தெண்திரை தேடலே – 1
தெண்திரை தேடலே!
அத்தியாயம் – 1
மழை நாளின் சூரியன் மெல்ல மேலெழுந்து மேகங்களுக்கு நடுவில் மறைந்து கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தான். ஆதவனைப் பொருட்படுத்தாமல் அன்றாட வழக்கம் போல அகிலமே அந்த அதிகாலைப் பொழுதில் விழித்து பரபரப்பாக அன்றைய நாளுக்கான ஆயத்தங்களில் இறங்கியிருந்தது.
வீட்டுக்கு மிக அருகில் பால்காரரின் குரல் கேட்டது. அவர்கள் தெருவில் பள்ளி வாகனம் விரையும் ஒலி கேட்டது. பக்கத்து வீட்டில் இருந்து காய்கறி புலாவின் மணத்தோடு குக்கர் ஒலியெழுப்பும் ஓசையும் காதில் விழுந்தது.
ஆழினியின் ஆழ்ந்த உறக்கம் அதில் கலைய, தலையணையால் காதை இறுக பொத்தி படுத்தாள். இப்போது அவளின் படுக்கைக்கு அருகில் இருந்த அலாரம் பெரும் சத்தத்துடன் அடித்து அவளை எழுப்பி விட்டது.
மெல்ல கையை உயர்த்தி அதன் தலையைத் தட்டப் போனாள்.
“ஆழி, ஆறு மணியாச்சு. லேட்டாகலையா உனக்கு? அப்புறம் நான் எழுப்பி விடலன்னு எங்கிட்ட மூஞ்சி காட்டாத சொல்லிட்டேன். எழுந்திரு” என்ற அம்மாவின் குரல் கேட்கவும், அலாரத்தின் தலையைத் தட்டின கையோடு கண்ணைத் திறந்து நிதானமாகச் சோம்பல் முறித்தாள்.
“எழுந்துட்டியா? என்ன அதிசயமா இருக்கு. ஒரே குரல்ல எழுந்துட்ட? எப்பவும் நாலைஞ்சு தடவ கத்தினா தானே எழுந்துப்ப?”
“ம்ம்ம்மா..”
“என்ன அம்மா? லேட்டாகுது பாரு. எழுந்து போய்க் குளிச்சுட்டு வா”
“காஃபி தாம்மா”
“பெட்ட விட்டு எழுந்துக்காம காபி கேட்குதா உனக்கு? போய்ப் பல்லு தேச்சுட்டு வா, அப்புறம் தர்றேன்”
“ம்ம்ம்” என்று முனகியபடி கட்டிலில் இருந்து கீழிறங்கினாள். அதன் பின்தான் அங்கிருந்து நகர்ந்தார் அவளின் அம்மா இந்திராணி.
ஆழினி குளித்து வெளிவருகையில் வீடு முழுக்கக் கலவையான மணம். சமையல் வாசமும், சாம்பிராணி வாசமும் கலந்து தெய்வீக நறுமணம் வீடு முழுக்கப் பரவி கிடந்தது போன்ற பிரம்மை.
அந்த மாதம் முழுக்க அவளுக்கு முதல் ஷிஃப்ட். அதிகாலை ஏழு மணிக்கே மருத்துவனையில் இருக்க வேண்டும். நேரம் இப்போதே ஆறு நாற்பத்தைந்து என்று சுவரில் இருந்த கடிகாரம் சொல்ல, அவசர அவசரமாக உடை மாற்றினாள்.
“ஆழி, இந்தா காபி. உனக்கு லேட்டாகலையா? இம்புட்டுப் பொறுமையா கிளம்பிட்டு இருக்க? குளிச்சுட்டு வந்தியா இல்லையா?” அம்மாவின் பரபரத்த குரலை கேட்டபடி அவசரமாக ஆடைக்குள் நுழைந்தாள். சுருக்கென்று நெஞ்சில் ஏதோ தைத்த உணர்வு.
“ஷ்ஷ்ஷ், அம்மா..” சுரீரென்று வலி நெஞ்சில் வர, அனிச்சையாய் வலக்கரம் உயர்ந்து நெஞ்சை அழுந்த நீவி விட்டது. ஆனாலும், ஆழ் நெஞ்சத்தில் அழுத்தமாய் வலி நீங்காமல் இருந்தது. அப்படியே கண்ணாடி முன்னிருந்த இருக்கை முன் அமர்ந்து விட்டாள். மெல்ல அந்தப் பொன்சரடை வெளியில் எடுத்து விருப்பு வெறுப்பில்லா உணர்வுகளுடன் வெரித்து, மிகக் கவனமாக அதை ஆடைக்குள் அமிழ்த்தினாள்.
இதை அணிந்ததில் இருந்து அவளுக்குக் கிட்டியது வலிகள் மட்டுமே. ஆனாலும்..
“ஆழி, காபி ஆறுது” மீண்டும் அம்மாவின் குரல். இங்கு வாழ்க்கையே ஆறி விட்டது அவளுக்கு. இதில் சூடான காப்பிதான் குறை என்ற முணுமுணுப்புடன் எழுந்துக் கொண்டாள்.
“வர்றேன்ம்மா” என்று பதில் குரல் கொடுத்து விட்டு அவள் தலைவார தொடங்க, “உன்ன எத்தன முறை ஆழி கூப்பிடுறது? இன்னும் சின்னப் பிள்ளையா நீ? ஒரு வேலையாவது நீயா செஞ்சுக்கறியா? எல்லாம் நான்தான் செய்யணுமா உனக்கு? எனக்கு மட்டும் நாலு கை, நாலு கால் இருக்கா? எப்போதான் உனக்குப் பொறுப்பு வருமோ? எனக்குத் தெரியல” என்ற அன்றாடப் புலம்பலுடன், “இந்தா மொதல்ல காபியை குடி” என்று ஆவி பறக்கும் சூடான காபியை நீட்டினார்.
ஒரு வார்த்தையும் பதில் பேசாமல் அதைக் கையில் வாங்கி அதன் வாசத்தையும், சிறு கசப்பான சுவையையும் ரசித்து அருந்தினாள்.
“நான் போய்த் தோசை ஊத்துறேன். டக்குன்னு சாப்பிட வா”
“மணி இப்பவே ஏழாகப் போகுதும்மா. சாப்பிட டைமில்ல, பேக் பண்ணி தாங்க. ஹாஸ்பிட்டல்ல போய்ச் சாப்பிட்டுக்கறேன்”
“எனக்குத் தெரியும். நீ இப்படிதான் சொல்லுவன்னு. அதுக்குதான் சீக்கிரமா எந்திரின்னு சொல்றது. ஒரு நாளாவது கேட்டா தானே? தெனம் இதே கதை. காலச் சாப்பாடு சாப்பிடாம இருக்கலாமா? அது நல்லதில்லன்னு உனக்குத் தெரியும் தானே? வேணும்னு என்னை டென்ஷன் பண்ண காலையிலேயே இப்படிப் பண்ணுவியா?”
“அம்மா, காலையிலயே ஆரம்பிக்காதம்மா” என்றாள், அலுத்த குரலில்.
“யாரு, நான் ஆரம்பிக்கறேனா? சொல்ல மாட்டா பின்ன. அங்கங்க போய்ப் பாரு. உன் வயசு பிள்ளைங்கலாம் எவ்ளோ பொறுப்பா இருக்காங்கன்னு, நீயும்தான் இருக்கியே. வீட்ல ஒரு வேலை செய்ய மாட்டேங்கற. சரி, அது கூடப் பார்க்க வேணாம் நீ. உன்னை நீயே ஒழுங்கா பார்த்துக்கறியா? அதுவும் இல்லையே. எல்லாத்துக்கும் நான் வேணும். இப்பிடியே இருந்தா..”
“நீங்க இப்படியே பேசிட்டே இருங்கம்மா. ஆனா என்னை ஒரு வேலை கூடச் செய்ய விடாதீங்க. என்ன?” என்று அவள் கோபமாகத் திருப்பிக் கேட்கவும், இந்திராவின் கோபத்தின் அளவு கூடியது.
“வீட்டு வேலைல நீ ஒன்னும் எனக்கு ஹெல்ப் பண்ண வேணாம். சீக்கிரமா எழுந்து டையத்துக்கு வேலைக்குப் போ. அப்புறமா எனக்குப் பதிலுக்குப் பதில் பேசுவ” எப்போதும் இறுதி வாக்கியம் அம்மாவினதாக இருக்க வேண்டும் போல. அதை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் என்று உணர்ந்தவள், மேலே எதுவும் பேசாமல் விருட்டென்று எழுந்து கொண்டாள். அவள் எழுந்த வேகத்தில் அவளின் கரமே நெஞ்சில் வேகமாகப் பதிந்து விலக, மீண்டும் சுருக்கென்று வலி. இம்முறை வலியில் லேசாகக் கண்ணீரே துளிர்த்து விட்டது.
“ப்ச்” என்ற சலிப்புடன், அதை உதறி நடந்தாள்.
“இப்போ என்னத்துக்கு உச்சு கொட்டி சலிச்சுக்கற? அப்படி என்ன சொல்லிட்டேன் நானு?” என்ற அம்மாவை, பிளீஸ்ம்மா என்று கண்களால் கெஞ்சி முன்னே நடந்தாள்.
இந்திராணி அவளுக்கு முன்னே விரைந்து தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றினார்.
“ம்மா, வேணாம்மா. சாப்பிட நேரமில்ல” என்று மறுத்தவளை கடுமையாக முறைத்தார்.
“நான் தோசை ஊத்துறேன். நீ ஹாஸ்பிட்டல் போய்ச் சாப்பிட்டுக்கோ” என்றார். அதற்கு மேல் மறுத்து பேசி அம்மாவை சோதிக்க விரும்பாமல் மௌனமாகத் தலையசைத்தாள்.
“லஞ்ச் பேக் பண்ணிட்டேன் பாரு. எடுத்துக்கோ. தக்காளி சோறு, பட்டாணி மசாலா வச்சருக்கேன். இன்னொரு குட்டி டிஃபன்ல தயிர் சோறும், ஊறுகாயும் இருக்கு. மறக்காம சாப்பிட்டுடு. அப்புறம் குடிக்கத் தண்ணி உன் பாட்டில்ல நிரப்பி வச்சிட்டேன். ஒரு ஆப்பிள்..”
“அம்மா, நான் என்ன சின்னப் பிள்ளையா மா? ஸ்கூலுக்கா போறேன்? இத்தனைய பேக் பண்ணியிருக்க?”
“ம்ம்ம், உன் பிள்ளையை ஸ்கூலுக்கு இது போல ரெடி பண்ணி அனுப்ப வேண்டிய வயசுல இன்னமும் உனக்குச் செஞ்சிட்டு இருக்கேன் நான். என்ன செய்ய நான் வாங்கிட்டு வந்த வரம் அப்படி.” என்று பெருமூச்சுடன் அங்கலாய்த்தார் இந்திராணி. அவர் நின்றிருந்த அடுப்பை விட அதிகமாக அனல் அடித்தது அவரது பெருமூச்சில்.
“புள்ளைங்க, புருஷன்னு நீ காலைல எழுந்து அரக்க பரக்க ஓடுவன்னு பார்த்தா. இப்பயும் உனக்காக நான்தான் ஓடிட்டு இருக்கேன். என் நேரத்த பார்த்தியா..”
“எனக்கு நேரமாச்சும்மா” அதற்கு மேல் அம்மாவின் புலம்பலை கேட்க முடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. உணவு நிரம்பிய பையை எடுத்துக் கொண்டு விறுவிறுவென்று வாசலை நோக்கி நடந்து விட்டாள்.
“ஆழி, இந்தா தோசையை மறந்துட்டு போற பாரு” அன்பும் அதட்டலும் கலந்த கலவை இந்திராணி. ஆனால் அவளால்தான் இரண்டையும் ஒன்று போலக் கையாள முடியவில்லை.
ஒரே நிமிடத்தில் வாசலை நெருங்கி தன் இரு சக்கர வாகனத்தை ஆக்கிரமித்தாள்.
“ஒரு நிமிஷம் நிக்க முடியாதா உன்னால? நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு உனக்கு மூக்கு மேல கோபம் வருது. இந்தக் கோபத்தாலதான் உன்னால அந்த வீட்ல சமாளிக்க முடியல”
‘இப்போ இந்தப் பேச்சு தேவையாம்மா’ என்று கண்ணால் வினவி, அவர் நீட்டிய பையை வாங்கிக் கொண்டாள்.
“லேட்டாகிடுச்சுன்னு வேகமா போகாத. பொறுமையா வண்டி ஓட்டிட்டு போ. ஹாஸ்பிடல் போனதும் போன் பண்ணு”
“ம்ம், சரிம்மா” என்றவளுக்கு எதையோ தவற விட்ட உணர்வு. வண்டியை மெதுவாக இயக்கி நகர்த்தினவள், சட்டென நிறுத்தி கைப்பையைத் துழாவினாள்.
அதில் அவள் தேடிய அலைபேசியைக் காணவில்லை. மணிக்கட்டில் இருந்த கடிகாரத்தில் நேரம் பார்த்தாள். ஏழு பத்து என்றது அது.
“அச்சோ..” என்று பதறி அவசரமாக வீட்டுக்குள் ஓடினாள்.
“என்ன ஆழி? என்னத்த மறந்த?”
“போன் ம்மா.” என்றவள், “பிளீஸ், எதுவும் சொல்லாதீங்க” என்று கத்தி விட்டு உள்ளே ஓடினாள்.
படுக்கையறை மேசையின் ஓரமாகக் கிடந்தது அலைபேசி. இரவு தூங்கப் போகும் போது தூக்கி போட்டது. நாலைந்து எட்டில் நெருங்கி அதைக் கையில் எடுத்தாள். வலக்கரம் தன்னிச்சையாக இயங்கி அதை இயக்க, விழிகள் மேலோட்டமாகத் திரையை நோக்கியது.
“மூன்று தவறிய அழைப்புகள்” என்றது திரை. தவற விடக் கூடாத அழைப்பொன்றும் இல்லை என்று தனக்குள்ளாகச் சொல்லிக் கொண்டு வாசலை நோக்கி விரைந்தாள்.
“பார்த்து போ ஆழி”
“சரிம்மா. நீங்க போய்ச் சாப்பிடுங்க முதல்ல. சாப்பிட்டு டேப்லெட் போடுங்க. நான் ஈவ்னிங் வந்துடுறேன். ஏதாவது வாங்கிட்டு வரணும்னா சொல்லுங்க வரும் போது வழியில வாங்கிட்டு வந்துடுறேன்”
“நீ வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமா நாம சேர்ந்து போய் வாங்கிக்கலாம். இப்போ பார்த்து போ” என்றார். தலைக்குக் கவசம் அணிந்து அம்மாவுக்கு தலையாட்டி விட்டு வாகனத்தை இயக்கி வாசலை கடந்தாள்.
அடுத்த இருபதாம் நிமிடம் இதயம் சிறப்பு மருத்துவமனையை அடைந்து விட்டாள்.
இன்று பணிக்கு தாமதமாகி விட்டது. அவளுக்கு முன்னால் மருத்துவர் வந்திருக்கக் கூடாது என்ற அல்ப பிரார்த்தனையுடன் உள்ளே ஓடினாள்.
வேகமாக தரைத் தளத்தில் இருந்த செவிலிகளுக்கான அறைக்குள் நுழைந்து சீருடைக்கு மாறினாள்.
“என்ன ஆழினி இன்னைக்கு லேட் போல?” அவளின் சக செவிலி ஜோசபின் கேட்க, “ஆமாக்கா. டாக்டர் வந்துட்டாரா?” என்று பதற்றத்துடன் கேட்டாள்.
“அவர் எப்போவோ வந்தாச்சே. ஏழு அடிக்க ஏழு நிமிஷம் இருக்கும் போதே வந்துட்டார்”
“அச்சோ, மாட்டினேன்” என்று நாக்கை கடித்துக் கண்ணை மூடித் திறந்தவளின் கைகள் லாகவமாக தன் நீண்ட பின்னலை கொண்டையிட்டது. அலைபேசியை எடுத்து அதன் சத்தத்தை அணைத்து விட்டுச் சட்டைப் பையில் அதைப் போட்டாள். ஐந்தே நிமிடத்தில் மூச்சு வாங்க இருதய அறுவை சிகிச்சை நிபுணர் கார்த்திக்கின் முன்னிருந்தாள்.
“குட் மார்னிங் டாக்டர்”
“குட் மார்னிங் ஆழினி” என்று நிமிர்ந்த அவர் கண்கள் அவளைத் தொட்டு சுவரைத் தொடவும், நேரத்தை பார்க்கிறார் என்று உணர்ந்து, “சாரி டாக்டர். ரொம்ப ட்ராஃபிக். அதான் லேட்டாகிடுச்சு” என்று அவளே காரணமும் சொன்னாள்.
சின்னத் தலையசைப்புடன் எழுந்து கொண்டார் மருத்துவர். பட்டெனப் பரபரப்பானது அவளின் துறை.
அவர்கள் பிரிவில் இருக்கும் உள்நோயாளிகளை மருத்துவர் சந்திக்கும் நேரம் அது. அவர் முன்னே நடக்க அவரோடு இணைந்து நடந்தாள்.
இரவு பணி முடித்துச் சென்றிருந்த செவிலி வித்யாவின் குறிப்புகளை வாசித்தபடியே விரைந்தாள்.
அது இருதய அறுவை சிகிச்சை பிரிவு. இதயம் பலவீனமான கைக் குழந்தை முதல் இதயச் செயலிழப்பு ஏற்பட்டிருந்த முதியோர் வரை அங்கிருந்தார்கள்.
ஒவ்வொரு அறையாகச் சென்று அவர்களைப் பரிசோதித்து, நலன் விசாரித்து, அன்றைய நாளுக்கான மருந்துகளைப் பரிந்துரைத்து திரும்ப மருத்துவர் அறைக்குள் திரும்புகையில் மணி ஒன்பதாகியிருந்தது.
அதற்குள் மருத்துவரை சந்திக்க முன்பதிவு பெற்றிருந்த வெளிநோயாளிகள் காத்திருந்தார்கள்.
“ஒரு டென் மினிட்ஸ்ல நான் வந்துடுறேன். அதுவரைக்கும் பார்த்துக்கோங்க.” என்று அவளிடமும், மூத்த செவிலி விஷ்ணுபிரியாவிடமும் தகவல் தெரிவித்து விட்டு அவரது ஓய்வறை நோக்கி நடந்தார் கார்த்திக்.
“விஷ்ணுக்கா, நான் தண்ணி குடிச்சுட்டு வந்துடுறேன்க்கா”
“சாப்பிட்டியா?”
“எங்கக்கா? நான் இன்னைக்கு வந்ததே லேட். இதுல பிரேக்பாஸ்ட் சாப்பிடணும்னு போய் இருந்தேன். அவ்ளோதான்” என்றவள், அந்த அறையின் மூலையில் இருந்த தண்ணீரை எடுத்துத் தொண்டையில் சரித்தாள். கொடுமைக்கென்று இப்போது பார்த்து அவளுக்குப் பசித்துத் தொலைத்தது.
“நான் இங்க பார்த்துக்கறேன். நீ போய்ச் சாப்பிட்டு வா. ஓடு”
“இல்லக்கா, இருக்கட்டும். அப்புறமா சாப்பிட்டுக்கறேன்” என்றாள்.
‘நர்ஸுக்கு படிச்சுருக்கத்தானே? ஊர்ல இருக்க எல்லாருக்கும் வைத்தியம் பாரு. ஆனா டயத்துக்கு உன் வயித்துக்குச் சாப்பிடாத. அல்சரை இழுத்து வச்சுக்கோ’ இந்திராணி திட்டுவது போல மனத்தின் குரல் ஒலிக்க, அதை உதாசீனம் செய்து விட்டு வேலையில் மூழ்கினாள்.
அங்குக் காத்திருந்த நோயாளிகளின் எடை, இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்து, அவர்கள் உடம்புக்கு என்ன செய்கிறது, எதற்காக மருத்துவரிடம் வந்திருக்கிறார்கள் என்பதைக் கேட்டறிந்து அவர்களின் கோப்பில் பதிந்து வைத்தாள்.
அந்நேரம் பார்த்து அவளின் அலைபேசி அதிர்ந்து அவளின் கவனத்தை ஈர்த்தது. சட்டென அதை எடுத்துப் பார்க்க, அம்மாதான் அழைத்துக் கொண்டிருந்தார்.
“சொல்லுங்கம்மா” என்றாள் குரலை தழைத்து.
“சாப்பிட்டியா ஆழி? ஹாஸ்பிடல் போய்ட்டு கூப்பிட சொன்னேன் இல்ல?”
“சாப்பிட்டேன் ம்மா. அதுக்குதான் கூப்பிட்டீங்களா? வச்சுடவா?” அவள் படபடக்க, “சாப்பிட்டியா? சரி, தோசைக்கு என்ன சட்னி வச்சுருந்தேன்னு சொல்லு?” என்று கேட்டு, ‘நான் உன் அம்மா ஆழி’ என்று நிரூபித்தார் இந்திராணி.
“டாக்டர் இருக்கார்ம்மா. நான் அப்புறமா பேசுறேன். வைங்க” அம்மா பேச வாய்ப்புக் கொடுக்காமல் அழைப்பை துண்டித்து விட்டு மீண்டும் சட்டைப் பையில் அலைபேசியைத் திணிக்கப் போனவளின் விழிகள் ஒருமுறை அலைபேசி திரையை நோக்கியது. மீண்டும் அதே எண்ணில் இருந்து தவறிய அழைப்பு.
இம்முறை லேசான எரிச்சல் உண்டானது. நேற்றிரவும் அழைத்திருக்கிறார். இப்போதும் அழைத்திருக்கிறார் என்னவாக இருக்கும் என்று அவளின் சிந்தனை சிதற, “சிஸ்டர்” என்ற அழைப்பு அவளைப் பணிக்கு இழுத்து வந்தது.
அலைபேசியைப் பையில் போட்டு விட்டு வேலையில் மூழ்கினாள். சிறிது நேரத்தில் மருத்துவர் வந்து விட அதன் பிறகு அவளுக்கு யோசிக்க நேரமின்றிப் போனது.
ஓரளவு கூட்டம் குறைந்து அவள் ஓய்வாக அமர நேரம் கிடைக்கையில் மணிக்கட்டை உயர்த்தி நேரம் பார்த்தாள். மதியம் ஒன்று பத்து என்றது கடிகாரம்.
“நீ போய் லஞ்ச் சாப்பிட்டு வா ஆழி. செகண்ட் ஷிஃப்ட் வாணி இப்போ வந்துடுவாங்க. நாங்க பார்த்துக்கறோம். போ” என்று விஷ்ணுபிரியா அவளிடம் சொல்லவும், தலையசைத்தாள். அவளுக்கு நல்ல பசி. அதனால் இம்முறை மறுக்காமல் எழுந்து ஓய்வறை சென்றாள்.
மதிய உணவை பிரிக்கும் போதே அம்மாவின் நினைவு வந்தது. அலைபேசியை எடுத்து அம்மாவை அழைக்கப் போனாள். அந்நேரம் சொல்லி வைத்தது போல அவளின் அலைபேசிக்கு அழைப்பு வந்தது. கையில் வைத்திருக்கும் போதே வரும் அழைப்பை ஏனோ தவிர்க்கத் தோன்றவில்லை. அதனால் எடுத்துப் பேசினாள்.
ஒரே ஒரு நிமிட பேச்சுதான். ஆனால் அதற்குள் அவளின் இதயத் துடிப்பு இரண்டு மடங்காகியிருந்தது.
“ஒன்னும் இருக்காது. நீங்களா எதையாவது யோசிச்சுட்டு பயந்து எல்லாரையும் பயமுறுத்தாதீங்க” என்று திடமான குரலில் தீர்க்கமாகச் சொல்லி விட்டு வைத்தாள்.
அவள் முன் பிரித்த உணவு பரப்பிக் கிடந்தது. அவளுக்குப் பிடித்த தக்காளி சோறு, பட்டாணி மசாலா. ஆனால் சாப்பிடும் மனநிலைதான் இல்லை.
இதயம் தாறுமாறாகத் துடிக்க, அவசரமாய் மருத்துவர் கார்த்திக்கின் உதவி அவளுக்குத் தேவைப்பட்டது போன்றிருந்தது. தண்ணீர் குடித்துத் தன்னை ஆசுவாசப்படுத்தினாள். ஏனோ இனம் புரியாத உணர்வில் உடலெல்லாம் வியர்த்து, உள்ளங்கைகள் பிசுபிசுத்தது.
மீண்டும் அலைபேசியில் அழைப்பு வர தடுமாற்றத்துடன் தவிர்க்கப் போனாள். திரையில் அம்மாவின் பெயர் ஒளிரவும் எடுத்தாள்.
“ஆழி காலைல சாப்பிடல தானே நீ. மதியமாச்சும் சாப்பிடுற எண்ணம் இருக்கா உனக்கு? இல்ல, சாப்பிடாம இருந்து உடம்பை கெடுத்துக்கப் போறியா? உன் வாழ்க்கைதான் இப்படி ஆகிப் போச்சேன்னு..” அவரை மேலே பேச விடாமல், “அம்மா” என்று பல்லைக் கடித்துக் கொண்டு அழைத்தாள்.
“ஆமா, இதுக்கொன்னும் கொறச்சல் இல்ல..”
“சாப்பிடதான்ம்மா உக்காந்திருக்கேன். நீ போன வை. நான் சாப்பிட்டு கால் பண்றேன்” என்று சொன்னவள், பட்டென அழைப்பை துண்டித்தாள். அதன் பிறகும் அவள் கவனம் உணவின் மேல் திரும்பவில்லை.
அலைபேசியை எடுத்து மீண்டும் அதே எண்ணை அழைத்து விவரம் கேட்டாள்.
“நீ கொஞ்சம் வீடு வரைக்கும் வர முடியுமா? எனக்கு.. எங்களுக்கு என்ன பண்றதுன்னு தெரியல. யாரை கேட்கிறது, எங்க போன் பண்ணி விசாரிக்கறதுன்னு ஒன்னும் தெரியல. உன்னைத் தொல்ல பண்ண கூடாதுன்னுதான் நெனைச்சோம். ஆனா என்ன பண்ண..”
“நான் வீட்டுக்கு வர்றேன்” அவளையும் அறியாமல் அந்த வார்த்தைகளை உச்சரித்திருந்தாள்.
அவள் முன் பிரித்திருந்த உணவை ஒரு வாய் கூட உண்ணாமல் அப்படியே மீண்டும் மூடி வைத்து, நேராக விஷ்ணுபிரியாவிடம் சென்று விஷயத்தைப் பகிர்ந்தாள்.
“மணி ரெண்டாகப் போகுது ஆழி. உனக்கு இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு ஷிஃப்ட் முடிய. வெயிட் பண்ணு. எதுக்குப் பெர்மிஷன் போடுற? ஏற்கனவே காலையில வேற லேட்டா வந்திருக்க”
“இல்லக்கா. அவசரமா போகணும். இல்லன்னா இப்படிப் பெர்மிஷன் போட மாட்டேன்..”
“யாரு நீ பெர்மிஷன் போட மாட்ட? ஒரு மணி நேர பெர்மிஷன் இல்லம்மா. நீ மூனு மாசம் லீவ் கேட்கிற ஆளு. அதை மறந்துட்டியா?” கேலியாகத்தான் கேட்டார். அவள் முகத்தில் புன்னகையும், வெட்கமும் படர்ந்தது. அதே வேகத்தில் மறைந்தும் போனது.
யாருக்காக விடுமுறை எடுத்தாளோ, முன் அனுமதி வாங்குவதும் அவருக்காக என்று சொல்லவும் விஷ்ணுபிரியா புரிந்து கொண்டார்.
“சரி, போய் டாக்டர் கிட்ட சொல்லிட்டுக் கிளம்பு” என்றார்.
மருத்துவரின் முன் போய் நின்றாள். அவரும் அதே காரணத்தைத்தான் சொன்னார்.
“ஒன் ஹவர்ல உங்க டியூட்டி டைம் முடிஞ்சுடுமே சிஸ்டர்”
“இல்ல டாக்டர். எமர்ஜென்சின்னு மாமியார் கால் பண்ணாங்க. அதான்”
“சரி, கிளம்புங்க”
“தேங்க்ஸ் டாக்டர்” அடுத்தப் பத்தாம் நிமிடம் தன் இரு சக்கர வாகனத்தை ஆக்கிரமித்தாள். வண்டியை இயக்கும் முன் தோளில் துப்பட்டாவை சுற்றிப் போட்டு கட்டினாள். நெஞ்சில் கைப் பட்டு மீண்டும் சுருக்கென்று வலித்தது. அது நெஞ்சில் ஏறியதில் இருந்து அதே நிலைதான். ஒரு நெடுமூச்சுடன் சாலையைத் தொட்டாள்.
அந்நேரம் மகளை வீட்டில் எதிர்பார்த்திராத இந்திராணி, “என்ன ஆழி இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட?” என்று ஆச்சரியமாக வினவினார்.
“நான் சாப்பிட்டியான்னு கேட்டு போன் பண்ணப்போ பதிலே சொல்லாம காலை கட் பண்ண? இப்போ என்னன்னா நேரா வந்து நிக்கற? என்னாச்சு?” மகள் பதிலே பேசாமல் அமைதியாக வீட்டுக்குள் வரவும் அவளின் இயல்பு அறிந்து, “என்னாச்சு ஆழி?” என்று அவளின் கைப் பிடித்து அழுத்தமாகக் கேட்டார்.
மகளின் முகத்தைக் கூர்ந்தது அவர் கண்கள்.
“ஏதாவது பிரச்சினையா?”
“என் மாமியார் கால் பண்ணாங்க மா”
“எப்போ?”
“இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி. நீங்க கால் பண்றதுக்கு முன்னாடி”
“என்னவாம்?”
“நேத்து நைட்டும் கால் பண்ணியிருக்காங்க. நான் தூங்கிட்டேன். போன் சைலண்ட்ல இருக்கவும் எடுக்கல. இப்ப காலையில கால் பண்ணியிருந்தாங்க. டாக்டர் பேஷண்ட்ஸ் பார்த்திட்டு இருந்தார். அதான்..”
“இப்போ என்ன பிரச்சினை அந்தம்மாக்கு? அதைச் சொல்லு முதல்ல. எனக்குப் படபடன்னு வருது”
“நீ உக்காரும்மா முதல்ல. லஞ்ச் சாப்பிட்டியா? டேப்லெட் போட்டியா?” அம்மாவின் தோள் பிடித்துச் சோஃபாவில் அமர வைத்து விசாரித்தாள்.
“அதெல்லாம் ஆச்சு. நீ என்னன்னு சொல்லு ஆழி. எதுக்கு உன் மாமியார் போன் பண்ணுச்சு? இப்போ என்ன வேணுமாம் அந்தம்மாக்கு..?” என்று குரலை உயர்த்திக் கோபமாகக் கேட்டார்.
“ம்மா..” அவசரமாக அவர் கையில் தண்ணீரை திணித்து, “அவர்.. அவங்க பையன் ஒரு வாரமா போன் பண்ணலையாம் ம்மா” என்றாள்.
“ஓஹோ? பையன் போன் பண்ணலன்னதும்தான் அந்தம்மாக்கு உன் ஞாபகம் வருதோ? இப்பதான் மகனுக்கு ஒரு பொண்டாட்டி இருக்கா. அவகிட்ட பேசணும்னு தோணுச்சோ? அவங்களுக்குக் காரியம் ஆகணும்னா மட்டும்..”
“அம்மா…”
“என்ன ஆழி? இப்போ என்ன நான் புலம்பக் கூடாதா உனக்கு?”
“அவர் ஒரு வாரமா போன் பண்ணலையாம் ம்மா” என்றாள் மெய்யான பதற்றத்துடன்.
“ஆமா, அவர் பொண்டாட்டி உனக்குப் போன் பண்ணி எத்தன மாசம் ஆச்சு? அதைச் சொன்னியா அந்தம்மா கிட்ட? மகன் ஒரு வாரம் போன் பண்ணலைன்னதும் இப்படிப் பதறிட்டு உனக்குப் போன் பண்ணுது. இப்போ மட்டும் உன் நினைப்பு வந்துச்சோ?”
“வீட்டுக்கும் கால் பண்ணலயாம். அவர் தங்கச்சிக்கும் கால் பண்ணலயாம். அவருக்கு வாட்ஸ்அப் மெசேஜ் போகலையாம். அதான் பயப்படுறாங்க” என்றவளின் குரலில் லேசான பயம் இருக்கவே செய்தது. அவர்களுக்குள் என்ன வேண்டுமாலும் நிகழ்ந்திருக்கலாம். ஆனால், எங்கிருந்தாலும் அவன் நன்றாக இருக்க வேண்டும் என்பதே என்றைக்குமான அவளின் அவா.
ஆழினியின் பதற்றம் அப்போதுதான் இந்திராணிக்கும் தொற்றியது.
“மாப்ளக்கு கால் பண்ணி பேச வேண்டியது தானே அவங்க?”
“என்னம்மா தெரியாத மாதிரி கேட்கற? ஷிப்ல இருக்கார்ம்மா. அவர் நம்பர் வொர்க்காகாது”
“அச்சோ ஆழி. அப்படின்னா..”
“எதுவும் இருக்காதும்மா. நீ தேவையில்லாம பதறாத. நான் போய் என்னனு பார்த்திட்டு வர்றேன்”
“இல்ல. நீ தனியா போகாத. நானும் வர்றேன்”
“வேணாம்மா. நீ வந்தா அந்தம்மா ஏதாவது பேசும். நீ பதிலுக்குப் பேசுவ, சண்டையாகும். இந்த நிலைமையில..”
“சரி, நீ பார்த்துப் பத்திரமா போயிட்டு வா. என்ன ஏதுன்னு எனக்குப் போன் பண்ணு. நைட் வீட்டுக்கு வந்துடுவ தானே?”
“தெரியலம்மா. அங்க போயிட்டு போன் பண்றேன்” என்றவள், அறைக்குள் சென்று தனக்குத் தேவையான உடைகளை எடுத்து வைத்தாள். அதைப் பார்த்து ஏதோ சொல்லப் போன இந்திராணி, மகளின் முகம் பார்த்து வாய் மூடிக் கொண்டார்.
ஆழினி, அம்மாவை தவிர்த்து விட்டு வீட்டின் பின் பக்கம் போனாள்.
நிறையத் தயக்கம், மிகுந்த யோசனைக்குப் பிறகு முதன் முறையாக, அவர்களுக்குத் திருமணமான இந்த மூன்று ஆண்டுகளில் நிகழாத அதிசயமாக அவளே அவனை அழைத்தாள்.
“பிரித்விராஜன்” புருஷன் பெயரை அப்படித்தான் சேமித்து வைத்திருந்தாள்.
அவனுக்குக் கப்பலில் பணி. பொறியாளர் அவன். கடல் ஆறு மாதம், வீடு மூன்று மாதம் என்ற பணிச் சூழல். வேலையிடம் அமெரிக்கா. அப்படி நினைத்த நேரத்தில் அவனை அழைக்கவோ, பேசவோ, பார்க்கவோ முடியாத தொலைவில் இருந்தான்.
அவனது இந்திய தொடர்பு எண் அங்குச் சென்றதும் வேலை செய்யாது. வாட்ஸ்அப் பயன்பாட்டுக்கு மட்டுமே அந்த எண்ணை பயன்படுத்துவான். கப்பல் கடலில் இருக்கும் போது சரியாக நெட்வொர்க் கிடைக்காது என்று அமெரிக்க எண்ணும் பயன்படுத்துவதில்லை அவன்.
இதுநாள் வரை அவளை அவனாகத்தான் அழைப்பான். அவள் என்று இல்லை. அனைவருக்கும் அதுதான் நிலை.
இப்பொழுது அவனது இந்திய எண்ணுக்கு வாட்ஸப்பில் குறுஞ்செய்தி அனுப்பினாள்.
அதைப் பார்த்ததும் அவனாக ஒரு முடிவுக்கு வந்து விடக் கூடாதென்று, உங்கள் அம்மா உங்களைத் தேடுகிறார்கள் என்று கூடுதல் தகவல் சேர்த்து அனுப்பினாள்.
அந்தத் தகவல் அவனைச் சென்று சேரவே இல்லை. ஒற்றை டிக்குடன் அப்படியே இருந்தது.
ஒரு நிமிட இடைவெளிக்கு பிறகு அவனை வாட்ஸ்அப்பில் அழைத்தாள். ம்ஹூம், அழைப்பு செல்லவேயில்லை.
இப்போதுதான் உண்மையாகவே அவளைப் பதற்றம் தொற்றிக் கொண்டது.
அம்மாவிடம் சொல்லி விட்டு விரைந்து வெளியேறி அரை மணி நேர பயணத் தூரத்தில் இருந்த மாமியார் வீடு சென்றாள்.
அந்த வீட்டில் காலடி எடுத்து வைக்கும் போதே முதல் முறை திருமணமாகி அவனோடு ஒன்றாக வலது கால் எடுத்து வைத்த நினைவு வந்தது.
“வாம்மா ஆழினி” என்று மாமனார் முருகானந்தம் வர, “ஆழினி, அவன் உனக்கு எதுவும் போன் பண்ணானா? இப்படி ஒரு வாரத்துக்கு மேலலாம் போன் பண்ணாம இருக்க மாட்டான் மா. என்னாச்சோ தெரியலையே. என் புத்தி என்னென்னவோ யோசிச்சு பயங்காட்டுது. அவனுக்கு ஒன்னும் ஆகியிருக்காதுல்ல?” என்று கேட்டார் அவளின் மாமியார் கற்பகம்.
“ஒன்னும் ஆகியிருக்காதுல்ல?” அந்தக் கேள்வியில் உறைந்து நின்றாள்.
“என்னவாகியிருக்கும்?” என்று வாய் விட்டு என்ன மனத்திற்குள் கூடக் கேள்வி எழுப்ப அவளுக்கு பயமாக இருந்தது.
“நான் ராயல் கரீபியன் ஆஃபீஸ் நம்பர் தேடி எடுத்து கால் பண்ணி பார்க்கறேன்” என்று அவனது கப்பல் நிறுவனத்தின் பெயரை சொன்னாள்.
“நீ முதல்ல உக்காரும்மா” என்ற முருகானந்தம், அவள் சோபாவின் ஓரத்தில் அமர்ந்ததும், “அவன் இப்போ ராயல் கரீபியன்ல வேலை செய்யலம்மா. வேற ஷிப் மாறிட்டான்” என்றார் நிதானமாக.
“ஓ? எந்த ஷிப் மாமா?”
“ஏதோ பேர் சொன்னான்மா. எனக்கு.. எங்களுக்கு யாருக்கும் ஞாபகம் இல்ல” என்றார், அவளைப் பாராமல்.
“ஆங்..” என்று அதிர்ந்து அவரைப் பார்த்தாள். அவளுக்கு அது கூடத் தெரியாது. ஆக, அவர்களை அவள் குற்றம் சொல்லவும் முடியாது.
அவள் இதயத்துக்கும் தொண்டைக்கும் நடுவே பயபந்து ஒன்று உருண்டு ஓட, தனக்கு முன்னிருந்தவர்களைத் தவிர்க்கும் பொருட்டு, கூடத்து சுவரை ஏறிட்டாள்.
அங்கே இருந்தான் பிரித்விராஜன். அவர்களின் திருமணப் புகைப்படத்தில் புன்னகையுடன் அவள் தோளில் கைப் போட்டு அணைத்தபடி, அவர்களது அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்று அடித்துச் சத்தியம் செய்தால் கூட நம்ப முடியாத அளவுக்குப் பளிச்சென்று புன்னகை முகமாக நின்றிருந்தான்.
அன்று போல இன்றும் அவள்தான் குழம்பி போய் இருக்கிறாள். அவளை இப்படி இக்கட்டில் நிறுத்துவதே அவனுக்கு வேலையாகி விட்டது.
“உனக்கும் எந்த ஷிப்னு தெரியாதா?” மாமியாரின் கேள்வியில் சடாரென்று நிமிர்ந்து அவரைப் பார்த்தாள்.
“தெரியாது” தயக்கத்துடன் மெலிதாக முணுமுணுத்தாள். ஆனால் அவனைக் கண்டுபிடிக்க வேண்டும். அவர்களுக்காக அல்ல. அவளுக்காக.
How did this episode feel?
Rate this episode⭐ 4.8 (16)
6 thoughts
Sign in to share your thoughts
One tap with Google, no password needed.
Continue with Google Login or register with email
or write your comment below as a guest
அருமையான பதிவு
நன்றி மா ❤️
Hi
Hai Narmadha, how are you?
Nice start. Antha site la vandhadhu thane ma
Yes yes ma