தெண்திரை தேடலே – 8
அத்தியாயம் – 8
ஆழினி அந்தத் திருமணத்திற்கு முழுமனத்துடன் சம்மதிக்கவில்லை. பிரித்விராஜன் இந்தத் திருமணப் பேச்சை நிறுத்தி விடுகிறேன் என்று அவளிடம் சொல்லியிருக்க, அவனை மலையாக நம்பினாள். ஆனால், அவனுக்கும் அதே நெருக்கடி வீட்டில் தரப்பட்டதை இந்திராணியைச் சந்திக்க வந்த கற்பகத்தின் பேச்சிலிருந்து தெரிந்துக் கொண்டாள்.
இரண்டு அம்மாக்களும் இணைந்து திட்டமிட்டுத் திருமணப் பேச்சை மீண்டும் முன்னெடுத்தார்கள். இம்முறை எல்லாவற்றையும் முடிவு செய்து விட்டுத்தான் பிள்ளைகளுக்கே தெரியப்படுத்தினார்கள்.
“ஆழினி, நான் ரொம்ப டிரை பண்ணேன். பட், சாரி” என்று தர்மசங்கடத்துடன் அவள் முகம் பார்த்துச் சொன்ன பிரித்வியைப் பேச விடாமல் தடுத்து, “பிளீஸ், நீங்க எதுக்குச் சாரி சொல்றீங்க. இதுக்கு எங்கம்மாவும் காரணம்னு எனக்குத் தெரியும். இன்ஃபேக்ட் எங்கம்மாதான் இதுக்கு முக்கியக் காரணம். அதுனால நான்தான்..” என்று அவள் மன்னிப்பு கேட்கப் போகவும், மென்னகையுடன் கை நீட்டி அவளைத் தடுத்தான் அவன்.
ஆழினிக்கு முகூர்த்தப் பட்டெடுக்க வந்திருந்தார்கள். அவளும் வீட்டினருடன் வந்திருப்பது தெரிந்ததும் அவசரமாக வந்து சேர்ந்தான் பிரித்வி.
அவளிடம் தனியாகப் பேச வாய்ப்பு ஏற்படுத்திக் கொண்டு பேசினான்.
இப்போது என்ன பேசுவதென்று தெரியாமல் ஆழினி அமைதியாக நிற்க, “எனக்கு உங்க பேர் ரொம்பப் பிடிக்கும் ஆழினி” என்றான் திரும்பி அவளை நேராகப் பார்த்து.
ஆழினியின் விழிகள் மொத்தமாக விரிந்து அவனை அதிர்ச்சியாகப் பார்த்தது.
“பேர்தான் பிடிக்கும்னு சொன்னேன். அதுக்கு ஏன் இப்படிப் பேய் அறைஞ்ச மாதிரி முழிக்கறீங்க?”
“விட்டா என்னையே பிடிக்கும்னு சொல்லிடுவீங்க போல. நான்தான் எங்கம்மா கம்பெல் பண்ணதால..”
“இப்போ பிடிக்கும்ன்னு உறுதியா சொல்ல முடியலைன்னாலும், கண்டிப்பா உங்களைப் பிடிக்காதுன்னு பொய் சொல்ல மாட்டேன் ஆழினி”
“என்னது?” மீண்டும் அதிர்ந்து விழித்தாள்.
“ஜஸ்ட் லைக் மோஸ்ட் அரேஞ்ச்டு மேரேஜஸ், நாமளும் பேரன்ட்ஸ் குடுக்கற பிரஸர்ல கல்யாணம் பண்ணிக்கலாம். பட் கண்டிப்பா கல்யாணத்துக்கு அப்புறம் உங்களை எனக்குப் பிடிக்கும்னு நம்புறேன். ஆழினி என் மனைவிங்கற பிடிப்பு மனசுல வந்துட்டா, தானாவே உங்க மேல பிடித்தம் வந்துடும் தானே? அந்தப் பிடித்தம் உங்களுக்கும் என் மேல வர்றதுக்கு நான் பொறுப்பு. டிரஸ்ட் மீ ஆழி” என்றான் ஆழ்ந்த குரலில்.
அவனையே விழியெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அந்நேரமும் குழப்பமான மனநிலைதான்.
மெல்ல அவளை நோக்கி கரம் நீட்டினான். அதைப் பற்றிக் கொள்ள அவள் தயங்க, அவன் கரமே நீண்டு நிதானமாக அவள் கரம் பற்றி விரல் கோர்த்துக் கொண்டது.
“என் தங்கச்சி யாழினி யூஎஸ்ல மாஸ்டர்ஸ் பண்றா..”
“ம்ம், தெரியும். அம்மா சொன்னாங்க. அவங்களுக்கு லீவ் இருக்காது, அதுவும் இல்லாம ரொம்பத் தூரம், உடனே வந்துட்டுப் போறது கஷ்டம்னு நம்ம கல்யாணத்துக்கு வர மாட்டான்னு உங்கம்மா சொன்னதா சொன்னாங்க”
“ம்ம்” என்று தயங்கியவள், “அவ வராததுக்கு அது மட்டும் ரீசன் இல்ல. அம்மாக்கும், அவளுக்கும்… அம்மா அவகிட்ட பேச மாட்டாங்க. அவளோட படிக்கிற பையன் கூட அவ ரூம் ஷேர் பண்றா. அதுல அம்மாக்குக் கோபம்” படபடவென்று சொல்லி முடித்து அவன் முகம் பார்த்தாள்.
பிரித்வி புருவங்கள் சுருங்க அவளைக் கேள்வியாகப் பார்த்தான்.
“யா, தே ஆர் லிவிங் டுகெதர்” பட்டென்று அவனிடம் உண்மையைப் போட்டுடைத்து விட்டாள்.
ஓர் நொடி அதிர்ச்சியை அப்பட்டமாக வெளிக்காட்டிய அவன் முகம், மறுகணமே சுதாரித்துச் சாதாரணமாக மாறியிருந்தது.
“அதுனால அம்மாக்கு அவ மேல ரொம்பக் கோபம். நிறையத் திட்டி சண்டை போட்டு.. ஊருக்கு திரும்பி வர சொல்லி அழுது மிரட்டி பார்த்துட்டாங்க. அவ படிப்பை முடிச்சுட்டுதான் வருவேன்னு சொல்லிட்டா. அதுனால அம்மாக்கு இப்போ என்னை நினைச்சுப் பயம். அடுத்த வருஷம் யாழிக்குப் படிப்பு முடியுது. அவ உடனே ஊருக்கு வர்றது டவுட்தான். ஆனா, அப்படி வந்தா… அவ விஷயம் வெளில தெரிஞ்சுடும். அதுனால என் லைஃப் அஃபெக்ட்டாகும்னு அம்மா பயப்படுறாங்க.”
“புரியுது.” என்றான். ஆனாலும் அவன் கண்களில் இன்னமும் அதிர்ச்சியின் சாயல் தெரிந்தது. இதெல்லாம் எங்கோ நடக்கிறது, யாரோ இருவர் திருமணம் செய்து கொள்ளாமல் இணைந்து வாழ்கிறார்கள் என்று கேள்விப்படுவோம். ஆனால், நமக்குத் தெரிந்தவர் வீட்டில் ஒருவர் எனும் போது அவனுக்கு அதிர்ச்சியாகத் தானிருந்தது.
“என்ன அப்படிப் பார்க்கறீங்க? நீங்க அங்க போய் அமெரிக்கக்காரியையோ இல்ல வேற ஃபாரின் பொண்ணையோ கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு தானே நீங்க வேணாம்னு சொன்னாலும் கேட்காம உங்கம்மா உங்களுக்கு அவசரமா கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க? ம்ம், கப்பலுக்குப் போவேன்னு சொல்றவரை, நீங்க விரும்புற கடலுக்குள்ள தள்ளி விடாம எதுக்காகக் கல்யாணத்துக்குள்ள தள்ளி விடுறாங்க? சொல்லுங்க?” என்று முகத்தை நிமிர்த்தி இதழ்கள் கிண்டலாக வளைய குறும்பு புன்னகையுடன் கேட்டாள்.
“நான் விரும்புற ஆழிக்குள்ளதான் என்னைத் தள்ளி விடுறாங்க ஆழி. சோ இட்ஸ் ஓகே. ஐ வில் சர்வைவ். எனக்கு ரொம்பப் பிடிச்ச ஆழி எப்பவும் என்னை மூச்சு முட்ட வைக்காது.” என்றான் மந்தகாசப் புன்னகையுடன்.
ஆவென்று வாய் திறந்து அவனைப் பார்த்த ஆழினியின் கண்களுக்குள் மட்டுமல்ல மனத்தினிலும் ஆழி பேரலைகள் ஆர்ப்பரித்து அடங்க மறுத்தது.
“என் பையனை ஒருத்தி வேணாம்னு சொல்லுவாளா? அவனுக்கு நான் குறிச்ச தேதியில கல்யாணம் பண்ணி காமிக்கிறேன். என்னை யாருன்னு நினைச்சாங்க அவங்க? என் பையனை கட்ட முடியாதுன்னு சொல்லி எங்க குடும்பத்தை அசிங்கப்படுத்துவாங்களா? இப்போ அதே தேதியில இந்தக் கல்யாணத்தை நடத்தி நான் யார்னு அவங்களுக்குக் காட்டுறேன்” என்று சூளுரைத்தார் கற்பகம். அவரின் அந்தப் போக்குதான் இந்திராணிக்குச் சாதகமாக அமைந்தது.
கற்பகத்தின் அந்த அவசரத்துக்கும் பயமே காரணம். கப்பல் வேலை என்றதும் மகனுக்குப் பேசிய, பார்த்த பெண்கள் அவனை மணக்க முடியாதென்று மறுக்கவும், இப்போது விட்டுவிட்டு நாளை மகனுக்குத் திருமணத்துக்குப் பார்த்தால் இன்னும் மோசமான நிராகரிப்புகளைச் சந்திக்க நேருமோ என்ற பதைபதைப்பு அவரை எந்த எல்லைக்கும் செல்ல வைத்தது.
மகனிடம் கெஞ்சி, கதறி, மிரட்டி, அழுது, நடித்து ஒருவாறாக அவனைச் சம்மதிக்க வைத்திருந்தார். பெண் வீட்டு சார்பாக இந்திராணியும் இறங்கி வந்து பேச அவரின் வேலை எளிதாகி போனது.
என்னவொன்று இந்த முறை மகன் தெளிவாக இருந்தான்.
ஆழினியில் வீட்டில் வரதட்சணை என்ற பெயரில் எதையும் வாங்கக் கூடாதென்று தெள்ளத் தெளிவாக அவரிடம் தெரிவித்து விட்டான். ஆனால், இந்திராணி மகளுக்கு நிறைவாக எல்லாம் செய்யவும், கற்பகமும் மறைமுகப் பேச்சோடு அமைதியானார்.
சென்னையின் முக்கியப் பகுதியில் இருந்த ஆழினியின் சொந்த வீட்டையும் நாளை இரண்டு பெண் பிள்ளைகளுக்குப் பங்கிட்டாலும், ஆழினியின் பங்காகப் பெரிய தொகை என்று வரும் என்று சமாதானமாகி விட்டார் அவர்.
திருமணச் செலவு மொத்தத்தையும் பிரித்விராஜனே பார்த்துக் கொண்டான்.
அவன் மிகவும் இயல்பாக இருக்க ஆழினிதான் குழப்பமான மனநிலையில் இருந்தாள்.
அதிலும் அவர்களின் திருமணத்தன்று அந்தத் தேதி, அதே மண்டபம் என அனைத்தும் அவள் மனத்தைப் பிராண்டி தொல்லை செய்தது. என்னவோ யாரோ இருக்க வேண்டிய இடத்தில் தான் அமர்ந்த உணர்வு அவளுக்கு.
அது அவளின் முகத்திலும் தெரிய, “என்னாச்சு ஆழி? எனிதிங்க் ராங்?” என்று அவள் புறமாகச் சாய்ந்து மெல்ல வினவினான் பிரித்வி. அந்த அக்கறை கூட அவளை அலைக்கழித்தது.
அவனோ அவளையே கூர்ந்து பார்த்தான்.
“எனக்கு மைண்ட் ரீடிங் தெரியாது ஆழினி. உங்க மனசுல என்ன இருக்குன்னு நீங்களே சொன்னாதான் தெரியும். என்னன்னு சொல்லுங்க, என்னால முடிஞ்சா சரி பண்றேன். என்ன பிரச்சினை?” என்று பேசிக் கொண்டே போனவனின் பேச்சு, “உங்களுக்கு இதே தேதியில, இந்த மண்டபத்துல தானே அந்தப் பொண்ணோட..” என்று அவள் சொல்லவும் அப்படியே நின்று போனது.
“பிளீஸ், பேசாத ஆழி..னி” என்றான் அழுத்தமாக.
அவன் கோபத்தைக் கட்டுப்படுத்தியதில் தாடை இறுக, கண்களில் கடினம் கூட அவளைத் திரும்பிப் பார்த்தான். அவள் விழிகளில் பதிந்த அவன் விழிகள் மெல்ல மெல்ல கீழிறங்கி அவள் மார்பில் பதிந்தது. மறுகணம் மீண்டும் அவள் விழியில் விழி பதித்து, “என்னைக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதம் சொன்னேனோ அன்னைக்கே.. இல்ல, அதுக்கு ரொம்ப முன்னவே பழசை.. பாஸ்ட்டை பின்னாடி விட்டுட்டு வந்துட்டேன் நான். ஆனா, இன்னமும் நீதான் அதைப் பிடிச்சு தொங்கிட்டு இருக்க. மறக்க வேண்டியது நான் இல்ல. நீ” என்றான் அடர்ந்த குரலில். மீண்டும் அவன் கண்கள் அவள் மார்பில் தொங்கிய திருமாங்கல்யத்தில் படிந்து விலகியது.
அதன் பிறகு அவளிடம் பேச்சைக் குறைத்துக் கொண்டான். ஆனால், இயல்பாகத்தான் இருந்தான்.
“அதெப்படி சட்டுனு மனச மாத்திக்க முடியும்?” என்று தனக்குத்தானே கேள்விக் கேட்டுக் கொண்டாள் அவள். அவனைச் சந்தித்த நாளில் இருந்து அந்தக் கேள்விதான் அவளுக்கு.
“எல்லாம் தெரிஞ்சுதான் எனக்கு ஓகே சொன்ன நீ ஆழினி. சோ பிளீஸ் டோண்ட் ப்ளேம் மீ” என்றான் வீடு வந்ததும், தனிமை கிடைத்ததும். அவள் முகம் அப்படியே வாடி விட்டது.
அதைக் கண்டதும் உடனடியாக, “சாரி” என்றான்.
இப்போது யோசித்துப் பார்த்தால் ஆழினிக்கு தன் பக்கத் தராசு நியாயமின்றி அநியாயத்துக்கு ஆடுவது போலிருந்தது.
“சாரி” என்று முணுமுணுத்தாள். அன்றைக்கும் அதைத்தான் சொன்னாள்.
“உன்னோட கேள்விகள், குழப்பங்கள் எல்லாம் எனக்குப் புரியுது ஆழினி. சோ, இட்ஸ் ஓகே. ரிலாக்ஸ்” என்று புன்னகை முகமாகச் சொல்லி கடந்தான். அவள்தான் குழம்பி நின்றாள்.
இப்போதும் அவனைக் கண்டுபிடிக்க முடியாத குழப்பத்துடன் நிற்கிறாள். அவனுக்கு என்னவானதோ என்று மனம் குழம்பி நிற்கிறாள். முன்னெப்போதையும் விட மனம் இப்போது அதிகமாக அவனைத் தேடி தவித்து விடை தெரியாமல், வழி சிக்காமல் கலங்கித் தவித்தது.
அவர்களின் திருமண நிகழ்வுகளை அசைப் போட்டபடி எழுந்து சென்று காய்கறி வாங்கி வந்து மதிய சமையலை செய்தாள். காலையில் குடித்த காஃபியோடு சரி. எதையும் உண்ணவில்லை அவள். பசிக்கவும் இல்லை. உடலே மரத்து போன உணர்வு.
மருத்துவர் கார்த்திக் மற்றும் மருத்துவமனை நிர்வாக அலுவலகத்தை அழைத்து விடுமுறை சொன்னாள். இம்முறை அவளுக்கு அத்தனை எளிதாகக் கிடைக்கவில்லை விடுமுறை.
மருத்துவமனை குறித்துச் சிந்திக்கும் போதுதான் கப்பல் பணிக்கு செல்ல வேண்டுமென்றால் முழுமையான உடல் பரிசோதனை செய்திருக்க வேண்டும். அவர்கள் குறிப்பிடும் எல்லாத் தடுப்பூசிகளும் போட்டு, பரிசோதனைகளும் மேற்கொள்ள வேண்டும். அவர்களின் உடல்நிலை முழுமையாகச் சோதிக்கப்பட்டுத் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணிக்கு அமர்த்தப்படுவார்கள். அதில் மிகவும் கடுமையாக, கண்டிப்பான விதிமுறைகளைப் பின்பற்றுவார்கள்.
ஆக, அது நினைவு வரவும் மாமனாரிடம் ஓடினாள்.
“மாமா..”
“என்னம்மா, பிரித்வி மெசேஜ் பண்ணிட்டானா? எப்போ கால் பண்றேன்னு சொன்னான்?” என்று ஆவலாக விசாரித்தார் அவர்.
“இல்ல மாமா. நான் வேற ஒரு டீட்டெயில் கேட்க வந்தேன்” என்றாள்.
“சொல்லும்மா” என்றவரின் குரலில் அகத்தின் சோர்வு வெளிப்பட்டது.
“அவர் புது ஷிப் ஜாயின் பண்றதுக்கு முன்னாடி மெடிக்கல் செக் அப் போய் இருப்பார் இல்ல மாமா? உங்களுக்கு எங்கன்னு தெரியுமா? உங்ககிட்ட ஏதாவது சொன்னாரா? கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்களேன்”
“ஏன் உனக்குத் தெரியாதா? நீ வேலை பார்க்கற ஹாஸ்பிடலுக்கு வரலையா அவன்?”
“எங்க ஹாஸ்பிடல்ல பண்ண முடியாது அத்த?”
“ஏன்? எனக்குலாம் ஃபுல் பாடி செக் அப் அங்க தானே பண்ணோம்?”
“இது அப்படியில்லத்த. மெடிக்கல் செக் அப் அவங்க சொல்ற ஹாஸ்பிடல்லதான் பண்ணணும்”
“ஏன்? ஊர்ல எத்தன நல்ல ஹாஸ்பிட்டல் இருக்கும் போது..” என்று கற்பகம் நீட்டி முழக்க, “கற்பகம், கொஞ்ச நேரம் நீ பேசாம இருக்கியா?” என்று அவரை அதட்டி அடக்கினார் முருகானந்தம்.
“உன்ன மாதிரி ஆளுங்க இப்படித் தெரிஞ்ச கிளினிக் போய் உங்க இஷ்டத்துக்குப் போலி ரிப்போர்ட் வாங்கிக் கொடுத்து ஏமாத்தி வேலை வாங்கிடுவீங்கன்னுதான் அவன் இங்கதான் டெஸ்ட் பண்ணணும்னு ரூல்ஸ் வச்சிருக்கான். புரிஞ்சதா?” என்று கடுப்பாகக் கேட்டார்.
“மாமா, போன முறை எங்க எடுத்தார்னு எனக்குத் தெரியாது. இந்த டைம் உங்ககிட்ட எதுவும் சொன்னாரா?”
“அதான் அப்பவே ஃபர்ஸ்ட் டைம் ஷிப்புக்கு போகும் போதே டெஸ்ட் எடுத்திருக்கான் இல்ல? அது இருக்கும் போது, இப்போ திரும்ப எதுக்கு எடுக்கப் போறான்?” என்று மீண்டும் கேள்வியுடன் உள்ளே வந்தார் கற்பகம்.
“அந்த மெடிக்கல் ரிப்போர்ட் ரெண்டு வருஷத்துக்குத்தான் வேலிட் அத்த. அப்புறம் புதுசு குடுக்கணும். அதுலயும் புது ஷிப்னா கண்டிப்பா மெடிக்கல் ரிப்போர்ட் புதுசா குடுக்கணும்.” என்றாள் பொறுமையாக.
“அஹான். அவன் நீ போனதும் எங்கயோ போக வரன்னு இருந்தான். ஆனா என்கிட்ட ஒன்னும் சொல்லல” என்றார் கோபமும், சோகமுமாக.
முருகானந்தம் சற்றே யோசித்து, “ரெண்டு டைம் திநகர் போனான் மா. அதுவும் காலையிலேயே கிளம்பி போய்ட்டு மதியத்துக்கு மேலதான் வீட்டுக்கு வந்தான். ஒருவேள மெடிக்கல் செக் அப்புக்கா இருக்குமோ?” என்று யோசனையுடன் அவளிடமே கேட்டார்.
“சான்சஸ் இருக்கு மாமா. நான் எனக்குத் தெரிஞ்ச சிஸ்டர்ஸ்கிட்ட கேட்டு பார்க்கறேன். டிநகர்ல எந்த ஹாஸ்பிட்டல் இல்ல, எந்தக் கிளினிக்ல ஷிப் ஜாப்க்கு மெடிக்கல் பண்ணுவாங்கன்னு விசாரிக்கறேன். கண்டிப்பா ஏதாவது ஒரு ஹாஸ்பிட்டல் கூடத்தான் டை அப் இருக்கும். விசாரிச்சா தெரியும். அவங்ககிட்ட ஷிப் லெட்டர் குடுத்துதான் மெடிக்கல் பண்ணியிருப்பார்”
“அப்படியா? அப்போ அவங்களைக் கேட்டா தெரியும் இல்ல? எந்தக் கம்பெனின்னு சொல்லிடுவாங்க இல்ல?” என்று நம்பிக்கையாகக் கேட்டார்கள். வேறு வழியின்றித் தலையசைத்தாள் அவள். ஆனால், அது அத்தனை சுலபமான காரியமில்லை என்பது அவளுக்கும் தெரியும்.
மருத்துவனையில் நோயாளிகளின் தகவல்கள் மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். அவர்களுக்குப் புரியும்படி அவளின் நிலையை விளக்கி அவள் கேட்டாலும் தகவல் தருவார்களா என்பது சந்தேகம்தான். ஆனால், துளியாகத் துளிர்த்த நம்பிக்கையை விடாமல் பிடித்துக் கொண்டாள் அவள்.
மதிய உணவை சமைத்துப் பெரியவர்களைக் கட்டாயப்படுத்திச் சாப்பிட வைத்து, மீண்டும் அறைக்குள் வந்து அடைந்து கொண்டாள்.
திநகரில் இருந்த மருத்துவமனை தகவல்களைச் சேகரித்தாள். அந்த நீண்ட மருத்துவமனை பட்டியலை பார்த்ததும் அவளுக்கே மலைப்பாக இருந்தது.
இப்படித் தலையைச் சுற்றி மூக்கை தொடுவதற்குப் பதிலாக அவளோடு பணிபுரியும் விஷ்ணு பிரியாவை அழைத்தாள்.
“அக்கா, டிநகர்ல ஷிப் ஜாப்க்கு மெடிக்கல் செக் அப் பண்றது எந்த ஹாஸ்பிடல்னு தெரியுமா?” என்று பேச்சோடு பேச்சாகக் கேட்டு விட்டாள்.
“ம்ம், ஏதோ ஒரு மெடிக்கல் சென்டர் பேர் சொல்லுவாங்க. சட்டுனு ஞாபகம் வரல ஆழி”
“அக்கா..”
“நான் யோசிச்சு இல்ல விசாரிச்சு சொல்றேன். ஓகே?”
“ஓகே கா” என்று சொல்லி வைத்தாள்.
அந்நேரம், “நீ சாப்பிடலயா மா?” என்று கேட்டு வந்தார் முருகானந்தம்.
“சாப்பிடணும் மாமா. வர்றேன்” என்றாள்.
“நம்ம ரெண்டு பேரையும் சாப்பிட வச்சுதே, மருமக சாப்பிட்டுச்சான்னு கேட்டோமா நாம? நான்தான் கவனிக்கல நீயாவது..” என்று அவர் கற்பகத்தைத் திட்டத் தொடங்கவும், விரைந்து வெளியேறி, கொஞ்சமாகச் சோறு போட்டு தயிர் சேர்த்து உண்டு வந்தாள்.
“பிரித்வி மொத மொத ஷிப் வேலைக்குப் போகும் போது கோவால இருக்க ஒரு கம்பெனி மூலமாதான் அப்ளை பண்ணி போனான் மா. இந்த டைம் கூட ஒருநாள் விடிய முன்ன வெளில போயிட்டு நைட்டு திரும்பி வந்தான். அவன் லேப்டாப் பேக்ல ஏர்போர்ட் ஸ்டிக்கர் பார்த்த மாதிரியிருந்தது எனக்கு” என்றார்.
“டோமெஸ்டிக் ஃபிளைட்ஸ்ல ஹேன்ட் லக்கேஜ் டேக் இருக்காதே மாமா” என்றவள், சட்டென அறைக்குள் சென்று அவனது மடிக்கணினி பையைத் தேடி எடுத்து பார்த்தாள். அப்படியொன்றும் அதில் இல்லை. நிறைய ஏமாற்றத்துடன் திரும்பி வந்து, “கோவால இருக்க ஏஜென்சிஸ் செக் பண்ணுவோம் மாமா” என்றாள்.
எந்தப் பக்கம் திரும்பினாலும் வெறுமையே தெரிந்தது. திரும்பத் திரும்ப முட்டிக் கொண்டு ஆரம்ப நிலைக்கே திரும்பியதில் சோர்ந்து போனாள்.
ஆழினிக்கு ஆழியின் ஆழத்தில் அமிழ்ந்த உணர்வில் மூச்சடைத்தது. அவளுக்கு பற்றிக் கொள்ளச் சிறு துரும்பு கிடைத்தாலும் போதும் மேலேறி வந்து விடுவாள். பிரித்வியைப் பிடித்து விடுவாள். அதற்கான வழியைத்தான் காணவில்லை.
மீண்டும் அறைக்குத் திரும்பி அவனது கோப்புகளை எடுத்து ஆராய்ந்தாள்.
அவனது இமெயில் முகவரி கிடைக்கவும் அடுத்து கிடைத்த வாய்ப்பாக எண்ணி நீண்ட மடல் ஒன்றை எழுதி அனுப்பினாள்.
“அவசரம். உடனே அழைக்கவும்” என்று தந்தி மொழி செய்தி ஒன்றையும் அனுப்பி வைத்தாள். இரண்டு மணி நேரங்கள் கடந்த பின்னரும், அதற்கும் எந்தப் பதிலும் அவனிடமிருந்து வரவில்லை.
தவறான இமெயில் முகவரி என்று அவள் அனுப்பிய செய்தி திரும்பி வராத அளவில் திருப்திப்பட்டுக் கொண்டாள் அவள்.
பகல் பொழுது போய் இரவும் வந்திருந்தது. கட்டில் முழுக்கக் காகிதங்கள் பரப்பி வைத்து விட்டு கணவனை மீண்டும் மீண்டும் அழைத்துப் பதில்லாமல் ஓய்ந்து அமர்ந்தாள்.
இதே அறையில் முதல் முதலாக அவனோடு வாய்த்த தனிமை நினைவுக்கு வந்தது.
“உனக்கு எதாவது வேணுமா? என்ன வேணும்னு சொல்லு ஆழினி. ஃபீல் ஃப்ரீ. ரிலாக்ஸ். ரெஸ்ட் எடு” என்று மிக மிக இயல்பாக அவளிடம் பேசினான் அவன்.
ஆழினிதான் அவனையே பார்த்தபடி அசையாமல் நின்றிருந்தாள். இரவு உடைக்கு மாறி அவன் சாதாரணமாக அறைக்குள் சுற்ற, அவளும் இயல்பாக இருப்பது போல இருக்க முயன்றாள்.
“பால்?”
“ம்ஹூம்”
“ஓகே. பட் சூடா இருக்கு. கொஞ்சமா குடியேன். நல்லா தூக்கம் வரும்” என்றான் தீவிரமாக. அந்தக் கடைசி வாக்கியத்தைச் சாதாரணமாகச் சொல்லி விட்டு, அவள் விழிகள் விரியவும் கண்ணால் சிரித்தான்.
“ம்ம்” என்று அவளை நோக்கி பால் கோப்பையை நீட்டினான்.
அவள் இரண்டு மடக்கு குடித்திருப்பாள். பட்டென்று அவளிடம் இருந்து பறித்து மிச்சத்தை அவன் குடித்து, “குட் நைட் ஆழினி” என்று படுத்து விட்டான்.
அவர்களின் நாள்கள் அப்படியேதான் நகர்ந்தது. இயல்பாகப் பேசினான், சிரித்தான். ஒன்றாக வெளியில் சென்றார்கள். அவனது நண்பர்களைச் சந்தித்தார்கள். மறுவீடு, விருந்து எல்லாம் முடிந்து அமர்கையில் மருத்துவமனையில் அவளின் விடுமுறை முடிந்திருந்தது.
“என்னது நீ வேலைக்குப் போறியா? என் பையன் இன்னும் ரெண்டு வாரம் கூட வீட்ல இருக்க மாட்டான். அதுவரைக்கும் நீயும் வீட்ல இருந்தா என்ன?”
“இப்பத்தான் கல்யாணம் ஆச்சு. புருஷனை பார்க்கணும்னு பொறுப்பில்லாம வேலைக்கு ஓடுற?”
“நாளைக்கு உங்களுக்குப் பிள்ளை வந்தா எப்படி வேலைக்குப் போவ நீ? பிள்ளையைப் பார்க்கவே நேரம் சரியா இருக்கும்”
“அவன் ஷிப்புக்கு போற வரைக்கும் நீ வேலைக்குப் போகாம வீட்ல இரு” என்று திருமணத்துக்கு முன்னால் அவளிடம் சொன்னதை எல்லாம் மறந்து அப்படியே மாற்றிப் பேசினார் கற்பகம்.
ஆழினி அதிர்ச்சியுடன் அவரைப் பார்க்க, பிரித்விதான் அவளை மருத்துவமனையில் கொண்டு விட்டான். தன் வேலைக்கு அத்தனை முக்கியத்துவம் கொடுப்பவன், அவள் வேலைக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பான்? அவளை எப்படித் தடுப்பான்?
அன்றைக்குக் கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும் வேலைக்குச் செல்வதை நிறுத்தவில்லை அவள்.
பிரித்வி விமானம் ஏற இரண்டு தினங்கள் இருக்கும் போது விடுமுறை எடுத்துக் கொண்டாள். அவனுக்குப் பெட்டி அடுக்க உதவினாள். அவனுக்குத் தேவையான பொருள்களை எல்லாம் எடுத்துக் கொடுத்து, வேண்டியதை வாங்கி வந்து, அவனோடே இருந்தாள்.
அதுநாள் வரை அவளை விட்டு விலகியே இருந்தவன் பார்வையே இப்பொழுது மொத்தமாக மாறியிருந்தது. அவளையே பார்வையால் பின் தொடர்ந்து கொண்டிருந்தான்.
“நானும் உங்களோட ஏர்போர்ட் வரவா?” அவன் கிளம்பிய அன்று தயக்கத்துடன் அவனை நெருங்கி கேட்டே விட்டாள்.
“எனக்கு மிட்நைட் ஃப்ளைட் ஆழினி. அந்நேரத்துல நீ தனியா திரும்பி டாக்ஸில வீட்டுக்கு வரணும். நான் அம்மாப்பாவையும் வர வேணாம்னு சொல்லிட்டேன். அந்நேரம் நீ தனியா திரும்பி வந்தா.. நீ பத்திரமா வீட்டுக்கு வந்துட்டியோ இல்லையோன்னு அடுத்த ஃப்ளைட் மாறுற வரைக்கும் உன்கிட்ட பேசுற வரைக்கும்.. என் மனசு கிடந்து அடிச்சுக்கும். அதுனாலதான் வேணாம்னு சொல்றேன். பிளீஸ்.” என்றான். புரிந்துக் கொள்ளேன் எனும் கெஞ்சல் பாவனையுடன்.
அது புரிந்து சரியெனத் தலையசைத்தாள். மெல்ல அவளை நெருங்கி, “பிளீஸ்..” என்று கையை லேசாக விரித்தான்.
“என்ன?” புரியாமல் புருவம் சுருக்கினாள்.
“உன்னதான்..” என்றவனின் பார்வையே அவளின் இதயத் துடிப்பை ஏகத்துக்கும் எகிற செய்தது. அவளை மெதுவாக நெருங்கி நின்றான். இருவரின் மூச்சுக் காற்றும் மோதிக் கொள்ள, “ம்ம்” என்று அனுமதிக் கேட்டவன், மெல்ல அவளை அணைத்து நிதானமாக நெருக்கத்தையும், இறுக்கத்தையும் கூட்டினான்.
“ஐ வில் மிஸ் யூ ஆழி” என்றான் அடர்ந்த குரலில். இம்முறை அவளின் மௌனத்தைச் சம்மதமாக எடுத்துக் கொண்டு, முகமெங்கும் முத்தமிட்டு உதட்டில் உறைந்தான்.
நீண்ட ஆழமான முத்தத்திற்குப் பின் மெல்ல அவள் முகத்தை நிமிர்த்தினான்.
“சாரி மட்டும் சொல்லிடாதீங்க பிளீஸ்” என்றாள் அவள். பின்னே முத்தமிட்டதற்காகக் கேட்டாலும் கேட்பான் என்ற முன்னெச்சரிக்கைதான்.
“ஹாஹாஹா” என்று உடல் குலுங்க, பிரித்வி அவளை இறுக அணைத்துச் சத்தமாகச் சிரித்தான்.
“பத்திரமா இரு ஆழி. சீக்கிரம் வந்துடுவேன். ஐ வில் மிஸ் யூ” என்றான். அப்படி மிஸ் செய்யும் அளவில் அவர்களிடையே பிரியமோ புரிதலோ இல்லையென்றாலும் எதிர்மறையாக எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள் அவள்.
“பத்திரமா இரு ஆழி. சீக்கிரம் வந்துடுவேன். ஐ வில் மிஸ் யூ” ஒவ்வொரு முறை வேலைக்குச் செல்லும் போதும் சொல்வான். கப்பலில் இருந்தும் சொல்வான்.
இம்முறை வேலைக்குச் செல்லும் போதும் சொல்லவில்லை, கப்பலில் இருந்தும் சொல்லவில்லை. ஆனால் இப்போதும் அவன் குரலும், அந்த வார்த்தைகளும் நினைவு வர, அவளுக்குக் கண்கள் கலங்கியது.
ஏனோ மூச்சு முட்டுவது போலிருக்க, ஜன்னல்களைத் திறந்து விட்டு, பிரித்வியின் உடைகள் இருந்த அலமாரியை திறந்தாள்.
அவனது உடைகளுக்கு நடுவில் அவளின் இரண்டு புடவைகள் கலந்திருந்தன. அதை இன்றுதான் பார்க்கிறாள். கவனிக்கிறாள்.
“பிராடு பிரித்வி” என்றவளுக்கு மளுக்கென்று கண்கள் குளம் கட்டின.
அலமாரியில் அவனது வாசனைத் திரவியத்தின் மெல்லிய மனம் இன்னும் மிச்சமிருக்க ஆழ மூச்சிழுத்தாள். அவன் வாசம் நாசியை நிறைத்தது.
மழை மெலிதாகப் பொழிந்து கொண்டிருந்த இரவில் பக்கத்து வீட்டு ரேடியோவில் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
“முகம் கொஞ்சம் நினைவிருக்கு அவன் முகவரி தெரியவில்லை.
யோசனை செய்வதற்கும் அந்தப் பூ முகம் நினைவில்லை. வாசலில் மறைந்து விட்டாள் அவள் வாசனை மறையவில்லை.”
“கண்டுபிடி அவனைக் கண்டுபிடி நெஞ்சை களவாடி ஓடி விட்டான் கண்டுபிடி” என்ற வரிகளைக் கேட்டதும், அவள் மனமும் கண்களும் உடைந்து கண்ணீர் சரசரவென்று கன்னம் தொட்டிருந்தது.
How did this episode feel?
Rate this episode⭐ 5.6 (9)
2 thoughts
Sign in to share your thoughts
One tap with Google, no password needed.
Continue with Google Login or register with email
or write your comment below as a guest
Very nice.
Thank you ma ❤️