தெண்திரை தேடலே – 3
அத்தியாயம் – 3
எல்லாவற்றுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. ஆனால், நிறையக் கோணங்கள் உண்டு. திருமணம் என்பது இருவர் இணையும் பந்தம். அதில் அவள் மட்டுமே இருக்க வேண்டும் என்றால் எப்படி? பழிப்பது என்றால் அவனது பங்கும் அதில் இருக்கிறது தானே?
“எங்கிட்டயும் இங்க உள்ள பசங்க நம்பர்தான்மா இருக்கு. இப்போ வேலை பார்க்கற ஷிப்ல இருந்து பெருசா ப்ரெண்ட்ஸுன்னு யாரையும் அவன் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தது இல்லம்மா..” என்றார் முருகானந்தம்.
உடனே, “இவளுக்குப் பயந்தே கூட்டிட்டு வந்திருக்க மாட்டான்” என்றார் கற்பகம் முணுமுணுப்பாக.
சடாரென்று சிலிர்த்துக் கொண்டு, “எங்க கல்யாணம் முடிஞ்சு மூனு வருஷம்தான் ஆகுது. எங்களுக்குக் கல்யாணம் முடிஞ்சி முழுசா மூனு மாசம் கூட இங்க இருக்கல உங்க பையன். அப்போதான் ஷிப்ல ஜாயின் பண்ணி இருந்தார். இப்போ அதுக்குள்ள வேற கம்பெனி மாறியாச்சு. அப்புறம் எப்படி அவருக்கு ப்ரெண்ட்ஸ் இருப்பாங்க?” என்று கேட்டு விட்டாள்.
கற்பகம் முகம் கடுக்க அவளை முறைத்தார். இந்த முன் கோபத்தினால் அவள் படும் பாடு இருக்கிறதே. இப்படித்தான் அவசரப்பட்டுப் பதில் பேசி வார்த்தைகளை விட்டு விடுவாள்.
“நீ போய் ரெஸ்ட் எடும்மா. நான் அவனோட ஃப்ரெண்ட்ஸுக்கு போன் பண்ணி விசாரிக்கறேன்” என்று முருகானந்தம் சொல்லவும் தலையசைத்து எழுந்துக் கொண்டாள்.
அந்தக் கூடத்தின் மறுபக்கத்திற்குச் சென்று அலைபேசியைக் கையில் எடுத்தாள். அவள் கைகள் தன்னிச்சையாகக் கணவனின் எண்ணை சொடுக்கியது. இன்னமும் அவளது குறுஞ்செய்தி அவனைச் சென்று சேரவேயில்லை.
அதற்கு முந்தைய செய்தி பரிமாற்றங்களை வாசித்தாள். முன்னர் அதையெல்லாம் வாசிக்கும் போது வேறொரு மனநிலையில், வேறொரு கோணத்தில் பார்த்திருக்கிறாள். பதில் அளித்திருக்கிறாள். இன்றைக்கு அவனுக்கு என்னவானதோ என்ற பதற்றம் சூழ்ந்த மனத்துடன் வாசிக்கையில் ஒவ்வொரு செய்தியும், அவனது ஒவ்வொரு வார்த்தையும் வேறு பல அர்த்தங்களை வெளிப்படுத்தியது.
அவளது திரையை நிறைத்த ஸ்மைலிகள் இப்போதும் சிரித்தன, கண் சிமிட்டின, முறைத்தன, முத்தமிட்டன. அவர்களது உறவை போலவே கலவையான உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது அவன் அனுப்பியிருந்த எமோஜிக்கள்.
ஓராண்டுக்கு முந்தைய செய்திக்கு தாவினாள்.
“ஆழி..” அடர்ந்த குரலில் அழைத்தான். அப்படியே அவன் நேரில் அழைப்பது போலிருந்தது. ஆனால், அதுவொரு குரல் வழி குறுஞ்செய்தி மட்டுமே. மீண்டும் மீண்டும் அவன் குரலை கேட்க தூண்டிய மனத்தைக் கட்டுப்படுத்தி, என்ன செய்வதென்று யோசித்தாள்.
அந்நேரம் அவளை அழைத்தார் இந்திராணி.
“சொல்லுங்கம்மா”
“என்னாச்சு ஆழி? மாப்ள கிட்ட பேசிட்டியா? பத்திரமா இருக்காரா?”
“ம்ம். இன்னும் பேசலம்மா.”
“என்ன ஆழி சொல்ற?” என்று அதிர்ந்தவர், “நீ பயப்படாத அதெல்லாம் அவருக்கு ஒன்னும் ஆகியிருக்காது” என்றார் திடமான குரலில், அவளைத் திடப்படுத்தும் விதமாக.
“நீ மாப்ள வேலை பார்க்கற ஷிப் நம்பருக்கு கூப்பிட்டுப் பேசலாம் இல்ல? அவருக்கு ஒருவேளை நெட்வொர்க் கிடைக்கலயோ என்னவோ? கப்பல் கடல்ல இருக்கும் போது லைன் கிடைக்கலன்னு கால் பண்ணாம இருந்திருப்பார். உன் மாமியார் அந்தம்மா தேவையில்லாம உன்னைப் பயமுறுத்தி..”
“ம்ம்..” என்றாள். சமீபமாக தொலைதொடர்பு வசதிகள் மிகவும் முன்னேறி விட்டது. செயற்கைக்கோள் பயன்படுத்தித் தொலை தொடர்பை எளிமையாக்கி இருந்தார்கள். ஆனாலும், இந்த யுகத்திலும் கணவனை எப்படித் தொடர்பு கொள்வதெனத் தெரியாமல் விழிப்பது அவளாக மட்டுமே இருப்பாள். அப்படியே மண்டையில் ஓங்கி அடித்துக் கொள்ளலாம் போலிருந்தது.
“நீ நைட் வீட்டுக்கு வந்துடுவ தானே ஆழி?”
“தெரியலம்மா..”
“இதென்ன பதில் ஆழி? வீட்டுக்கு வந்துடுவேன், இல்லம்மா வர முடியாதுன்னு சொல்லாம..”
“அதான் தெரியலன்னு சொல்றேன் இல்லம்மா. வீட்டுக்கு வருவேனான்னு தெரியல..” என்று உரக்கச் சொன்னவள், “அவர் எங்க இருக்காருன்னும் தெரியல. நான் என்ன பண்ண போறேன்னும் தெரியல.. எனக்கு எப்படி அவரைக் கான்டாக்ட் பண்ணன்ணும் தெரியல. நான் எப்போலருந்து இப்படிப் பைத்தியமா ஆனேன்னு தெரியல..” என்று புலம்பிக் கொண்டே போனாள்.
“என்ன மொனங்குற? சத்தமா பேசு ஆழி?” அம்மா அதட்டவும், “நீ சாப்பிட்டு தூங்கு மா. நான் நாளைக்குக் காலைல போன் பண்றேன்.” என்று சொல்லி அழைப்பை துண்டிக்கப் போனாள்.
“என்ன நீ எதுக்கும் ஒழுங்கா பதில் சொல்ல மாட்டேங்கற. இரு நான் கிளம்பி, இப்பவே உன் மாமியார் வீட்டுக்கு வர்றேன்”
“ப்ச், வேணாம் மா”
“எங்கிட்டருந்து என்னமோ மறைக்கற நீ. மாப்ளக்கு..”
“ம்மா..” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு. ஆனால், மனத்தின் ஓரத்தில் அவளுக்குமே அந்தப் பயம் மெல்ல வேர் விடத்தான் செய்தது.
சட்டென யாரோ நெஞ்சில் ஏறி மிதித்தது போல மூச்சு விடக் கூடச் சிரமமாக இருந்தது.
“ஆழினி..” என்று முருகானந்தம் அழைக்கவும், “நீ வைம்மா. நான் திரும்பக் கூப்பிடுறேன்” என்றாள் அம்மாவிடம்.
“இரு ஆழி. வச்சுடாத. நம்ம வீட்ல இருந்து கிளம்பும் போது என்னத்தையோ ரொம்ப நேரமா தேடுனியே என்னது அது? மாப்ள சம்மந்தப்பட்ட பொருளா?”
“இல்லம்மா..”
“நீ தேடியும் கிடைக்கல போலயே. என்னான்னு சொல்லு. அம்மா தேடி எடுத்து வைக்கறேன். மாப்ள கம்பெனி டாகுமெண்ட் எதுவுமா? இப்ப உனக்குத் தேவைப்படும். சொல்லு, நான் தேடி எடுத்து வைக்கறேன்”
“இல்லன்னு சொல்றேன் இல்லம்மா”
“அப்புறம் அவ்வளவு நேரமா என்னத்த தேடுன?”
“என்னோட ப்ளூ கலர் துப்பட்டாவ தேடினேன்மா..”
“எது? அந்தக் கல்லு வச்ச ஷாலா? எப்போ பார்த்தாலும், எங்க போனாலும் போட்டுட்டு போவியே..”
“ம்ம், அதான் மா”
“ஆமா, இப்போ அது ரொம்ப முக்கியம். நான் தூங்காம கண்ணு முழிச்சு தேடி எடுத்து வைக்கிறேன் இரு” என்றார் கடுப்புடன்.
“தேடுறதுன்னு முடிவு பண்ணிட்ட இல்லம்மா? என்னோட கொலுசு ஒன்னு, ஐம்பொன் கொலுசு குட்டி குட்டி ஸ்டார் வச்ச மாடல் அதை ரொம்ப நாளா காணோம். அப்புறம் குட்டியா மெர்மெய்ட் டிசைன்ல வெள்ளை கல்லு வச்ச ரிங் அதையும் காணோம். எல்லாத்தையும் தேடி எடுத்து வைம்மா” என்று படபடவென வரிசையாக அடுக்கினாள்.
“எங்க தொலைச்ச இதையெல்லாம்? எவ்வளவு அசால்ட்டா சொல்ற? எவ்ளோ காசு போட்டு வாங்குனது”
“என்னோட ஜூவல் பாக்ஸ்லதான்ம்மா வச்சேன். எப்படித் தொலைஞ்சு போச்சுன்னு தெரியல. என் பீரோ முழுக்கத் தேடிட்டேன், கிடைக்கல. இங்கிருந்து என் திங்க்ஸ் எடுத்துட்டு வரும் போது மிஸ்ஸாகியிருக்கும்னு விட்டுட்டேன் மா” அந்தக் கடைசி வாக்கியம் இந்திராணியை வருத்தத்தில் தள்ளி பதில் பேச விடாமல் செய்திருந்தது.
“சரி. நான் தேடி எடுத்து வைக்கறேன்” என்றார் நல்லவிதமாக.
“இன்னைக்கு நாள் முழுக்க எப்படியும் சாப்பிட்டு இருக்க மாட்ட நீ. ஒழுங்கா நைட் எதையாவது சாப்பிட்டு படு ஆழி. வெறும் வயித்தோட படுக்காத சொல்லிட்டேன். அந்தம்மா சமைக்கலன்னா வெளில ஆர்டர் பண்ணியாவது சாப்பிடு” என்றார் அக்கறையுடன்.
“சரிம்மா. நீங்களும் சாப்பிட்டு படுங்க. எதையும் யோசிச்சு டென்ஷன் ஆகாதீங்கம்மா. சரியா?” என்றவள் மேலும் சிறிது நேரம் அம்மாவிடம் பேசி, அழைப்பை துண்டித்தாள். அதற்காகவே காத்திருந்தது போல அவள் முன் வந்து நின்றார் முருகானந்தம்.
“சொல்லுங்க மாமா”
“நான் பேசிட்டேன்மா. எனக்குத் தெரிஞ்ச அவன் ப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் பேசிட்டேன். இப்படின்னு விஷயத்தைச் சொல்லாம சும்மா பேசுற மாதிரி ஒரு ஒருத்தன் கிட்டயும் வேற வேற காரணம் சொல்லிதான் பேசினேன். ஆனா யாருக்கும் எதுவும் தெரியல மா. எல்லாம் அவன் இன்னும் ராயல் கரீபியன்ல வேலை பார்க்கிறதாதான் நினைச்சுட்டு பேசுறாங்க. எப்போ வெக்கேஷனுக்கு ஊருக்கு வர்றான்னு என்கிட்ட கேட்கிறான் ஒருத்தன். நான் என்னத்த சொல்ல?” என்று நொந்து கொண்டார். கற்பகம் அதைக் கேட்டுக் கண்ணீர் வடிக்க, உதடு கடித்து மௌனமாய் நின்றாள் அவள்.
“பிரித்வி ப்ரண்ட்ஸ்லாம் உங்க அத்தைக்குதான் நல்ல பழக்கம். பாவம் அவகிட்ட யார் நம்பரும் இல்லம்மா..” என்றார்.
முருகானந்தம் நாப்பது வருடங்களுக்கு மேலாகத் துபாயில் பணி புரிந்தவர். மகன் பிரித்விராஜன் நல்ல வேலையில் அமர்ந்த பிறகுதான் அவர் துபாய் வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு நிரந்தரமாக வந்தது. அதனால் மகனை குறித்து அவருக்குத் தெரியவில்லை என்றால் குறை சொல்ல முடியாது.
அவர் வெளிநாட்டில் வேலை செய்ததால் அவருக்கு மகனைப் பற்றி அதிகம் தெரியாது. அவர் மகன் வெளிநாட்டில், அதிலும் கடலில் வேலை செய்ததால் அவளுக்குக் கணவனைப் பற்றி அதிகம் தெரியாது. ஆனால், அதை நிச்சயமாகக் குறையாகத்தான் சொல்லும் இந்த உலகம். அதுதான் உலக நியதி.
அவர்களது அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்றாலும் கூட அதுதான் தீர்ப்பு. அவனுக்கு ஏற்கனவே வேறொரு பெண்ணோடு திருமணம் நிச்சயமாகி, கடைசி நேரத்தில் திருமணம் நின்று, அவர்கள் திருமணம் நடைபெற இருந்த நாளில் மணமகளாக ஆழினி மாறினாள்.
அது அம்மாவின் வற்புறுத்தலால் நிகழ்ந்தது. இரண்டு பக்கமும் அதுதான் நடந்தது. இருவருமே அவரவர் அம்மாவின் கட்டாயத்தால் இந்தத் திருமணப் பந்தத்திற்குள் நுழைந்திருந்தார்கள்.
அவர்கள் நினைத்தால் நல்லபடியாக அதை மாற்றியிருக்கலாம். ஆனால், அதற்கு அவன் இங்கிருக்க வேண்டுமே. அவன் கட்டிய திருமாங்கல்யத்தின் ஈரம் காயும் முன்னே கப்பல் வேலைக்காக ஆழ்கடலுக்கு ஆழினியை தனியாக விட்டுவிட்டு சென்று விட்டான்.
பிரித்விக்குத் தன் மேல் பிரியம் இல்லையோ?
ஆழினி மேல் ஆசையில்லாமல்தான் மணமுடித்தானோ என்று மறுகினாள் அவள்.
“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க மாமா. பொறுமையா யோசிப்போம். முதல்ல எந்த கம்பெனில ஜாயின் பண்ணியிருக்காருன்னு கண்டுபிடிப்போம். அது தெரிஞ்சா போதும் ஈசியா அவரைப் பிடிச்சுடலாம்” என்று மிகுந்த நம்பிக்கையுடன் சொன்னாள்.
அதைக் கேட்டு மெலிதாகப் புன்னகைத்தார் முருகானந்தம்.
“நான் கொஞ்சம் வீடு வரைக்கும் போய்ட்டு வர்றேன் மாமா. என்னோட லேப்டாப் எடுத்துட்டு வந்துடுறேன்”
“நம்ம வீட்ல சிஸ்டம் இருக்கேம்மா. இதையே யூஸ் பண்ணு. மழை நேரத்துல ஏன் அலைஞ்சுட்டு..” என்று அவர் சொன்னது சரியெனப் பட, சம்மதமாகத் தலையசைத்தாள்.
அவர்கள் வீட்டில் இருந்து அரைக் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த உணவகத்தில் இருந்து இரவு உணவை வாங்கி வந்தாள். அன்றைய நாளின் மொத்த பசியையும் அந்த மூன்று இட்லிகள்தான் தீர்த்தது.
“பிரித்வி அங்க என்ன சாப்பிடுறானோ? எம் புள்ள சாப்பிட்டானோ? இல்லையோ?” என்று கற்பகம் புலம்ப, அதைக் கேட்டபடியே அவனது அறைக்குள் நுழைந்தாள். சில மாதங்களுக்கு முன்பு வரை அவர்களது அறையாக இருந்தது. அவனில்லாத பொழுதுகளில் அவளது அறையாக இருந்திருக்கிறது.
மெதுவாக ஆழ மூச்சிழுத்து, கண்ணை மூடித் திறந்து அறையைக் கண்களால் வலம் வந்தாள். படுக்கையை ஒட்டிய மேசையில் அவனது புகைப்படம் வீற்றிருந்தது. அவளது படமும், அவர்களது திருமணப் படமும் அந்த அறையில் முன்பிருந்தது. அதை நீக்கியிருக்கிறான் என்பது உறைத்ததும் சட்டெனக் கோபம் துளிர்த்தது. அவ்வுணர்வை அதே வேகத்தில் உதறினாள்.
புகைப்படத்தில் பட்டு வேட்டி சட்டை, அதற்குப் பொருத்தமாக அடர் பழுப்பு நிற சட்டையும் அணிந்திருந்த பிரித்விராஜனை ஒற்றைப் பார்வையில் அழகன் என்று சொல்லி விடலாம்.
அந்தத் தீர்க்கமான கண்களும், மயக்கும் புன்னகையும் அவளைச் சோதிக்க, சட்டென விழிகளை அவன் மேலிருந்து விலக்கினாள். அந்த மேஜை மேலிருந்த மடிக் கணினி பையை எடுத்து அவசரமாகத் திறந்தாள்.
அதனுள் மடிக்கணினி இருந்தது. அந்தப் பையைச் சோதித்து அதனுள் முக்கியமான கோப்புகள், காகிதங்கள் எதுவும் இல்லை என்றதும் ஓரமாக வைத்து விட்டு மடிக்கணினியை சார்ஜ் போட்டு உயிர்பித்தாள்.
“பிரித்விராஜன்” என்று அவனது புகைப்படத்துடன் கணினி திரை ஒளிர, அதன் கடவுச் சொல்லுக்கு என்ன செய்வது என்று யோசித்தவள், எதற்கும் மானமாரிடம் கேட்டுப் பார்ப்போம் என்று எழுந்தாள். அவளின் ஒற்றை விரல் திரையில் இருந்த அவனது புகைப்படத்தைத் தட்ட, கடவுச் சொல்லின் தேவையின்றி திறந்து விரிந்தது திரை.
அரை நொடியில் அவள் முன் விரிந்த கணினி திரையை அதிர்ச்சியில் விரிந்த விழிகளுடன் நோக்கினாள் ஆழினி.
அவனது மடிக்கணினியின் திரையை ஆக்கிரமித்திருந்ததும் ஆழினிதான். அதிலும் திருமணத்துக்கு முந்தைய அவளின் புகைப்படம் அது. பற்கள் தெரிய பளிச்சென்று புன்னகைத்துக் கொண்டிருந்தாள். அவனது மடிக் கணினியில், அவள் புகைப்படம். அதைச் சத்தியமாக எதிர்பார்த்திருக்கவில்லை அவள். அறையின் திறந்திருந்த ஜன்னலின் வழியே அடைமழை அறைக்குள் நுழைய, சட்டென ஆழினிக்கு மூச்சடைத்தது.
How did this episode feel?
Rate this episode⭐ 4.9 (8)
4 thoughts
Sign in to share your thoughts
One tap with Google, no password needed.
Continue with Google Login or register with email
or write your comment below as a guest
Very nice.
Thank you ma ❤️
Nice
Thank you 😊