தெண்திரை தேடலே – 2
கனமழை மாலையை இரவாக்கி இருந்தது. மழைக்கென்று ஒரு குணம் இருக்கிறது. எல்லாவற்றையும் எளிதில் இரட்டிப்பாக்கி விடும். சந்தோஷம், மகிழ்ச்சி, சோகம், துக்கம் என எதுவாக இருந்தாலும். இப்பொழுது ஆழினியின் பயத்தின் அளவை அதிகரிக்கச் செய்திருந்தது.
ஆழினி, அவனைப் பிரிந்து நான்கு மாதங்களுக்கு மேலாகிறது. நிரந்தரமாகப் பிரியும் முடிவிலும் இருக்கிறாள். அது அவனுக்கும் தெரியும். அவனது வீட்டினருக்கும் தெரியும். ஆனாலும் அவனுக்கு ஒன்றென்றால் மனம் அடித்துக் கொள்ளத்தான் செய்கிறது.
மாமியார் கற்பகத்தின் மேல் அவளுக்கு நிறைய வருத்தங்கள் உண்டு. அவரிடம் கேட்டால் அவள் குறித்த பெரிய புகார் பட்டியலே வைத்திருப்பார். இந்த மூன்று வருடங்களில் முந்நூறு முறை அதை வாசிக்கவும் செய்திருக்கிறார். அதைக் குறித்துக் கேட்டால் முக்கால் மணி நேரம் மூச்சு விடாமல் பேசவும் செய்வார். ஆனால், இன்றைக்கு இக்கட்டான சூழலில் அவளைத்தான் அழைத்திருக்கிறார். அவருக்கு நடந்தது அனைத்தும் தெரிந்தும், “உனக்கு எந்த ஷிப்னு தெரியாதா?” என்று அவளைக் கேள்வி கேட்கிறார். அடுத்தவனை நோக்கி விரல் நீட்டுவதுதான் எத்தனை எளிதாக இருக்கிறது.
“எங்கிட்ட புது ஷிப் பேர் சொன்னான் மா. நான்தான் அந்தக் கம்பெனி பேரை நோட் பண்ணி வைக்கல. என் தப்புதான்.” என்றார் முருகானந்தம்.
“ராயல் கரீபியன்லயே நிறைய ஷிப் இருக்கும் மாமா. இந்த டைம் அதுல வேற ஷிப் போறேன்னு சொன்னாரா? இல்ல..”
“இல்லம்மா. எனக்கு அது கூடத் தெரியாதா? பிரித்வி வேற கம்பெனிக்குத்தான் மாறுறேன்னு சொன்னான். எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு” என்றார் உறுதியாக.
“ம்ம்..” என்று நெற்றியை நீவியவளுக்குத் தலை வலிப்பது போலிருந்தது. காலையில் இருந்து எதுவுமே உண்ணவில்லை அவள். அதுவே லேசான படபடப்பை உண்டாக்கியிருந்தது.
“கற்பகம் காபி போடு” என்று முருகானந்தம் குரல் கொடுக்க, கண்ணைக் கசக்கிக் கொண்டு அமர்ந்திருந்த கற்பகம் நிமிர்ந்து கணவரை முறைத்தார்.
“நீங்க உக்காருங்கத்தே. நான் காபி போடுறேன்”
“இருக்கட்டும்மா. நீ உக்காரு. உங்கத்த போடட்டும்” என்றவர், “ம்ம்” என்றார் மனைவியைப் பார்த்து. கற்பகம் கணவரை முறைக்க, ஆழினி எழுந்துக் கொண்டாள்.
“நீ போன் பண்ணவும் ஹாஸ்பிடல்ல இருந்து அவசரமா கிளம்பி நேரா இங்க வந்திருக்கு மருமக. டியூட்டி டைம்ல பெர்மிஷன் போட்டு வந்திருக்கு. உன்னை மதிச்சு வந்திருக்கு. அந்தப் பிள்ளைக்கு ஒரு காபி கூடப் போட்டு குடுக்க முடியல உன்னால.. இல்ல?” முருகானந்தம் சிறுகுரலில் மனைவியைக் கடிந்து கொண்டது, அவளுக்குத் தெளிவாகவே கேட்டது.
அவள் வேலைக்குச் செல்வதே மாமியாருக்கு பிடிக்காது எனும் போது, அவளைப் பற்றியெல்லாம் அவர் ஏன் யோசிக்கப் போகிறார்.
“இந்த வீட்டு மருமகளா, பொறுப்பா உங்க மருமக நம்ம கூட இருந்திருந்தா இந்நேரம் நேரா நம்ம வீட்டுக்குதானே அவ வந்திருக்கணும்? இவ ஒழுங்கா வீட்ல இருந்திருந்தா நம்ம புள்ளையும் நல்லா இருந்திருப்பான் இல்ல? இவளாலதான் அவனுக்கு டென்ஷன். இப்போ அவனை என்ன சொன்னானு தெரியல. அவன் ஆளே காணாம போயிட்டான். என் புள்ளையைக் காணோம்னு நானே கவலையில இருக்கேன். உங்களுக்கு இப்போதான்..”
“ஷ்ஷ்ஷ், வாயை மூடு. நீ இப்படிப் பேசி பேசியேதான் நம்ம புள்ளை வாழ்க்கையை நாசமாக்கிட்ட..” கற்பகத்தின் புலம்பலை ஒரே அதட்டலில் நிறுத்தினார் முருகானந்தம்.
ஓர் இக்கட்டில் கூடத் தன்னைத்தான் அழைத்திருக்கிறார் மாமியார் என்று நினைத்தால், இவர் மாறவேயில்லை. அவரின் பேச்சு ஆழினியின் மனத்தில் கசப்பான உணர்வை ஏற்படுத்தியது.
அடுப்பில் பாலை ஏற்றி காஃபி கோப்பைகளையும், சர்க்கரையையும் எடுத்து வைத்து விட்டு, பால் பொங்குவதற்காகக் காத்திருந்தாள்.
பின்னிருந்து மென்மையாகக் கட்டியணைத்து காதுக்குள், “ஆழினி..” என்று கிசுகிசுப்பாக அடர்ந்த குரலில் அழைத்தான் பிரித்விராஜன். அவன் உதடுகளும், மீசையும் அவள் கன்னத்தில் கோலமிட, அவள் பெயரை உச்சரித்த அவன் குரலே உருகியது.
ஆழினியில் அந்த ஆழிக்கு மட்டும் அப்படியொரு அழுத்தம் கொடுப்பான். அவனுக்கு ஆழியின் மேலிருந்த மயக்கம் ஆழினியின் மேலில்லை என்ற கோபமும், வருத்தமும் அவளுக்கு நிரம்ப உண்டு.
அவள் கன்னம் தீண்டிய உதடுகள் மெல்ல மெல்ல இறங்கி கழுத்தில் புதைந்து ஈரமாய் முத்தமிட, “ப்ச், கிச்சன்ல வச்சு.. உங்கம்மா வரப் போறாங்க..” சலிப்பும், எரிச்சலுமாக அவனிடம் இருந்து விலகினாள்.
“ப்ச், இப்ப என்ன கிச்சன்ல இருக்கும் போது கிஸ் பண்ண கூடாதா? இப்படியே ஒரு ரூல் புக் ரெடி பண்ணிடு நர்ஸம்மா. எனக்கு ஃபாலோ பண்ண ஈசியாருக்கும்” என்றவனின் நக்கல் பேச்சில் நிச்சயமாகக் கோபம் இருந்தது.
“எங்கம்மாவ எல்லாத்துக்கும் இழுக்காத. நான் கிச்சனுக்குள்ள வர்றதை அவங்க பார்த்திட்டுதான் இருந்தாங்க. அப்புறம் எதுக்கு இங்க வரப் போறாங்க?” அந்தக் கேள்வியோடு அவளை முறைத்து திரும்பி படுக்கையறை நோக்கி நடந்து விட்டான்.
“ஆழினி” அவனது மூச்சுக் காற்றின் வெம்மையுடன், ஆழி என்று அவள் பெயரை அழுத்தி அவன் உச்சரிக்கும் அடர்ந்த குரல் அவள் மனத்தை இப்பொழுது தீண்ட, அப்படியே சமையல் மேடையில் சாய்ந்து கண் மூடினாள்.
அந்நேரம் பால் பொங்கி வழிந்து அவளை நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தது.
மூவருக்கும் காஃபி கலந்து தனக்கு ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டு அத்தை மாமாவுக்கும் கொடுத்தாள்.
அன்று காலை காஃபிக்குப் பின் இப்போதுதான் வயிற்றுக்குச் சிறிது கருணை காண்பிக்கிறாள். சற்றே தலைவலி குறைவது போலிருந்தது.
“அத்த” என்றழைத்து, “இதுக்கு முன்னாடி இப்படிக் கால் பண்ணாம இருந்திருக்காரா?” என்று கேட்டாள்.
“ம்ம்” என்று ஏககுரலில் ஆரம்பித்த கற்பகம் சற்றே தணிந்து, “ஏன் உனக்குத் தெரியாதா? எப்பவும் ரெண்டு நாளைக்கு ஒரு தடவ வீடியோ கால் பண்ணிடுவான்” என்றார்.
“நெட்வொர்க் சரியில்லன்னா நார்மல் காலாவது பண்ணிடுவான் மா.” என்ற முருகானந்தம், “சில நேரம் ஒரு நாலைஞ்சு நாள்லாம் பேசாம இருந்திருக்கான். ஆனா இப்படி ஒரு வாரம்லாம் பேசாம இருந்ததில்லம்மா. அதான் என்னமோ ஏதோன்னு மனசு கிடந்து அடிச்சுக்குது” என்று அலைபேசியில் மகனின் எண்ணை ஆராய்ந்தபடியே சொன்னார்.
பிரித்வியும் அவளும் பேசி ஐந்து மாதங்கள் ஆகிறது.
“பிளீஸ் என்னை விட்டுடுங்க பிரித்வி. என்னால இதுக்கும் மேல சமாளிக்க முடியும்னு தோனல. இதுதான் என் முடிவு. உங்களால உங்களை மாத்திக்க முடியாதப்போ, அதுவும் எனக்காக உங்களால மாற முடியாதப்போ, நான் மட்டும் உங்களுக்காக மாறணும்னு எப்படி எதிர்பார்க்கலாம் நீங்க?”
“என்னதான் உன் முடிவு ஆழி?” அத்தனை நெருக்கத்தில் நின்று பிரித்வி கேட்க, தடுமாறி சற்றே பின்னகர்ந்து நின்றவள், பதிலே சொல்லவில்லை. ஆனால், அவனைப் பிரிந்து அம்மா வீடு வந்து செயலில் தன் முடிவை சொன்னாள்.
அவள் முடிவை மாற்ற அவன் எந்தவித முயற்சிகளும் செய்யவில்லை. அவள் விலகி வரவும், அத்தோடு முடிந்தது என அவனும் விலகிக் கொண்டான். அப்போது நிம்மதியாக உணர்ந்தாள். இப்பொழுது யோசித்தால் கோபம் வந்து தொலைத்தது.
அதற்கு முன்பு வரை, அவர்களுக்குத் திருமணமான நாளில் இருந்து அவளுக்குத் தினமும் அழைக்கா விட்டாலும், அழைக்கும் போதெல்லாம் காணொளி அழைப்பில்தான் வருவான். அப்படி முகம் பார்த்துப் பேசுகையில் அவளால் மனத்தை மறைக்க முடியாது. அதற்காகவே நிறைய முறை அவனது அழைப்பை தவற விட்டிருக்கிறாள். ஆனாலும், தவறாமல் குறுஞ்செய்தி அனுப்பி விடுவான். அவள் பதில் அனுப்பும் வரைக்கும் தொடர்ந்து வரும் அவனது குறுஞ்செய்திகள்.
இப்போது அனைத்தையும் யோசிக்க அவன் மேலிருந்த வெறுப்பை, கோபத்தை இழுத்துப் பிடிப்பது கடினமாக இருக்கவும், ஆழ்ந்த மூச்செடுத்து மனத்தின் ஆழத்தில் அவன் மேலிருந்த வெறுப்பை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.
நான் இங்கு வந்திருக்கவே கூடாது என்று ஒரு மனம் சிந்திக்க, அவனுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது என்று இன்னொரு மனம் பதற, விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருந்தாள்.
அவனுக்கு என்னவானது, ஏன் இத்தனை நாள்களாக வீட்டினருக்கு அழைக்காமல் இருக்கிறான் என்று தெரிந்ததும், இங்கிருந்து சென்று விட வேண்டும் என்ற முடிவுடன் நிமிர்ந்து மாமியார், மாமனாரை பார்த்தாள்.
“மாமா, எதுவும் பிரச்சனையா? நீங்க எதுவும் அவர சத்தம் போட்டீங்களா? அவர்.. அவர் கூட உங்களுக்கு..” என்று திரும்பி அத்தையைப் பார்த்து விட்டு, “உங்க கூடச் சண்டை போட்டாரா அவர்? அதுனால கோபத்துல பேசாம இருக்காரா?” என்று கேட்டாள்.
“ம்ம்ம்” என்று முகத்தைச் சுளித்துக் கண்ணை உருட்டினார் கற்பகம். பின்னே அவளிடம் கோபப்பட்டுத் தானே பேசாமல் இருக்கிறான். அவர்களிடமும் அப்படியிருக்கிறானோ என்று அறிந்து கொள்ளக் கேட்டால் முறைக்கிறாரே.
“அப்படியெல்லாம் எதுவுமில்லம்மா. போன வாரம் வரைக்கும் நல்லாதான் பேசிட்டு இருந்தான். அப்பப்போ இவ… உங்கத்த கூடச் சண்டை போடுவான்தான். ஆனா, அதெல்லாம் மறுநாளே மறந்துட்டுப் பேசிடுவான்”
அப்படியானால் அவளிடம் மட்டும்தான் அவனது கோபத்தின் ஆயுள் நீளம் போலும்.
“மாமா, கொஞ்சம் நல்லா யோசிச்சு பாருங்களேன். என்ன கம்பெனின்னு சொன்னீங்கன்னா அவங்களைக் கான்டாக்ட் பண்ண ஈஸியாருக்கும்”
“அதுதான் மா யோசிக்கிறேன். வயசாகிடுச்சுல்ல. இந்த மறதியை வச்சுட்டு ஞாபகம் வந்து தொலைக்க மாட்டேங்குது..” என்றார் தலையில் அடித்துக் கொண்டு.
“அதான் அவருக்கு ஞாபகம் இல்லன்னு சொல்றார் இல்ல? அப்புறம் எதுக்குத் திருப்பித் திருப்பி அவரையே விசாரிச்சுட்டு இருக்க? உனக்குத் தெரியாதா? படிச்ச பொண்ணு தானே நீ? புருஷன் எங்க இருக்கான், என்ன பண்றான்னு கூடத் தெரியாம இருக்கியே..”
“இவ்ளோ பேசுறீங்களே, உங்க பையனுக்கு அவர் பொண்டாட்டி என்ன பண்றான்னு தெரியுமா? அவருக்குக் கொஞ்சமாவது பொறுப்பு இருந்தா பொண்டாட்டியை அம்போன்னு அம்மா வீட்ல விட்டுட்டு, அவகிட்ட ஒரு வார்த்தை கூடச் சொல்லாம அமெரிக்கா போவாரா? எப்பவாவது எனக்காக என் கூட நின்னுருக்காரா இந்த மூனு வருஷத்துல?” சட்டென்று கேட்டு விட்டாள். அதைக் கேட்ட பிறகே இந்நேரம் கேட்டிருக்க வேண்டாமோ என்று வருந்தவும் செய்தாள்.
“அப்ப அமெரிக்காதான் போய் இருக்கானா மா?” அந்தக் களேபரத்திலும் முருகானந்தம் சந்தேகம் கேட்க அவரை அதிர்ச்சியுடன் ஏறிட்டாள்.
“அப்போ இந்த டைம் அவர் அமெரிக்கா போகலையா மாமா? வேறெந்த நாடுன்னு.. உங்ககிட்ட ஏதாவது சொன்னாரா?”
“எப்பவும் டிக்கெட் வந்ததும் சொல்லுவான் மா. இந்த டைம்.. நீங்க.. நீ இல்லன்ற கோபத்துல எங்க கூடச் சரியா பேசல. அவன் கிளம்புறதுக்கு ரெண்டு நாள் முன்னாடிதான் எங்ககிட்ட சொன்னான்..” என்றார் தயக்கத்துடன்.
இப்போதுதான் அமெரிக்கக் கப்பல் நிறுவனங்கள் அனைத்தின் பெயரையும் இணையத்தில் தேடி எடுக்க வேண்டும். அதிலிருந்து பிரித்வி பணிபுரியும் நிறுவனத்தைக் கண்டறிந்து விடலாம் என்று நினைத்திருந்தாள். அதிலும் இப்போது சிக்கல் எழவும் மனத்தில் விரும்பத்தகாத உணர்வொன்று வேரூன்றியது.
“அமெரிக்கா இல்லாம வேற நாடுன்னா விசா அப்ளை பண்ண.. இல்லனா விசா இன்டர்வியூ போய் இருப்பாரே மாமா. அப்படி எதுக்கும் போனாரா இந்த லீவ்ல? எம்பசிக்கு போறேன்னு எப்பவாவது உங்ககிட்ட சொன்னாரா?” கேள்வியை மாமாவிடம் கேட்டாலும், பதிலுக்காக அத்தையைக் கூர்ந்தது அவள் கண்கள்.
“இல்லையே. நீ போனதில் இருந்து எங்கயும் போகல அவன். வீட்டுக்குள்ளயேதான் அடைஞ்சு கிடந்தான். அந்த ரூமை விட்டு வெளியில வரல” என்ற கற்பகத்தின் குரலில் அப்பட்டமாக வெளிப்பட்டது கோபம்.
‘பிராடு பிரித்வி. பேரை பாரு பிரித்விராஜன். பெரிய ராஜ பரம்பரை. பிராடுன்னு பேர் வச்சுருக்கணும், பொருத்தமா இருந்திருக்கும்.’ எத்தனையோ முறை அவன் காதுபடவே முணுமுணுத்திருக்கிறாள்.
அதைக் கேட்டதும் சத்தமாகச் சிரித்து, “ஹாஹாஹா ஆழினி. ஆழி உனக்கேத்த பேர். அதுனால நீ பேரை மாத்தவே வேணாம்” என்பான். அதற்கும் சேர்த்தே அவனைப் பேசியிருக்கிறாள்.
அவன் பணிபுரியும் கப்பல் நிறுவனம் அமெரிக்காவை மையமாகக் கொண்டது என்றாலும், பயணிகளை ஏற்றிக் கொண்டு உலகம் முழுவதும் பயணிக்கும். அவர்கள் நிறுவனத்துக்குச் சொந்தமாக 25 கப்பல்கள், இல்லை அதற்கு அதிகமாகவே இருக்கிறது. அனைத்தும், அனைத்து வசதிகளும் கொண்ட, பத்திற்கும் மேலான அடுக்குகள் கொண்ட அதிநவீன சொகுசு கப்பல்கள்.
ஒவ்வொன்றும் வெவ்வேறு நாடுகளுக்குப் பயணிகளை ஏற்றிச் செல்லும் சுற்றுலா கப்பல்கள். பொதுவாக ஒரே கப்பலில் பணி புரியும் சூழல் இவர்களுக்கு அமையாது.
ஒவ்வொரு முறையும் பணியாளர் தேவையைப் பொறுத்து தேவையான கப்பலுக்கு அனுப்பி வைப்பார்கள் நிறுவனத்தினர்.
இவர்கள் பணியில் சேர வேண்டிய கப்பல் அமெரிக்காவில் இருந்தால் மட்டுமே அமெரிக்கா சொல்வர். இல்லையேல் எந்த நாட்டில் கப்பல் நிற்கிறதோ அதற்கேற்ப விசா முதற்கொண்டு தேவையான நடைமுறைகள் கவனித்து அங்கு அனுப்பி வைப்பார்கள்.
அவர்களுக்குத் திருமணமான புதிதில் அமெரிக்கா சென்றான் பிரித்வி. இரண்டாம் முறை இங்கிலாந்தில் உள்ள சவுத் ஹாம்டன் துறைமுகத்தில் காத்திருந்தது அவனது கப்பல். கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கப்பல் அங்குதான் இருந்தது. (Drydock) டிரைடாக் எனப்படும் கப்பல் பராமரிப்பு பணிக்காக அங்கிருந்தது. அதன் பின்னர்ப் பயணிகளை ஏற்றிக் கொண்டு அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்திற்குச் சென்றது.
இப்போது எங்குச் சென்றிருக்கிறானோ? அவனுக்கு மட்டுமல்ல. யாருக்குமே பொறுப்பில்லை. அக்கறையுமில்லை. கொஞ்சம் கடுமையாக இருந்தாலும் அதுதான் நிதர்சனம் எனப் புரிய, தன்னையும் சேர்த்தே மனத்தில் வதைத்துக் கொண்டாள்.
“அவர் ப்ரண்ட்ஸ் யாரோட நம்பராவது உங்ககிட்ட இருக்கா மாமா?”
“எல்லாத்துக்கும் எங்களையே கேக்கறியே? அப்போ உனக்கு என்னதான் தெரியும்? புருஷன் எங்க? அவன் என்னவானான்? அவன் கிட்ட பேசணும்.. பார்க்கணும்.. எந்த அக்கறையும் கிடையாது உனக்கு. இல்ல?” கற்பகம் கத்தவும், “இதையே உங்க பையன் கிட்ட எப்பவாவது கேட்டிருக்கீங்களாத்தே? இந்த அஞ்சு மாசத்துல.. இல்ல, அதுக்கும் முன்னாடி..?” என்று அழுத்தமாகக் கேட்டாள்.
“அவன் கண் காணாத தூரத்துல கடல்ல வேலை பார்க்கறான். அவனைச் சொல்ற நீ..”
“அப்படிக் கண் காணாத தூரத்துல கடல்ல வேலைக்குப் போயே ஆகணும்னு உங்க புள்ளைய கட்டாயப்படுத்தி நானா அனுப்பினேன்?” அவளும் பதிலுக்குப் பேச, “அவ பேசுறான்னு நீயும் பேசாதம்மா” என்றார் முருகானந்தம், அவளைப் பார்த்து.
அவளுக்கு அந்தச் சூழலே பிடிக்கவில்லை.
பிரித்விராஜனுடனான வாழ்க்கையே வேண்டாம் என்று ஒதுங்கி சென்று விட்டவளை, இழுத்துக் கொண்டு வந்து, நடுவீட்டில் அமர்த்தி என்னவெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார் இவர்.
அவனுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது என்று அவள் மனம் வேண்டுவது உண்மை. அதற்காக அவள் மனம் மாறி விடுமா என்றால் நிச்சயமாக இல்லை. அவளால் இப்படிக் கிடந்து அல்லாட முடியாது.
“நீ என்னம்மா கேட்ட?” மாமனார் முருகானந்தம் கேட்க,
“அவர் ப்ரண்ட்ஸ் யாரோட நம்பராவது உங்ககிட்ட இருக்கான்னு கேட்டேன் மாமா?” என்றாள்.
“இருக்கும்மா. இரு. என் போன்ல தேடி எடுத்துத் தர்றேன்”
“என்னைச் சில ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு கூட்டிட்டு போய் இருக்கார் மாமா. ஆனா, அவங்க எல்லாரும் சென்னையில் அவர் கூட வேலை பார்த்தவங்க. அவரோட காலேஜ்ல படிச்சவங்க. அது அப்போ.. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி மீட் பண்ணது. இப்போ யாரையும் எனக்கு ஞாபகம் இல்ல. அப்போ யாரோட நம்பரும் எனக்கு அவர் ஷேர் பண்ணவும் இல்ல..” அதைச் சொல்கையில், இந்த மூன்று வருடத்தில் என்ன விதமான திருமண வாழ்க்கை வாழ்ந்திருக்கிறோம் என்று அவளை நினைத்தே அவளுக்கு வேதனையாக இருந்தாலும், அதற்காகக் கொஞ்சமும் தன் மேல் பழி சுமத்திக் கொள்ளவில்லை அவள்.
How did this episode feel?
Rate this episode⭐ 4.9 (8)
5 thoughts
Sign in to share your thoughts
One tap with Google, no password needed.
Continue with Google Login or register with email
or write your comment below as a guest
Nice
Thanks ma ❤️
Nice . முன்பே படித்தத
Nice . முன்பே படித்தது போல தெரிகிறது.
எஸ் மா, முன்னே எழுதிய கதைதான்.