Chapter 6 of 21

தெண்திரை தேடலே – 6

October 24, 2026 · 16 min read · ⭐ 5.0 (8)

அத்தியாயம் – 6

இரவு முழுதாகக் கவிழ்ந்திருந்தது. மழை இரவையும் இருளையும் பொருட்படுத்தாமல் கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது.

அறையின் குளிர் அதிகமானதை உணராமல் தன் வேலையில் மூழ்கியிருந்தாள் ஆழினி.

அந்தக் கோப்பில் இருந்த முக்கிய ஆவணங்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து விட்டாள். எல்லாமே கணவனின் முந்தைய நிறுவனம் தொடர்புடையதாக இருந்தது. அதில் இருந்து அவளுக்கு உபயோகமாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

அதற்கு மேல் தேட மனத்தில் தெம்பில்லாமல் அந்தக் கோப்பை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு, பொத்தென்று படுக்கையில் அமர்ந்தாள்.

“ஆழி, ஐ ஆம் சாரி” மென்மையாக ஆனால் அழுத்தமாக, மெய்யான வருத்தத்துடன் அந்த மன்னிப்பை உச்சரித்த பிரித்விராஜின் கரம் மனைவியின் காலை பிடித்திருந்தது.

ஒரு குழந்தையைப் போலக் காலை சுருக்கி படுக்கையில் சுருண்டு படுத்திருந்தவளின் காலை பற்றித் தன் மடியில் கிடத்தி, “ரியலி சாரி ஆழி” என்றான் பிரித்விராஜன். அவள் விழித்துதான் இருந்தாள். ஆனாலும், விழிகள் மூடியிருந்தன. அவன் குரல் காதை எட்டினாலும் கண்ணைத் திறக்கவில்லை அவள்.

இப்போதும் அந்தக் குரல் காதில் எதிரொலிக்க, “இதே வேலையா போச்சு இவனுக்கு, எல்லாம் செஞ்சிட்டு ஒரு சாரி சொல்லிடுவான் பிராடு” என்று உரக்கச் சொன்னாள்.

சற்று முன்னர் அந்த ஒப்பந்த பத்திரத்தில், அவசர தொடர்புக்காக என்று அவளின் பெயர் பார்த்ததில் இருந்து அவளின் இதயத் துடிப்பு ஏகத்துக்கும் எகிறியிருந்தது.

அவனுக்கு எதுவும் ஆகியிருக்கக் கூடாது என்று வேண்டுதலை போல மீண்டும் மீண்டும் அதையே மனத்தில் சொல்லிக் கொண்டாள்.

“உங்களுக்கு என் மேல நிறையக் கோபங்கள் இருக்கும் பிரித்வி. எனக்கும் உங்க மேல நிறைய நிறைய வருத்தங்கள் இருக்கு. ஆனா.. அதுக்காக.. வேணாம், பிளீஸ். நீங்க எங்கருந்தாலும் நல்லா இருக்கணும்னு மட்டுமே நான் நினைப்பேன். பிளீஸ், பத்திரமா திரும்பி வந்துடு பிரித்வி” அவனது புகைப்படத்தைப் பார்த்துச் சொன்னாள்.

அந்தப் புன்னகை முகத்தைப் பார்க்க பார்க்க அவளின் மனம் கலங்கி கண்கள் குளம் கட்டி நின்றன.

இதே போன்று முன்பு அவள் கலங்கி நின்ற போது, “ஆழி, பிளீஸ் அழாத. நான்தான் வந்துட்டேன்ல? இங்க பாரு, உன்கூட நான் இருக்கேன். இனி உன் கூடவே இருப்பேன்” என்று உணர்ச்சிகரமாக அவள் கண்களைக் கூர்ந்து தேறுதல் சொல்லிய அவன் வார்த்தைகளில் சத்தியமாகச் சத்தியம் இருந்தது. ஆனால், அதை அவன் காப்பாற்றவில்லை. அவளுக்கு அது எத்தனை பெரிய இழப்பு. ஏன் அவனுக்கும்தான். அவளுக்கு உடல் கூடத் தேறி விட்டது. ஆனால், மனம்? இன்னமும் அந்த இழப்பின் வலியில் இருந்து மீளவில்லை. அதனால்தான் பிரிவை தேர்ந்தெடுத்தாள். அந்த முடிவும் தவறோ என்று தற்போது சிந்திக்கத் தொடங்கினாள்.

அவளின் குழப்பமான மனநிலை மேலும் அவளைக் குழப்ப, படுக்கையில் சரிந்து கண் மூடினாள்.

அந்நேரம் அவளின் அம்மா அலைபேசியில் அழைத்தார்.

“நீ இன்னும் தூங்கலையாம்மா?”

“எப்படி ஆழி தூக்கம் வரும்? மாப்ள பத்தி ஏதாவது தகவல் தெரிஞ்சதா?”

“ம்ஹூம். இல்லம்மா”

“ஏன் அந்தம்மாக்கு தெரியாதாமா? அவங்க வீட்ல இருக்க ஒருத்தருக்கு கூடத் தெரியாதா? என்ன குடும்பம் இவங்கலாம்? ஒரு ஆத்திர அவசரத்துக்குப் புள்ளைக்கிட்ட பேசணும்னா எப்படிப் பேசுவாங்க? அது கூடத் தெரிஞ்சு வச்சுக்க மாட்டாங்களா?”

“ம்ம், நீ இதையே என்கிட்டயும் கேட்கலாம் மா. அவர் வைஃப் எனக்கும் அவரைப் பத்தி எதுவும்.. தெரியலையே மா?” என்றாள் கலங்கிய குரலில்.

“நீ நம்ம வீட்ல இல்ல இருந்த? அந்தம்மாதான் உன்னை வீட்டை விட்டு தொரத்தி விட்டுருச்சே. மகனையும் மருமகளையும் சேர்த்து வைக்கணும்னு அவங்க யாருக்காவது துளி அக்கறை இருந்துச்சா? பிரிஞ்சுட்டாங்களா ரொம்ப நல்லதுன்னுல இருந்தாங்க”

“அம்மா, அவர் கூடச் சண்டை போட்டு வீட்டை விட்டு வந்தது நானு..”

“ஓஹோ. அதுனால எதுக்கு நான் தேவையில்லாம பேசுறேன்னு கேட்கறியா ஆழி? என் கவலை உனக்கு என்னைக்குப் புரியப் போகுது? நாளைக்கு உனக்கொரு பொண்ணு பொறந்தா..”

“ம்மா, பிளீஸ்..” என்றாள் குரலை உயர்த்தி.

“ஆமா. என்னையே அதட்டு..”

“அவரே எப்பவும் கால் பண்ணிடுவார்ம்மா. டெய்லி மெசேஜ் பண்ணிடுவார். அதுனால இதுவரைக்கும் இப்படியொரு சிட்டிவேஷன் எங்களுக்கு வந்ததில்லம்மா. இல்லன்னா.. நான் ஷிப்ல எப்படிக் காண்டாக்ட் பண்றதுன்னு கேட்டு வச்சுருக்கணும்தான். என் தப்புதான் மா. அவர் கம்பெனி மாறினது கூட எனக்குத் தெரியல. என் மேலருந்த கோபத்துல எதுக்குச் சொல்லணும்னு அப்படியே சொல்லாம போயிட்டார் போல.”

“அப்படியெல்லாம் இருக்காது ஆழி. நீயா எதையாவது கற்பனை பண்ணி பயப்படாத. மாப்ள நாளைக்கே அவரா போன் பண்ணி பேசுவார் பாரு..”

“இத்தன மாசமா என்கிட்ட பேசாதவர் நாளைக்குத்தான் பேச போறாராம்மா?”

“அவரோட அம்மாப்பாவுக்குக் கூப்பிடுவார் ஆழி. நீ அங்கதானே இருக்க. அதான் அப்படிச் சொன்னேன். இதை யோசிச்சியா ஆழி? பேசாம போலீஸ் கம்ப்ளென்ட் கொடுப்போமா?”

“என்னன்னு மா குடுக்கச் சொல்ற? என் புருஷனை காணோம்னா? எங்கிட்ட ஆயிரம் கேள்வி கேட்பாங்க. எனக்கு ஒரு கேள்விக்குக் கூடப் பதில் தெரியாதுன்னு சொன்னா.. எங்க போனார்னு தெரியாம.. எங்கிருந்து கண்டிபிடுச்சு தர சொல்றதும்மா? ” அவளால் மேலே பேசவே முடியவில்லை. அப்படியொரு குற்ற உணர்ச்சி மனத்தைச் சூழ்ந்தது.

அவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. அவளது இமெயில் முகவரி உட்பட. அவளின் பாஸ்போர்ட் நகல் தொடங்கி, வங்கிக் கணக்கு வரை சேமித்து வைத்திருக்கிறான். அவள்தான் எதிலுமே பட்டுக் கொள்ளாமல் வாழ்ந்திருக்கிறாள். இத்தனை நாள்கள் அவனைக் குற்றம் சொல்வது அவளுக்கு எத்தனை எளிதாக இருந்திருக்கிறது.

“ஆழி..” அம்மா அழைக்கவும் உணர்வு பெற்று, “நீங்க படுங்கம்மா. நான் நாளைக்குக் கால் பண்றேன்” என்று அம்மாவை சமாதானப்படுத்தி அழைப்பைத் துண்டித்தாள்.

படுக்கையில் நன்றாகச் சரிந்து கண்களை மூடியும் தூக்கம் தூரவே நின்றது. மூடிய கண்களுக்குள்ளும் கணவனே வந்து நின்றான்.

இதே அறையில் அவனோடிருந்த நாள்கள் நினைவில் வந்து அவளைப் பாடாய்ப்படுத்தியது.

அவள் மனம் மீண்டும் சில வருடங்களுக்கு முந்தைய நாளுக்குப் போய் நின்றது.

“ஆறு மாசம் கடல். மூனு மாசம் வீடுங்கற வேலையும், வாழ்க்கையும் என்னால வாழ முடியாது” என்றவளை மேஜையில் கையூன்றி பார்த்தான் பிரித்விராஜன்.

“ஷிப் ஜாப் என்னோட ட்ரீம் ஆழினி.” என்றான் அவள் விழிகளில் விழி பதித்து.

“நாம வாழ்க்கையில் நிறைய விஷயங்களுக்காக விட்டு கொடுப்போம். நிறைய அட்ஜெஸ்ட் பண்ணுவோம். நிறையக் காம்ப்ரமைஸ் பண்ணிப்போம். ஆனா, நமக்கு ரொம்பப் பிடிச்ச ஒரு விஷயத்துக்காக உயிரை கூடக் குடுக்க ரெடியா இருப்போம் இல்ல?” என்று அவன் சொல்லவும்,

“உயிரா? வாட்?” அதிர்ச்சியில் விழிகள் விரிய கேட்டாள். “வாய்ப்பில்ல” என்று மறுப்பாகத் தலையசைத்து முணுமுணுத்தாள்.

“நான் ஒரு எக்ஸாம்பிளுக்குச் சொன்னேன்”

“புரியுது” என்றாள்.

“எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்லருந்து எங்கப்பா துபாய்லதான் வேலைப் பார்க்கறார். எங்கம்மாப்பா கல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே எங்கப்பா துபாய்லதான் ஒர்க் பண்ணார். துபாய் டிபி வேர்ல்ட்ல கிரேன் ஆபரேட்டரா இருந்தார்”

“ஓ?”

“ம்ம், அப்பா பாரின்ல இருக்காருன்னு ரொம்பப் பெருமைப்பட்டுப்பாங்க எங்கம்மா. எங்களுக்கும் அப்படிச் சொல்லிதான் வளர்த்தாங்க. ரொம்ப ஜாலியா எனக்கென்னன்னு எந்தக் கவலையும் இல்லாம நான் சுத்திட்டு இருந்தேன் அப்போலாம். நான் டென்த் முடிச்சு ஸ்கூல் லீவ்ல இருக்கும் போது அப்பா எங்களை அந்த லீவுக்கு விசிட் விசால துபாய் கூட்டிட்டு போனாங்க. என்னை மட்டும் அப்பா வேலை பாக்கற இடத்துக்குக் கூட்டிட்டுப் போனார். அந்த இடத்தையும் திரும்பின பக்கமெல்லாம் கண்டெய்னரா, கண்ணு திருப்புற பக்கமெல்லாம் பெரிய பெரிய கண்டெய்னரா இருந்ததைப் பார்த்துப் பிரம்மிச்சி போயிட்டேன் நானு. எங்கப்பா இங்க வேலை பார்க்கிறார்னு அவ்ளோ பெருமை எனக்கு. அன்னைக்கு அங்க வந்த ஒவ்வொரு கப்பலையும் அதிசயமா பார்த்தேன். அப்படியே நான் அண்ணாந்து பார்க்கற உயரத்துல இருந்த ஷிப்ஸ் மேல தானாவே ஒரு பிரமிப்பும், பிரேமையும் வந்துச்சுங்க”

“ம்ம்” என்றவளின் இதழ்களில் புன்னகையின் சாயல்.

“அந்தக் கப்பல்லருந்து கண்டெய்னர்ஸை இறக்க எங்கப்பா கிரேன்ல ஏறும் போது எனக்குப் பெருமை பிரமிப்பை தாண்டி பயம் வந்துச்சு. அன்னைக்கு முழுக்க அப்பாவை அண்ணாந்து பார்க்கும் போதெல்லாம் ஒரு மாதிரி பயம். டெண்த்தான் முடிச்சுருந்தேன். அதுவரைக்கும் அடுத்து என்ன படிக்கணும்னு பெருசா ஐடியா இருந்தது இல்ல. பட் அன்னைக்கு அந்தக் கப்பல்களைப் பார்க்கும் போது டிசைட் பண்ணேன். ஒருநாள் நானும் இதுல வேலைக்குப் போவேன். எங்கப்பாவ அன்னைக்குப் பத்திரமா வீட்ல உக்கார வைப்பேன்னு..”

“எங்கப்பாவுக்கு நான் டாக்டர் ஆகணும்னு ஆசை.” அவளையும் அறியாமல் சொல்லியிருந்தாள்.

“ஓ? அப்புறம் ஏன் நர்சிங் படிச்சீங்க?”

“நான் லெவன்த் படிக்கும் போது அப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாங்க. அதுக்கப்புறம் மெடிசின் பத்தி யோசிக்கிற சிட்டுவேஷன் இல்ல வீட்ல. அதான் நர்சிங் எடுத்தேன்”

“சாரி”

“டோண்ட் பீ. நர்சிங் எனக்குப் பிடிச்சுதான் படிச்சேன். சோ இட்ஸ் ஓகே” என்றாள். முதன் முறையாக அளந்தது போலில்லாமல் அழகாகப் புன்னகைத்தான்.

“உங்க ஆசைப்படி உங்கப்பாவை வீட்ல உக்கார வச்சுட்டீங்க போல?”

“எஸ்” என்றான் சத்தமாக.

“நான் காலேஜ் முடிச்சு வேலைக்குப் போனதும் அப்பாவை வேலையை விட்டுட்டு வரச் சொல்லிட்டேன். அப்போலருந்து ஷிப் ஜாப் தேடிட்டே இருந்தேன். இப்பதான் நான் எதிர்பார்த்த போஸ்டிங் கிடைச்சது”

“கங்கிராட்ஸ்”

“தேங்க்ஸ்” என்றான். அதுவரை எதற்காக வந்தோம் என்பதையே மறந்து அளவளாவி கொண்டிருந்தவர்கள் மறுகணம் சுதாரித்து ஒருவரையொருவர் பார்த்தார்கள்.

“மரைன் இன்ஜினியரிங் படிச்சுட்டு ஷிப்ல வேலை பார்க்க கூடாதுன்னா எப்படி ஆழினி? என்னால ஷிப் வேலைக்குப் போகாம இருக்க முடியாதுங்க. அதுனால நீங்க என்ன முடிவெடுத்தாலும் எனக்கு ஓகேதான்.”

“நான் உங்களை ஹர்ட் பண்ண நினைக்கல. ஆனா, என்னால தனியா இருக்க முடியாது.” என்றாள் அவளும் தெளிவாக.

“நாலு மாசத்துக்கு முன்னாடி உங்களை நான் பொண்ணு பார்க்க வர்றதா இருந்தது இல்லையா? அப்போ நீங்க ஓகே சொல்லி.. அப்புறமா எனக்கு ஷிப் ஜாப் கிடைச்சிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க?” சட்டென்று அவன் கேட்க, அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் விழித்தாள் அவள்.

“அதான் அப்படியொரு விஷயமே நடக்கலையே. நீங்கதான் வேற ஒரு பொண்ண பார்த்து..”

“பிளீஸ், அது பத்தி பேசாதீங்க..”

“அதெப்படி பேசாம இருக்க முடியும்? நீங்கதான் இப்போ அந்தப் பேச்சை எடுத்தீங்க. அந்தப் பொண்ணு கூட நிச்சயம் வரைக்கும் போய்.. அவங்க கூட நடக்க இருந்த கல்யாண தேதியிலயே.. நம்ம.. நாளைக்கு நமக்கு அதே தேதில கல்யாணம்லாம்.. சாரி. என்னால இமாஜின் பண்ணி கூடப் பார்க்க முடியல. அந்தப் பொண்ணுக்கு தெரிஞ்சா எவ்ளோ ஃபீல் பண்ணுவாங்க. ரொம்ப ஹர்ட்டாவங்க இல்ல? எப்படி அதே தேதியில உங்களால வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்கலாம்னு டிசைட் என்ன, எப்படித் திங்க் பண்ண முடியுது?” அடுக்கடுக்காகக் கடுமையாகக் கேள்விகளை அடுக்கி விட்டாள்.

பிரித்வி அப்படியே அசையாமல் அவளைப் பார்த்திருந்தான்.

“லைஃப்ல நிறையப் பேரை தெரிஞ்சோ தெரியாமலோ ஹர்ட் பண்ணிடுவோம் ஆழினி. சில நேரம் ஹர்ட் பண்ண வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுவோம். அந்த எங்கேஜ்மெண்ட்டை பிரேக் பண்ணது நாங்களா இருந்தாலும் அந்த முடிவுக்கு எங்களைத் தள்ளினது அவங்கதான். அப்புறம் எப்படி நான் அவங்களை ஹர்ட் பண்ணதா ஆகும்? நீங்களே சொல்லுங்களேன்?. எஸ், எங்கம்மா அவங்க வீட்ல நிறைய எதிர்பார்த்தாங்கதான். அது எனக்குச் சத்தியமா அப்போ தெரியாதுங்க. எனக்குத் தெரிஞ்சிருந்தா கண்டிப்பா தடுத்திருப்பேன். ஆனா, அதுக்கெல்லாம் எனக்கு வாய்ப்பே தராம, நீ ஷிப்புக்கு வேலைக்குப் போவேன்னா எனக்கு இந்தக் கல்யாணமே வேணாம்னு உதறிட்டுப் போனது அவங்கதாங்க.”

“நான் என்னை நியாயப்படுத்த நினைக்கலங்க. கண்டிப்பா என் மேல தப்பிருக்கு. எங்கப்பாம்மா பண்ணது ரொம்பத் தப்புதான் இல்லைன்னு சொல்ல மாட்டேன். அதுக்காகதான் என் பக்கத்தை அந்தப் பொண்ணுக்கு சொல்லணும்னு நான் நினைச்சேன். சத்தியமா அவங்ககிட்ட சாரி கேட்கணும்னு நினைச்சு அவங்களோட பேச டிரை பண்ணேன். பட் அவங்க ஃபேமிலி, அவங்க அண்ணா அதுக்கு விடல. அதான் நானும் ஒதுங்கி வந்துட்டேன். ஒரு நிச்சயம் நிக்கறதால பொண்ணுக்கு எவ்ளோ பாதிப்பு இருக்கும்னு, உலகம் என்னவெல்லாம் பேசும்னு எனக்குத் தெரியுங்க. என்ன நடந்திருந்தாலும் பொண்ணைதான் பழி சொல்லி பலியாக்கும்னும் தெரியும். பட் நீங்க நம்பிதான் ஆகணும். பசங்களுக்கும் அதே அளவு பாதிப்பு இருக்கும். எங்களுக்கும் ஹர்ட் ஆகும். எங்களையும் நாலு பேர் கேள்வி கேட்பாங்க. அதுனாலதான் நான் கல்யாணமே வேணாம், கப்பலுக்குப் போறேன்னு சொல்லிட்டேன். எங்கம்மா கேட்டா தானே? ம்ம்” என்று எரிச்சலுடன் தலைக் கோதி கொண்டான்.

“கல்யாணமே வேணாம்னா எதுக்கு எங்க வீட்டுக்கு வந்தீங்க? ஏன் அதே தேதியில கல்யாணம் பேசுனீங்க? என்னை மாதிரி எத்தனை பேரை..”

“பிளீஸ் ஆழினி. ஸ்டாப் இட். உங்களுக்குப் பிடிக்கலையா? பிடிக்கலன்னு சொல்லிட்டு போயிட்டே இருங்க. என்னைக் கல்யாணம் பண்ணிக்கக் கட்டாயமா நீங்க ஓகே சொல்லணும்னு நான் சொல்லவே இல்ல. உங்க வீட்டுக்கு வந்தப்பவும் இதையேதான் சொன்னேன். ஐ ஹோப் யூ ரிமம்பர் தட். அதென்ன சொன்னீங்க? எத்தனை பேரையா? உங்களைத் தவிர வேற யாரையும் பார்க்கலங்க. அந்தப் பொண்ணோட நிச்சயம் நின்னதும் கல்யாணமே வேணாம்னு அடிச்சுச் சொல்லிட்டேன். நான் பாட்டுக்கு ஷிப்புக்கு கிளம்ப எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு இருந்தேன். ஆனா எங்கம்மா இருக்காங்களே.. ஹ்ம்ம், அவங்கதான் உங்க வீட்ல நீங்க கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டீங்கன்னு கதை சொல்லி கூட்டிட்டு வந்துட்டாங்க. எங்கம்மா..”

“அம்மாக்கு என்ன அவ்வளவு பயமா?”

சாதாரணமாகத்தான் கேட்டாள். ஆனால், அவனுக்குக் கேலி போலத் தெரிந்தது போலும்.

“நீங்களும் உங்கம்மாக்கு பயந்துதானே இப்போ என் முன்னாடி உக்கார்ந்திருக்கீங்க. நீங்க என்னை நக்கல் பண்ணலாமா சொல்லுங்க?” என்று பதிலடி கொடுத்தான்.

“இல்ல, அப்படியென்ன அம்மா பேச்சை கண்ணை மூடிட்டு கேக்கணும்னு..”

“நீயும் அதே அம்மா பேச்சைதானே கேட்டுட்டு இருக்க? அப்புறமென்ன?” என்று கோபத்தில் பட்டென்று ஒருமைக்குத் தாவி விட்டான். ஆழினி இயலாமை தந்த ஆத்திரத்துடன் அவனை முறைத்தாள்.

“இங்க பாருங்க ஆழினி. நான் மனசறிஞ்சு அந்தப் பொண்ணை ஹர்ட் பண்ணல. அவங்க விருப்பதை மதிச்சி நான் ஒதுங்கி வந்துட்டேன். அவ்ளோதான். என்னோட விருப்பமும் எனக்கு ரொம்ப முக்கியம் இல்லையா? என்னோட வேலையை மதிக்காத, பிடிக்காத, புரிஞ்சுக்காத ஒருத்தர் கூட என்னால எப்படிச் சந்தோஷமா வாழ முடியும்? நீங்களே சொல்லுங்க. ஐ ஃபீல் சாரி ஃபார் ஹெர். அட் த சேம் டைம் நான் எனக்காகவும் யோசிக்கணும் இல்லையா? சோ, எனக்கு நடந்ததை நான் மறந்து கடந்து வர நினைக்கறேங்க. அவ்ளோதான்.” என்றான் அழுத்தமாக.

“எனக்கு வேற ஒரு பொண்ணோட நிச்சயமாகி நின்னது. நான் கப்பல்ல வேலை பார்க்க போறது. இதெல்லாம் உங்களுக்குப் பிடிக்கலன்னா.. தாராளமா எனக்கு நோ சொல்லுங்க ஆழினி. உங்களை யாரும் ஃபோர்ஸ் பண்ண போறதில்ல” என்றான் தீர்க்கமாக.

“அந்தப் பொண்ணுக்கு எனக்கு ஷிப் ஜாப் கிடைச்சது மட்டும்தான் தெரியும். அதுக்குப் பின்னாடி இருந்த என்னோட ஆசை, கனவு எதுவும் தெரியாது. எங்கப்பா பத்தின கதை எதுவும் தெரியாது. அதைச் சொல்ல எனக்கு வாய்ப்பு கிடைக்கல. ஆனா, உங்ககிட்ட ஷேர் பண்ணியிருக்கேன். இப்போ டிசைட் பண்ண வேண்டியது நீங்கதான்.” என்று முடிவெடுக்க வேண்டிய பொறுப்பை அவளிடம் ஒப்படைத்தான்.

ஆழினி ஒற்றைத் தலையசைப்பில் தன் முடிவை சொல்லியிருந்தாள்.

பிரித்வி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், “வார்த்தையா சொல்லிடுங்க ஆழினி.” என்றான் அடர்ந்த குரலில்.

“சாரி. ஐ கான்ட்.” என்றுதான் சொல்ல நினைத்தாள். ஆனால், அம்மாவை நினைத்து பயந்து எதுவுமே சொல்லாமல் மௌனமாக அமர்ந்திருந்தாள்.

மௌனம் சம்மதம் மட்டுமல்ல சமயங்களில் மறுப்பும் சொல்லும் என்ற முன் அனுபவம் பெற்றிருந்தவன், “இந்தக் கல்யாண ஏற்பாட்டை நிறுத்திடணும். சரியா? அதானே உங்க விருப்பம்? பண்ணிடலாம்” என்றான் குரலில் சிறு பிசிறும் இன்றி. அதைச் சொல்லி விட்டு அப்படியேதான் அமர்ந்திருந்தான். அவள்தான் முதலில் அங்கிருந்து வெளியேறினாள்.

“அன்னைக்கு உங்களை வேணாம்னு எழுந்து போனேன் இல்ல? அப்படியே போய் இருக்கணும் நான்.” பின்னாளில் எத்தனையோ முறை அதைச் சொல்லி சொல்லியே அவனிடம் சண்டையிட்டிருக்கிறாள்.

பிரித்வி கைகளைக் கட்டிக் கொண்டு மௌனமாக அவளைப் பார்ப்பதோடு சரி. எப்போதாவது அதிசயமாகப் பதில் பேசினாலும் சுருக்கென்று தைக்கும் வகையில் பேசி விடுவான். அவன் கட்டிய தாலியை போலவே அவன் வார்த்தைகளும் நெஞ்சை வலிக்க கீறி விடும்.

இப்பொழுது ஒரு பெருமூச்சுடன் உறக்கம் வராமல் எழுந்து விட்டாள் அவள். மனம் முழுக்கப் பிரித்வியே நிறைந்திருக்க, மீண்டும் அவனது மடிக்கணினியை உயிர்பித்தாள்.

அதில் ஏதாவது தகவல் கிடைக்கும் என்ற எண்ணத்தில் மெல்ல திரையில் பார்வையை ஒட்டியவளின் கண்களில் விழுந்தது ஃபேஸ்புக் ஆப். சட்டென்று அதைத் திறக்க அவனது கடவுச் சொல்லை கேட்டது அது. அது தெரியாததால் தன்னுடைய முகநூல் கணக்கில் நுழைந்தாள்.

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை அவள் அவ்வளவாகப் பயன்படுத்துவது கிடையாது. முகநூலில் மட்டுமே கணக்கிருக்கிறது. அதையும் சமீபமாக உபயோகித்த நினைவில்லை அவளுக்கு. அதற்கு அவசியமும் ஏற்படவில்லை.

அவளின் கடவுச் சொல்லே மறந்திருக்க, புதிய கடவுச் சொல்லை இமெயில் வாயிலாக உருவாக்கி உள்நுழைந்தாள்.

அவளின் பக்கத்தில் எண்ணற்ற அறிவிப்புகள் அவளுக்காகக் காத்திருந்தன. பத்திற்கும் மேற்பட்ட புதிய நட்பு அழைப்புகள் வந்திருந்தன. யாரென்று பார்க்க அதைச் சொடுக்கினாள்.

இரண்டாவது பெயராக, “பிரித்விராஜன்” இருந்தான். சட்டென அவன் பெயரை சொடுக்கி அவன் பக்கத்திற்குச் சென்றாள்.

அங்கும் முகப்புப் படமாக அவர்களின் புகைப்படம்தான் வைத்திருந்தான் அவன்.

இரண்டு வருடத்துக்கு முந்தைய புகைப்படம். அவன் விடுமுறைக்கு வீடு வந்திருந்த சமயத்தில் எடுத்திருந்த புகைப்படம் அது.

அவள் கடல் பாசி பச்சையில் பட்டுக் கட்டியிருக்க, அடர் பச்சை சட்டையில் இருந்தான் அவன்.

ஆழினி கண்களை மட்டும் திருப்பி அவனை முறைத்தப்படியிருந்த புகைப்படத்தை இப்போது பார்க்கையில், நிரம்ப காதலோடு பார்ப்பது போலிருந்தது. வேண்டுமென்றே அந்தப் புகைப்படத்தை வைத்திருக்கிறான் பிராடு பிரித்வி என்றவளுக்கு அந்நேரம் சிரிப்புதான் வந்தது.

அவனது நட்பு அழைப்பை நொடியும் யோசிக்காது ஏற்றாள். அவனைப் பற்றிய தகவல்களை ஆராய்ந்தாள்.

மனைவி என்று அங்கும் அவள் பெயரை குறிப்பிட்டிருந்தான் அவன்.

“ஆழினி” என்று ஆங்கிலத்தில் இருந்தது.

அதிலிருந்து சற்றே கண்களை விலக்கி மற்ற தகவல்களை ஆராய்ந்தாள்.

அவனது பள்ளி, கல்லூரி, சென்னை பணியிடம் என்ற தகவல்கள் இருக்க, தற்போதைய பணி இடமாக அங்கும் ராயல் கரீபியன் என்றுதான் குறிப்பிட்டிருந்தான்‌. அதை மாற்ற மறந்திருந்தான் போலும்.

“ஐயோ” என்றானது அவளுக்கு. ஆனாலும், நம்பிக்கையை விடாமல் அவனது பக்கத்தில் இருந்த அவனது பதிவுகளை ஆராய்ந்தாள். கடந்த ஆறு மாதங்களாக எந்தப் பதிவும் இடவில்லை அவன்.

அதற்கு முந்தைய பதிவுகள், புகைப்படங்கள் எல்லாம் ராயல் கரீபியன் கப்பல் பின்னணியில் இருக்கவும் மனம் நொந்து போனாள். அவனது புகைப்படங்களுக்கு வந்திருந்த பின்னூட்டங்களைக் கவனித்தாள். எல்லாமே புதிய பெயராகப் பரிச்சயமில்லாத பெயராகவே இருந்தது. அங்கிருந்த எவரையும் அவன் குறிப்பிட்டதாக அவளுக்கு நினைவில்லை.

அவளுக்கு யாரையுமே தெரியவில்லை. அப்படியே ஓங்கி நெற்றியில் அறைந்து கொண்டாள்.

அப்போதுதான் அவளின் புத்தி சரியாக வேலை செய்ய, அவனுக்குத் தனிச் செய்தி அனுப்பினாள்.

“பிரித்வி எப்படியிருக்கீங்க? பிளீஸ் கால் பண்ணுங்க. அர்ஜென்ட்” என்பதையே இரண்டு முறை அனுப்பினாள். அந்தோ பரிதாபம் அந்தச் செய்தியும் அவனைச் சென்று சேரவில்லை.

“பிரித்வி என்னாச்சு உங்களுக்கு? எங்கருக்கீங்க? ஏன் உங்களுக்குக் கால் போக மாட்டேங்குது? ஏன் வாட்ஸ்அப் மெசேஜ் டெலிவராக மாட்டேங்குது? ஃபேஸ்புக்ல மெசேஜ் பண்ணாலும் போகலையே ஏன்? எங்க இருக்கீங்க பிரித்வி? பத்திரமா இருக்கீங்களா?”

என்று பதறிச் சத்தமாகப் பேசியவளின் குரலில் இருந்த நடுக்கத்தை அவளாலேயே உணர முடிந்தது.

பொத்தென்று படுக்கையில் சரிந்து தலையணையில் முகம் புதைத்து கொண்டாள். இதயம் இரு மடங்கு வேகத்தில் துடிக்க, வயிற்றுக்கும் நெஞ்சுக்கும் இடையே அவஸ்தையாகப் பயப்பந்து உருண்டோட, தொண்டையை யாரோ நெரிப்பது போல வலித்தது. அவள் விழுந்த வேகத்தில் நெஞ்சில் தாலியின் கூர்முனை குத்தி வலித்ததில் கண்கள் கலங்க இம்முறை ஏனோ அவனைத் திட்டவில்லை அவள்.

How did this episode feel?
Rate this episode⭐ 5.0 (8)

2 thoughts

Stay Connected A simple, spam-free email update whenever a fresh chapter goes live.
About Us FAQ Contact Us Privacy Policy Terms & Conditions Disclaimer Copyrights
© 2026 Devi Manogaran Novels. All rights reserved.  ·  Created by Vel Studios
error: Content is protected !!