தெண்திரை தேடலே – 5
அத்தியாயம் – 5
ஆழினி அதற்கு மேல் அதிகம் யோசிக்காமல் எழுந்து அம்மாவை பின் தொடர்ந்தாள்.
“என்னம்மா நடக்குது இங்க?” அடுப்படிக்குள் நுழைந்ததும் அடிக்குரலில் அம்மாவிடம் சீறினாள்.
“என்ன சொல்றாங்க அவங்க? எனக்குப் புரியல? அவங்க பையனுக்குக் கல்யாணம் நிச்சயமாகி நின்னு போச்சா? இப்போ அவரை நான் கல்யாணம் பண்ணிக்கச் சரின்னு சொன்னேனே? எப்போம்மா நடந்தது இதெல்லாம்? எனக்குத் தெரியாம நான் எப்போம்மா சரின்னு சொன்னேன்? அவங்க இஷ்டத்துக்கு அடிச்சு விடுறாங்கன்னா, நீயும் அமைதியா இருக்க எல்லாத்தையும் கேட்டுட்டு?”
“இப்போ என்ன ஆழி நடந்துடுச்சு? எதுக்கு இப்படிக் கத்துற? அமைதியா பேசு. அவங்களுக்குக் கேட்க போகுது” என்று குரலை தழைத்து பதிலுக்குச் சீறியவர், “எனக்கு எல்லாம் தெரியும். எங்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டாங்க. எல்லாம் தெரிஞ்சுதான் அவங்களை வர சொன்னேன் நான். நீ என் பேச்சை மீற மாட்டேன்னு நம்பி நான் வாக்குக் குடுத்துட்டேன். என் மரியாதையைக் காப்பாத்துறது உன் கையிலதான் இருக்கு.”
“ம்மா..” கணத்தில் வார்த்தைகள் மறந்த நிலையில் அதிர்ந்து அம்மாவை பார்த்தது பார்த்தபடி நின்றாள்.
“வேற பொண்ணோட நிச்சயமானவர போய்..”
“அதான் நின்னு போச்சுன்னு சொல்றாங்கல்ல”
“காரணம் என்னனு தெரியாம எப்படிம்மா நான் ஓகே சொல்ல முடியும்? நிச்சயம் வரைக்கும் போய்க் கல்யாணத்தை நிறுத்தியிருக்காங்க. நாளைக்கு என்ன பண்ணுவாங்கன்னு”
“வாய மூடு ஆழி” என்றார் அடிக்குரலில்.
“அவங்க போனதுக்கு அப்புறம் இதப்பத்தி விலாவரியா பேசிக்கலாம். இப்போ வந்து ஒழுங்கா நல்ல மாதிரியா அவங்க கிட்ட பேசு. இந்தப் பையனை பிடிச்சுருக்குன்னு நாலு மாசத்துக்கு முன்னாடியே சொன்ன தானே நீ? இப்ப அத மட்டும் மனசுல வச்சுட்டு அவங்க கேட்டா சரின்னு சொல்லு. புரிஞ்சுதா?”
“அதெப்படிம்மா..”
“ஆழி..”
“நீங்க பண்றது உங்களுக்கே நல்லா இருக்காம்மா?”
“அவங்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்க வா..” என்று அவளின் கைப் பிடித்து இழுத்துப் போனார்.
பிரித்விராஜன் கேட்ட தண்ணீரை எடுத்துப் போகவில்லை அவள். அவன் பார்வை அவள் முகத்திலேயே நிலைத்திருக்க அமைதியாக அமர்ந்திருந்தான்.
அந்நேரம் அவர்கள் இருவரையும் பார்த்த முருகானந்தம்தான், அவர்களைச் சிறிது நேரம் தனியாகப் பேச சொல்லி அனுப்பி வைத்தார்.
அவள் வீட்டுப் பின் பகுதியில் சென்று நின்றார்கள். தோட்டம் என்ற பெயரில் நான்கு பூச்செடிகள், கத்திரி, வெண்டை செடிகள் நின்றிருக்க, அதனோடு அவர்களும் நின்றார்கள்.
“ஆழினி..” என்றழைத்து அவன்தான் பேச்சைத் தொடங்கினான்.
“சாரி” என்றான் எடுத்ததும்.
சடாரென்று திரும்பிப் பார்த்து எதற்கென்று விழிகளால் வினவினாள்.
“நீங்க கல்யாணத்துக்கு ஓகே சொன்னதா சொன்னாங்க எங்கம்மா. நடந்தது உங்களுக்குத் தெரியும்னு சொன்னாங்க. ஐ மீன்.. எனக்கு வேற ஒரு பொண்ணோட நிச்சயமாகி கல்யாணம் நின்னது தெரிஞ்சும் நீங்க ஓகே சொன்னதா சொன்னாங்க. ஆனா, உங்களுக்குத் தெரியாதுன்னு நினைக்கறேன். அதுனாலதான் எங்கம்மா பேசும் போது ஷாக்கானீங்க. இல்லையா? அதுக்குதான் சாரி” என்றான் உதடு பிரியாத புன்னகையுடன்.
ஆழினி படபடவென்று பேச போனாள். ஆனால், அம்மாவின் எச்சரிக்கை அவளை எச்சரித்து மௌனியாக்கியது.
“நீங்க கேட்கலன்னாலும் நானே சொல்லிடுறேன். ரெண்டு குடும்பத்துக்கும் பிடிச்சுதான் கல்யாண நிச்சயம் வரைக்கும் போச்சு. நான் ரொம்ப நாளா ஷிப் ஜாப் டிரை பண்ணிட்டு இருந்தேன். நான் எதிர்பார்த்த போஸ்டிங் இப்போதான் கிடைச்சது. அது அந்தப் பொண்ணுக்கும், அவங்க வீட்டுக்கும் பிடிக்கல. சோ..” என்றவன் லேசாகத் தோளை குலுக்கினான். நான்கு மாத கதையை நாலே வரிகளுக்குள் அடக்கி விட்டான். ஆனால், நான்கு பக்கங்களில் விளக்கம் தேவைப்பட்டது அவளுக்கு.
“சோ? அதுனால? முழுசா சொல்லி முடிங்க மகாராஜா” என்று கத்த வேண்டும் போலிருந்தது.
“சாரி” என்றாள் அவளும். அவனது புருவங்கள் உயர, கண்கள் அவளைக் கூர்ந்தது.
“எனக்கு டைம் வேணும்”
“ஒரு ஒன் ஹவர் போதுமா?” என்று தீவிரமாகக் கேட்டான்.
“ஒன் ஹவரா?” என்று கோபத்துடன் அவள் நிமிர, கண்களில் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் கைகட்டி அவளையே பார்த்திருந்தான்.
“நீங்க பொறுமையா யோசிச்சு சொல்லுங்க ஆழினி. ஒரு அவசரமும் இல்ல ஓகே? டேக் யுவர் ஓன் டைம்” என்றான் நிதானமாக.
“நீங்க நோ சொன்னாலும் எனக்கு ஓகேதான். எங்கம்மாக்காகதான் இங்க வந்தேன். நீங்களும் உங்கம்மாவாலதான் இங்க நிக்கறீங்கன்னு தெரியுது. எனக்கு நிச்சயம் நின்னதும் கல்யாணமே வேணாம், கப்பலுக்குப் போவோம்னு இருந்தேன். பட், நீங்களும் உங்க ஃபேமிலியும் சம்மதம் சொல்லிட்டீங்கன்னு சொல்லிதான் என்னைக் கூட்டிட்டு வந்தாங்க. இல்லன்னா வந்திருக்க.. சாரி” என்றான், அவள் கண்களைப் பார்த்து.
“உங்க எங்கேஜ்மெண்ட்.. அவங்க…” என்று அவள் தயங்க, “வீட்ல அரேஞ்ச் பண்ணதுதான்” என்றான் உதட்டோரம் துளிர்த்த புன்னகையுடன்.
“அவங்களைப் பிடிச்சுதானே நிச்சயம் வரைக்கும் போய் இருப்பீங்க..”
“பிடித்தம் வேற. பிடிப்பு வேறங்க ஆழினி.” என்றான் அழுத்தமாக. அவன் வார்த்தைகளின் அர்த்தம் விளங்கவே அவளுக்குச் சிறிது நேரம் பிடித்தது.
ஒருவரின் மேல் பிடிப்பு, பற்றுதல் அத்தனை எளிதில் வந்து விடாதுதான். ஆனாலும் முரண்டியது அவள் மனம்.
“டேக் யுவர் டைம் ஆழினி” என்று சொல்லி திரும்பி நடந்து விட்டான்.
“இன்னொரு பொண்ணு கூட நிச்சயம் வரைக்கும் போய் நின்னுருக்கு. நீ என்ன ஏதுன்னு விசாரிக்காம.. என்கிட்ட எதுவும் சொல்லாம… என்னை எப்படிம்மா ஃபோர்ஸ் பண்ண முடியுது உன்னால? எங்கிட்ட கேட்காம எப்படி நீ ஓகே சொல்லுவ?” அவர்கள் சென்ற பிறகு கோபமாக அம்மாவின் மேல் பாய்ந்தாள்.
“பைத்தியம் மாதிரி பேசாத ஆழி. எல்லாம் நான் நல்லா விசாரிச்சுட்டேன். உன் கல்யாண விஷயம் ஆழி, என்ன நடந்துன்னு விசாரிக்காம கண்ணை மூடிட்டு சரின்னு சொல்லுவேனா நானு? அம்மாவை பத்தி தெரியாதா உனக்கு?”
“கல்யாண நிச்சயம் நின்னதுன்னு அதெல்லாம் கூட ஓகே. ஆனா, அந்தப் பிரித்விராஜனுக்கு ஷிப்ல வேலையாம்மா. அது கண்டிப்பா எனக்குச் செட்டாகாது” என்றாள் மறுப்பாகத் தலையசைத்து.
“ஏன் செட்டாகாது? அந்தப் பையனுக்கு அமெரிக்கால வேலை. நல்ல சம்பளம். அங்க போய்க் கொஞ்ச மாசத்துல உன்னையும் கூப்பிட்டுக்கப் போறார். அப்புறம் என்ன உனக்குச் செட்டாகாது?” இந்திராணி கோபத்துடன் கேட்க, “அம்மா, ஷிப்ல ஃபேமிலிலாம் கூட்டிட்டு போக முடியாதும்மா” என்று அவள் சொன்னதை அவர் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.
“இவங்க வரதட்சணை கொஞ்சம் அதிகமா கேட்டிருக்காங்க. அதுனால அந்தப் பொண்ணு வீட்ல கல்யாணத்தை நிறுத்திட்டாங்களாம். நான் நல்லா விசாரிச்சுட்டேன். அதுனாலதான் கல்யாணம் நின்னிருக்கு. இப்போ வரதட்சணையான்னு அடுத்து ஆரம்பிக்காத. உன் தங்கச்சியைப் பத்தி தெரிஞ்சா யாரும் நம்ம குடும்பத்துல பொண்ணெடுக்க மாட்டாங்க. உங்க ரெண்டு பேரையும் ஒன்னு போலதான் வளர்த்தேன் நான். அவதான் அப்படிப் பண்ணிட்டான்னா.. நீயாவது நல்லபடியா கௌரவமா கல்யாணம் பண்ணிட்டு வாழணும்னு நான் நினைக்கிறேன். என் ஆசையை..” என்றவர் சட்டென்று கேவலுடன் அவளின் கைப் பிடித்துக் கொண்டார்.
“உங்கப்பா உங்க கல்யாணத்தை எப்படியெல்லாம் நடத்தணும்னு ஆசைப்பட்டார் தெரியுமா ஆழி? உங்கப்பா ஆசைக்காகவாவது இந்தக் கல்யாணத்துக்கு நீ சம்மதிக்கணும் ஆழி.”
“அம்மா, இன்னொரு பொண்ணு கூட நிச்சயமானவர எப்படிம்மா?”
“கல்யாண மேடை வரைக்கும் கூடப் போய் எத்தனையோ கல்யாணம் நடக்காம நின்னு போயிடும் ஆழி. அதுக்காக அடுத்து அவங்க கல்யாணமே பண்ணிக்கக் கூடாதுன்னு சொல்றியா?”
“ப்ச், நான் அப்படிச் சொல்லலம்மா. அந்தப் பொண்ணு வீடு கண்டிப்பா நம்மள விடப் பெரிய இடமாதான் இருந்திருக்கும். அவங்களால குடுக்க முடியாத வரதட்சணைய நாம எப்படிக் கொடுப்போம்?”
“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ ஏன் கவலைப்படுற?”
“பிளீஸ்ம்மா. எனக்கு என்னமோ..”
“இப்படியே எடுத்தெறிஞ்சு பேசாத ஆழி. உன் தங்கச்சி விஷயம் தெரிஞ்சா ஒருத்தன் பொண்ணு கேட்டு வர மாட்டான் நம்ம வீட்டுக்கு. இவங்க உன்னைப் பிடிச்சுருக்குன்னு அவங்களே வந்து பொண்ணு கேட்கறாங்க. அதை வேணாம்னு விடச் சொல்றியா என்ன? உங்கப்பா மாதிரி நானும் ஒருநாள் பொட்டுன்னு ஹார்ட் அட்டாக்ல போய்ச் சேரப் போறேன். ஐயோ என் பொண்ணு தனியா இருப்பாளேன்னு நிம்மதியே இல்லாம போகச் சொல்றியா என்னை?”
“உங்க ஹார்ட் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்குன்னு கார்த்திக் டாக்டர் சொல்லிட்டார்மா. உங்களுக்கு ஒன்னும் ஆகாது. அப்புறம் எனக்கும் நீங்க ஆசைப்பட்ட மாதிரி..”
“சரின்னு சொல்லு ஆழி பிளீஸ்.. அம்மாக்காக..” அவளைப் பேச விடாமல் கெஞ்சினார். கொஞ்ச நேரத்தில் கெஞ்சல் மிரட்டல் ஆனது.
ஆழினி தன் பிடியில் உறுதியாக நிற்க முயன்றாள். ம்ம், எங்கே முடிந்தது? இரண்டே நாள்களில் வேறு வழியின்றி அம்மாவின் மிரட்டலுக்கு விருப்பமில்லாமல் தலையசைத்தாள்.
உடனடியாகப் பிரித்விராஜன் குடும்பத்துக்குச் செய்தி சென்றது.
அடுத்தத் தினமே ஆழினியை தனியாகச் சந்தித்தான் அவன்.
அவனது முகத்துக்கு நேராக, அம்மாவின் வற்புறுத்தலின் காரணமாகத்தான் இந்தத் திருமணத்துக்குச் சம்மதிக்கிறேன் என்று வெளிப்படையாகச் சொல்லி விட்டாள்.
மேலும், அவன் கப்பல் பணிக்குச் செல்வதில் அவளுக்கு விருப்பமில்லை. அப்படிக் கடல் ஆறு மாதம், வீட்டில் மூன்று மாதம் என வாழ்வதெல்லாம் அவளுக்கு மிகவும் கடினம் என்றாள். ஏனோ அந்தக் கடைசி வாக்கியத்தை அவள் சொல்கையில் பிரித்விராஜன் உதடுகள் சிரிப்பில் வளைந்தது.
“ம்ம்” என்றான் மேஜையில் கையூன்றி அவளையே ஆழமாகப் பார்த்தபடி.
“என் பையன் பிரித்வி அப்பவே பிடிவாதமா உன்னைப் பொண்ணு பார்க்க வரணும்னு நின்னான். உன்ன பிடிச்சிருக்குன்னு சொன்னான்.” இதைப் பலமுறை கற்பகம் அவளிடம் சொல்லியிருக்கிறார். ஆனால், அது அவளைச் சரிக்கட்ட என்றே ஆழினி நினைத்திருந்தாள்.
“உன் பேருக்காகவே உன்னைப் பிடிச்சது ஆழினி” என்று பிரித்வியும் சொல்லியிருக்கிறான்தான். ஆனால், அப்போது அவளால்தான் அதை நம்ப முடியவில்லை.
இன்றைக்கு அவள் முன்னிருக்கும் இந்தப் புகைப்படத்தைப் பார்த்த பிறகு அவள் மனம் மொத்தமாகத் தடுமாறியது.
“பழசை யோசிக்காத ஆழி” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு எழுந்து அமர்ந்தாள். அலைபேசியை எடுத்து அவன் தங்கை லீலாவதியை அழைத்தாள்.
“அண்ணா என்கிட்ட பேசி பத்து நாளைக்கு மேலாகுது அண்ணி. எனக்கு வாரத்துக்கு ஒரு தடவதான் அண்ணா கால் பண்ணும்.” என்றாள் லீலாவதி.
“உங்கண்ணா இப்போ ஜாயின் பண்ணியிருக்கற கம்பெனி பேர் உங்களுக்குத் தெரியுமா அண்ணி?” ஆழிக்கும் அவளுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான்.
பிரித்விக்காக மட்டுமே இருவரும் பேசிக் கொள்வார்கள். அம்மாவின் அச்சுப் பிரதி லீலாவதி. மாமியார் கற்பகம் ஒருவிதம் என்றால், லீலாவதி அமைதியாக இருந்தே காலை வாரும் ரகம். திருமணமாகி சென்ற பின்னரும் எல்லாவற்றுக்கும் பெற்றோரை, அண்ணனை சுரண்டும் லீலாவதியை அந்த ஒரு காரணத்திற்காகவே அவளுக்குப் பிடிக்காமல் போனது.
“இப்போ ஜாயின் பண்ணியிருக்கக் கம்பெனின்னா? அண்ணே ராயல் கரீபியன்ல தானே வேலை பாக்குது?”
“இல்ல, வேற கம்பெனி மாறிட்டார்”
“ஓ, அண்ணே என்கிட்ட சொல்லவே இல்ல. ம்ம், நீங்க சொல்ல வேணாம்னு சொல்லி அதுனால..”
“எனக்கே தெரியாது.” என்றாள் கடுப்புடன்.
“ஓ, அப்படியா? அண்ணே உங்ககிட்டயே சொல்லலன்னா எங்கிட்ட மட்டும் எப்படிச் சொல்லும். உங்களுக்கே தெரியல. அப்புறம் என்னைக் கேட்டா..”
“லீலா அண்ணி பிளீஸ். உங்களுக்குத் தெரியுமா தெரியாதா? அதை மட்டும் சொல்லுங்க” என்றாள் அழுத்தமாக.
“அண்ணே என்கிட்ட சொல்லல. இருங்க, இவர்கிட்ட கேட்டு சொல்றேன்” என்றவள், கணவன் மற்றும் பிள்ளைகளிடம் கேட்டு விட்டு, “தெரியாது” என்ற பதிலைத்தான் மீண்டும் சொன்னாள்.
அப்படியே அலைபேசியைப் படுக்கையில் விட்டெறிந்தாள் ஆழினி.
“பிராடு பிரித்வி, எங்கடா போய்த் தொலஞ்ச..” மேஜை மேலிருந்த அவனது புகைப்படத்தை முறைத்து கத்தினாள்.
திருமணமாகி இந்த மூன்று வருடங்களில் அவனுக்காக, அவனில்லாமல் அவள் தனியாகத் தவித்த நாள்கள்தான் அதிகம். நாள்கள் என்ன மாதங்கள் என்று சொல்ல வேண்டும். ஆனால் அப்போதெல்லாம் எங்கோ ஆழிக்கு நடுவே அவன் வேலையாக இருக்கிறான் என்று ஆழினிக்கு தெரியும்.
அப்படியிருக்கையில் சில மாத பிரிவை தாங்க இயலாமல் நிரந்தரப் பிரிவை தேர்வு செய்தாள் அவள். ஆனால், அதற்காக அவளை இப்படி அல்லாட விடலாமா அவன்?
அந்தப் படுக்கை அறை வேறு பல்வேறு நிகழ்வுகளை நினைவுப்படுத்தி விட, மனத்தை ஒரு நிலைப்படுத்த அறையைச் சுற்றி வந்தவள், அவனது அலமாரியை திறந்தாள்.
குப்பென்று அவனது வாசனைத் திரவியத்தின் மணம் அவள் நாசியை நிறைத்தது.
மெல்ல மெல்ல ஆழ மூச்செடுத்து அலமாரியை ஆராய்ந்தாள்.
அங்கிருந்த கோப்புகளைக் கண்டதும் அதை அவசரமாக எடுத்துப் பிரித்தாள்.
அது அவன் பெயரிட்ட ராயல் கரீபியன் கப்பல் பணிக்கான ஒப்பந்த பத்திரம். அவள் விரல்கள் அந்தத் தாள்களை அவசரமாகப் புரட்டின. கண்கள் கணினி வேகத்தில் வாசித்தன.
அந்த ஒப்பந்தத்தின் பின்னிருந்த படிவத்தில் அவனது எமர்ஜென்சி கான்டாக்ட் என்பதற்கு நேராக, அவனது அவசர தொடர்புக்காகச் சேர்க்கப்பட்டிருந்த குடும்ப உறுப்பினரின் பெயருக்குப் பக்கத்தில், “மனைவி ஆழினி” என்றிருந்தது.
அவள் பெயர், அவளின் அலைபேசி எண், அவளின் ஈமெயில் முகவரி என்ற வரிசையில், வீட்டு முகவரியிலும் அவள் பெயரிட்டு என அனைத்திலும் அவளைத்தான் முதன்மைபடுத்தி இருந்தான் பிரித்விராஜன்.
அந்தக் காகிதத்தில் இருந்து விலகவில்லை வியப்பில் விரிந்திருந்த ஆழினியின் விழிகள்.
How did this episode feel?
Rate this episode⭐ 4.9 (10)
2 thoughts
Sign in to share your thoughts
One tap with Google, no password needed.
Continue with Google Login or register with email
or write your comment below as a guest
Super ud
Thank you ma ❤️