் கீழ வச்சுட்டு வர்றேன்” என்று ஆழினி நழுவ பார்க்க, “பொறுமையா வைக்கலாம் ஆழி. நம்ம வீடு தானே? இந்தத் தட்டும் டம்ளரும் எங்கேயும் ஓடிடாது. ஓகே?” என்று கேட்டான். அவள் புருவம் உயர்த்த, “இதுக்கு மேல என்னால பொறுமை காக்க முடியாது ஆழி. பிளீஸ், ஆழிக்குள்ள மூழ்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன் நான். நீயென்ன நினைக்கிற?” என்றான் கரகரத்த குரலில்.

“இங்க எந்த ஆழியும் என் கண்ணுக்கு தெரியலையே? அலை சத்தம் எனக்கு எதுவும் கேட்கலையே” என்றாள் நமுட்டு சிரிப்புடன்.

“இதோ எனக்கு எதிரில் இருக்கு ஆழி. அவ பேசுறது எல்லாமே அலையின் ஆர்ப்பரிப்புதான் எனக்கு..” பேசிக் கொண்டே நெருங்கி நின்றான்.

“ஆழியிலே முக்குளிக்கும் அழகே” அவன் கண்கள் ரசனையாய் அவள் முகத்தை வருட, உதடுகள் ரசித்துப் பாடல் வரிகளை உச்சரித்தன.

“உன்னை நினைக்கும் போதெல்லாம் இந்தப் பாட்டுதான் எனக்கு ஞாபகம் வரும் ஆழி. உன்னை நினைச்சாலே இந்தப் பாட்டைக் கேட்பேன்” மெல்ல அணைத்து அவள் காதில் சொன்னான்.

“உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி.. என் ஜென்மம் ஈடேறவா?”

“இதுவொரு வில்லங்கமான பாட்டு. இதைப் போய்..” கோபமாகச் சொல்ல முயன்றவளின் குரல் செல்லக் கோபத்துடன்தான் ஒலித்தது.

“ஹாஹாஹா ஆழி. இதுல ஒவ்வொரு வரியையும் நமக்காகவே ரசிச்சு எழுதியிருக்கார் கவிஞர்”

“ம்ம்ம்” என்றாள் போலி கோபத்துடன்.

“ம்ம்..” என்றான் அழுத்தமாக.

“உன் உம் என்ற சொல்லுக்கும் இம்மென்ற சொல்லுக்கும் இப்போதே தடை வைக்கவா?” பாடலை அவன் தொடர்ந்து பாட, சத்தமாகச் சிரிப்பது அவளின் முறையானது. அந்தச் சிரிப்பை சிந்த விடாமல் முத்தத்தால் அள்ளி பருகி, மொத்தமாக முத்தத்தில் அவளை மூழ்கடித்து, அவனும் ஆழிக்குள் மூழ்கி, அவசரமின்றி ஆழினியுடன் கரை சேர்ந்தான்.

பிரித்வி விடுமுறைக்கு ஊருக்கு வந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியிருந்தது. திருமணத்திற்குப் பின்னான முதல் விடுமுறை அது. அவன் வருவதை அறிந்து ஆழினி முன்கூட்டியே விடுமுறை எடுத்திருந்தாள். ஆனால், அவளுக்கு ஒரு வாரம்தான் விடுமுறை என்றதும் பிரித்வியின் முகமே மாறி விட்டது.

“ஒன் வீக்தான் லீவா?” என்று எவ்வித உணர்வையும் வெளிப்படுத்தாமல் அவளிடம் கேட்டான்.

“ஆமா” என்றவளுக்குத்தான் என்னவோ தவறு செய்த உணர்வு.

“நான் லீவ் கேட்டிருக்கேன். ரெண்டு, மூனு மாசம் லீவ்னா எனக்குப் பதிலா வேற நர்ஸ் போடணும். அதுக்கு டைம் வேணும்னு சொல்லியிருக்காங்க. ரெண்டு நாள்ல சொல்லிடுவாங்க. மோஸ்ட்லி லீவ் கிடைச்சிடும்” என்றாள் விளக்கமாக. அவன் முகம் மாறவேயில்லை.

“ஓகே” என்றதோடு மௌனமாய் அலைபேசியில் மூழ்கினான்.

“பிரித்வி”

“ம்ம்”

“கோபமா?”

“ச்சே, இல்ல ஆழி” என்றவன், நிமிர்ந்து அவளை நோக்கி, “எங்கயாவது வெளில போகலாமா?” என்று ஆர்வத்துடன் கேட்டான்.

அன்று இருவரும் ஒன்றாகக் கடற்கரை சென்று வந்தார்கள். பிரித்வி இயல்பாகப் பேசினான், சிரித்தான். ஆனால் இடைவெளியை கடைப்பிடித்தான். மனைவியை எந்த விதத்திலும் நெருங்கவில்லை அவன். ஒரே படுக்கைதான். ஆனாலும் தனித்திருந்தார்கள்.

ஒரு வாரம் கழித்து ஆழினி வேலைக்குச் செல்லத் தொடங்க, அவன்தான் அவளை மருத்துவமனையில் கொண்டு விட்டான். மாலை திரும்ப அழைத்து வந்தான்.

மறுவாரமே மருத்துவமனையில் போராடி இரண்டரை மாத விடுமுறைக்கு விண்ணப்பித்து வாங்கியிருந்தாள் அவள். மருத்துவர் கார்த்திக்கிடம் கணவனின் பணி சூழலை விளக்கி விடுமுறைக்கு அனுமதி பெற்றிருந்தாள்.

அன்று அவளை அழைத்துச் செல்ல வந்த பிரித்வியிடம், “நாளைக்கு உங்களுக்கு டிரைவர் வேலை கிடையாது. நான் வீட்லதான் இருப்பேன்” என்றாள்.

“ஓ? நாளைக்கு என்ன உனக்கு ஆஃபா?”

“ம்ம், ஆமா. ரெண்டர மாசம் ஆஃப்.” என்றாள் புன்னகையை மறைத்துத் தீவிரமாக. பிரித்வியின் கண்களில் சிரிப்பின் தடம் தெரிந்தது. ஒற்றை விரலால் மீசையை நீவி சிரிப்பை மறைத்தான்.

அவர்களுக்குத் திருமணமாகி ஒரு வருடமாகப் போகிறது. இத்தனை மாதங்கள் கிடைக்காத நெருக்கம் இப்போது வாய்த்தாலும் மனைவியை நெருங்க முடியாமல் அவன் மனமே அவனுக்குத் தடையாக நின்றது.

அவளின் விருப்பம், பிரியம், பிடித்தம் என்று யோசித்துத் தவித்துக் கொண்டிருந்தவனுக்கு ஆழினியின் மனதும் ஆழி போன்றது என்பது புரியவே பல நாள்கள் ஆனது போலும்.

அவளின் சின்னச் சின்னப் பேச்சுச் சிரிப்பு, அவனின் இரட்டை அர்த்த பேச்சை புரிந்தும் முறைக்காமல் வெட்கப்பட்டு அதைச் சாமர்த்தியமாக மறைத்தது அவனை மெல்ல மனைவியின் புறமாகச் சாய்த்திருந்தது.

இப்பொழுது தன் கைக்குள் இருந்தவளிடம், “ஆழி, ஐ மிஸ்ட்டு யூ” என்றான் அடர்ந்த கரகரத்த குரலில் அவளின் கண் பார்த்து. அத்தனை நெருக்கத்தில் அந்த வார்த்தைகளை அவன் சொன்னதும் அவளுக்குச் சிலிர்த்தது.

அந்நேரம் அவன் எதிர்பார்த்த பதிலை சொல்லவில்லை என்றாலும் தன் பதில் மொழியைச் செய்கையால் வெளிப்படுத்தினாள். அவள் கரம் கணவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டது.

How did this episode feel?
Rate this episode⭐ 5.0 (9)

2 thoughts

Stay Connected A simple, spam-free email update whenever a fresh chapter goes live.
About Us FAQ Contact Us Privacy Policy Terms & Conditions Disclaimer Copyrights
© 2026 Devi Manogaran Novels. All rights reserved.  ·  Created by Vel Studios
error: Content is protected !!