Chapter 4 of 21

தெண்திரை தேடலே – 4

October 23, 2026 · 11 min read · ⭐ 5.0 (9)

அத்தியாயம் – 4 

மூன்றரை வருடத்துக்கு முந்தைய புகைப்படம் அது. அவளுக்குத் திருமணத்திற்குப் பார்க்கும் போது பையன் வீட்டாரிடம் கொடுப்பதற்காக அம்மா தனியாக எடுத்து வைத்திருந்த புகைப்படம். வரன் பார்க்க கொடுக்கும் புகைப்படங்களுக்கென்றே பல வரைமுறைகள் இருக்க, அவள் பற்கள் தெரிய புன்னகைக்கும் இந்தப் புகைப்படத்தைக் கொடுக்கக் கூடாதென்று அம்மாவிடம் இருந்து அவள் பிடுங்கி வைத்த நினைவு.

அந்தப் புகைப்படம் பிரித்வியிடம் எப்போது வந்தது? எப்படி இத்தனை நாள்கள் தன் கண்ணில் படாமல் போனது? என்று யோசித்தபடி அப்படியே பொத்தென்று படுக்கையில் அமர்ந்தாள்.

கண்ணிமைக்கும் நொடிக்குள் உருண்டு அவள் மடியில் தலை வைத்துப் படுக்கும் பிரித்வியின் செயல் நினைவு வர, தலையை உலுக்கி அவன் நினைவை உதற முயன்றாள், முடியவில்லை. அந்தப் புகைப்படத்தைப் பார்க்க பார்க்க பழையவை எல்லாம் நினைவில் வந்து நின்றது.

தோராயமாக நான்கு வருடங்களுக்கு முன்பு.. 

அன்றும் அவளுக்குக் காலை நேரப் பணிதான். இதயம் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் கார்த்திக்கின் துறை செவிலியாகத்தான் அப்போதும் பணிபுரிந்து கொண்டிருந்தாள்.

காலை மணி ஆறு முப்பது என்றது கடிகாரம்.

“ம்மா, நான் போய்ட்டு வர்றேன். நீங்க மறக்காம சாப்பிட்டுட்டு சுகர் பிபி டேப்லெட் போட மறந்துடாதீங்க. சரியா? கேட்டுச்சாம்மா?” என்று கத்தி கேட்டவள், தன் கைப்பையையும், உணவு அடங்கிய பையையும் எடுத்துக் கொண்டாள்.

வீட்டின் சிறிய பூஜையறையிலிருந்து வேகமாக வெளியே வந்த இந்திராணி அவள் நெற்றியில் குங்குமமும், திருநீறும் வைத்து, “இன்னைக்குப் பெர்மிஷன் போட்டுக் கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்கு வர்றியா ஆழி?” என்று அவளின் கன்னம் பற்றிக் கேட்டார்.

“சீக்கிரமா? எனக்குத்தான் மூனு மணிக்கு ஷிஃப்ட் முடிஞ்சுருமேம்மா. நான் நாலு மணிக்குள்ள வீட்டுக்கு வந்துடுவேனே”

“அது எனக்குத் தெரியாதா? மத்தியானம் ஒரு மணிக்கா வர முடியுமா உன்னால?”

“எதுக்கும்மா? என்ன விஷயம்? எங்கேயும் வெளில போகணுமா?”

“இல்ல…” என்று அவர் இழுக்க, “என்னம்மா இழுக்கற, எனக்கு நேரமாகுது. என்னன்னு சொல்லும்மா” என்றவள் வாயிலை நோக்கி நடந்தாள்.

“ஆழி.. இன்னைக்கு நாலு மணிக்கு உன்னைப் பொண்ணு பார்க்க வர்றாங்க..”

“என்னதே, என்னம்மா சொல்ற? ஈவினிங் பொண்ணு பார்க்க வர்றாங்களா? இப்போ சொல்ற அத? எங்கிட்ட முன்னாடியே ஏன்மா சொல்லல? என்னைக் கேட்காம எப்படிம்மா அவங்கள வர சொல்லுவ நீ?”

“எங்கிட்ட நேத்து சாயந்திரம்தான் இன்னைக்குப் பையன் வீட்ல இருந்து வர்றாங்கன்னு தரகர் கோமதிக்கா போன் பண்ணி சொன்னாங்க. அதான்..”

“அப்போ நீ நைட்டே என்கிட்ட சொல்லியிருக்கலாம் இல்லம்மா?”

“நேத்து உனக்குச் செகண்ட் ஷிஃப்ட். வீட்டுக்கு ரொம்ப லேட்டாதான் வந்த. அதான் சொல்லல..” என்றார்.

“ப்ச்..” என்று நெற்றியை நீவினாள் ஆழினி.

“என்ன சலிப்பு உனக்கு? இப்பத்தான் ஒரு நல்ல வரன் வந்திருக்குன்னு நான் சந்தோஷப்பட்டா..”

“ம்மா, என்னால நாலு மணிக்குதான் மா வர முடியும். பெர்மிஷன்லாம் போட முடியாது.”

“சரி ஆழி. இப்போ என்ன உனக்கு? உன்னைக் கேட்காம வரச் சொல்லிட்டேன்னு தானே கோபம்? இந்தா இந்தப் போட்டோவை பாரு. பையன் பேரு பிருத்விராஜன். மரைன் இன்ஜினியர், இங்க சென்னை போர்ட்ல நல்ல வேலையில இருக்காராம். அம்மா, அப்பா, ஒரு தங்கச்சி. அவ்ளோதான் அவங்க குடும்பம். நீ பையனை உனக்குப் பிடிச்சுருக்கான்னு இந்த ஃபோட்டோ பார்த்து சொல்லு. உனக்கு ஓகேன்னா அவங்களை வர சொல்றேன்.” என்றார். எதிர்மறையாக எதையோ சொல்லப் போனவள் அம்மாவின் எரிக்கும் பார்வையில் அதை அப்படியே விழுங்கினாள்.

அவர் நீட்டிய புகைப்படத்தை வாங்கி அசட்டையாகப் பார்த்தவளின் விழிகள் மெல்ல மெல்ல விரிந்தது. ஆனாலும் அம்மாவின் முன் எதையும் வெளிப்படுத்தவில்லை அவள்.

நீலக்கடல் பின்னணியில் ஒய்யாரமாக நின்றிருந்தது பிரம்மாண்ட சரக்கு கப்பல். அதன் மேல் கைகட்டி சாய்ந்து நின்றிருந்தான் பிரித்விராஜன். லேசாக முகத்தை நிமிர்த்தி, புன்னகையைக் கண்களில் காண்பித்து ஆளுமையுடன் நின்றிருந்தான். அதற்கு பெரிதும் உதவியது பின்னணியில் நின்றிருந்த பிரம்மாண்ட கப்பல்.

“ம்மா, இந்த ஃபோட்டோ..”

“அதான் பையன் ஃபோட்டோ ஆழி. பேரு பிருத்விராஜன் சொன்னேனே”

“ம்ம்” என்றாள். ஆனால் எதுவோ முரண்டியது. இவனுக்குத் தன்னைப் பிடித்திருக்கிறதா? தன்னைக் குறித்துத் தாழ்வாக என்றுமே சிந்தித்ததில்லை அவள். ஆனால், புகைப்படத்தில் இருந்தவனின் கம்பீரமான தோற்றமும், வசீகரிக்கும் புன்னகையும் அவளைச் சிந்திக்க வைத்தது. அதற்கு மேல் அவனது குடும்ப வசதி வேறு இடித்தது.

“பையனை உனக்குப் பிடிச்சிருக்கு தானே ஆழி? மதியம் சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுறியா?” அம்மா கேட்கையில் அமைதியாகத் தலையசைத்தாள்.

“அப்படியே நேரா வீட்டுக்கு வராம பார்லர் போயிட்டு பேசியல் பண்ணிட்டு வா ஆழி”

“என்னது பேசியலா? போம்மா. அதெல்லாம் பண்ண முடியாது. அவங்க இந்த என் மூஞ்சியைப் பார்த்து பிடிச்சு ஓகே சொன்னா போதும்” என்றாள் பட்டென.

“சரி, சரி. நீ சீக்கிரமா வீட்டுக்கு வந்திடு. அவங்க நாலு மணிக்கு மேலதான் வர்றேன்னு சொல்லியிருக்காங்க. அதுக்குள்ள வந்துடு ஆழி. உன்னை முத முதல்ல பொண்ணு பார்க்க வர குடும்பம். இவங்களே முடிஞ்சா நல்லாருக்குமேன்னு கடவுளை வேண்டிட்டு இருக்கேன் நான். பிளீஸ், பெர்மிஷன் போட்டு டயத்துக்கு வந்திடு ஆழி”

“டிரை பண்றேன்மா” என்றாள் நமுட்டு சிரிப்புடன்.

“அடி வாங்க போற நீ, மாப்ள வீடு வெய்ட் பண்ற மாதிரி வச்சுடாத..”

“பிரித்விராஜன் எப்படிம்மா வெள்ளை குதிரையில வருவாரா?” என்று கேலியாகக் கேட்டவள், “அவரோட குதிரையை விட என் ஸ்கூட்டி சூப்பர் பாஸ்ட் மா. கண்டிப்பா அவங்களுக்கு முன்னாடி வந்துடுறேன். டோண்ட் வொர்ரி” என்றவள், சற்றுத் தாமதமாகத்தான் வேலைக்குச் சென்றாள். ஆனால், விரைவாக வீடு திரும்பி விட்டாள்.

அன்று வெள்ளைக் குதிரையில் என்ன வெறுங்காலில் கூட அவள் வீடு வரவில்லை பிரித்விராஜன்.

ஆழினி அம்மாவுடன் வீட்டை ஒதுக்கி அலங்கரித்து, தானும் அலங்கரித்து நின்றாள். ஆனால், அன்று சொன்னது போலப் பையன் வீட்டார் வரவில்லை. பெரிதான எந்த எதிர்பார்ப்பும் அவளுக்கு இருந்திருக்கவில்லை. ஆக, அவர்கள் வராமல் போகவும் அது அவளைப் பாதிக்கவேயில்லை.

இஞ்சி ஏலம் மணக்க தேநீர் தயாரித்து அம்மாவுடன் சேர்ந்தமர்ந்து, சூடாக வாழைக்காய் பஜ்ஜியும், சேமியா கேசரியும் ரசித்து உண்டாள்.

இந்திராணிதான் புலம்பியபடி அமர்ந்திருந்தார்.

தரகர் கோமதி அக்காவிற்குத் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தார். அவரோ அழைப்பை ஏற்கவில்லை. மறுநாளும் அவரை அழைத்து வற்புறுத்தி கேட்டு விஷயத்தைக் கறந்து விட்டார் அம்மா.

“ஆழி இப்பத்தான் கோமதி அக்காகிட்ட பேசினேன்” அப்போதுதான் வேலை முடித்து வீடு திரும்பியிருந்தாள். அம்மா சொல்லவும், “திரும்பவும் பொண்ணு பார்க்க வர்றாங்கன்னு ஆரம்பிக்காதம்மா. இன்னொரு டைம் பிரித்விராஜனுக்காகப் பெர்மிஷன் போட முடியாது என்னால” என்றாள் அசட்டையாக.

“அந்தப் பையன் வீடு நேத்து ஏன் வரலன்னு கோமதியக்காகிட்டயும் ஒன்னுமே சொல்லலையாம் ஆழி‌. அவங்க காரணம் கேட்டதுக்கு எதையோ சொல்லி மழுப்பிப் போனை வச்சுட்டாங்களாம்”

“நல்லதா போச்சு” என்று முணுமுணுத்தாள்.

“என்னடி நல்லதா போச்சு. உனக்கென்ன பேசுவ. பெத்தவ எனக்குத்தான் பக்குன்னு இருக்கு. எதுக்கு வராம இருந்திருப்பாங்கன்னு யோசிச்சு பயந்து போய் இருக்கேன் நானு..”

“ரொம்ப யோசிக்காதம்மா. நான் தூங்கப் போறேன். நீங்களும் சாப்பிட்டு படுங்க” என்று விரைவாகவே படுக்கைக்குச் சென்று விட்டாள்.

அத்தோடு அந்த நிகழ்வை மறந்து போனாள். அதன் பின்னர் அம்மா கல்யாணம் என்ற பேச்செடுத்தாலே இதைச் சொல்லியே தவிர்த்து, தப்பித்து வந்தாள்.

நான்கு மாதங்கள் விரைந்தோடியிருக்க, அன்றைக்கு மருத்துவனையில் இருந்து வீடு வந்தவளுக்காக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தார் இந்திராணி.

அவளின் வண்டி சத்தம் கேட்டதும், “இதோ ஆழி வந்துட்டா” என்றார்.

மருத்துவமனை சீருடையில், தலைக் கவசத்தைக் கையில் பிடித்தபடி வீட்டுக்குள் நுழைந்த ஆழினி அங்கிருந்த நால்வரையும் புதிராகப் பார்த்தாள்.

அனைவருக்கும் பொதுவாக லேசாகப் புன்னகைத்து, “வாங்க” என்றவள், திரும்பி அம்மாவைப் பார்த்து, “யாரும்மா இவங்க?” என்று விழியால் வினவினாள்.

“நீங்க காஃபி சாப்பிடுங்க. ஆழி இப்ப ரெடியாகி வந்திடுவா” என்று அவர்களிடம் சொன்னவர், அவளை அப்படியே அறைக்குள் தள்ளிக் கொண்டு போனார்.

“யாரும்மா அவங்க?”

“ஷ்ஷ்ஷ், மெதுவா பேசு ஆழி. உன்ன பொண்ணு பார்க்க வந்திருக்காங்க. நீ டக்குன்னு மூஞ்சி கழுவி இந்தச் சேலையைக் கட்டு” என்று சொல்லி ஏற்கனவே தயாராகப் படுக்கையில் எடுத்து வைத்திருந்த பட்டுப்புடைவையை எடுத்து நீட்டினார்.

“எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லணும்னு உனக்குத் தோனலையாம்மா?”

“ப்ச், அவங்களே சொல்லாம கொள்ளாம இன்னைக்கு வந்து நிக்கறாங்கன்னு நானே பதறிட்டு இருக்கேன். நீ வேற..”

“அதெப்படிம்மா சொல்லாம வீட்டுக்கு வருவாங்க? நாம வர சொல்லாம எப்படிப் பொண்ணு பார்க்க வருவாங்க.. பையனுக்கு நீ ஓகே சொல்லாம எப்படி வருவாங்க?”

“கேள்வியா கேட்காத ஆழி. போய் மூஞ்சி கழுவிட்டு வா. நான் என்னன்னு சொல்றேன். இவங்களுக்கு நாம ஏற்கனவே ஓகே சொல்லிட்டோம்..” என்று சொல்லி அவளைக் குளியல் அறைக்குள் தள்ளினார்.

“ஓகே சொல்லிட்டோமா? நான் எப்போமா ஓகே சொன்னேன்?”

“ம்ம், நாலு மாசத்துக்கு முன்னாடி சொன்ன..”

“நாலு மாசத்துக்கு முன்னாடியா? நானா?” ஆழினி அதிர்ச்சியுடன் வினவ, பட்டென்று குளியலறை கதவை வெளிப்புறமாக அடைத்தார் இந்திராணி.

அவசரமாக முகம் கழுவி வெளியில் வந்த ஆழி, “அன்னைக்கு வர்றேன்னு சொல்லிட்டு வராம இருந்தாங்களே அவங்களாம்மா? அந்தப் பையன் பேரு என்ன சொன்ன? ஏதோ ராஜப் பரம்பரை பேரில்ல?” என்று கேட்டவளின் தோளில் அடித்து, “பிரித்விராஜன்” என்றார்.

“ம்ம், பிரித்விராஜன். இன்னைக்கும் அவருக்கு வெள்ளைக் குதிரை கிடைக்கல போல?” என்றாள் கேலியாக. அம்மா முறைக்கவும்,

“பிரித்விராஜன் வரல போலயே” என்று உதடு சுழித்தாள்.

“வந்திருக்கார் ஆழி. வெளில நின்னு போன் பேசிட்டு இருந்தார். நீ பார்க்கலயா?” அம்மா கேட்கவும், மறுப்பாகத் தலையசைத்து, படுக்கையில் இருந்த புடைவையைக் கையில் எடுத்தாள்.

“பத்து நிமிஷம் டைம் குடுங்கம்மா, நான் ரெடியாகிட்டு வர்றேன்” என்று தயாராகத் தொடங்கினாள்.

கூடத்தின் பேச்சுச் சத்தம் அவளது அறைக்குள் மெலிதாகக் கேட்டது.

பையன் வீட்டார் இந்திராணியிடம் ஏற்கெனவே எல்லாமும் பேசி முடித்திருந்தார்கள். ஆக, பையனும் பொண்ணும் பார்த்து, பேசி பிடித்திருக்கிறது என்றால் மேற்கொண்டு பேசலாம் என்ற நிலையில் அமர்ந்திருந்தார்கள்.

ஆழினி புடைவையை உடுத்தி, எளிமையான அலங்காரம் முடித்து எழுகையில் அறைக்குள் வந்தார் இந்திராணி.

“திரும்பு ஆழி, அம்மா பூ வச்சு விடறேன்” என்று அவளைத் திருப்பினார்.

“என்னம்மா விஷயம்? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? பையன் வீடு ஏதாவது சொல்லிட்டாங்களா என்ன?”

“ச்சே ச்சே இல்லல்ல. எல்லாம் நல்லபடியா நடக்கணுமேன்னு கவலை எனக்கு. வேற ஒன்னுமில்ல. வா, வந்து அவங்ககிட்ட பேசு” என்று அவளைப் பதில் பேச விடாமல் வெளியே இழுத்துக் கொண்டு போனார்.

“வாம்மா, ஆழினி. வா, இப்படி வந்து உக்காரு” என்று அவளை அழைத்தார் கற்பகம்.

“நாலு மாசத்துக்கு முன்னாடி உன் போட்டோ பார்த்ததும் எங்க எல்லோருக்கும் ரொம்பப் பிடிச்சிருச்சு. என் பையன் பிரித்வி அப்பவே பிடிவாதமா உன்னைப் பொண்ணு பார்க்க வரணும்னு நின்னான். உன்ன பிடிச்சிருக்குன்னு சொன்னான். நான்தான் கேட்காம.. ம்ம், சரி விடுங்க. எல்லாம் நல்லதுக்குதான். அதான் இப்போ உன்னைப் பார்க்க வந்துட்டோம் இல்ல?” என்றார் அவள் கைப் பிடித்துப் புன்னகையுடன்.

“பொண்ணு பார்க்க என்ன? கல்யாண தேதியையே முடிவு பண்ணிட்டு வந்துட்டோம் இன்னைக்கு” என்று அவர் சொல்லவும், அதிர்ச்சியில் விரிந்த அவள் விழிகள் மெல்ல சுழன்று அம்மாவைத் தொட்டுக் கேள்வியாக உயர்ந்தது.

“அந்தப் பொண்ணு வீட்ல இப்படி நடந்துப்பாங்கன்னு நாங்க எதிர்ப்பார்க்கலம்மா. இப்படி நடந்திருக்கக் கூடாதுதான். எங்களுக்கும் ரொம்ப மனவருத்தம்தான். என்ன பண்றது, ஊரை கூட்டி அவ்ளோ பெருசா நிச்சயம் பண்ணோம். ஹ்ம்ம், இப்போ அந்தக் கதை எதுக்கு.. அதையெல்லாம் பெருசு பண்ணாம என் பையனை கட்டிக்கச் சரின்னு நீ சொன்னதுல ரொம்பச் சந்தோஷம்மா. என் பையனுக்கு ஷிப்ல வேலை பார்க்கணுங்கறது பல வருஷ ஆசை. அது இப்போதான் நடந்திருக்கு. இந்நேரம் நீயும் எங்க வீட்டுக்கு மருமகளா வந்தா நாங்க ரொம்பச் சந்தோஷப்படுவோம் மா” கற்பகம் பேசிக் கொண்டே போக, ஆழினி‌‍ அதிர்ச்சியில் உறைந்து போய் அமர்ந்திருந்தாள்.

‘என்ன சொல்கிறார் இவர்? இவர் மகனுக்கு திருமணம் நிச்சயமாகி நின்று போனதா? வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயம் வரை சென்றவனை நான் எப்போது மணக்க சம்மதித்தேன்? இந்தப் பிரித்விராஜனுக்குச் சென்னையில் வேலை என்றுதானே சொன்னார்கள்? இப்பொழுது கப்பலில் வேலை என்றால்?’ கேள்விகள் தந்த குழப்பத்துடன் கற்பகத்தை அதிர்ச்சியுடன் பார்த்தாள்‌.

“நீ இதயம் ஹாஸ்பிடல்ல வேலை பார்க்கறேன்னு எங்களுக்குத் தெரியும். உங்க கல்யாணத்துக்கு அப்புறமும் நீ எப்பவும் போல வேலைக்குப் போம்மா. அதுக்கெல்லாம் எங்க வீட்ல யாரும் தடையா இருக்க மாட்டோம். பொண்ணுங்களுக்கு வேலை முக்கியம் பாரு. எனக்கு நீயும் ஒரு பொண்ணு மாதிரிதான்மா. இந்தா இருக்கால்ல என் பொண்ணு. அவளை மாதிரிதான் உன்னையும் பார்த்துப்பேன் நான்.” கற்பகத்தின் வார்த்தைகள் எதுவும் அவள் மனத்தில் பதியவில்லை. மனத்தில் சூழ்ந்த குழப்பத்துடன் மெல்ல திரும்பி அம்மாவைப் பார்த்தாள்.

“கல்யாணத்தை அடுத்த மாசமே வச்சுக்கறதுக்கு நீங்க சம்மத்திச்சதுல எங்களுக்கு…” என்ற கற்பகத்தின் பேச்சை நிறுத்தியது, “ஆழினி, குடிக்கக் கொஞ்சம் தண்ணி குடுங்க” என்ற பிரித்விராஜனின் குரல்.

சட்டெனத் திரும்பி அவனைப் புரியா பார்வை பார்த்தாள் ஆழினி.

“குடிக்கத் தண்ணி குடுங்க, ஆழினி” என்றான் மீண்டும் அழுத்தமாக. அவளையே பார்த்தபடி. அவளின் அதிர்ச்சியின் அளவு சற்றே குறைய, அவன் கேட்டது அப்போதுதான் மனத்தில் பதிந்தது.

“நீ இரு. அம்மா எடுத்துட்டு வர்றேன்” என்று எழுந்து கொண்டார் இந்திராணி. ஆழினி அவனுக்கு முன்னிருந்த தண்ணீர் நிரம்பிய கண்ணாடி குவளையைக் கேள்வியுடன் பார்ப்பதைப் பார்த்து மெலிதாகத் தலையசைத்து லேசாகப் புன்னகைத்தான் பிரத்விராஜன்.

How did this episode feel?
Rate this episode⭐ 5.0 (9)

2 thoughts

Stay Connected A simple, spam-free email update whenever a fresh chapter goes live.
About Us FAQ Contact Us Privacy Policy Terms & Conditions Disclaimer Copyrights
© 2026 Devi Manogaran Novels. All rights reserved.  ·  Created by Vel Studios
error: Content is protected !!